உயர்நிலைப்பள்ளியில் படிக்கிறபோது தமிழய்யா ஒருவர் வகுப்பில் என்னைத்தான் பாடங்களை சத்தம்போட்டு படிக்கச் சொல்வார். வகுப்புக்கு வந்தவுடன் உரைநடை அல்லது செய்யுளின் தலைப்பைச் சொல்லி படிக்கச் சொல்வார். ஒவ்வொருப் பாராவையும் படித்தமுடித்தபிறகு சக மாணவர்களை பார்த்து புரிந்ததா? என்று கேட்பார். மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருப்பதிலிருந்தே அவர்களுக்கு புரிந்து விட்டதாக கருதி கொண்டு, சரி அடுத்தப்பாராவை படி என்பார். சத்தம்போட்டு யாராவது ஒருவர் படித்தால் அனைவருக்கும் பாடம் புரிந்துவிடும் என்பது அவரது கணிப்பு.

ஆங்கிலம், அறிவியல், கணிதம் ஆகிய பாட வகுப்புகளில் வாத்தியார் எதாவது கேட்டுவிடுவாரோ என்ற பயத்தில் வெட்டப்போகும் ஆட்டைப்போல வெடவெட என்று நடுங்கிக்கொண்டு உட்கார்ந்திருப்பேன். தமிழ் வகுப்பில் மட்டும் சிங்கம் போல எழுந்து பாடத்தை சத்தம் போட்டு படிப்பேன். இதற்கு காரணம் அடியேனுடைய தமிழறிவு அல்ல. வலுவான குரல் வளம் தான்.

ஊர்த்திருவிழா மற்றும் பொங்கல் விளையாட்டு விழாவின்போதும் பிரதான அறிவிப்பாளர் அந்தஸ்து நமக்கு கிடைக்கும். மா விளக்கு போட நேரமாகிவிட்டதால் தாய்மார்கள் அனைவரும் உடனடியாக கோயிலுக்கு வரவும். மொட்டையடிக்கும் பக்தர்கள் அதற்குரிய சீட்டு வாங்கிகொண்டு அதன்பிறகு மொட்டையடிக்கும் இடத்திற்கு செல்லவும் என்பன போன்ற அதி முக்கியமான அறிவிப்புகள் வெளியிடும் வாய்ப்பு கிடைக்கும். சக நண்பர்கள் மத்தியில் ஒரு ரேடியோ அறிவிப்பாளருக்குரிய மரியாதை கிடைக்கும்.

பொங்கல் விளையாட்டு போட்டியின்போது கனியும் கரண்டியும், சாக்கு ஓட்டம் போன்ற உலகப் புகழ் பெற்ற போட்டிகளுக்கு பெயர் கொடுக்கச் சொல்வது, வெற்றி பெற்றவர்களின் விபரங்களை கம்பீரமாக அறிவிப்பது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பணிக்கிடைக்கும். எந்தவொரு விளையாட்டிலும் ஓடியோ, குதித்தோ பரிசு பெறுவதற்கான யோக்கியதை நமக்கு கிடையாது. இதை மறைப்பதற்காகவே பாய்ந்து சென்று மைக்கை கையில் பிடித்துவிடுவது உண்டு. இந்த உள்குத்து தெரிந்த சில நண்பர்கள் ஓட்டப்பந்தயத்தில் உன் பெயரையும் சேர்த்துக்கொள் என்பார்கள். அப்படியென்றால் நீ மைக்கில் பேசுகிறாயா? என்று கேட்டவுடன் பயந்து நைசாக நழுவி விடுவார்கள்.

பின்னாளில் பேச்சாளராக உருவாகவும் இந்தக் குரல்தான் பெருமளவு உதவியது. ஆனால் உயிருடன் இருக்கும் போது சில நாட்கள் இந்தக்குரல் என்னைவிட்டு போய்விடும் என்று நான் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை.

பொள்ளாச்சியில் நடைபெற்ற சன் டி. வி. யின் அரட்டை அரங்கத்தில் பேசுவதற்காக சென்று கொண்டிருந்தேன். வீட்டில் சொல்லிக் கொண்டு புறப்படும்போது குரல் நன்றாக இருந்ததாகத்தான் நினைவு. ஆரப்பாளையத்தில் பஸ் ஏறி நடத்துனரிடம் பழனி ஒன்று என்று சொன்னபோது குரல் வரவில்லை. காற்று மட்டும் தான் வந்தது. நான் பழனி ஒன்று என்று பலமுறை சொன்னேன். நடத்துனர் காதுக்கு அது சென்று சேரவில்லை. அவர் எந்த ஊருக்கு டிக்கெட் என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். பெரும் போராட்டத்துக்கு பிறகு நான் சொல்ல வருவது பழனியாகத்தான் இருக்கும் என்று வித்தியாசம் செய்து அவராக ஒரு டிக்கெட்டை கிழித்துக் கொடுத்துவிட்டு போனார்.

அந்த நேரம் பார்த்து பக்கத்தில் அமர்ந்திருந்தவர் சார் நீங்கள் பேச்சாளர்தானே? டி. வி. யில் உங்களை பார்த்திருக்கிறேன் என்றார். அவருக்கும் என்னால் பதில் சொல்லமுடியவில்லை. பிறகு அவராகவே தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் சார், உங்களைப்போலவே ஒருவர் டி. வி. யில் பேசினார். அதனால்தான் கேட்டேன் என்று முடித்துக் கொண்டார்.

மாலையில் படப்பிடிப்பு இருந்ததால், எரித்ரோசின், எரித்ரோமைசின் போன்ற மாத்திரைகளை நானாக வாங்கி விழுங்கினேன். ஹால்ஸ், விக்ஸ், ஸ்டெப்சில் போன்ற உப மாத்திரைகளையும் பலகாரம் போல உள்ளே சென்று கொண்டிருந்தது. குரல்குகை எந்த சாவியைப்போட்டு குடைந்தும் திறப்பதாக இல்லை. இவனைப்போய் பேச அழைத்துவிட்டோமோ என்று பயந்த நண்பர்கள் வெந்நீரில் உப்பு போட்டு அண்ணாந்து வானத்தைப் பார்த்துக் கொண்டு கொப்பளித்தால் சரியாகிவிடும் என்றார்கள். உப்புபோட்டாலாவது குரல்வளைக்கு ரோஷம், சூடு சொரணை வருகிறதா என்று பார்த்தார்கள். வரவில்லை.

ஒரு நண்பர் சற்று நேரம் தூங்கி எழுந்தால் குரல் வந்துவிடும் என்றார். பதற்றத்தில் தூக்கமும் வரவில்லை. குரலும் வரவில்லை.

இந்த லட்சணத்தில் மேடைக்கும் சென்றாகிவிட்டது. புராணக் கதைகளில் வருவது போல திடீரென்று குரல் வந்துவிடும் என்று ஒரு அசட்டு நம்பிக்கை. அடுக்கு மொழியில் டி.ராஜேந்தர் பொழிந்து கொண்டேயிருந்தார்.

இடையிடையே எதைஎதையோ பேசவேண்டும் என்று நினைத்தாலும், பாறையை வைத்து குரல் வளையை அடைத்தது போல கனமாக இருந்தது. அப்படியும் ஒன்றிரண்டு முறை எழுந்து பேசியபோது, யாரோ பேச முடியாதவர் போலிருக்கிறது. நிதி உதவி தருவதற்காக அழைத்து வந்திருப்பார்கள் போலிருக்கிறது நினைத்து கொண்டார்கள் ரசிகர்கள்.

அரட்டை அரங்கத்திற்கு என்னை அழைக்கலாம் என்று சொன்ன நெருங்கிய நண்பரின் கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. இவனை அழைக்கச் சொன்னதால் நம்முடைய வேலைக்கு ஆப்பு வைத்துவிடுவார்களோ என்ற பயம் அவருக்கு.

பேசுகிறபோது சட்டென்று அடுத்தக் கருத்து வராமல் தடுமாறுவது உண்டு. ஆனால் குரலே வராமல் திண்டாடி தெருவில் நின்றது அன்றைக்குத்தான். துக்கம் தொண்டையை அடைக்கிறது என்பார்கள். அன்றைக்கு எனக்கு தொண்டை அடைத்துக் கொண்டதால் துக்கம் தாங்கமுடியவில்லை.

குரலில் இந்த வேலைநிறுத்தம் பத்து பதினைந்து நாளுக்கு தொடரும் என்று நான் அப்போது நினைக்கவில்லை. பேருந்தில் டிக்கெட் வாங்கமுடியவில்லை. கடைக்கு சென்றால் நான் ஒன்று கேட்டால் அவர் ஒன்று எடுத்து தருகிறார். அலைபேசியில் யாராவது அழைத்தால் சொல்வது ஒன்றும் அவர்களுக்கு போய்சேரவில்லை. போனை ஆன் செய்துவிட்டு பேசாமல் இருக்கிறானே என்று சிலர் திட்டினார்கள்.

காது, மூக்கு, தொண்டை நிபுணரை உடனடியாக சென்று பார்க்குமாறு ஒருவர் பேப்பரில் எழுதிக் காட்டினார். அவரிடமும் பிரச்சனையை சொல்லமுடியவில்லை, வாயை திறந்து திறந்து மூடியதிலிருந்து அவராக புரிந்துகொண்டு டார்ச் லைட்டை அடித்து முடிந்தவரை உள்ளே எட்டிப்பார்த்தார். அவருக்கும் ஒன்றும் பிடிபடவில்லை போலிருக்கிறது. குழப்பம் அடைந்தவராக என்னிடமே உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டார். நீங்கள் கேட்பதற்கு எதுவும் பதில் சொல்லமுடியாமல்இருப்பது தான் என்னுடைய பிரச்சனை என்று அவரிடம் என்னால் கூறமுடியவில்லை.

கடைசியில் அவருடைய பொது அறிவை பயன்படுத்தி தொண்டையில் புண் ஏற்பட்டுள்ளது என்று கணித்து பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு ஊசிகளை போட்டு இரண்டு பக்கஅளவிற்கு மாத்திரைகளை எழுதி கொடுத்தார். இந்த மாத்திரைகள் அனைத்தும் ஆஸ்பத்திரியிலேயே கிடைக்கும் என்பதையும் அறிவுறுத்தினார். மூன்று நாள் தொடர்ந்து சாப்பிடுங்கள், சரியாய் போய்விடும் என்றார். மாத்திரை சரியாய் போனதே தவிர குரல் ஒன்றும் அசைந்து கொடுப்பதாய் இல்லை.

அந்த டாக்டரை நம்பாமல் வேறொரு டாக்டரிடம் சென்றேன். அவரது பெயருக்கு பின்னால் ஆங்கில எழுத்துக்கள் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அவரும் ஆய்வு செய்துவிட்டு, அ, ஆ என்று சொல்லுங்கள் என்றார். சின்னக்குழந்தையாக இருந்தபோது அம்மா சொல்லிகொடுத்தது போல இதை முதலில் இருந்தே ஆரம்பிக்கிறார் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த நாள் சிலேட்டை கொண்டுவந்து அம்மா, ஆடு என்று எழுதச் சொல்வாரோ என்று பயமாக இருந்தது. அவருடைய பாச்சாவும் பலிக்கவில்லை.

இதற்கிடையே நண்பர்கள், அன்பர்கள் ஆளுக்கொரு வைத்தியம் சொன்னார்கள். அதிமதுரத்தை தேனில் கலந்து சாப்பிடச் சொன்னார் ஒருவர். தொண்டையில் சுண்ணாம்பை குழைத்து வெள்ளையடிக்கச் சொன்னார் ஒருவர். வேளாங்கண்ணி மாதாவுக்கு தொண்டை செய்து தருவதாக வேண்டி கொள்ளுங்கள் என்றார் மற்றொருவர்.

இடையில் இரண்டு ஹோமியோ மருத்துவர்களையும் சந்தித்து அவர்கள் கொடுத்த மருந்தையும் சாப்பிட்டேன். எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்பார்கள். எனக்கோ எத்தை தின்றால் குரல் திறக்கும் என்ற நிலை.

இதில் எந்த மருத்துவத்தில் குரல் சரியானது என்று சரியாகச் சொல்லமுடியவில்லை. ஊற்றில் நீர் சுரப்பது போல கொஞ்ச கொஞ்சமாக குரல் திரும்பவந்துவிட்டது.

ஒரு தனி மனிதன் தற்காலிகமாக குரலை இழப்பதிலேயே இவ்வளவு அவஸ்தைகள் என்றால் வரலாற்றில் எத்தனையோ சமூகங்கள் குரலை இழந்து தவித்திருக்கிறதே, இப்போதும் தவிக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன்.

- மதுக்கூர் இராமலிங்கம்

Pin It