India’s prosperity is good news for US - ஒபாமாவின் இந்த பேச்சை தான் இந்தியாவில் (மட்டும்) அனைத்து பத்திரிக்கைகளும் முக்கிய செய்தியாக வெளியிட்டு உள்ளது. அமெரிக்காவில் தற்போதுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக ஏற்பட்ட அமெரிக்க கம்பெனிகளின் இழப்பை ஈடுகட்ட இந்தியாவின் வளரும் பொருளாதாரம் உதவியாக இருக்கும் என்று தான் அனைவரும் நினைக்க தோன்றும். அதற்கு பின் வேறொரு முக்கிய காரணமும் உள்ளது. அது என்ன காரணம் என்று பார்ப்போம்.
எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணகர்த்தாவாக உள்ளது அந்நாட்டில் உள்ள இளைஞர்களின் சக்தியே. இளைஞர்களிடம் கடின உழைப்பு, புதுமையான சிந்தனை, எளிதில் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை போன்றவை இருப்பதுடன் அதிகம் செலவழிக்கும் மன போக்கு இருப்பதால் நாட்டின் வளர்ச்சிக்கு அச்சாணியாக உள்ளனர்.
வருங்காலத்தில் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளை எதிர்நோக்கி இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து முதியவர்கள் எண்ணிக்கை பெருகப் போவதுதான். அங்கு 2050ல் இரண்டு பேர் வேலை பார்த்தால் ஒருவர் பென்ஷன் வாங்குபவராக இருப்பார். பத்தில் ஒருவர் 80 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பார். கீழே உள்ள புள்ளிவிவரத்தை பார்த்தால் இது பற்றிய விவரம் உங்களுக்கு புரியும்.
15 முதல் 59 வயது வரை உள்ள மக்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது. அதே சமயம் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மிக கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. 2050 வரை இந்தியாவில் இந்த மாற்றம் மிக குறைவாகவே இருக்கும். இந்தியாவின் மக்கள் தொகையை கணக்கில் எடுத்து கொண்டால் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும்.
மேல் நாட்டு பன்னாட்டு கம்பெனியின் முக்கிய சந்தையாக அமெரிக்கா இது வரை இருந்து வந்தது. மக்கள் தொகை பெருக்கம் குறைவால் பன்னாட்டு கம்பெனிகள் தங்கள் வளர்ச்சிக்கு புதிய சந்தைகளை தேட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். அப்போது அதிக இளைஞர்களை கொண்ட வளரும் நாடுகளாக இருப்பது இந்தியாவும் சீனாவும் தான். எனவே இந்தியாவின் வளரும் மத்திய தர மக்கள் தான் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியின் அச்சாணியாக இருக்கப் போகிறார்கள்.
பொருட்களின் மதிப்பிற்கும் உற்பத்திச் செலவிற்கும் உள்ள வித்தியாசம் அதிகரிக்கப்படும். ஏனென்றால் மேலை நாடுகளில் வேலை செய்பவர்கள் எண்ணிக்கை குறையப் போவதால் உற்பத்தி இந்தியா போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்டு விடும். உலக வர்த்தக நிறுவனம் மூலம் பொருட்களுக்கான உரிமமுறை (patent) உலகெங்கிலும் கடுமையாக பின்பற்றப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களுக்கான விலையும் லாபமும் அதிகரிக்கப்படும். (அவுட்சோர்சிங் மூலம் உற்பத்தி செலவு கணிசமாக குறைக்கப்படும்). அதற்காக தான் உலக வர்த்தக பேச்சுவார்த்தையை மேலைநாடுகள் துரிதப்படுத்துகிறது.
அடுத்ததாக வேகமாக குறைந்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை ஒரளவாவது அதிகரிக்க வேண்டும். நல்ல தரமான புதிய தொழிலாளர்கள் உலக சந்தையில் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு இந்தியா போன்ற நாடுகளின் வளர்ச்சி மிகவும் தேவை. அப்போது தான் நல்ல தரமான தொழிலாளர்கள் இந்தியா போன்ற நாடுகளில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுவர். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கம் காரணமாக வெளிநாட்டு தொழிலாளர்களின் தேவை சிறிது குறைந்து இருந்தாலும், பொருளாதாரம் வளர்ச்சி பெற ஆரம்பிக்கும் போது வெளிநாட்டு தொழிலாளர்களின் தேவையும் அதிகமாகும். தற்போது அமெரிக்க மக்கள் தொகை பெருக்கத்தில் 40 சதவிதம் புதிதாக வெளிநாடுகளிருந்து வரும் தொழிலாளர்களே என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிற்கு இந்திய மத்திய வர்க்கத்தின் வளர்ச்சியின் தேவைக்கான முழு காரணமும் உங்களுக்கும் இப்போது தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
- சதுக்கபூதம், (
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அமெரிக்காவுக்கு ஏன் இந்தியாவின் வளர்ச்சி தேவை?
- விவரங்கள்
- சதுக்கபூதம்
- பிரிவு: கட்டுரைகள்