வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி
பெறுவோர் பட்டியலில்
கடவுள் பெயர் விடுபட்டிருந்தது

கட்சி தொண்டரிடம் விசாரித்தார்
கடவுள்.
‘டோக்கன் தருவார்கள்’
என்றார் அவர்.

டோக்கனும் கிடைக்கவில்லை
கடவுளுக்கு
கவுன்சிலரிடம் முறையிட்டார்
கடவுள்

அமைச்சர் விழாவுக்கு வந்தால்
டிவியே தருவார் என்றார் அவர்.

தேசியகீதம் முடியும் வரை
கடவுள் காத்திருந்தார்.

எதிர்க்கட்சிக்காரர்களுக்கு டி.வி.
கிடையாதா என்று கத்தினார் ஒருவர்.

கலெக்டரிடம் கேளுங்கள் என
மிரட்டிவிட்டு அமைச்சரோடு சென்றார்
காவல்துறை அதிகாரி.

அடுத்தநாள் கலெக்டரைப் பார்க்க
கால்கடுக்க நின்றார் கடவுள்

தாசில்தாரை பார்க்கும்படி
கேட்டுக் கொண்டார் அவர்
தாசில்தாரை பார்க்கச் சென்றார்
கடவுள்.

அவரோ இலவச கேஸ் சிலிண்டர்
தர சென்றுவிட்டதாக கூறினார்கள்
இரண்டு நாள் கழித்து
மீண்டும் அவரைப் பார்த்தார்
கடவுள்.

ரேசன் கார்டு இருக்கிறதா
என்றார் அவர்
கடவுள் இல்லை என்றார்.

வாக்காளர் அட்டையாவது
இருக்கிறதா என்றார்.
கடவுள் இல்லை என்றார்.
எரிச்சலுடன் பார்த்த தாசில்தார்
கலெக்டரை பார்க்கும்படி கூறினார்.

கடவுள் கால்கடுக்க நின்றார்
அடுத்த நாள் கலெக்டரைப் பார்க்க

கலெக்டர் மீண்டும் தாசில்தாரை
பார்க்கும்படி கூறுவார் என்பதோ

தாசில்தாரோ இலவச 2 ஏக்கர்
நிலம் வழங்க சென்றிருக்கிறார்
என்று கூறுவதோ...

கடவுளுக்கு ஏனோ
தெரிந்திருக்கவில்லை! 

Pin It