இப்பொழுதெல்லாம் சாயங்காலம் ஆனா, அந்த "பிராண்ட்" எண்ணெயில் என் மனைவி பஜ்ஜி செய்தால் என் வாயை கட்டுப்படுத்திக் கொள்வதேயில்லை. நன்றாகச் சாப்பிடுகிறேன். எனக்கு உடம்பைப் பற்றி பயமே இல்லை - ஒரு சமையல் எண்ணெய் விளம்பரத்தில் ஒரு வயதானவர் இப்படிக் கூறுவதை நீங்களும் பார்த்திருக்கலாம். சமையல் செய்யும்போது எண்ணெய் என்ற வார்த்தையை கேள்விப்பட்டவுடனே, "ஐயய்யோ, கொழுப்பு, ஹார்ட் அட்டாக், பி.பி" என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார ஆரம்பித்து விடுகிறோம். நம் நாட்டு சமையல் எண்ணெய்கள் அவ்வளவு பயங்கரமானவை என்ற கருத்து நம்மிடையே நீக்கமற நிரம்பியிருக்கிறது.

எண்ணெய் சொட்டும் இந்த பஜ்ஜி, சொஜ்ஜியைத் தாண்டி உண்மையிலேயே ஆரோக்கியமான வகையில் காலங்காலமாக நாம் பல பயன்படுத்திக் கொண்டிருந்த சமையல் எண்ணெய்கள் இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆயுதங்களை வைத்துத்தான் நிகழ்த்த வேண்டுமென்பதில்லை. வணிக ரீதியாகவும் பயங்கரவாதம் செய்ய முடியும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்த சமையல் எண்ணெய் வணிகத்தில் இலை மறையாக நடந்த வணிகப் போர்கள். பெட்ரோலை கைப்பற்றுவதற்காக போரிடத் தயாராக இருக்கும் வல்லரசு நாடுகள், சமையல் எண்ணெயை சாத்வீகமாகவே நம் மீது திணித்துவிடுகின்றன.

கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரால் என்று அலோபதி மருத்துவர்கள், அவர்களைச் சார்ந்த உணவு நிபுணர்கள் முன்வைக்கும் பயமுறுத்தலுக்குப் பின்னால் மிகப் பெரிய வணிகப் போட்டி இருந்தது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சூரிய காந்தி எண்ணெயையும்,  சோயா எண்ணெயையும்  உலகங்கும் வணிகப்படுத்துவதற்காக, நமது பயன்பாட்டில் பெருமளவு இடம்பெற்றிருந்த தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் வியாபாரத்தை காலி செய்ய, பெரும் மருத்துவ நிறுவனங்களுடன் அமெரிக்க அரசு கைகோர்த்து நிகழ்த்திய நாடகம் இது என்ற தகவல் கிடைத்துள்ளது. இது அவர்களது கூட்டுச் சதியாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று அறிஞர்கள் புருவம் உயர்த்திக் கூறுகின்றனர். பாரம்பரிய உணவுகளைப் பற்றிய பொய்களை  FDA என்ற தனது அடியாள் மூலம் உலகெங்கும் உள்ள மருத்துவர்களிடமும், உணவு மேலாண்மை செய்பவர்கள் மத்தியிலும் அமெரிக்கா பரப்பி வருகிறது.

அறுபதுகளின் முடிவில்தான் அந்த பெரும் வணிகப் போர் நிகழ்ந்தது. அதுவரை உலகெங்கும் தேங்காய் எண்ணெயும் ஆலிவ் எண்ணெயுமே ஆட்சி செலுத்தி வந்தன. தென் கிழக்கு ஆசிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள், மேற்கிந்தியத் தீவுகள் முழுவதும் தேங்காய் எண்ணெய்தான் பிரதான சமையல் எண்ணெய். ஐரோப்பாவில் மட்டும் ஆலிவ் எண்ணெய் ஒட்டிக் கொண்டிருந்தது. அப்போது தேங்காய் எண்ணெயில் உள்ள  Saturated fat  இதய நாடிகளில் கொழுப்பை சேர்த்துவிடும் என்ற செய்தியை மருத்துவ ஏடுகளும், சாமானியன் படிக்கும் இதழ்களும் அவசரஅவசரமாக எழுதத் தொடங்கின. அமெரிக்க திட்டம் பலிக்கத் தொடங்கியது. தேங்காய் எண்ணெயின் ஆளுமை உலகங்கும் குறையத் தொடங்கி, இன்று பிள்ளையாரைத் தவிர, மற்ற அனைவரும் அஞ்சும் பொருளாகி விட்டது தேங்காய். ஆனால் இந்த அச்சம் உண்மையா, அல்லது உண்மை குழியில் போட்டு மூடப்பட்டுவிட்டதா?

கொழுப்புக்களில் கீழ்கண்ட பிரிவுகள் இருப்பதாக  இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது. Saturated fat, Unsaturated fat  என்பதே அந்த இரண்டு வகை. இந்த இரண்டாம் பிரிவை, mono and poly unsaturated fat  என இரு பெரும் பிரிவாக பிரிக்கின்றனர். தேங்காய் எண்ணெயில் saturated fat அதிகம் உள்ளதால், அது பிற விலங்கு கொழுப்பு போல் கெட்ட கொலஸ்டிராலை  நமது ரத்தத்தில் ஏற்றிவிடும் என்ற பொய் குற்றச்சாட்டு திணிக்கப்பட்டது. இன்றைக்கு ’கொலஸ்டிரால்’ குறித்த அச்சம் இல்லாத குடும்பமே நம்மூரில் இல்லை என்ற அளவுக்கு இது வளர்ந்துவிட்டது.

தாவர கொழுப்புகளில் கொலஸ்டிரால் நேரடியாக இடம்பெறவில்லை. நமது ரத்தக் குழாய்களின் உட்சுவர்களில் கீறல், புண்கள் ஏற்படுகையில், அதை சரி செய்யும் சிமெண்ட் போன்ற பணியைத்தான் கொலஸ்டிரால் செய்கிறது (சுவர்களில் நாம் பட்டி பார்த்து பெயிண்ட் அடிப்போமே அது போல). தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு பொருளும் அதைத்தான் செய்கிறது.

முதலில் saturated fat வேண்டாம் என்றும், poly un­saturated fat அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லது என்றும் சொன்னவர்கள், தற்போது  mono un­saturated / poly unsaturated  விகிதம்தான் முக்கியம் என்கிறார்கள். கூடுதலாக ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் இருந்தால் நல்லது என்று தற்போது பேசப்படுகிறது. இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதே மேற்கத்திய அவசர அறிவியலில் நிரந்தரமாக இருக்கிறது. இப்படி முரணாகப் பேசுவதன் மூலம் அவர்களது வியாபாரம் மட்டும் குறைவதேயில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெயோ அல்லது நல்லெண்ணெயோ  நேரடியாக ரத்தக் குழாய் அடைப்பை உருவாக்குவதில்லை. நமது மன உளைச்சல், தினமும் உடலில் சேரும் மாசுகள், partially hydro­genated trans fat  (ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவுகள்தான் ட்ரான்ஸ் ஃபேட்டை நம் உடலில் அதிகம் சேர்க்கின்றன) போன்றவைதான் பல்வேறு காரணங்கள்  ரத்தக் குழாய் அடைப்புக்கு முதல் காரணிகள். நாம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற நெருக்கடி மனநிலையை அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் உருவாக்குவதால்தான், நமது மனஉளைச்சலும் அதிகரிக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

இன்னும் கூடுதலாக, ரத்தக் குழாய் அடைப்பு உருவாகக் காரணியாகக் கருதப்படும் சில நுண்கிருமிகளைக்கூட கொல்லும் இயல்பு  தேங்காய் எண்ணைய்க்கு உண்டு என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் உடல் தேற, அவை 5-6 மாதத்தில் பால்-அரிசி கஞ்சிக்கு மாறும் பருவத்தில் தேங்காய் எண்ணெய் துளிகள் சேர்த்து கொடுத்தால் உடல் எடை உயர்வும், நோய் எதிர்ப்பாற்றலும் பெருகும் என்பது நமது அனுபவம் சொல்லும் சேதி.

லாரிக் அமிலம் என்ற அமிலம், நம் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் மிகச் சிறந்த பொருள். உலகில் கிடைக்கும் பொருள்களில் இது இடம்பெற்றுள்ள இரண்டு பொருட்கள் தாய்ப்பாலும், தேங்காய் எண்ணெயும் மட்டுமே. இதை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க நிறுவனங்கள் மோனோலாரின் என்ற பொருளை தேங்காய் எண்ணெயில் இருந்து பிரித்தடுத்து, அதற்கு காப்புரிமை பெற்று சந்தைப்படுத்தியும் வருகின்றன. மோனோலாரின் என்று நமக்குத் தெரியாத பெயரில் தேங்காய் எண்ணெயை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு, தேங்காய் எண்ணெயால் நமது உடல்நலனுக்குக் கேடு என்ற மாயை உருவாக்கி, நம் தலையில் மிளகாய் அரைத்திருக்கிறார்கள். ஆனால், நாமோ தேங்காய் எண்ணெயைக் கண்டாலே அலறி ஓடிக் கொண்டிருக்கிறோம்.

மருத்துவ உலகமோ FDA எனும் பொய்புரட்டு நிறுவனத்தின் அரைகுறை அறிக்கைகளை மட்டுமே வேதமாக நினைத்து, பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் மோகத்தில் வீழ்ந்து கிடக்கிறது. உணவு அரசியலில் அமெரிக்கா செய்யும் பயங்கரவாதத்தின் ஒரு பகுதிதான் இது. அதிலிருந்து மீளாத வரை நமக்கு ஆரோக்கிய வாழ்க்கை இல்லை.

அமெரிக்காவின் உணவு பயங்கரவாதம்

நமது பாரம்பரிய எண்ணெய்கள் எப்படி திட்டமிட்டு ஒரங்கட்டப்பட்டன என்பதைப் பற்றி, அது தொடர்பாக தொடர்ந்து செயல்பட்டு வரும் சூழலியலாளர் வந்தனா சிவா பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டுகிறார். "பூவுலகின் நண்பர்கள்" சமீபத்தில் அவரைச் சந்தித்தபோது அவர் சுட்டிக்காட்டிய விஷயங்கள்:1998ஆம் ஆண்டில் விநோதமான ஒரு விஷயத்தை நாம் சந்திக்க வேண்டியிருந்தது. திடீரென்று ஒரு நாள் தில்லி முழுக்க விற்பனை செய்யப்பட்ட கடுகு எண்ணெயில் கலப்படம் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதன் எல்லா பிராண்டுகளுமே கலப்படமாகி இருந்தன. இதனால் நிறைய பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் தில்லியில் மட்டுமே இந்த நிலை ஏற்பட்டிருந்தது பெருத்த சந்தேகத்தை உருவாக்கியது.  இது தொடர்பாக எங்கள் நவதான்யா அமைப்பு சார்பில் சிலரை மருத்துவமனைக்கு அனுப்பி நோயாளிகளை பரிசோதித்ததில், அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது கடுகு எண்ணையால் அல்ல என்பது தெரியவந்தது.

மக்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய் வர்த்தகத்தை கையகப்படுத்துவதற்கான மறைமுகத் திட்டமாகவும், சோயா எண்ணெய்க்கான ஆதரவைத் தேடும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றும் தெரிய வந்தது. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்காவில் புழக்கத்தில் இருந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயாவை, நமது மக்களிடையே திணிப்பதற்கான மறைமுகமான நடவடிக்கை இது.

இந்தியாவில் அந்தந்த வட்டாரத்தில் கிடைக்கும் எண்ணெய்களைக் கொண்டு உணவு தயாரிக்கவும், அதையே பெருமளவு வியாபாரம் செய்யவும் நமது மக்கள் பழகியிருக்கின்றனர். உதாரணத்துக்கு கேரளாவில் சமைப்பதற்கு பெருமளவில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். வட இந்தியாவில் கடுகு எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். காலகாலமாக இது தொடர்ந்து வருகிறது.

ஆச்சரியப்படும் வகையில், கடுகு எண்ணெயில் கலப்படம் என்ற தகவல் வெளியான அடுத்த நாளே அது தடைசெய்யப் பட்டது. அதற்கு நேர்மாறாக சோயா எண்ணெய்க்கு ஒரு டன்னுக்கு 190 டாலர்களை மானியமாக வழங்கி அமெரிக்கா உற்பத்தி செய்வதால், அதை குறைந்த விலைக்கு கொடுக்க முடிகிறது. அதை இறக்குமதி செய்ய அரசு அனுமதித்தது. இதனால் இந்தியாவில் புழக்கத்திலிருந்த பாரம்பரிய எண்ணெய் வகைகள்  உணவுப் பழக்கத்திலிருந்து முற்றிலுமாக ஒதுக்கப்பட்டன. பாரம்பரிய எண்ணெய்கள் உடல் ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிப்பவை என்ற தவறான கருத்து வேகவேகமாக சமூகத்தில் பரப்பப்பட்டது. ஆனால் உடலை பெருமளவு பாதிப்பது ரீஃபைண்ட் ஆயில் என்ற சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்தான். மேலும் அதில் மரபணு மாற்றப்பட்ட பருத்திவிதைகூட கலக்கப்பட்டிருக்கலாம்.

எண்ணெய் என்றாலும் வேறு எந்த உணவுப் பொருள் என்றாலும், நாம் எப்பொழுதுமே உணவை வேதியியல் பொருளாகப் பார்த்ததில்லை. அதன் ஒட்டுமொத்த பண்புகளுடன்தான் அறிந்திருக்கிறோம். அத்தகைய அபரிமிதமான நமது அறிவு அழிந்துபோக அனுமதிக்கக் கூடாது. உணவுப் பாதுகாப்பு என்பதும் உடல் ஆரோக்கியமும் இன்று மிகவும் போலியானதாகவும் மக்களுக்கு எதிரானதாகவும் மாறிவிட்டன. இதை நாம் எல்லோரும் இணைந்து எதிர்க்கவேண்டும். இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இதற்கான இயக்கத்தை நாங்கள் உருவாக்கியபோது சூழலியலாளர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் இரண்டாம் கட்ட போராட்டத்தில் மருத்துவர்கள், பொது சுகாதார நிபுணர்கள், உடல் ஆரோக்கிய வல்லுநர்கள் மற்றும் நுகர்வோர்கள் என அனைவருமே விவசாயிகளுடன் கைகோர்த்து குரல் வேண்டும். அதற்கான காலக்கட்டம் இது

Pin It