“மருத்துவ நிபுணர்களே! H1N1 தொற்று நோயை தடுத்திடுங்கள். உயிர்களை காப்பாற்றுங்கள்!” என்று பிரபல பத்திரிகைகளில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விளம்பரங்களை பலரும் பார்த்திருக்கலாம். மக்கள் மீதுதான் அரசுக்கு எவ்வளவு அக்கறை? எவ்வளவு கரிசனம்? என்று வியப்பு ஏற்படலாம். ஆனால் இது போன்ற நோய்களை தடுப்பதற்கான வாய்ப்பு உண்மையிலேயே மருத்துவர்களிடம் உள்ளதா? என்ற கேள்வி மிகவும் முக்கியமானது.

பன்றிக் காய்ச்சல் என்பது “ஆர்த்தோமிக்சோவிரிடே” (Orthomyxoviridae) குடும்பத்தை சேர்ந்த வைரஸ்களால் வரும் ஒரு உயிரழிக்கும் நோயாகும். “ஆர்த்தோமிக்சோவிரிடே” என்னும் பெயர் மூன்று கிரேக்க சொற்களால் ஆனது. orthos = சரியான, சீரான ('standard, correct'), myxo = சளி ('mucus'), viridae வைரஸ் நுண்கிருமிகள். இந்நோய் இன்புளூயன்சா A, இன்புளூயன்சா B, இன்புளூயன்சா C என்னும் மூன்று வகையான வைரஸ்களால் ஏற்படுகிறது. இதில் இன்புளூயன்சா A-வால் மிக அதிகமான அளவிலும், இன்புளூயன்சா C-யால் மிக அரிதாகவும் தொற்றுகிறது. இந்நோயை பரப்பும் வைரஸ் மிகவும் அரிதான மரபணு தொகுதியை பெற்றிருப்பதால், இதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்துள்ளனர்.

இந்நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இந்நோய் பெரும்பாலும் பன்றிப் பண்ணைகளில் வேலை செய்பவர்களைத் தாக்குகிறது. ஒரு மனிதரை தாக்கியபின், மனிதரின் உடலுக்குள் வைரஸ்களின் மரபணு புகுந்து மிக விரைவில் மாற்றம் பெற்று, வேறு ஒரு மனிதனைத் தாக்குகிறது.

இதுபோன்ற காய்ச்சல் (flu) வகை உலக சரித்திரத்தில் பலமுறை கண்டறியப்பட்டுள்ளது. 1957ம் ஆண்டு ஆசியக் காய்ச்சல் (Asian Flu) 4.5 கோடி அமெரிக்கர்களை பாதித்து அதில் எழுபதாயிரம் பேர் இறந்து போனார்கள். அதற்கு பதினொரு வருடங்களுக்குப் பின்னர் 1968 மற்றும் 1969ம் ஆண்டில் ஹாங்காங் காய்ச்சல் (HongKong flu) 5 கோடி அமெரிக்கர்களை பாதித்து, அதில் முப்பத்தி மூவாயிரம் பேர் இறந்தனர். 1976ம் ஆண்டு அமெரிக்க படையினர் ஐநூறு பேர் பன்றிக் காய்ச்சலால் (wine flu) சில வாரங்கள் பீடிக்கப்பட்டார்கள் என்றாலும், சில மாதங்களுக்குப் பின் இந்த நோய் மாயமாக மறைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

இத்தகைய கொடிய நோயை தடுக்கும் ஆற்றல் நமது மருத்துவர்களுக்கு இருக்கிறதா என்ற கேள்வி இதுவரை எழுப்பப்படவில்லை. பல்லாயிரம் மக்களை பாதிக்கும் இந்த நோயை தடுக்கும் ஆற்றல் மருத்துவர்களுக்கு இல்லை என்பதே யதார்த்தமான உண்மை. ஏனெனில் இந்த நோய்களுக்கான காரணிகள் மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. இந்த நோய்களுக்கான காரணிகள் பல்வேறு நாடுகளின் அரசுகளை கட்டுப்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டியது.

மரபணு மாற்றுத் தொழில்நுட்பம், அறிவுச் சொத்துரிமை போன்ற பெயர்களில் உணவு தானியங்களையும், உணவுக்கு பயன்படும் கால்நடைகளையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியில் பன்னாட்டு நிறுவனங்கள் வெற்றி பெற்று வருவதாகவே தோன்றுகிறது. குறிப்பாக இறைச்சி உணவில், இந்த பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. உலகில் உள்ள முட்டை மற்றும் இறைச்சிக் கோழி வளர்ப்பு நவீன பண்ணை முறைக்கு மாறியதன் விளைவாக, ஜெர்மனி நாட்டின் “எரிக் வெஸ்ஜோஹன் குரூப்”, நெதர்லாந்தின் “ஹென்ட்ரிக்ஸ் ஜெனடிக்ஸ்”, பிரான்ஸின் “க்ரிமாட் குரூப்”, அமெரிக்காவின் “டைசன்” ஆகிய நான்கு நிறுவனங்களின் ஏகபோக கட்டுப்பாட்டிற்குள் அடங்கி விடுகின்றன.

இதேபோல உலக அளவில் பண்ணை முறையில் வளர்க்கப்படும் பன்றிகள் அனைத்தும் இங்கிலாந்து நாட்டின் “ஜீனஸ் பிஎல்சி”, நெதர்லாந்தின் “ஹென்ட்ரிக்ஸ் ஜெனடிக்ஸ்” மற்றும் “பிக்-சர் குரூப்”, டானிஷ் நாட்டின் மாட்டிறைச்சிக் கூட்டுறவு அமைப்பு ஆகிய நான்கு நிறுவனங்களின் கைகளிலேயே உள்ளது.

அதிக முட்டை, அதிக பால், அதிக இறைச்சி போன்ற காரணங்களுக்காக இந்த கால்நடைகளின் மரபணுக்களில் பன்னாட்டு நிறுவனங்கள் பல மாறுதல்களை உருவாக்குகின்றன. இந்த மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தால் அந்த உயிரினங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு அறிவுச் சொத்துரிமை சட்டத்தின்கீழ் காப்புரிமை பதிவு செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாடு, ஆடு, பன்றி, வாத்து, மீன் போன்ற உணவுக்கு பயன்படும் விலங்குகளையும் மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழிற்சாலை முறையில் வளர்ப்பதற்கு இந்த நிறுவனங்கள் வழி செய்கின்றன. உலக வர்த்தக நிறுவனத்தின் நிர்பந்தம் காரணமாக, இன்று தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபணுக்களுக்கு உலகெங்கும் காப்புரிமை வழங்கப்படுகிறது. இதற்கென Budapest Treaty என்கிற ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இதைப் பயன்படுத்தி “மான்சான்டோ” போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மரபணு மாற்று பன்றிக்களுக்கு மட்டும் அல்லாமல் பாரம்பரிய பன்றி வகைகளுக்குமாக சுமார் 12 பன்றி ரகங்களுக்கு காப்புரிமை கோரி மனு செய்துள்ளது.

வளரும் நாடுகளின் அரசுத் துறைகளில் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் செலுத்தும் ஆதிக்கம் காரணமாக, இந்த மரபணு மாற்ற விலங்குகளே சந்தையில் கிடைக்கும் நிலை ஏற்படுகிறது. பாரம்பரிய விலங்கு மற்றும் பறவை இனங்கள் காலப்போக்கில் அழியும் நிலையும் ஏற்படுகிறது. இந்தியா போன்ற வளரும்(?) நாடுகளில் சுயஉதவிக் குழுக்கள், தொண்டு நிறுவனங்கள், சிறுகடன், வங்கிக் கடனுதவி போன்ற அம்சங்கள் மூலமாகவும் மரபணு மாற்றப்பட்ட விலங்குகள் வளர்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது.

ஆனால் மரபணு மாற்றம் காரணமாக இந்த விலங்குகளில் ஏற்படும் எதிர்விளைவுகள் குறித்து உரிய ஆய்வுகள் நடத்தப்படுவதில்லை. பயிர் வகைகளைப் போல இந்த கால்நடைகளிலும் அதிக உற்பத்தி என்ற இலக்குக்காக மரபணு மாற்றம் நடைபெறுவதால், கால்நடைகளின் இயல்பான நோய் எதிர்ப்புத் திறன் வீரியமிழந்து போகிறது. வீடுகளில் நாம் வளர்க்கும் நாட்டு மாடுகளுக்கும், கோழிகளுக்கும் இருந்த வீரியமோ, நோய் எதிர்ப்புத்திறனோ நவீன உயர்ரக (!!??) ஜெர்சி போன்ற கறவை மாட்டு இனங்களுக்கும், பல வகை பண்ணைக் கோழிகளுக்கும் இல்லை என்பது நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் மனித குலத்தையே அச்சத்திற்கு உள்ளாக்கும் பல வகை நோய்கள் இந்த நவீன பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளால் உருவாகின்றன என்பது பலருக்கும் தெரிவதில்லை.

லாப நோக்கில் இயங்கும் நிறுவனம் சார்ந்த அறிவியலாளர்கள், இந்த கால்நடைகளின் மரபணுக்களில் உருவாக்கும் மாற்றத்தால், இவை இயல்பு நிலையில் இருந்து பெருமளவு மாறி விடுகின்றன. இதன்காரணமாக கால்நடைகளின் வழக்கமான நோய் எதிர்ப்புத்திறன் குறைவதோடு, புதிய நோய்கள் தாக்கக்கூடிய ஆபத்தும் அதிகரித்து வருகிறது. இந்த கால்நடைகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் நடைபெறும் ஆராய்ச்சிகள் பல நேரங்களில் தீய விளைவுகளை ஏற்படுத்தும் வைரஸ் போன்ற நுண்கிருமிகளை உருவாக்குகின்றன. இந்த வைரஸ்களே சார்ஸ், ஆந்தராக்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களை உருவாக்குகின்றன. இந்த நோய்க்கிருமிகள், உயிரியல் ஆயுதங்களாக திட்டமிட்டு பரப்பப்படுகின்றன என்ற கருத்தும் ஒரு தரப்பினரிடம் உள்ளது.

இந்த நோய்கள் உருவாவதற்கான காரணம் தெரியாததாலோ அல்லது வேறு வர்த்தக காரணங்களுக்காகவோ இந்த நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் இதுவரை தயாரிக்கப்படவில்லை. ஆனால் இந்நோய்களுக்கான சிகிச்சை மருந்துகளை தயாரிக்க மருந்து நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இந்த நோய்களுக்கான மருந்துகளை தயாரிப்பதில், குறிப்பிட்ட நோயை உருவாக்கும் வைரஸ்களின் மாதிரிகள் தேவைப்படுகின்றன. இந்த மாதிரிகளை, நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து மட்டுமே சேகரிக்க முடியும்.

இதற்காக உலக சுகாதார நிறுவனம் (WHO) சார்பில் சர்வதேச இன்ப்ளூயன்சா கண்காணிப்பு இணையம் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் இன்ப்ளூயன்சா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டில் உள்ள தேசிய இன்ப்ளூயன்சா மையம், நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து வைரஸ் கிருமிகள் பிரித்தெடுத்து உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து செயல்படும் ஆய்வு மையங்களில் ஒப்படைக்கிறது.

உலக சுகாதார மையத்தின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டிய இந்த மையங்கள் தனியார் மருந்து நிறுவனங்களின் லாபத்திற்காக, நோய்க்கிருமிகளை திருட்டுத்தனமாக பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு அளிப்பதாக புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தோனேஷியா நாட்டில் இன்ப்ளூயன்சா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட வைரஸ் கிருமிகள் தனியார் மருந்து நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டதாகவும், அந்த வைரஸ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகளை இந்தோனேஷியாவிற்கு தேவையான அளவில் வழங்க மருந்து நிறுவனங்கள் மறுப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து சர்வதேச இன்ப்ளூயன்சா கண்காணிப்பு இணையத்திற்கு, நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட வைரஸ் கிருமிகளை வழங்க இந்தோனேஷியா மறுத்துவிட்டது. இதையடுத்து உலக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இந்தோனேஷியா இருப்பதாக மேற்குலக நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இன்ப்ளூயன்ஸா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலிலிருந்து எடுக்கப்படும் வைரஸ் கிருமிகளை சேகரிக்கும் மருந்து நிறுவனங்கள், அந்த வைரஸ் கிருமிகளுக்கு காப்புரிமை பெற்றுவிடுகின்றன. எனவே இந்த வைரஸ் கிருமிகளைக் கொண்டு மற்றவர்கள் எந்த சோதனையும் செய்ய முடியாது. இதன் மூலம் இந்த இன்ப்ளூயன்ஸா நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் முடக்கப்படுகின்றன.

பன்றி காய்ச்சல் தொடர்பாக 1983 ஆம் அண்டு முதல் 2008 வரை 326 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. பன்றி காய்ச்சல் தடுப்பு மருந்துகள் தவிர்த்து இந்நோய் கிருமியின் மரபணுவுக்கும் காப்புரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் பொரும்பாலான காப்புரிமைகள் AstraZeneca (UK), Sanofi Pasteur (FR), Novartis, GlaxoSmithKline (UK), Solvay (BE) போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடம் உள்ளது.

இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு “Tamiflu” என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் Oseltamivir என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. இம்மருந்து அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை “ரோச்” (Roche) என்ற பன்னாட்டு நிறுவனத்தின் இந்திய கூட்டாளியான “ஹெடெரோ” (Hetero) என்ற நிறுவனம் தயாரிக்கிறது. மற்ற நாடுகளில் இந்த மருந்துக்கான காப்புரிமை “ரோச்” நிறுவனத்திடம் உள்ளது. ஆனால் இந்தியாவில் இதுவரை இந்த மருந்துக்கு காப்புரிமை வழங்கப்படவில்லை. எனவே, ‘சிப்லா’, ‘ரான்பாக்ஸி’, ‘நேட்கோ’ போன்ற நிறுவனங்களும் இம்மருந்தை தயாரிக்கின்றன. ஆனால் இந்த மருந்தின் நேரடி விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகளோ ரோச் நிறுவனத்திடமிருந்தே வாங்கப்டுகிறது. எனவே இந்த மருந்திற்கான காப்புரிமை ரோச் நிறுவனத்திற்கு வழங்கப்படாவிட்டாலும், மறைமுகமாக ரோச் நிறுவன மருந்துகள் மட்டுமை நோயாளிகளை சென்றடைகின்றன.

இவ்வாறாக நோய்க்கு காரணமாக இருக்கும் கால்நடைகளையும், நோய்களைக் கடத்தும் வைரஸ் கிருமிகளையும், நோய்களுக்கான மருந்துகளையும் காப்புரிமை என்ற சூழ்ச்சி வலையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள், மக்களின் நல்வாழ்வை கெடுப்பதன் மூலம் தங்கள் மரண வியாபாரத்தை பெருக்கிக் கொள்கின்றன. உலக வர்த்தக நிறுவனம் என்ற வலைக்குள் சிக்கிய ஏழை நாடுகளின் இறையாண்மையை காவு கேட்கும் இந்த சூழ்ச்சி வலையை பிரித்து எறிய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

- மு. வெற்றிச்செல்வன்

Pin It