கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- கோ.நம்மாழ்வார்
- பிரிவு: சுற்றுச்சூழல்
இரண்டு பெரும் நிகழ்வுகள் இன்றைய உலகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. ஒன்று பூமி வெப்பம் அதிகரிப்பது, மற்றொன்று பட்டினிச் சாவுகள். இவை இயற்கைச் சீற்றத்தால் நிகழ்பவைகளா? இதனை அலசுகிறது இக்கட்டுரை.
உலக சுகாதார அமைப்பு 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் மனிதனால் உருவாக்கப்பட்டு வரும் காலநிலை மாற்றம் 2020ஆம் ஆண்டு முதல் உலகெங்கும் ஆண்டுதோறும் 3 இலட்சம் பேர் பலியாக காரணமாக இருக்கும் என்று கணக்கிட்டுள்ளது. இந்த கணிப்புக்கு முன்கூட்டியே 2000 மாவது ஆண்டு முதல் காலநிலை மாற்றத்தால் உலகெங்கும் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.
வளர்ச்சி அடைந்தவை என்று சொல்லப்படுகிற பணக்கார நாடுகள் இந்த கேடுகளுக்கு காரணமாக இருக்கின்றன. ஆனால், ஏழை நாட்டு மக்கள் இதன் பாதிப்புகளை சந்திக்கின்றனர். குறிப்பாக தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த மக்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக மலைவாழ் மக்கள், நதிக்கரை ஓரம் வாழும் மக்கள், கடலோர மக்கள் மற்றும் நிலமற்ற உழைக்கும் மக்கள் என விளிம்புநிலை மக்கள்தான் அதிக அளவில் உயிர் இழந்திருக்கின்றனர்.
பூமியைச் சுற்றி உருவாகும் சரிப்பசை வளையம் உருவாகுவதனால் ஒளி உள்ளே வருகிறது. பூமிக்கு வந்த ஒளி வானத்திற்குத் திரும்புவது தடைபடுகிறது. இதனைப் “பசுமை இல்ல விளைவு’’ என்று அழைக்கின்றார்கள். இதற்கு அடிப்படையாக சூழும் காற்றுக்களை பசுமை இல்லக் காற்றுக்கள் என்கிறார்கள். இத்தகைய காற்றுக்களில் கரி அமிலகாற்றே (கார்பன் டை ஆக்சைடு) முதல் இடத்தைப் பிடிக்கிறது. காற்றும் பங்களிப்பும் கீழே தரப்படுகிறது.
கரி அமிலக் காற்று 49%
மீதேன் 18%
குளோரோ ஃபுளோரோ கார்பன் 14%
நைட்ரசன் காற்று 6%
மற்றவை 13%
கடந்த நூறு ஆண்டுகளில் வான்வெளி வெப்பம் 35% உயர்ந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் சராசரி வெப்பம் 0.740 டிகிரி சென்சியஸ் உயர்ந்துள்ளது. 2100 ஆம் ஆண்டு இரண்டு முதல் மூன்று டிகிரி உயரக்கூடும் என்று கணிக்கிறார்கள். பனி உருகுவதால் நதிகள் கடலுக்கு நீர்க் கொடுப்பது குறையும். கடல்நீர் நிலத்திற்கு உள்ளே புகுவதால் குடிப்பதற்கான நீரின் அளவு குறையும். வெள்ளமும், வறட்சியும் மாறி மாறி வரும். பயிர் வளர்ச்சி நேரம் குறையும். விளைச்சலும் குறையும் என்றெல்லாம் கூறுகிறார்கள். கடலோரங்களில் புயலும், வெள்ளமும் பெருகுவதால் கோடிக்கணக்கான மக்கள் இடம் பெயர்வார்கள். உயிரிழப்பும், பொருளிழப்பும் பெரிய அளவில் நிகழும்.
அ. குடிநீர்ப் பற்றாக்குறை:
வடக்கு ஆசிய நாடுகளில் குடிநீர் பற்றாக்குறை மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும், தட்ப வெப்ப மாற்றத்தைத் துல்லியமாக ஆய்ந்தறியும் அரசுகளுக்கு இடையிலான குழு (IPCC) கீழ்க்கண்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
வடக்கு ஆசியாவில் 50 கோடி மக்கள், சீனாவில் 25 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள். பனிப்பாளம் உருகி ஆற்றோட்டம் குறைவதால் இந்திய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
2020ஆம் ஆண்டில் ஆசியாவில் 12 கோடி மக்கள் முதலாக 120 கோடி மக்கள் வரை சிக்கல்களுக்கு ஆளாவார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் 7 கோடி 50 லட்சம் மக்கள் வரை பாதிப்புக்கு ஆளாவார்கள். தென் அமெரிக்க நாடுகளில் 1 கோடி 20 லட்சம் முதல் 8 கோடி 10 லட்சம் வரையான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஆ. பயிர் விளைச்சல் சரியும்:
பயிர்களின் வளர்ச்சிப் பருவம் சுருங்கும். அதனால் 2020 ஆம் ஆண்டு வாக்கில் ஆப்பிரிக்க நாடுகளில் 50 விழுக்காடு விளைச்சல் குறையும். மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் 2050ஆம் ஆண்டு வாக்கில் 50சதவீதம் விளைச்சல் குறையும்.
உலக உற்பத்தி பாதிப்புக்கு ஆளாவதால் ஏழை நாடுகள் உணவை இறக்குமதி செய்வதிலும் பெரும் சிக்கல் ஏற்படும்.
இ. கடலோரப் பகுதி வெள்ளம்:
கடல் மட்டம் உயர்வதால் மக்கள் நெருக்கம் மிகுந்த கல்கத்தா, டாக்கா, ஷாங்காய் போன்ற பெருநகரங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும். வறட்சியினாலும் மக்கள் இடம் பெயருவார்கள். இதனால் உலகத்தில் பாதுகாப்பும் அமைதியும் பாதிக்கப்படும். இத்தகைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அரசாங்கங்களின் கவனம் முழுவதும் இப்பிரச்சனையின் மீது குவிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
காற்றில் கலந்த கரி மண்டலம் உழவுத் தொழிலைப் பாதிக்கிறதா?
ஆம். இரசாயன உரங்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் புகையைக் கக்குகின்றன. உரத்தைச் சுமந்து செல்லும் வாகனங்கள் புகையைக் கக்குகின்றன. உப்பு உரம் நைட்ரசன் காற்றைக் கக்குகிறது. பயிர்த் தொழிலில் பயன்படுத்தும் இதர பொருள் உற்பத்தி செய்யும் ஆலைகளும் புகையைக் கக்குகின்றன. நிலத்தில் பயன்படுத்தும் எந்திரங்கள் புகையைக் கக்குகின்றன. ஆக மொத்தம் பூமி சூடாவதற்கான காரணிகளில் பயிர்த்தொழிலின் பங்கு 35 விழுக்காடாகும். அதே போல, தட்பவெப்ப நிலை மாற்றத்தால் பயிர்த்தொழிலும் பாதிப்புக்கு ஆளாகிறது.
2008ஆம் ஆண்டு தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் அறுவடைக்குக் காத்திருந்த நெற்பயிர்கள் அடை மழையால் நீரில் மூழ்கிப் போயின.
2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலம் தவறிப் பெய்த அடைமழையால் திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் உளுந்து, பயறு வகைப் பயிர்கள் அழிந்துபட்டன.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட அழிப்பேரலையில் கடலோரப் பகுதியில் அறுவடைக்குக் காத்திருந்த நெற்பயிர் அழிந்துபட்டது.
ஆழிப்பேரலை தொடங்கி நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் சாகுபடிக்கு ஒவ்வாததாக மாறியுள்ளது.
2009ஆம் ஆண்டு மழைக் காலத்தில் வங்காளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நெற்பயிர்கள் அழிந்து போயின.
2010 ஆம் ஆண்டிலும் இரண்டு இலட்சம் ஏக்கர் பரப்பில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிப்போயின.
இரசாயனத்தைப் புகுத்தியது பசிப்பணி போக்கவா?
இவ்வளவு உண்மைகள் அம்பலமான பின்பும் உழவாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் உழவாண்துறை அலுவலர்களும் இரசாயன உரம், பூச்சி கொல்லிகள், பூஞ்சானக் கொல்லிகள், களைக் கொல்லிகள் போன்றவற்றை பரிந்துரை செய்வதை நிறுத்தவில்லை. இவையாவும், இவற்றை விற்று இலாபம் பார்ப்பதற்காகவே குள்ளரகப் பயிர்களைப் புகுத்தினார்கள் என்ற வாதத்தை உறுதிப்படுத்துவனவாக உள்ளன. இந்தியாவில் பசிப் பிணியைப் போக்குவதற்காகவே பச்சைப் புரட்சி வந்ததாக ஒரு கட்டுக்கதை உலவுகிறது. உண்மையோ வேறு விதமாக உள்ளது. ஒட்டுக்கட்டி உருவாக்கிய குட்டை ரகத்தை அமோக விளைச்சல் ரகம் என்று உழவர்களுக்கு விளம்பரம் செய்தார்கள். ஆனால், விஞ்ஞானிகள் மத்தியில் அதிகம் இரசாயன உரம் ஏற்கும் ரகம் என்ற கருத்துப் பரிமாறினார்கள். அதிக ரசாயன உரம் இட்டபோது நாட்டு நெல் ரகம் சாய்ந்து போனது. அதனால் அதிக ரசாயனத்தை இந்திய உழவர் தலையில் கட்டுவதற்காகவே குள்ளரகத்தைப் புகுத்தினார்கள். அதனால்தான், ஆல்பர்ட் ஓவார்டு சொன்னதை ஏற்கவில்லை. ரிச்சார்யா சொன்னதை ஏற்கவில்லை. எக்ன நாராயன் ஆவணத்தை சீர்தூக்கவில்லை.
பச்சை புரட்சியினுடைய கொடுமைகளிலிருந்து உழவரையும் உண்போரையும் காப்பாற்றும் வகையில் இயற்கை உழவாண்மை வளர்ந்து கொண்டிருக்கும் போது அப்படி ஏதும் நடந்துவிடாதபடி அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த மான்சாண்டோ கம்பெனி இந்திய அரசாங்கத்தை நெருக்குகிறது. இந்தியாவில் ஒட்டுவிதை விற்றுக் கொண்டிருந்த மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த மகிக்கோ கம்பெனியின் பங்கு தொகைகளை மேலே சொல்லப்பட்ட மான்சாண்டோ கம்பெனி விலைக்கு வாங்கிவிட்டது. அதே போல சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்து விற்றுக் கொண்டிருந்த ராசி கம்பெனியின் பங்குத் தொகைகளையும் மான்சாண்டோ கம்பெனி விலைக்கு வாங்கிவிட்டது. இந்திய கம்பெனிகளை வாங்கிவிட்டதன் அடையாளமாக மான்சாண்டோ மகிக்கோ என்றும் மான்சாண்டோ ராசி என்றும் கடைப்பெயர்களையும் மாற்றிவிட்டது. இதன் பிறகு மான்சாண்டோ மகிக்கோ கம்பெனியின் பெயரில் பி.டி. கத்திரிக்காய் விற்பதற்கு நடுவண்அரசிடம் அனுமதி கேட்டு கம்பெனி அழுத்தம் கொடுக்கிறது.
“பச்சைப் புரட்சி’’ என்று பெயர் சூட்டியதே ஒரு அமெரிக்கன் என்று எம். எஸ். சுவாமிநாதன் எழுதியுள்ளார். “உலக வரலாற்றில் நடந்தேறியுள்ள புரட்சிகள் அனைத்தும் சிவப்பாக இருந்ததுதான் சரித்திரம் “பச்சைப் புரட்சி’’ என்ற பெயர் புரட்சியையே இழிவுபடுத்துவதாக அமைந்தது.
பச்சைப் புரட்சியின் விளைவுகள்:
இந்தியாவில் உழவுத்தொழில் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது என்று கூறும் தேசிய உழவர் ஆணையத்தின் தலைவர் திரு. எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையில்...
1. 1947இல் அன்றைய பிரதமர் ஜவகஹர்லால் நேரு சொன்னார், “வேறு எதுவும் காத்திருக்கலாம், ஆனால் உழவுத் தொழில் காத்திருக்க முடியாது’’ என்று. ஆனால் 59 ஆண்டுகள் கடந்த பின்பும் உருப்படியான கொள்கை ஏதும் உழவுக்காக உருவாக்கப்படவில்லை.
2. 65 கோடி மக்களுக்கு உழவைத் தவிர வேறு வழி இல்லை. உழவொன்றே அவர்கள் வாழ்கைக்கு ஆதாரம்.
3. 65 கோடி மக்களுக்கு வருவாய் குறைந்தவண்ணம் உள்ளது. செலவுகளும், எதிர்பாராத இழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
4. உழவர்கள் வாங்கியுள்ள கடன் அதிகரித்த வண்ணம் உள்ளது.
5. விளைபொருட்களை விற்பதற்கான உட்கட்டமைப்பு மிகவும் சொற்பம்.
6. காய்கறி, பழம் போன்ற அழுகும் பொருட்களுக்கு சந்தையும், சேமிப்புக் கிடங்கு வசதிகளும் மிக மிக சொற்பம்.
7. உருப்படியான கொள்கை ஏதும் இல்லாமையால் கால்நடை பராமரிப்பு நொறுங்கிப் போயுள்ளது.
8. உழவை நம்பியுள்ள குடும்பங்களில் நான்கில் ஒருவருக்கு மட்டுமே வங்கிக்கடன் கிடைக்கிறது.
9. உழவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்வது மட்டுமல்ல, அதிகரித்த வண்ணம் உள்ளது.
10. முப்பதாயிரம் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது.
11. தற்கொலைக்கு அடிப்படைக் காரணங்கள்: அ. வாங்கிய கடனுக்கு வட்டி மிக அதிகம். ஆ. அதிகரித்து வரும் இடுபொருள் செலவு. இ. விளைபொருளுக்கான நியாயமான விலை கிடையாது.
12. கம்பு, தினை, சாமை போன்ற சத்து மிகு தானியங்கள், பருப்பு, எண்ணெய் வித்து, கிழங்கு போன்றவை அனாதைப் பயிர்கள். இவற்றுக்குச் சந்தையோ, நியாயமான விலையோ கிடையாது.
13. பள்ளி செல்லும் வயது வராத குழந்தைகளில் நான்கில் மூவருக்கு சத்துணவுப் பற்றாக்குறை, இரும்புச் சத்து குறைவு (சோகை)
14. 55% குழந்தைகளுக்கு வைட்டமின் கி பற்றாக்குறை. அதனால் பார்வைக் கோளாறு.
15. பயிர்த் தொழிலில் அரசு முதலீடு குறைந்தவண்ணம் உள்ளது.
16. கோதுமையும், நெல்லும் தீவிரமாக சாகுபடி செய்ததால் நிலம் உப்பாகிப் போனது. நிலத்தடி நீர் குறைந்தவண்ணம் உள்ளது.
17. நுண்ணூட்டங்களின் பற்றாக்குறை அதிகரித்தவண்ணம் உள்ளது.
18. ஆண்டு சராசரி மழை போதுமானதாகத் தோன்றுகிறது. ஆனால், மழையின் பெருமளவு 100 மணி நேரத்தில் கொட்டி விடுகிறது.
19. கிடைக்கும் நீர் அனைத்தும் பூச்சிக்கொல்லி நஞ்சாலும், மிகக் கொடிய நச்சுப் பொருட்களாலும் மாசுபட்டுக் கிடக்கின்றன.
20. மக்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், பயிருக்குப் பாய்ச்சவும் மேலும் மேலும் குழாய்க் கிணற்றையே சார்ந்துள்ளார்கள். இந்தக் குழாய்க் கிணறுகளில் மிகக்கொடிய ஆர்சனிக் நஞ்சு வருகிறது. மேலூற்று கிணறுகள் வற்றிப்போய் விட்டன.
இப்படி உழவர் நிலைமையை வருணித்தாலும் சுவாமிநாதன் இக்குறைபாடுகளுக்கான வேர்க் காரணத்தைக் தோண்டவில்லை. குறைபாடுகளைத் தீர்ப்பதற்கும் வழிசொல்லவில்லை.
அமைச்சர்களும் புதுவழி தேடவில்லை. மாறாக ஆளுவோரும் அவர்களது ஆலோசகர்களும் மக்கள் தலையில் பேரிடியை இறக்குகிறார்கள். அதன் பெயர் “இரண்டாம் பச்சைப் புரட்சி’
(இளைஞர் முழக்கம் பிப்ரவரி 2011 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
1850 ஆம் ஆண்டிற்குப் பிறகு அளவிடப்பட்ட கணக்கீடுகளின்படி புவியின் வெப்பம் 1998, 2005, 2010 ஆகிய மூன்று ஆண்டுகளில்தான் அதிகமாக இருந்ததாம். இந்த மூன்று ஆண்டுகளிலும் கூட 2010 ஆம் ஆண்டில் பதிவான புவியின் வெப்பம்தான் மிக உயர்ந்த அளவு என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை. புவிவெப்ப உயர்வு மனிதர்களின் செயல்பாடுகளால் நிகழ்ந்தது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தொழிற்புரட்சி ஏற்பட்ட பிறகு புவியின் வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளதாம்.
கரீபியன் தீவுகளில் ஒன்றான கான்குன் தீவில் புவிவெப்பமடைவதை தடுப்பது எப்படி என்பது குறித்து கடந்த மாதம் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் 200 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டில் கோபன்ஹேகனில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் சீனாவும், அமெரிக்க ஐக்கிய நாடுகளும் தாங்கள் வெளியிடும் வெப்ப அளவை 2 டிகிரி செல்சியஸ் குறைப்பதற்கு முயற்சி எடுப்பதாக வாக்களித்தன. இரண்டு வல்லரசுகளும் உண்மையிலேயே 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை குறைத்தாலும்கூட ஒட்டுமொத்தமான புவியின் சராசரி வெப்பநிலையில் எந்த பெரிய மாற்றமும் ஏற்பட்டுவிடப்போவதில்லை என்கிறது கான்குன் அறிக்கை.
உலக வானிலை ஆய்வு நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி 1961 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் புவியின் நீர், நில பரப்புகளின் வெப்பசராசரி 14 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. 2010 ஆம் ஆண்டின் புவிவெப்ப சராசரி 14.55 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்திருக்கிறது. 2001 முதல் 2010 வரையிலான பத்தாண்டுகளில் 2010ல்தான் மிக அதிக வெப்பம் பதிவாகியிருக்கிறது என்கிறது அந்த அறிக்கை. வனவளத்தைப் பெருக்குவது ஒன்றுதான் மாற்றுவழி என்கிறது ஐ.நா.வின் அறிக்கை. வெள்ளம், வறட்சி, விளைநிலம் பாலையாதல், கடல்மட்டம் உயருதல் என்பவையெல்லாம் புவிவெப்ப உயர்விற்குப் பிறகு நாம் சந்திக்கும் பேரழிவுகள்.
1942க்குப் பிறகு பாகிஸ்தான் வளிமண்டலத்தின் சராசரி வெப்பம் 53.5 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்ததும், அண்மையில் அந்நாடு மிகப்பெரிய வெள்ள அழிவை சந்தித்ததும் சரித்திர பதிவுகள். ஆப்பிரிக்கா, ஆசியாவின் சில பகுதிகள், ஆர்க்டிக் ஆகிய இடங்களில் புவிவெப்ப உயர்வு அதிகமாக இருப்பதாக உலக வானிலை ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் மனிதகுலத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பவேண்டும் என்கிறது கான்குன் மாநாட்டின் அறிக்கை.
இன்னும் படிக்க:http://www.newsdaily.com/stories/tre6as05m-us-climate-temperatures/
தகவல்: மு.குருமூர்த்தி (
- விவரங்கள்
- பூவுலகின் நண்பர்கள்
- பிரிவு: சுற்றுச்சூழல்
கையில் வைத்து பட்டாசை தூக்கி எறிந்தபோது மகேஷின் கையிலேயே அது வெடித்ததில் படுகாயம் ஏற்பட்டது. பட்டாசு மருந்துக்கு அருகே முகத்தை வைத்துக்கொண்டு பற்ற வைத்தபோது சுரேஷின் முகத்தோல் உறிந்துவிட்டது. கீதாவுக்கு ஏற்கெனவே ஆஸ்துமாவும் சுவாசப் பிரச்சினையும் இருந்தன. தீபாவளி நேரத்தில் அது மோசமாகிவிட்டது.
மற்றொருபுறம்...
"டமார்" என்ற மிகப் பெரிய ஓசையோடு வெடிச்சப்தம் கேட்டது. எல்லோரும் ஓடிச் சென்று பார்த்தபோது, அந்தக் கட்டடமே சுக்குநூறாகச் சிதறிக் கிடந்தது. கூலிக்கு பட்டாசு செய்து கொடுக்கும் குடும்பங்களில் அதுவும் ஒன்று. நடுத்தர வயது ஆணும் பெண்ணும் இறந்துகிடந்தார்கள். "பட்டாசு தயாரித்தபோது விபத்து, இரண்டு பேர் சாவு" என்று அடுத்த நாள் நாளிதழில் செய்தி வந்தது. இதுபோன்ற செய்தியை, ஆண்டுக்கு 20 - 30 முறையாவது பார்க்க முடிகிறது.
சிவகாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி மாரி, அவளது கைகளில் உள்ள கந்தக மருந்தை எவ்வளவு தேய்த்தாலும் போவதில்லை. அவள் பட்டாசுத் தொழிற்சாலையில் வேலை பார்க்கவில்லை. ஏனென்றால், இப்பொழுது பட்டாசு தயாரிப்பில் குழந்தைகள் ஈடுபடக் கூடாது என்று நெருக்கடி வந்துவிட்டது. அதனால் பட்டாசு தயாரிப்பதற்கான பொருள்களை வீட்டுக்கே கொண்டு வந்து தந்துவிடுகிறார்கள். வீட்டிலேயே பட்டாசு தயாரித்து கொடுத்தால் போதும், கூலி கிடைத்துவிடும்.
மாரியின் ஊருக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த தங்கராசுவுக்கு நரம்புக் கோளாறு. ஏதோ கெமிக்கல் அவரது உடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகச் சென்று தற்போது அதிகம் சேர்ந்துவிட்டதால்தான் இந்தப் பிரச்சினை என்கிறார் மருத்துவர். இனிமேல் அவரால் பட்டாசோ, மத்தாப்போ செய்ய முடியாது. தினசரி ஆஸ்பத்திரிக்கு அலைந்து கொண்டிருக்கிறார்.
தீபாவளி அன்று நாமும் நமது குழந்தைகளும் மகிழ்ச்சியாக வெடித்துத் தள்ளும் பட்டாசுகளைத் தயாரிக்கும்போது நடக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு சிறிய உதாரணம்தான் மேலே உள்ள சம்பவங்கள்.
தீபாவளிக்கு எவ்வளவு பட்டாசு வெடிக்கிறோம் என்பதில் குழந்தைகளிடம் மட்டுமின்றி, பெரியவர்களிடையேயும் போட்டி நிலவுகிறது. இதற்காக அதிக பட்டாசுகளை, அதிக சப்தம் தரும் பட்டாசுகளை, வாணவேடிக்கை மத்தாப்புகளை வாங்கிக் குவிக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நாட்டில் ரூ. 700 கோடிக்கு மேல் மதிப்புள்ள பட்டாசுகள் தீபாவளிக்காக வாங்கப்படுகின்றன. ஒரு நாள் கூத்துக்காக, ஒரு சில நிமிடங்களில் கரியாவதற்காக இவ்வளவு கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் வாங்கப்படுகின்றன.
பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் மிகவும் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன. இவை காற்றை மாசுபடுத்துகின்றன. தீபாவளி அன்றைக்கு காலையிலும், தீபாவளிக்கு அடுத்த நாள் காலையிலும் உங்கள் ஊரை புகைமூட்டம் எப்படி சூழ்ந்திருக்கிறது என்று பாருங்கள். என்றைக்கும் இல்லாத அந்த புகைமூட்டம் எப்படி உங்களை பாதிக்கப்போகிறது என்று அப்பொழுது புரியும்.எதிரே வரும் ஆள் தெரியாத அளவுக்கு அந்த புகைமூட்டம் இருக்கும். நீங்கள் பட்டாசு வெடிக்காவிட்டாலும்கூட, இந்தப் புகை சுவாசக் கோளாறுகளை தூண்டிவிடும். ஏனென்றால் இந்தப் புகையில் நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கந்தக ஆக்சைடு, உலோக ஆக்சைடுகள் இருக்கின்றன.
பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் கீழ்க்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம்:
செம்பு: சுவாசப் பாதையில் எரிச்சல்
காட்மியம்: ரத்தசோகை, சிறுநீரக பாதிப்பு
காரீயம்: நரம்பு மண்டலப் பிரச்சினைகள்
மக்னீசியம்: இதன் தூசும் புகையும் உலோகப் புகை காய்ச்சலை ஏற்படுத்தலாம்
மாங்கனீசு: உளவியல் தொந்தரவு, பக்கவாதம், வலிப்பு
சோடியம்: ஈரப்பத காற்றுடன் வினைபுரிந்து தோலை பாதிக்கலாம்
துத்தநாகம்: குமட்டல், வாந்தியை உருவாக்கலாம்
நைட்ரேட்: மூளை வளர்ச்சியை பாதிக்கலாம்
நைட்ரைட்: கோமாவுக்கு இட்டுச் செல்லலாம்
உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஒரு பட்டாசில் உள்ள வேதிப்பொருள்களின் பட்டியல், அதன் அட்டையில் அச்சிடப்பட வேண்டும். ஆனால் இது செய்யப்படுவதில்லை.
காதுகள் ஜாக்கிரதை
மேற்கண்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நம்ம ஊர் காவல்துறை இதை நடைமுறைப்படுத்துவதில்லை. அத்துடன் 125 டெசிபலுக்கு மேலாக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ளது. ஆனால் சந்தையில் கிடைக்கும் சில பட்டாசுகள் ஏற்படுத்தும் சப்த அளவு கீழே தரப்பட்டுள்ளது. இவை அந்தத் தடையை சாதாரணமாக மீறுகின்றன.
ஆட்டம் பாம் - 145 டெசிபல், சரவெடி - 142 டெசிபல், தண்டர்போல்ட் - 140 டெசிபல், கிங்பிஷர் ஷெல் - 141 டெசிபல், ஹைட்ரஜன் பாம் - 122 டெசிபல்
இந்தச் சப்தத்தை நீங்கள் கேட்டால் உங்கள் காது செவிடாவதற்கு மிக அதிக வாய்ப்பு இருக்கிறது. அதிக சப்தத்தால் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தமும் தூங்குவதில் பிரச்சினைகளும்கூட ஏற்படலாம்.
பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காரணம்: அவர்களது நுரையீரல் வளர்ந்து வரும் நிலையில் இருக்கிறது. குறைவான மாசுபாட்டைகூட அவை தாங்குவதில்லை. எதிர்காலத்தில் உங்கள் குழந்தைக்கு சுவாசக் கோளாறு ஏற்பட பட்டாசுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இப்படி நமது குழந்தைகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, முகம் தெரியாத எத்தனையோ குழந்தைகள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பட்டாசு தயாரிப்பில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று பல்வேறு அமைப்புகளும் குழந்தைகளும் போராடியபோது, "இதைத் தயாரிப்பதில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படவில்லை" என்று பட்டாசு, மத்தாப்பு அட்டைகளில் அச்சிடப்பட்டது. ஆனால் உண்மையில் அப்படி நடப்பதில்லை. குறைந்த கூலிக்கு, மிக வேகமாக வேலைகளை முடித்துத் தரும் குழந்தைகளை எப்படி பட்டாசு ஆலை முதலாளிகள் பேசாமல் விடுவார்கள்.
குட்டி ஜப்பான் என்ற பட்டப் பெயர் கொண்ட சிவகாசி அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல குழந்தைகள் இன்றைக்கும் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தவாறே பட்டாசு தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களது பெற்றோருக்கு இதே வேலையை அந்த முதலாளிகள் தருவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு கூலி அதிகம் தர வேண்டி இருக்கும், கூலிஉயர்வு தராவிட்டால் வேலைநிறுத்தம் செய்யவும் அவர்கள் தயங்கமாட்டார்கள் என பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக முதலாளிகள் நினைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், குழந்தைகளோ, பெரியவர்களோ யார் பட்டாசு தயாரித்தாலும், அவர்களுக்கு முறைப்படி கையுறை, பாதுகாப்பு வசதிகள், மருத்துவ வசதிகள் செய்து தரப்படுவதில்லை.
ஆனால் 100 - 150 ஆண்டுகளுக்கு முன் இன்றைக்கு உள்ளதுபோல் பெரிய அளவில் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் இல்லை. அப்போது நம்மிடம் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் பழக்கமும் இருந்ததில்லை.
தீபாவளி என்பது வயிற்றுக்கு பாதகமில்லாத இனிப்புகள், விளக்குகள் வைத்து கொண்டாடுவதுதான். ஒரு சில நிமிடங்களில் கருகிவிடும் பட்டாசுகளுக்காக காசை கரியாக்காமல் குழந்தைகளுக்கு பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், வண்ணவண்ணப் புத்தகங்கள், அறிவூட்டும் புத்தகங்களை வாங்கித் தரலாம்.
மேற்கண்ட அனைத்து விஷயங்களைப் பற்றியும் நன்றாக சிந்தித்துப் பார்ப்போம், பிறகு நமது குழந்தைகளுக்கும் இதைக் கூறுவோம். இந்தச் செய்தியை மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ், அலுவலக - குடியிருப்பு நோட்டீஸ் போர்டு உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் பரப்புவோம்.
பட்டாசுகளை தவிர்ப்பதற்கான கூடுதல் செயல்பாடுகள்:
- பள்ளி காலை வணக்கக் கூட்டங்களிலும், வகுப்புகளிலும் இது பற்றி பேசலாம்
- பட்டாசுகளின் மோசமான தன்மைகள் பற்றி குழந்தைகளே சிறு நாடகத்தை நடத்தலாம்
- ஒவ்வொரு வகுப்பிலும் குழந்தைகளே பட்டாசுகளின் தீமைகள் பற்றி படச் சுவரொட்டிகள், கையால் எழுதப்பட்ட நோட்டீஸ்களை தயாரிக்கலாம்.
- "பட்டாசுகள் வேண்டாம்", "பட்டாசுகளைத் தவிருங்கள்" என்கிற பேட்ஜ்களை விநியோகித்து மற்ற மாணவர்களிடமும் பட்டாசுகளைத் தவிர்ப்பதன் அவசியம் பற்றி பேசலாம்.
- "பட்டாசு வெடிக்கமாட்டோம்" என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் கடிதங்களை குழந்தைகளே எழுதலாம். இவற்றை மற்ற வகுப்புகள், பள்ளிகளுக்கு அனுப்பலாம்.
- இது தொடர்பாக தீபாவளிக்கு முந்தைய நாள் உறுதிமொழி எடுக்கலாம்.
- பூவுலகின் நண்பர்கள், குக்கூ குழந்தைகள் வெளி, பாட்டாளிகள் படிப்பகம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
மரங்கள் நமக்கு எண்ணற்ற விதத்தில் பயன்படுகின்றன. நாகரிக மோகத்தில் சிக்கிச் சீரழிந்துகொண்டிருக்கும் மனிதகுலம் வளிமண்டலத்தை தொடர்ந்து மாசுபடுத்திவருகிறது. வளிமண்டல மாசை அகற்றும் பணியை மரங்கள் செய்துவருவது நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். ஆனால் இதுவரை அறிந்திராத அளவிற்கு மிகப்பெரிய அளவில் இந்தப்பணியை மரங்கள் ஆற்றிவருவதாக இப்போது அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு கொலராடோ பல்கலைக்கழக தேசிய வளிமண்டல ஆய்வு மையத்தின் துணையுடன் நிகழ்த்தப்பட்டுள்ளது. Science Express இதழில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
oVOC எனப்படும் ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட ஆவியாகக்கூடிய கரிம கூட்டுப்பொருட்கள் (oxygenated volatile organic compounds) சுற்றுச்சூழலில் நிலைத்து நின்று மனித உடலுக்கு தீங்கு செய்யக்கூடியவை. இத்தகைய மாசுகளை விழுங்கும் ஆற்றல் மரங்களுக்கு இருப்பதாக ஆய்வுக்குழுவின் முடிவுகள் தெரிவிக்கின்றன. புவிப்பரப்பில் தாவரங்களின் இயற்கைச்சிதவு, வாகனப்புகை, கட்டுமானப் பணிகள் இவற்றால் ஹைட்ரோ கார்பன்களும், வேதிப்பொருட்களும் பெருமளவில் வெளியாகின்றன. சில oVOC க்கள் மிகச்சிறிய துகள்களாக காற்றில் பரவக்கூடியவை. இவற்றிற்கு aerosols என்று பெயர்.
இவை மேகக்கூட்டங்களின் மீதும், மனிதர்களின் உடல்நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியவை. அமெரிக்க ஐக்கியநாடுகளிலும் பிற நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, நெடிதுயர்ந்த இலையுதிர் காடுகளின் கொண்டைப்பகுதிகள் இந்த oVOCக்களை 97 சதவீதம் அதிகமான வேகத்தில் உறிஞ்சிக்கொள்வதாக கண்டுபிடித்துள்ளனர். அதாவது இதுவரை அறியப்பட்ட வேகத்தைக்காட்டிலும் நான்குமடங்கு வேகத்தில் aerosols உறிஞ்சப்பட்டன. இவ்வளவு அதிகமான வேதிப்பொருட்களை மரங்களின் கொண்டைப்பகுதி விரைவாக உறிஞ்சி எடுப்பது எப்படி என்பது ஆய்வுகூடங்களில் அலசி ஆராயப்பட்டது.
மனிதஉடல் நோய்த்தொற்றுக்கு ஆளாகும்போது பாதுகாப்பு கவசமாக நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கக்கூடிய வெள்ளை அணுக்கள் இயல்பாகவே நமது உடலில் உற்பத்தியாகின்றன. இதே போன்ற நிகழ்வு மரங்களிலும் காணப்பட்டது. தாவரங்கள் பூச்சியினங்களின் தாக்குதலுக்கு ஆட்படும்போது தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் வேதிப்பொருட்களை சுரக்கின்றன. ஆனால் இந்த வேதிப்பொருட்கள் அதிக அளவில் சுரக்கப்படும்போது அவை தாவரத்திற்கே நஞ்சாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. இதைத்தவிர்க்க தாவரங்கள் அதிகமான oVOCக்களை ஈர்த்து என்சைம்களைக்கொண்டு அந்த அபாயகரமான வேதிப்பொருட்களை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்துகின்றன.
தாவரங்களின் வளர்சிதை மாற்றத்தின் ஒருபகுதியாகவே oVOCக்களை உறிஞ்சிக்கொள்ளும் நிகழ்வு ஏற்படுவதாக ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. வளிமண்டல வேதியியல் முடிவுகளின்படி இதுவரை தாவரங்கள் உறிஞ்சிக்கொள்வதாக கருதப்பட்ட அளவைக்காட்டிலும் 36 சதவீதம் அதிகமான oVOCக்கள் நெடிதுயர்ந்த மரங்களின் கொண்டைப்பகுதிகளில் ஈர்த்துக்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது. மரங்களின் மேன்மையை மனிதனுக்கு புரியவைக்கும் ஆய்வுகள் இன்னும் தொடர்கின்றன.
தகவல்: மு.குருமூர்த்தி (
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/10/101021152401.htm
- பூவுலகின் பெரிய குப்பைத் தொட்டி
- தலைவலியாகும் மின்னணுக் கழிவுகள்
- அச்சுறுத்தும் புவி வெப்பமடைதல்
- மனிதனை மட்டுமல்ல சுற்றுச்சூழலையும் அழிக்கும் புகையிலை
- கைகாவில் கதிரியக்க கசிவு-அணுசக்தியின் ஆபத்து நிரூபணம்
- மழைக்காடுகளின் மரணம் - அழிவின் வாசலைப் பற்றி ஒரு நேரடி சாட்சியம்
- தமிழகம்-கர்நாடக தண்ணீர் பிரச்சினைக்கு பசுமைப் புரட்சியின் வன்முறைதான் காரணம்
- அவசரக் கத்தரியும் அறிவியல் அநீதியும்
- வற்றிப் போகும் காவிரி
- கடலின் மீது ஒரு சுமை
- கார்பன் டை ஆக்சைடை கைப்பற்ற....
- பச்சை நிழல்
- நியூட்ரினோ ஆய்வகம் - வரமா? சாபமா?
- பட்டாசு வெடிக்கலாமா?
- சமையல் அறையிலும் சூழலை காக்கலாம்
- அணுக்கூடத்தை எதிர்த்து தேவாரத்தில் போராட்டம்
- அவசரக் கத்திரி - அறிவியல் அநீதி
- அழிவின் விளிம்பில் பவளப் பாறைகள்
- BPA என்னும் நஞ்சு
- பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்