Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூன் 2006

முழுப் புரட்சியை முன்மொழிந்தவன்

தணிகைச்செல்வன்

மே இதழ் தொடர்ச்சி

“ஊரிற் புகாத மக்கள்
உண்டென்னும் மூடர் - இந்தப்
பாருக்குள் நாமேயடி - சகியே
பாருக்குள் நாமேயடி’’

“மூடர்” ‘நாமே’ என்று அவர் பார்ப்பனரல்லாத் தமிழரை விமர்சிக்கிறார். தலித்துகளுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்குத் தலித்தல்லாத் தமிழர்கள் சார்பில் பொறுப்பேற்கும் சமூக அறம் பாரதிதாசனிடம் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது.

“குக்கலும் காகமும்
கோயிலிற் போவதில்
கொஞ்சமும் தீட்டிலையோ? -
நாட்டு
மக்களிலே சிலர் மாத்திரம் -
அந்த
வகையிலும் கூட்டிலையோ?’’

என்ற அவரது கேள்வியில் சமூகக்கோபம் பொங்குகிறது. நாயும், காகமும் கோயிலுக்குள் நுழைந்தால் தீட்டில்லையா? நமது மக்களில் சிலர் (தலித்துகள்) அந்த விலங்கினத்திலும் கூடச் சேர்த்தியில்லையா? என்ற வினாக்களிலேயே ஒடுக்கப்பட்டோரின் விடுதலைத் தீ தெரிகிறது.

சமூகப் புரட்சியில் இரு வகைப் போர்முறை உண்டு. தத்துவத் தளத்தில் பார்ப்பனிய ஒழிப்பு என்பது ஒன்று. மூவாயிரம் ஆண்டுகளாக நடந்துவரும் தமிழனின் இனப் போர் இது. செயல்படுகளத்தில் அது சமூக நீதிப்போராக வடிவம் கொள்கிறது. இட ஒதுக்கீடு, நிலப்பங்கீடு, சாதி மறுப்புத் திருமணம் என்ற பல போராயுதங்களோடு அப்போரினை நடத்தி வருகிறது பெரியாரியம் என்ற பாசறை. சமூக நீதியின் தலைக் கோட்பாடுதான் இட ஒதுக்கீடு. தாழ்த்தப்பட்டோருக்கும் பிற்பட்டோருக்கும் பல்லாயிரமாண்டுகளாக பார்ப்பனியத்தால் மறுக்கப்பட்ட கல்வியும், வேலை வாய்ப்பும் ஓரளவேனும் அவர்களுக்குக் கிடைக்கு மாறு செய்யும் அரசியல் சட்ட ஏற்பாடே இட ஒதுக்கீடு.

அரசுப் பணியிடங்கள் காலியாயிருப்பவை நூறு என்றால் முதலில் விண்ணப்பித்தவர் முதல் நபர் என்ற முறையில் நூறு இடங்களையும் பூர்த்தி செய்யும் வழக்கம் இருந்தது. அந்த முறையில் 90 பணியிடங்கள் உயர்சாதிப் பிள்ளைகளுக்கும் 10 இடங்கள் மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கிடைத்தன. 90 விழுக்காடு வேலைகளைப் பார்ப்பனர்களே பறித்துக் கொள்ளும் இந்த அநீதியை எதிர்த்துப் பெரியார் போராடினார். அவர் போராட்டத்துக்குப் பணிந்தது. நேரு அரசு. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசுப் பணிகளிலும், கல்விக்கூடங்களிலும் இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டமாயிற்று. அமைச்சரவைக்குள் அதைப் போராடிச் சாதித்தவர் அம்பேத்கர்.

இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் வைக்கும் கோரிக்கைக்குப் பெயர் சம விகிதப் பங்கீடு. சாதியைப் பார்க்காதே. தகுதியைப் பார்த்து எல்லாருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடு என்பதுதான் சமவிகிதப் பங்கீடு.

சமவிகிதப் பங்கீட்டு முறையில் மேல் சாதிக்காரர்களுக்கே மேலும் மேலும் அதிகப் பங்கு கிடைக்கும். எனவே சமவிகிதப் பங்கீடு கூடாது. அதற்குப் பதில் சரிவிகிதப் பங்கீட்டு முறை தேவை - என்பது ஒடுக்கப்படும் மக்களின் கோரிக்கை. காலகாலமாக வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்டோரின் விழுக்காடு மக்கள் தொகையில் எவ்வளவோ, அவ்வளவு விழுக்காடு, பணி யிடங்களிலும் ஒதுக்கப்பட வேண்டும் - என்பது நமது வாதம்.

ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தை முதல் கிழவர் வரை எல்லாருக்கும் தலைக்கு 4 இட்லி என்பது சமவிகிதப் பங்கீடு. ஆனால் இது சரியில்லை. குழந்தைக்கு ஒரு இட்லியும், கிழவருக்கு மூன்று இட்லியும், மற்றவர்களில் அவர்தம் உழைப்புக் கேற்ப நான்கு, ஐந்து என்று இட்லிகளின் விகிதங்கள் மாறுபடுவது இயல்பு. இதற்குப் பெயர் சமவிகிதமன்று; சரிவிகிதம்.

சம விகிதப் பங்கீடு (Equal distribution) என்பது சமூக நீதிக்கு எதிரானது.

சரி விகிதப் பங்கீடு (Equitable distribution) என்பதே சமூக நீதிக் கோட்பாடு.

பெரியாரியத்தின் இந்தப் புரட்சிக்கரக் கோட்பாட்டைப் பிழையற உள்வாங்கிக் கொண்டவர் பாரதிதாசன் என்பது, அவரது சின்னச் சின்ன வரிகளில் பொதிந்திருக்கும் சிந்தனைச் செழுமையைப் பகுத்துப்பார்த்தால் புரியும்.

‘வாளினை எடடா’ என்ற அவரது கவிதையில் உள்ள நான்கு வரிகள் அவரது சித்தாந்தத் தெளிவைக் காட்டுவதாக உள்ளன.

“தலையாகிய அறமே புரி
சரி நீதி உதவுவாய்
சமமே பொருள் ஜனநாயகம்

எனவே முரசறைவாய் சமூக நீதியில் சரி (விகித) நீதி தேவை என்கிறார் - பாரதிதாசன் அடுத்து, அவர் பாடும் வரி:

‘சமமே பொருள் ஜனநாயகம்’

இது ஆழ்ந்த பொருள் கொண்ட வரியாகும். ‘ஜன நாயகம்’ என்றால் வாக்குரிமை என்று மட்டுமே நாம் புரிந்து வைத்திருக்கிறோம். அது முழுமையான பொருளன்று.

வாக்குரிமை என்பது அரசியல் சமத்துவம் (Political equality) பொது வுடைமை என்பது பொருளியல் சமத்துவம் (Economic equality) சாதி ஒழிப்பு என்பது சமூக சமத்துவம் (social equality) இந்த மூன்றும் சேர்ந்ததுதான் உண்மையான ஜனநாயகம். இவற்றை எய்துவதற்கான முதல் கட்டப் புரட்சியைத்தான் ஜனநாயகப் புரட்சி என்றார் லெனின்.

‘சமமே பொருள் ஜனநாயகம்’ என்ற பாரதிதாசனின் வரி ஜனநாயகத்தின் பொரு ளியல் சமத்துவத்தைக் குறிக்கிறது. சுருக்கிச் சொன்னால் -

தேசியப் புரட்சியில் -
தமிழினத்தின் விடுதலை
பொருளியல் புரட்சியில் - உழைக்கும் வர்க்க விடுதலை
சமூகப் புரட்சியில் - ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலை

என்ற முழுப்புரட்சியை -முப்பரிமாணப் புரட்சியைத் தமிழில் முன்மொழிந்தவன் என்பதால், தமிழின் முதல் புரட்சிக்கவிஞன் பாரதிதாசனே.

- பாவேந்தர் பாசறை 29.4.2006 அன்று சென்னையில் நடத்திய பாரதிதாசன் 116ஆம் பிறந்த நாள் விழாவில் முகம் மாமணி தலைமையில் ஆற்றிய தணிகைச் செல்வன் உரையின் விரிவு.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com