புவிக்கோளம் வெப்பமடைவதைத் தடுத்து நிறுத்தும் ஒரு முயற்சி CCS என்றழைக்கப்படும் CARBON CAPTURE AND STORAGE தொழில்நுட்பம் ஆகும். எண்ணெய், கரி போன்ற படிம எரிபொருட்களை அதிக அளவில் எரிக்கும் தொழிலகங்களில் இருந்து வெளிப்படும் புவியின் வெப்பநிலை உயர்விற்கு காரணமான கார்பன் டை ஆக்சைடு வாயுவை சிறைபிடித்து, புவிக்கு அடியில் சேகரித்து வைக்கப்படும் தொழில் நுட்பமே CCS எனப்படும். உலகின் பல பகுதிகளில் CCS தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தொழிலகங்கள் உள்ளன. CCS முறை முற்றிலும் பாதுகாப்பானது அல்ல. சிறைபிடித்த கார்பன் டை ஆக்சைடை கடல் நீருக்கடியில் சேமித்துவைப்பதால் கடல் நீரின் அமிலத்தன்மை கூடிப்போக வாய்ப்புண்டு.. நிலத்திற்கடியில் சேமித்து வைத்தால் வாயுக்கசிவினால் அது மீண்டும் வளிமண்டலத்தில் கலந்துவிட வாய்ப்பு உண்டு.

நாகரிகவாழ்க்கை என்னும் பெயரில் அளவிற்கு அதிகமான படிம எரிபொருட்களை பயன்படுத்திவரும் மனிதனின் இன்றைய நிலை பரிதாபகரமானது. கடப்பாரையை விழுங்கிய மனிதன் அதனை செரிக்கவைக்க சுக்கு கஷாயம் குடித்த கதைதான் இந்த முயற்சியெல்லாம். இருந்தாலும் அறிவியல் உலகம் சும்மா இருப்பதில்லை. வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு வாயுவை சிறைபிடித்து அடைத்துவைப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் வெளியாகி உள்ள ஒரு ஆய்வு அறிக்கையில் நுண்ணியிரிகளைக் கொண்டு கார்பன் டை ஆக்சைடு வாயுவை சிறைபிடிக்க இயலும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வகத்தில் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு தற்செயலாக நிகழ்ந்துள்ளது.

இதுபோன்ற சிக்கல்களை தீர்த்துவைக்க எப்போதும்போல் நமக்கு நுண்ணியிரிகளே துணை நிற்கின்றன. மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த J.A. டோஸல் என்னும் விஞ்ஞானியின் அறிக்கை இந்த நல்ல செய்தியை அறிவித்துள்ளது. மரபணு பொறியியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நுண்ணியிரிகளைக் கொண்டு கார்பன் டை ஆக்சைடை கைப்பற்றும் பொருட்களை உருவாக்கமுடியும் என்கிறார் டோஸல்.

இந்த மூலக்கூறின் வடிவத்தை இவர் கணினியின் உதவியால் மாற்றியமைத்து ஆராய்ந்துள்ளார். இவருடைய ஆய்வின் பலனாக இந்த மூலக்கூறுகள் தொழிலகங்களில் கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சிகளாக பயன்படும் நாள் தொலைவில் இல்லை. இந்த ஆய்வின் மூலம் நுண்ணியிரின் செல்சவ்வுகளுக்குள் வளிமண்டல கார்பன் டை ஆக்சைடை சேமிக்கும் வழி கண்டறியப்பட்டுள்ளது.

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/07/090715101441.htm

தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It