“எழுதுகோல் தெய்வம்”  என்றார்  மகாகவி பாரதி. தெய்வத்தில் எப்படி பல வகை உண்டோ அப்படி எழுதுகோலிலும் பல வகை உண்டு. இன்றைக்கு வழுவழு காகிதத்தில் விறுவிறு என்று எழுதும் பேனாவை வைத்து எழுது கிறோம். அன்றைக்கு பனைஓலைச்சுவடியில் எழுத்தாணியை வைத்துக் கொண்டு எழுத நம்முடைய முன்னோர்கள் என்ன பாடுபட்டார்களோ?

மதுரையில் இன்றைக்கும் எழுத்தாணிக்காரத் தெரு என்று ஒரு தெரு இருக் கிறது. அன்றைக்கு யாராவது எழுதிக்கொண்டு வந்தால் இந்தத் தெருவில் இருப்பவர்கள் இலவசமாக அதை பனைஓலைச்சுவடியில் பிரதி எடுத்துக் கொடுப்பார்களாம். இன்று நோகாமல் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுக்கக்கூட காசு வாங்குகிறார்கள். அன்றைக்கு அவ்வளவு கடுமையான பணியை இலவசமாகவே செய்து கொடுத்திருக்கிறார்கள்!

முதன்முதலாக நெல்லை பரப்பிவைத்து விரலை பிடித்து “அ” எழுத வைத்த பால்ராஜ் வாத்தியார் கையின் சூடு இன்னமும் இருக்கிறது. பள்ளிக்கூடத்தில் படிக்கிறபோது சிலேட்டில் எழுதுவது ஒரு கலை. சிலேட்டை பராமரிக்க ஞாயிறன்று கரியும், கோவைச்செடி சாறையும் பிழிந்து குழைத்து பூச வேண்டும். குச்சிகளில் பல வகை உண்டு. அதில் வெள்ளையாய் இருக்கும் பால் குச்சி ரொம்ப விசேஷம். அடுத்து பல வண்ணம் கொண்ட குச்சி வந்தபோது ரொம்ப பிரபலமாக இருந்தது.

அடுத்து இரண்டு கோடு, நாலு கோடு நோட்டு வாங்கி பென்சிலால் எழுதிப் பழக வேண்டும். கொண்டையில் ரப்பரோடு கூடிய பென்சில் பார்க்க விநோதமாக இருக்கும். வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துவதுபோல இருக்கும். எழுதுகிற அதே கருவிதான் அழிக்கவும் செய்கிறது. ஒருபுறத்தில் ஆக்குகிறோம் மறுபுறத்தில் அழிக் கிறோம்.

ஆறாவது படித்தபோதுதான் முதன்முதலாக இங்க் பேனா எனக்கு அறிமுகமானது. எனது அண் ணன் வாங்கிக்கொடுத்த இங்க் பேனா இன்னமும் நினைவில் நிற்கிறது. நல்ல கட்டைபேனா. கால் லிட்டர் அளவுக்கு இங்க் பிடிக்கும். மதுக்கூர் பள்ளிக் கூடத்திற்கு எதிரில் முபாரக் ஸ்டோர் என்று ஒரு கடை இருந்தது. அதில்தான் இங்க் ஊற்றுவது. இரண்டு பைசா கொடுத்தால் இங்க் ஊற்றிக்கொள் ளலாம். இங்க் பாட்டில் பெரும்பாலும் வெளியில் தான் இருக்கும். இரண்டு பைசாவை ஏமாற்றி ஓசியில் இங்க் போட்ட பெருமக்கள் அதை பெருமையாகக் கூறிக்கொள்வார்கள். கையில் இங்க் படாமல் ஊற்றுவது ஒரு பெரிய வித்தை. இன்று வரை அது எனக்கு பிடிபட்டதே இல்லை. பேனாவில் ஊற்றிய இங்க்கை விட கையில் படிந்த இங்க் அதிகமாக இருக்கும். அந்த இங்க்கை அவ சரமாக தலையில் தடவுவோம். தலைமுடி கருப் பாய் இருக்கும்போதுதான் இது சாத்தியம். வெளுத்த தலையில் நீல இங்க்கை தடவினால் சாயம் வெளுத்துவிடும்.

தேர்வுக்குப் போகிறபோதுதான் பதட்டமாக இருக்கும். இந்த பதட்டம் எனக்கு கடைசியாக தேர்வு எழுதும்வரை இருந்தது. இரண்டு மூன்று பேனா வைத்திருந்தாலும் சொல்லி வைத்த மாதிரி எல்லா பேனாவும் ஒரே நேரத்தில் மக்கர் செய்யும். முதல்கட்டமாக பேனாவை ஓங்கி உதறிவிட்டு எழுத வேண்டும். அதற்கும் பயப்படாவிட்டால் அறுவை சிகிச்சைதான். பிளேடை எடுத்து நிப்பில் ஒரு கீறு கீற வேண்டும். சில சமயங்களில் நிப்பு மட்டுமின்றி நிப்புக்கட்டையும் பிளந்துவிடும். இவ்வளவு முஸ்தீபுகளோடு எழுதத் துவங்கினால் படித்தது மறந்துவிடும்.

இப்போது பால்பாய்ன்ட் பேனா, அதைத் தாண்டி மைக்ரோடிப் பேனா என்றெல்லாம் வந்து விட்டது. பால்பாய்ன்ட் பேனா முனையில் ஒரு உருளை இருக்கும் என்று ஆசிரியர் ஒருமுறை சொன்னார். அந்த உருளை இதுவரை சரியாக கண்ணுக்குத் தட்டுப்படவில்லை.

பள்ளிக்கூடத்தில் ஏழாம்வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது வாசலில் ஒருவர் உட்கார்ந்து கொண்டு ஒரு பொருளை விற்றுக்கொண்டிருந்தார். கோவை ஜி.டி.நாயுடுவின் தயாரிப்பு இது. இங்க் பேனாவால் எழுதியதை இதைக்கொண்டு அழித்து விடலாம் என்று பயங்கர பில்டெப் கொடுத்தார். “இங்க்கோ - டை - கிளினர், இங்க்கோ -பைட்டர்”  என்று அந்த கண்டுபிடிப்புக்கு அவர் பேர் வைத் திருந்தார். ஒரு பாட்டில் ஐந்து பைசா. இனி தப்பாக எழுதினால் கவலையில்லை என்று நினைத்துக் கொண்டு ஆளுக்கொன்று வாங்கி கால் சட்டைப் பையில் போட்டுக் கொண்டோம்.

அறிவியல் ஆசிரியரான பாலு வாத்தியார் வந்து, வெளியே பாட்டில் வாங்கியது யார் யார் என்று விசாரித்தார். ஏதோ குவார்ட்டர் பிராந்தியை வாங்கிக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு வந்து விட்டதுபோல. நாலைந்து பேர் எழுந்து நின்றார்கள். இவனும்தான் சார் என்று பக்கத்தில் இருந்த நண்பன் என்னை கர்மசிரத்தையாக எழுப்பி விட்டான். ஏன் என்று கூட கேட்காமல் ஆளுக்கு ஒரு அறைவிட்டார். “சிறுநீர் வாடை உள்ள இடங்களில் தூவும் பிளீச்சிங் பவுடரை கரைத்து விற்றால் அதைக்கூட வாங்குவீர் களா?” என்று திட்டினார்.

பல சமயங்களில் சட்டைப்பையில் வைத்திருக் கும் பேனா என்னை முறைத்துப்பார்த்துக் கொண்டே இருக்கும். “அறுக்கத்தெரியாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு அரிவாளாம்” என்று கேட்பதுபோல் இருக்கும்.

Pin It