கிறிஸ்து பிறப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர்கள் இந்தியாவில் குடியேறினர். ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தனர். அவர்கள் ஆடு மாடுகளை மேய்த்து வாழ்ந்தவர்கள். மத்திய ஆசியப் பகுதியில் தங்கள் ஆடு மாடுகளுக்குத் தீனிப்பஞ்சம் ஏற்பட்டபோது அதை விட்டு வெளியே கிளம்பினர்.

ஆரியர்கள் ஒரே நேரத்தில், ஒரே திசையில் வெளியேறவில்லை. ஆதிவாசிகளாயிருந்த ஆதி ஆரியக்குலங்கள் கட்டங் கட்டமாய் வெளியேறினார்கள். சில குலங்கள் மேற்கு நோக்கியும், சில தெற்கு, கிழக்கு நோக்கியும் பயணமாயினர். மத்திய ஆசியாவில் அவர்கள் வாழும் போது அவர்களுக்கென ஒரு பொது மொழி இருந்தது. ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் அவர்கள் குடியேறியபோது அவர்களது ஆதிமொழி பல மொழிகளாய்ப் பரிணமித்தது.

மிகப் பழமையான மொழிகளாய்க் கருதப்படும் சமஸ்கிருதம், லத்தீன் மொழிகளுக்கிடையே சில அடிப்படையான ஒற்றுமைகள் உள்ளன. மொழியில் மட்டுமல்ல, நாடோடிக் கலைகள், கட்டுக்கதைகள், மந்திரம் சடங்குகள் ஆகியவற்றிலும் ஒற்றுமைகள் உள்ளன. ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் ஆரியக் குலங்கள் மூலம் வளர்ச்சியடைந்த மக்களிடம் அந்த ஒற்றுமைகள் உள்ளன.

ஆரியர்களின் வானக் கடவுளான தயூஸ், கிரேக்கக் கடவுளான ஜியுஸ்ஸை ஒத்து உள்ளது. ஜியுஸ் கடவுள் பூமி தேவதையைத் திருமணம் செய்துள்ளது. அதே போல் தயூஸ் பூமிக் கடவுளான பிருதிவியைத் திருமணம் செய்துள்ளது.

கீழ்த்திசையை நோக்கி வந்த ஆரியர்கள், ஈரான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு வந்தனர். ஆரியர் வருகைக்கு முன்பே இந்தியாவில் சிந்துநதி தீரத்தில் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகம் சிறந்து விளங்கியது. ரிக் வேதத்தில் ஆரியர்கள் பெரிய கோட்டைகளைத் தாக்கி அழித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்றவை ஆரியர்களின் தாக்குதலால் தான் அழிந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சிலர் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களில் அழிந்திருக்கலாம் என்று ஊகித்துள்ளனர்.

ஆரிய மதம்

இந்தியத் துணைக் கண்டத்தில் ஆரியர்கள் குடியேறிய காலத்தில் அவர்களது வாழ்வு, சமூகம் எப்படி இருந்தது என்பதை அவர்களது மத நூல்கள் மூலம் அறிய முடிகிறது. ஆரம்ப காலத்தில் வேதங்கள் தான் ஆரியர்களின் பிரதான நூல்களாக இருந்தன. எனவே தான் இந்தியாவுக்கு வந்தேறிய ஆரியர்களை நாம் 'வேதகால ஆரியர்கள்' என்கிறோம்.

ஆரியர்களின் வேதங்களும், உப நிஷத்துகளும் பல நூற்றாண்டு கால வாழ்விலிருந்து தோன்றியவை. ரிக், யஜூர், சாம, அதர்வண என்று வேதங்கள் நான்கு ஆகும். இதில் ரிக் வேதம் தான் முதலில் தோன்றியதும் பழமையானதும் ஆகும். ஆரம்ப காலத்தில் வேதங்கள் அனைத்தும் வாய் வழியாகக் கூறப்பட்டு, செவி வழியாகக் கேட்கப்பட்டதுதான். எழுத்து வடிவமில்லை. எனவே ஆரியர்களின் ஆதி இலக்கியங்களை "சுருதி" என்றழைத்தனர். சுருதி என்றால் கேட்கப்பட்டது என்று பொருள்.

கடவுள்கள் ரிஷிகளின் காதுகளில் பேசி, அதை ரிஷிகள் மற்றவர்களுக்குத் திரும்பச் சொன்னதாக கூறுகிறார்கள். வேதங்களை மனப்பாடம் செய்து பிறருக்கு அவற்றை உபதேசம் செய்தவர்களைப் பிராமணர்கள் என்றழைத்தனர். அவர்களே மந்திரம், சடங்குகளையும் செய்தனர். ஆரண்யகா எனப்படும் வனநூலில் பிராமணர்கள் செய்ய வேண்டிய சடங்குகள் பற்றியும், யாகங்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

பிற்காலத்தில் பதிமூன்று உப நிஷத்துக்கள் தோன்றின. மனித வாழ்வு பற்றி வேதங்கள் கூறும் கடினமான செய்திகளை எளிமைப்படுத்தி இவை கூறுகின்றன. வேதங்களும் உப நிஷத்துகளும் ஆரியர்களின் வாழ்க்கை, சமூக அமைப்பு குறித்த செய்திகளை நமக்குத் தருகின்றன. ஆரியர்களின் நம்பிக்கைகள், சிந்தனை முறை, மத நடவடிக்கைகள், சமூக உறவுகளை அவற்றின் மூலம் அறிய முடிகிறது.

ஆரியர்கள் பல குலங்களாய் வாழ்ந்தவர்கள். மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நகர வாழ்க்கையை அறியாத பூர்வ குடிகளாகவே இந்தியாவுக்குள் நுழைந்தனர். அவர்கள் கிராமங்களில் தனிக்குலமாகவும், தனித் தனிக் குடும்பங்களாகவும் வாழ்ந்தனர்.

ஆரியக் குலங்கள் தந்தை வழிக்குலங்களாகும். குடும்பத்தில் வயதான ஆண் தலைமைப் பொறுப்பில் இருப்பார். குலத்தின் தலைவர் கணபதி என்றும், கிராமத் தலைவர் கிராமணி என்றும், குடும்பத் தலைவர் கிரகபதி என்றும் அழைக்கப்படுவர். முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அவர்களுக்கே உண்டு. அந்த முடிவை யாரும் மீறக்கூடாது.

குலம் அல்லது கணத்தில் பலமிகுந்த ஆண் கணபதியாவான். தனிச் சொத்துரிமையும் அரசும் தோன்றியபின் பரம்பரைத் தலைமை வந்தது. வீரனின் ரத்தத்தில் ஒரு கோழை வந்தாலும் அவன் கணபதியாக, ராஜாவாக வரமுடியும். ஏனெனில் ஆட்சி புரியவும் அதிகாரம் செலுத்தவும் அரசு யந்திரம் உருவாகி விரிவடைந்துவிட்டது.

கணபதி அல்லது ராஜாவுக்கு ஒரு பிராமண குரு ராஜரிஷியாக இருப்பார். யுத்த காலத்திலும் அமைதிக் காலத்திலும் ராஜாவுக்கு அவர் வழிகாட்டுவார்.

ஆடு மாடுகளை மேய்த்த ஆரியக் குலங்களுக்கிடையே மேய்ச்சல் நில உரிமைக்காக அடிக்கடி போர்கள் நடைபெறும். போருக்கு தலைமை தாங்கும் தளபதி சேனானி என்றழைக்கப்பட்டார். படையை உருவாக்குவதும், போர்க்காலங்களில் படைகளைப் போரில் ஈடுபடுத்துவதும் சேனானியின் பிரதான பணியாகும்.

ராஜா, ராஜரிஷி, மந்திரி ஆகியோரைக் கலந்து பேசி எதிலும் முடிவெடுப்பார். சில பிரச்சனைகளில் கிராமணிகளைக் கூட்டி வைத்து முடிவெடுப்பதுண்டு. மிக முக்கியமான விஷயங்களுக்கு குலம் முழுவதையும் கூட்டி முடிவெடுப்பார். அந்தக் கூட்டத்திற்கு 'சபா' என்று பெயர். ராஜாவுக்கு ஆலோசனை கூற 'சமிதி' என்ற குழுவும் இருந்தது.

ஆரிய குலங்களான பரத, யது, புருஸ் போன்றவை இந்தியாவின் வடமேற்கே உள்ள கணவாய்கள் வழியே வந்தனர். முதலில் சப்தசிந்து (ஏழு நதிகளைக் கொண்ட சிந்து நதி, தீரத்தில் குடியேறினர். அங்கு ஏற்கனவே வாழ்ந்த தஸ்யூ மக்களைப் போரில் வென்றனர். வளமான பூமியைத் தம் வசமாக்கிக் கொண்டு வறண்ட நிலங்களை நோக்கி தஸ்யூக்களை விரட்டினர். தஸ்யூக்கள் கருப்பு நிறத்திலும், சப்பை மூக்கோடும் இருந்தனர். அவர்கள் பல கடவுள்களை வணங்கினர்.

போரில் தோற்றுப் பிடிபட்ட தஸ்யூக்களை ஆரியர்கள் அடிமைகளாக்கினர். அந்த அடிமைகள் திருமணமே செய்து கொள்ளக் கூடாதென்று தடை செய்யப்பட்டனர். ஆரியர்களிடம் குதிரைகள் இருந்தன. வில்லும் அம்பும் இருந்தது. குதிரை மீதேறி, வில் அம்புகளால் போரிடும் ஆரியர்களை தஸ்யூக்களால் எதிர்த்து நிற்க முடியவில்லை.

ஆரியர்கள் வெள்ளைத் தோல் படைத்தவர்களாயிருந்தனர். கருப்பரை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற முறையில் நடந்து கொண்டனர். நிறத்தை அடிப்படையாக வைத்து ஏற்றத் தாழ்வை ஆரியர்கள் நிறுவினர். ஆரியர்கள் தங்களை மூன்று பிரிவுகளாய் பிரித்துக் கொண்டனர்.

புரோகிதம், யாகங்கள், மதச் சடங்குகளைச் செய்யும் பிராமணர்கள் முதல் பிரிவு. ராஜாவும் போர் செய்வோரும் சத்திரியர்கள். இவர்கள் இரண்டாம் பிரிவினர். வணிகம் மற்றும் விவசாயத்தில் ஈடுபட்ட மூன்றாவது பிரிவினர் வைசியர் என்றழைக்கப்பட்டனர். போரில் வெற்றி கொள்ளப்பட்டு அடிமைகளாக்கப்பட்ட தஸ்யூக்கள் சூத்திரர் என்று அழைக்கப்பட்டனர்.

தஸ்யூக்களைத் திருமணம் செய்த ஆரியர்கள் விலக்கி வைக்கப்பட்டு சூத்திரர்களாய் கருதப்பட்டனர். தொழிலால் உயர்வு தாழ்வாகக் கருதப்படுவது ஆரம்பத்தில் கடுமையாக இல்லை. பிற்காலத்தில்தான் கடுமையாகியது. இதன் காரணமாகப் பலரும் தங்கள் தொழிலை மாற்றிக் கொண்டனர். வெளிக் குலங்களில் தங்கள் தொழில் வகைப் பிரிவினருடன் திருமண உறவு கொண்டனர்.

காலப்போக்கில் நால்வகைச் சாதியில் பிராமணர் முதலாகவும் பின்பு சத்திரியர், வைசியரும் கடைசியாக சூத்திரரும் என்று சட்டமாக்கப்பட்டது. அது பிராமணர்களைப் புனிதர்களாக, நிரந்தரமாகக் கருத இடமளித்தது. சாதி வேறுபாடுகளின் அடிப்படையிலேயே குற்றங்களுக்கான தண்டனைகள் வழங்கப்பட்டன. ஒரே குற்றத்திற்கு பிராமணனுக்குப் பெயரளவுக்கு சிறு தண்டனையும், வைசியருக்கு ஒரு தண்டனையும், சூத்திரர்களுக்கு மிகக் கடுமையான தண்டனையும் வழங்கப்பட்டது.

இதன் காரணமாக நால்வகைச் சாதிக்குள் தங்கள் தொழிலை மாற்றிக் கொண்டனர். தொழிலை மாற்றித் தங்கள் சாதியை மாற்றிக் கொண்டனர். அதைத்தடுக்க, தொழிலால் ஏற்பட்ட சாதிப்பிரிவினை பின்பு பிறப்பால்- பரம்பரையாக என்று ஆக்கப்பட்டது. இதன் மூலம் கீழ் நிலையிலுள்ள மக்கள் மேல்நிலைக்கு வர முயற்சிப்பது தடை செய்யப்பட்டது. இந்த வளர்ச்சிப் போக்கில் சூத்திரர்களைத் தீண்டுவதே கேவலம் என்றும், அவர்கள் தாழ்ந்த பிறவிகள் என்றும் ஆக்கப்பட்டனர்.

ஆரியர் வாழ்க்கை

ஆரியர்களின் கிராமங்கள் எளியவை. மண்சுவர்களாலான குடிசைகளே அவர்களது வீடுகள். காளைகளையும் எருமைகளையும் உழுவதற்குப் பயன்படுத்தினர். கிணறுகள், கால்வாய்களை வெட்டினர். பார்லி, கோதுமை, அரிசி போன்ற தானியங்களைச் சாகுபடி செய்தனர். மேலும் தச்சர், கொல்லர், உலோக வார்ப்படக்காரர்கள், தோல் பதனிடுதல், ஆடுமாடு மேய்த்தல், ஆடைகளை நெய்தல், மண்பாண்டங்கள் செய்தல் போன்ற வேலைப் பிரிவினைகளும் செய்யப்பட்டன.

வேத காலத்திலேயே இரும்பைப் பயன்படுத்தி ஆயுதங்களையும், கருவிகளையும் செய்தனர். செம்பு, வெண்கலத்தை விட அவை உறுதிமிக்கதாய் இருந்தன. கோடரி, வாட்கள், ஈட்டிகள், வில் அம்புகள் போன்ற ஆயுதங்களை ஆரியர்கள் பயன்படுத்தினர். காடுகளை அழித்து விளை நிலங்களாக்கினர். பெண்கள் நூல்நூற்பது, ஆடைகள் நெய்வது போன்ற வேலைகளைச் செய்தனர்.

பிராமணர்கள் மந்திரம், சடங்குகள் செய்வது, யாகங்கள் செய்வது போன்ற வேலைகளைச் செய்தனர். சிறுவர்களுக்கு வேதபாட சாலைகள் மூலம் கற்பித்தனர். பிராமணர்கள் செடிகள், மூலிகைகளைப் பயன்படுத்தி மருத்துவமும் செய்தனர்.

ஆரிய மதம்

ஆரியர்கள் இயற்கைச் சக்திகளை வணங்கினர். அவற்றுக்கு வெவ்வேறு பெயர்களைச் சூட்டினர். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மழை, பூமி, ஆகாயம், மரங்கள், நதிகள், மலைகள், காற்று ஆகிய அனைத்தையும் ஆண் கடவுள்களாகவும், பெண் கடவுள்களாகவும் வணங்கினர். இந்தக் கடவுள்களுக்கெல்லாம் தலைவனாக இந்திரன் வைக்கப்பட்டான். மழை, புயல், போர்க்கடவுளாக அவன் இருந்தான். பகைவர்களை அழிக்கும் ஆற்றலைத் தரும் கடவுளாகவும் இந்திரன் கருதப்பட்டான்.

தையாஸ் என்பது ஆகாயக் கடவுளின் பெயர், பூமிக் கடவுளான பிருதிவி யை தையாஸ் திருமணம் செய்து கொண்டான். நெருப்புக் கடவுளின் பெயர் அக்னி; விடியல் கடவுளின் பெயர் உஷா. நீர் கடவுளின் பெயர் வருணன். இந்தக் கடவுள்களை வேண்டியும், புகழ்ந்தும் பாடிய பாடல்களே ரிக் வேதப் பாடல்களாகும். கடவுள்கள் வருத்தப்பட்டாலோ, கோபமடைந்தாலோ சீறுவார்கள் என்று ஆரியர்கள் பயந்தனர். ஆகவே கடவுள்களுக்கு அதிருப்தியின்றி எப்போதும் அவர்களை மகிழ்ச்சியோடு வைத்திருக்க விரும்பினர். அதற்காகவே பலிகளையும், யாகங்களையும் நடத்தினர். நிரந்தரமாய் பலிபீடம் கட்டப்பட்டது. அவற்றில் மந்திர உருவங்களைத் தீட்டினர்.

மிருகங்கள் பலியிடப்பட்டன. அவை நெருப்பிலே சுடப்பட்டு அனைவரும் கூட்டாக உண்டனர். சோம இலையிலிருந்து தயாரிக்கப்பட்ட பானமும், பார்லியிலிருந்து சுரா என்ற பானமும் தயாரிக்கப்பட்டது. அதில் போதை இருந்தது. இயற்கையைக் கண்டு பயந்து வணங்கிய மனிதர்கள் தங்கள் பயத்தைப் போக்க சோம பானம் அருந்தினர். கடவுள்களின் பெயரைச் சொல்லி அழைத்து ஆடிப்பாடி அவர்களை மகிழ்வித்தனர்.

பிராமண குருமார்களை மக்கள் பெரிதும் மதித்தனர். கடவுள்களோடு அவர்கள் மந்திர மொழி மூலம் பேசக் கூடியவர்கள் என்றும், கடவுளிடம் சொல்லி தங்கள் குறைகளை நிவர்த்திப்பவர்கள் என்றும் மக்கள் நம்பினார்கள். எனவே துணிமணிகள், தானியம், கால்நடைகள் என்று புரோகிதர்கள் எதைக் கேட்டாலும் மக்கள் பயபக்தியுடன் காணிக்கையாய் வழங்கினர்.

பிராமணர்களில் சிலர் வேதங்கள், மந்திரம் சடங்குகளை நம்ப மறுத்தனர். உண்மையான கடவுள்கள் யார் என்று அறியவும், பூமியையும் மனிதர்களையும் படைத்தவர் யார் என்று அறிய விரும்பினர். அவர்கள் காடுகளுக்குள் சென்று தங்களுக்குள் விவாதித்தனர். தியானம் (தவம்) செய்தனர். அவர்கள் ரிஷிகள் என்று அழைக்கப்பட்டனர். சீடர்கள் ரிஷிகளின் கருத்துக்களை மனப்பாடம் செய்து, தொடர்ந்து உபதேசித்து வந்தனர். பின்பு எழுத்தில் வடித்தனர். அவையே உபநிஷத்துகளாகும்.

பல நூற்றாண்டுகளாக பஞ்சாபில் வாழ்ந்த ஆரியர்கள் தென்கிழக்கே பயணமானார்கள். முதலில் அரியானாவிலும், பின்பு கங்கையின் மேற்குச் சமவெளியிலும் குடியேறினர். கொஞ்சங் கொஞ்சமாக முன்னேறி பீகாரிலிருந்த மகத ராஜ்ய எல்லைக்கு வந்தனர். யமுனா நதிக்குத் தெற்கேயும், சம்பல் நதியைத் தாண்டியும் வந்தனர். பின்பு விந்திய மலையைத் தாண்டி தக்காணத்திற்கு வந்தனர். கிமு 600 வரை தொடர்ந்தது. இந்தியாவின் பல பூர்வகுடிகள் போரில் முறியடிக்கப்பட்டு ஆரிய சாம்ராஜ்யத்துக்கு அடிமையானார்கள். இவ்வாறு இந்தியா ஆரியவர்த்தமானது.

ஆட்சி அதிகாரத்திற்காகவும், செல்வத்தை அபகரிக்கவும், ஆரியர்கள் பெரும் போர்களில் ஈடுபட்டனர். சட்டம், நீதிமன்றங்களையும் நிறுவினர். அரியானாவிலுள்ள குருச்சேத்திரப்பகுதியை குரு வம்சமும், கங்கையின் மேற்குப் பகுதியை பாஞ்சால வம்சமும் கைப்பற்றினர். ஆரியரல்லாத பெரிய அரசுகளில் கிழக்கு பீகாரிலிருந்த அங்க தேசம், தெற்கு பீகாரிலிருந்த மகத தேசம், கோதாவரி தீரத்திலிருந்த ஆந்திர தேசமும் குறிப்பிடத்தக்கவையாகும்.

Pin It