மறந்துபோன நேற்று - 5

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குப் போன சொற்களை நினைத்துப் பெருமை கொள்கிற தமிழர்கள் நிறையவுண்டு. அரிசி, கட்டுமரம், மிளகுத் தண்ணீர் ஆகியவற்றோடு ஆங்கிலத்திற்குப் போன சொற்களில் ஒன்று கூலி (COOLIE) என்பதாகும். ஆக்ஸ்போர்டு அகராதி இந்தச் சொல்லிற்கு ‘இந்திய,சீனத் தொழிலாளி’ என்று பொருள் சொல்கின்றது.இந்தச் சொல்வழக்கு ஆங்கிலேயர்களால் இழிவாக வழங்கப்பட்டதுமுண்டு.

இந்தச்சொல்லின் வேர்ச்சொல் “கூலம்” என்பதாகும்.இதற்குத் ‘தானியம்’ என்பது பொருள்.செய்கின்ற வேலைக்கு அன்றன்று தானியங்களை (கூலத்தை)ப் பெறுபவர் கூலியாவார்.கூலி என்ற சொல்லிற்கு மாற்றாக ஊதியம், சம்பளம் ஆகிய சொற்கள் பிற்காலத்தில் வழங்கப்பட்டன. சம்பளம் என்பது சம்பா நெல்லும் அளத்து உப்பும் உழைப்புக்குப் பதிலாகப் பெற்றதைக் குறிக்கும் சொல்லாகும். பணப் பொருளாதாரம் பெரிதாக இல்லாமல் பண்டமாற்றுப் பொருளாதாரம் நிலவிய வேளாண்சமூகக் காலத்தில் ஏழைத்தொழிலாளர் பெற்றதே ‘கூலி’யாகும். பிற்காலத்தில் கூலி வேலை செய்யும் ஏழை மக்களைக் குறிக்கவும் ‘கூலி’ என்ற சொல் பயன்பட்டது. மேலோர் மரபில் ஏழ்மை நிலையினை மட்டுமல்லாமல் சமூக மரியாதை பெறாதவர்கள் என்பதனையும் இந்தச்சொல் உணர்த்துகின்றது.

வேளாண்மைப்பொருளாதாரம் செழித்திருந்த காலத்தில் பொருளாலும், சாதியாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மாதச்சம்பளம் பெற்றதில்லை. மாதச் சம்பளம் என்பது காலனிய ஆட்சியாளர்கள் வந்தபின் ஏற்பட்ட அரசு நடைமுறை யாகும். அதற்கு முந்திய காலத்தில் நெல், பிற தானியங் கள்,பால்,கள் போன்ற பொருள் உற்பத்தியோடு தொடர்புடைய மக்கள் தங்களுக்குள் தங்கள் பண்டங் களை மாற்றிக் கொண்டனர்.

கோயிற்பண்பாடு வளர்ந்தபோது வேளாண்மைப் பொருளாதாரம் கோயிலோடு பிணைக்கப்பட்டது. இக்கால கட்டத்தில்தான் துணைக்கருவிகள் செய்தல், கருவிகளை (இசைக் கருவிகள்,உழவு கருவிகளை)ப் பழுது நீக்குதல்,முடி திருத்துதல்,சலவை செய்தல், என்பன போன்ற புதிய சேவைத் தொழில் களும்,அவற்றிற்கான சேவைச் சாதிகளும் உருவாக்கப் பட்டன. உழுதொழிலாளியாகவும், மருத்துவராக வும்,தோலால் ஆன இசைக் கருவிகள் செய்பவராக வும், அவற்றைப் பழுதுபார்ப்பவராகவும் இருந்த பறையர் சாதியார் கோயிலோடு பிணைக்கப் பட்டனர். கால்நடைகளை மேய்த்துப் பால் உற்பத்தி செய்து வந்த இடையர்கள் கோயில் விளக்கிற்கு நெய் கொடுப் பதற்காகக் கோயிலுக்குரிய ஆடுகளையும் மாடுகளையும் பேணும் சாதியராகக் கோயிலோடு பிணைக்கப்பட்டனர்.இவ்வகையில் சில உற்பத்திச் சாதிகளை கோயில்களின் அதிகார மையம் சேவைச் சாதிகளாக மாற்றியது வரலாற்று நிகழ்வாகும்.

சமூக அதிகாரத்தினையும்,ஆன்மீக அதிகாரத்தை யும் கோயில் நிர்வாகத்தையும் கையில் எடுத்துக் கொண்ட பார்ப்பனர்கள் புரோகித சேவைச் சாதியாரே .அவர்கள் மட்டும் தங்களுடைய (வேலையில்லா) வேலைக்காக மன்னர்களிடம் ‘நிரந்தர’ குடியிருப்பு வசதியினையும், நஞ்சை நிலங்களின் மேலாதிக்க உரிமையினையும் நிரந்தரமாகப் பெற்றுக்கொண்டு விட்டனர் கிராமங்களிலும் கோயில்களிலும் பணி செய்த சேவைச்சாதிகள்(இடையர் தவிர) ஆண்டு மானியமாக நெல்லையும் பிற தானியங்களையும் கூலியாகப்பெற்றுக்கொண்டனர்.அவர்களுக்குத் தரப்பட்ட மானியம் ‘துடவை’ எனப்பட்டது.எளிய மக்கள் தங்களுக்குக் கிடைத்த சிறுசேவைகளுக்காக நெல்லையே கூலியாகச் செலுத்தினர். எடுத்துக் காட்டாக, ஆற்றைக்கடக்க ஓடம் செலுத்துபவருக்குத் தரப்படும் கூலி ‘ஓடக்கூலி’யாகும்.

கோயில் ஆடுகளையும், மாடுகளையும் பேணி வளர்த்து,கோயில் விளக்கிற்கு நெய் அளந்த இடையர்களுக்கு அவர்களது சேவைக்காகக் கூலியோ மானியமோ கிடையாது.அந்த வேலை ’வெட்டி’ வேலையாகும். எனவே கல்வெட்டுக்களில் அவர்கள் ‘வெட்டுக்குடிகள்’ என அழைக்கப்பட்டனர். அவர்களுக் கான ஊதியம் ஆடு,மாடுகளின் இனப்பெருக்கத்தால் கிடைக்கும் கன்றுகளேயாகும்.’வெட்டிக்குடி இடையன்’ என்னும் சொற்றொடரைத் தமிழ்க் கல் வெட்டுக்களில் பரவலாகக் காணலாம்.

இவர்களைப் போலவே இடுகாட்டிலும், சுடுகாட்டிலும் சேவை செய்யும் ‘வெட்டியான்’ என்ற பெயருடைய பணியாளருக்கு உடனுக்குடன் ஊதியம் தரப்படுவதில்லை.ஆண்டு ஊதியமாகத் தான் பணி செய்யும் குடிகளிடமிருந்து நெல்லினைப்பெற்றுக் கொள்ளலாம்.இவர்களைப் போலவே தானிய அறுவடைக்களத்தில் வாழ்த்துப் பாட்டுப் பாடும் பாணர்களுக்கும் அந்த ஒரு பொழுதில் தரப்படும் தானியமே அந்த ஆண்டு முழுவதுக்குமான ஊதிய மாகும்.

அரசதிகாரத்திற்கு நேரடியாக சேவை செய்யாத சிற்றூர்களில் வாழ்ந்த கொல்லரும் தச்சரும் குடிமக்களி டமிருந்து ஆண்டு ஊதியமாகவே தானியங்களைப் பெற்றனர். ஆனால் இச்சிற்றூர் அமைப்புகளில் ஒரு நுட்பமான பண்பாட்டசைவு நிகழ்ந்தது. வெள்ளத் தாலோ, வறட்சியாலோ பஞ்சம் ஏற்படும் காலங்களில் விளைச்சல் எதுவுமில்லாமல் போய்விடலாம். அவ் வகையான நேரங்களில் ஊரின் எளிமையான குடிமக்கள் தங்கள் தேவையினைச் சுருக்கிக் கொண்டு கொல்லருக் கும், தச்சருக்கும்,அவர்களைப் போன்ற முடிதிருத்தும் தொழிலாளி,சலவைத் தொழிலாளி போன்றவர் களுக்கும் உயிர் வாழ்வதற்கு மட்டும் தேவையான குறைந்தளவு தானியங்களைக் கொடுத்துதவுவது வழக்கம்.இதற்கு “தசை கூலி “ என்று பெயர்.அதாவது அடுத்த பருவத்திற்குத் தேவையான உடல் வலிமையேனும் அவர்களுக்கு இருக்க வேண்டும். இதற்காகத் தங்கல் உடல் நலத்தைக் காத்துக்கொள்ள அவர்களுக்குத் தரப்படும் குறைந்தபட்சக் கூலியாகும் இது.இந்த வழக்கம் காலனி ஆட்சி நடைபெற்ற போதும்கூட உயிரோடிருந்தது என்பது வியப்பிற்குரிய செய்தியாகும்.

கோயிலுக்குள்ளாக மட்டும் பணி செய்தவர்களில் பார்ப்பனப் புரோகிதர்களும் பார்ப்பன உதவியாளர் (பரிசாரகர்), மடைப்பள்ளிப் பணியாளர், இசைகாரர்கள்(சின்ன மேளம்) ஆகியோரும் நாள்தோறும் சோற்றுக்கட்டியினையும் ஊதியமாகப் பெற்றனர். திருவிழாக்காலங்களில் மட்டும் அந்த உரிமையினை மற்றவர்கள் பெற்றனர்.

Pin It