இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் புகுந்துவிட வேண்டுமென்று நீண்ட நாட்களாகவே, அந்நிய ஏகபோக பன்னாட்டு முதலாளிகளுக்கு ரொம்ப ஆசை. இதற்காக அவர்கள் இந்திய அரசை நிர்பந்தித்து வந்தார்கள்.

உலகமயம், தாராளமயம் என்கிற கொள்கைகளை தீவிரமாக - கறாராக அமல் நடத்தி வரும் மன்மோகன் சிங்கின் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும் 'கருணை உள்ளத்துடன் பெரிய மனசு' வைத்து அந்நிய பன்னாட்டுப் பகாசுர முதலாளிகளின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றுவதென முடிவு செய்துவிட்டது.

வால்மார்ட், டெஸ்கோ, ஓமன்மெகா முதலான அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகள் இனி மிகப் பெரும் முதலீடுகளுடன் இந்தியாவின் சில்லறை வியாபாரக் களத்தினுள் புகுந்துவிடும்!

தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டு நாட்டில் 4 கோடி மக்கள் சில்லறை வியாபாரத் தொழில் செய்து வருகிறார்கள். விவசாயத்திற்கு அடுத்து அதிகம் பேர் ஈடுபட்டுள்ள களம் இது. நேரடியாகத் தங்கள் உழைப்பைத் தந்து செய்யும் தொழில். இனி இந்தக் களத்தினுள் வால்மார்ட்டுகளும் டெஸ்கோக்களும் ஓமன்மெகாக்களும் நுழைந்துவிட்டால், நம்நாட்டு சில்லறை வியாபாரிகள் வாழ்வாதாரமாய் உள்ள தொழிலை இழந்து நிர்கதியாய்க் தவிக்க வேண்டிய நிலைமைதான் ஏற்படும்.

10 லட்சம் மக்கள் வசிக்கும் 53 நகரங்களில் அந்நிய முதலாளிகளின் பல்பொருள் சில்லறை அங்காடிகள் அமைக்கப்படுமாம். இது ஆரம்ப கட்டம். முதல் கட்டத்திலேயே சில்லறை விற்பனையில் 51 சதவிகித நேரடி அந்நிய முதலீடு. அதாவது 29 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு! அடுத்து தொடர்ந்து இவர்களின் சில்லறை வியாபாரம் இதர நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் பரவிச் செல்லக்கூடும். இப்படியெல்லாம் போகாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? நம்நாட்டு ஆட்சியாளர்கள் தான் அந்நிய முதலாளிகளின் நிர்பந்தத்திற்கு நாணலாய் வளைகிறவர்களாயிற்றே!

விலையிலும் தரத்திலும் போட்டி ஏற்பட்டால் உபயோகிப்பாளர்களுக்கு நன்மை ஏற்படுமாம். வேலை வாய்ப்பு பெருகுமாம். 4 கோடி மக்களை தொழிலை விட்டுத் துரத்திவிட்டு என்ன நன்மை செய்யப்போகிறார்களாம்!

அமெரிக்காவில் கூட, பெரு முதலாளிகள் சில்லறை வியாபாரத்திற்குள் புகுந்ததால் ஏராளமானோர் வேலையிழந்து விட்டனர் என்று அந்நாட்டின் செனட் சபை கூறியது.

சில்லறை வியாபாரத்தில் அந்நிய பன்னாட்டு முதலாளிகளின் பிரவேசிப்பை எதிர்த்து இடதுசாரிக் கட்சிகள் நாடாளுமன்றத்திலும் வெளியே நாடெங்கும் குரல் எழுப்பி வருகின்றன. சில்லறை வர்த்தகம் செய்வோரும் இந்த ஆபத்தை எதிர்த்துக் களம் இறங்கிவிட்டனர்.

மத்திய ஆட்சியாளர்கள் அதிரும் வண்ணம் போராட்டம் வலுப்பெறட்டும்.

Pin It