பிப்ரவரி மாதம் வந்தாலே இந்துத்துவா கும்பல் பதற்றமாகி விடும். காரணம் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் வருவதுதான். உலக அளவில் காதலர் தினம் என்று ஒரு நாளை கொண்டாடுவது வேண்டுமானால் இந்தியாவுக்கு, தமிழகத்திற்கு புதிதாக இருக்கலாம். இதனால் காதலர் தினம் என்பது இந்திய பண்பாட்டுக்கு எதிரானது, மேல்நாட்டுச் சரக்கு என்று ஆத்திரப்படுகிறார்கள். ஆனால், காதல் என்பதை மேல் நாட்டுச் சரக்கு என்றோ, இந்திய பண்பாட்டுக்கு எதிரானது என்றோ, இந்தக் கலாச்சாரக் காவலர்களால் கூறிவிட முடியாது.

காதலர்களுக்கு ஆதரவாக இருந்த வாலன்டைன் என்ற பெயருடைய கிறிஸ்தவ பாதிரியார் எரித்துக் கொல்லப்பட்டதாகவும் அவரது நினைவாகவே காதலர் தினம் கொண்டாடப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. காதல் கடவுளான மன்மதனை எரித்த கதை இந்தியாவில் உண்டு. மன்மதனின் கரும்பு வில்லிலிருந்து புறப்படும் அம்பிலிருந்து யாரும் தப்பமுடியாது. வேதம் சொன்ன முனியைக்கூட விடுவதில்லையே என்பார் கண்ணதாசன். சிவபெருமான் தவக்கோலத் தில் இருந்தாராம். மன்மதன் அவர் மீது அம்பை விட்டாராம். கடவுள் கடுப்பாகிவிட்டாராம். தன் மீது அம்பு விழுந்ததை பொருட் படுத்தா மல் அவர் இருந்திருக்கலாம். ஆனால் முடியவில்லை. நெற்றிக் கண்ணை திறந்து மன்மதனை எரித்து விட்டாராம். சிவபெருமான் தீப் பெட்டியை பற்ற வைப்பதைபோல எதற்கெடுத்தாலும் நெற்றிக் கண்ணை திறப்பார் போலிருக்கிறது. அவர் எழுதி வேறொரு புலவரி டம் கொடுத்தனுப்பிய பாடலில் தவறு இருப்பதாக விமர்சனம் செய்ததற்காக நெற்றிக் கண்ணைத் திறந்து நக்கீரனை பஸ்பமாக்கி யிருக்கிறார்.

மன்மதனை சிவன் எரித்த கதை இன்றும் கிராமங்களில் காமன் பண்டிகையாகக் கொண்டா டப்படுகிறது. எங்கள் ஊரில் காமன் பண்டிகை திடல் என்றும் காமன் பண்டிகை திட்டு என்றும் இருக்கிறது. 15 நாள் தொடர்ச்சியாக நிகழ்ச்சி நடத்தி சுண்டல் கொடுப்பார்கள். கடைசி நாளில் எரிந்த கட்சி, எரியாத கட்சி என்று போட்டிப் பாட்டுக் கச்சேரி நடக்கும். ஒருவர் மன்மதன் எரிந்து விட்டார் என்று பாட்டுக் கட்டுவார். மற்றொருவர் மன்மதனுக்கு அழிவு இல்லை என்று எதிர்ப் பாட்டு பாடுவார். இருவரும் டேப் அடித்துக் கொண்டு பாடுவார்கள். கேட்கிற ரசிகர்களும் ஆளுக்கொரு பக்கம் ஆதரவு தருவார்கள். சிறுவயதில் இந்தப் பாடல்களைக் கேட்கும்போது, சரியான அர்த்தம் புரியவில்லை. எப்போது கச்சேரி முடிந்து சுண்டல் கொடுப்பார்கள் என்பதே நினைப்பாக இருக்கும்.

மன்மதனுக்காகப் போடப்பட்ட பந்தல் எரிக்கப் படும். மன்மதனின் சதியாகிய ரதிதேவி மூன்று நாள் ஒப்பாரி வைத்துப் புலம்புவாள். அந்த மூன்று நாளும் சுண்டல் கிடையாது. மூன்று நாள் முடிந்த வுடன் மன்மதனுக்கு சிவன் மீண்டும் உயிர் கொடுத் துவிட்டதாகக் கூறி மன்மதனுக்கு மலர் பந்தல் அமைக்கப்படும். மன்மதன் உயிரோடு மீண்டும் வந்துவிட்டதைக் கொண்டாடும் வகையில் பெண் கள் அனைவரும் மாவிளக்கு வைத்து வழிபடுவார் கள். தை மாதத்தில் அறுவடை முடிந்தபிறகு மாசி மாதத்தில் இந்த விழா நடத்தப்படும். ஏதோவொரு வகையில் விவசாயத்தோடு, சாகுபடியோடு இந்த விழா சம்பந்தப்பட்டிருக்கிறது.

காமன் பண்டிகை குறித்து இந்துத்துவா கும்பல் என்ன சொல்ல முடியும்? காதலை வெறுப்பதாக காட்டிக் கொள்ளும் இவர்களின் குருமார்கள் பலர் காமச் சேட்டைகளில் ஈடுபட்டுச் சிக்கும் விவகாரம் அவ்வப்போது வெளிவந்துகொண்டேதானே இருக்கிறது?

இவர்களுக்கு மட்டும் அதிகாரம் இருந்தால், திருக்குறளின் முதல், இரண்டு அதிகாரங்களை மட்டும் வைத்துக் கொண்டு இன்பத்துப்பாலை எரித்தாலும் எரித்துவிடுவார்கள். நியாயமாக பார்த் தால் இன்பத்துப் பாலை முதல் அதிகாரமாக வைத்து அதன் பிறகுதான் அறம், பொருள் ஆகிய அதிகாரங்களை வைத்திருக்கவேண்டும்.

அறநெறிகளை வகுப்பதிலும், வாழ்வியல் நெறிகளைக் கூறுவதிலும், வள்ளுவர் சிறந்து நிற் கிறார் என்றால், காதலைப் பேசுவதில் உலக இலக் கியங்களோடு போட்டிபோடுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

 “இத்துணூண்டு முத்தத்திலே இஷ்டம் இருக்கா? இல்லை - இங்கிலீஷ் முத்தத்திலே கஷ்டம் இருக்கா?” என்று ஒரு திரைப்படப் பாடல்.

 “காதல் சிறப்புரைத்தல்” என்ற அதிகாரத்தில் முதல் குறளான “பாலொடு தேன் கலந்தற்றே - பணி மொழி / வால்எயிறு ஊறிய நீர்” என்ற குறளைப் படித்தால் முத்தத்தின் ஆழத்தை வள்ளு வன் தொட்டுத் திரும்பியிருப்பது புரியும்.

பொதுப் பார்வைபோல தனிப்பார்வை பார்க் கும் கலையைக் காதலர்கள்மட்டுமே அறிவார்கள் என்ற வள்ளுவனின் குறளுக்கு பொழிப்புரை தானே, “ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்” என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல்.

பிரிவாற்றாமையைக்கூட எவ்வளவு பிரியமாக பாடியிருக்கிறார் நம்முடைய தாத்தா வள்ளுவர். பொருள் சம்பாதிக்கப் போய் வருகிறேன் என்று கூறும் காதலனிடம் காதலி இப்படிக் கூறுகிறார்: ‘போகவில்லை என்றால் என்னிடம் சொல். மீறிப் போவதென்றால் நீ வரும் போது யார் இருப்பார் களோ அவர்களிடம் சொல்லிவிட்டுப்போ’ -என்றாளாம் காதலி. நல்வரவு என்றுதானே நாம் உரைப்போம். இதை வல்வரவு என்றான் வள்ளு வன்.

இந்த வழியில்தான் தமிழ் இலக்கியம் காலம் காலமாகக் காதலுக்கு ஆதரவாகக் கொடி பிடித்து வந்துள்ளது. காதல் என்பது உலக இயற்கை மட்டுமல்ல... அகமண முறையால் தாங்கிப் பிடிக்கப்படும் சாதியத்திற்கும் எதிரானது. காதலை - காதலர்களை - காதலர் தினத்தைக் கொண்டாடு வோம். சாதி தின்று வளர்க காதல்!

- மதுக்கூர் இராமலிங்கம்

Pin It