Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மே 2006

முழுப் புரட்சியை முன்மொழிந்தவன்

கவிஞர் தணிகைச் செல்வன்

பாவேந்தர் பாரதி தாசனைப் பாவேந்தர் என்றழைப்பதைவிட, புரட்சிக் கவிஞர் என்று அழைப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன்.

Bharathidasan மூவேந்தர் காலம் முதல் எத்தனையோ பாவேந்தர்கள் தோன்றியிருக்கிறார்கள். இளங்கோ ஒரு பாவேந்தன்; கம்பன் ஒரு பாவேந்தன்; ஒட்டக்கூத்தன் பாவேந்தன்; புகழேந்தி ஒரு பாவேந்தன்; வடலூரார் ஒரு பாவேந்தர் இவர்களுக்கெல்லாம் தலைமைப் பாவலராயிருந்த வள்ளுவரே முதற் பாவேந்தர்.

அந்த வரிசையில் பாரதிதாசனும் ஒரு பாவேந்தராக அவர் காலத்தில் போற்றப் பட்டமை பொருத்தமே. ஆனால் பாரதிதாசனின் வரலாற்றுப் பங்களிப்பை முழுமையாக வெளிப்படுத்தும் சொல்லாகப் `பாவேந்தர்’ என்ற அடைமொழி அமையவில்லை என்பது என் கருத்து.

புரட்சிக் கவிஞர் என்பது தான் தமிழக வரலாற்றில் அவர் வகித்த மிகப்பெரிய பாத்திரம். உலக இலக்கியங்களில் புரட்சிக் கவிஞர்கள் மிக அரிதாகவே தோன்றி யிருக்கிறார்கள். வங்க மொழியில் தாகூர் மகாகவி எனப் போற்றப்படுகிறார். ஆனாலும் அவர் புரட்சிக் கவிஞர் அல்லர். நஸ்ரூல் இஸ்லாம்தான் வங்கத்தின் புரட்சிக்கவி என்று பதிவு செய்தது வரலாறு.

மாய கோவ்ஸ்கியைப் புரட்சிக் கவிஞர் எனப் போற்றியது சோவியத் ரஷ்யா. ஷெல்லியை மட்டுமே புரட்சிக்கவி என்கிறது. ஆங்கிலக் கவிதை இலக்கியம். லத்தின் அமெரிக்க நாடுகள் ஏராளமான கவிஞர்களைப்பிரசவித்துள்ளன. அவர்களுள் பாப்லோ நெருதா மட்டுமே புரட்சிக்கவி என்று ஏற்கப்பட்டுள்ளான்.

மறுமலர்ச்சிக் கவிஞர், சீர்திருத்தக் கவிஞர், மானுடம் பாடும் கவிஞர் என்று தமிழில் நிறையபேர் கால் பதித்திருக்கிறார்கள். ஆனால் புரட்சிக் கவிஞர் என்று ஒரே ஒருவர்தான் போற்றப்படுகிறார். அவர் தான் பாரதிதாசன்.

புரட்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் வேறுபாடு உண்டா? ஆம்! ஆழமான வேறுபாடு உண்டு. மறுமலர்ச்சி என்பது மீண்டும் மலர்வது என்று பொருள்படும். காலையில் மலர்ந்து மாலையில் இதழ்கள் குவிந்து மூடி மொட்டு வடிவம் பெற்ற தாமரை, மறுநாள் காலையில் கதிரவன் உதித்ததும் மீண்டும் இதழ் விரிப்பதுதான் மறுமலர்ச்சி. மறுமலர்ச்சி என்பது புதுமலர்ச்சி அன்று பழைய மலர்ச்சி புதுப்பிக்கப்படுகிறது என்று பொருள்.

18ஆம் நூற்றாண்டிலும் 19ஆம் நூற்றாண்டிலும் நிகழ்ந்த ஐரோப்பாவின் இலக்கிய வளர்ச்சியை மறுமலர்ச்சிக் காலம் (Renaisance) என்கிறது வர லாறு. அப்படியானால் புரட்சி என்பது என்ன?

நூறாண்டு வயதாகி விட்ட ஒரு கட்டடத்தின் அடித்தளத்தை முற்றாகத் தகர்த்து புதுத்தளத்தை அமைப்பதுதான் புரட்சி.

அடித்தளத்தின் மீது கை வைக்காமலே கட்டடத்தின் கூரையை மட்டும் மாற்றிக் கொண்டிருப்பது மறுமலர்ச்சி அல்லது சீர்திருத்தம்.

புரட்சி என்பதற்குச் சரியான பொருள். சமூக மாற்றம் என்பதுதான். காட்டுச் சமூகம் வேட்டைச் சமூகமாக மாறுவது ஒரு சமூக மாற்றம். வேட்டைச் சமூகம் வேளாண் சமூகமாக மாறுவதும். நிலவுடைமைச் சமூகம் தொழிலுடைமைச் சமூகமாக மாறுவதும், நிலவுடைமை தொழிலுடைமை ஆகிய தனிஉடைமைச் சமூகம் சமஉரிமைச் சமூகமாக மாறுவதும் அதன்வழியாக அது பொதுவுடைமைச் சமூகமாக மாற்றம் பெறுவதும் புரட்சியின் பல்வேறு படிநிலைகளே ஆகும்.

முப்பரிமாணப் புரட்சி

இந்தியாவைப் பொறுத்தவரை இந்தியத்துக்குள் விலங்கிடப்பட்டுள்ள பல்வேறு தேசங்களும், தேசிய இனங்களும் இந்தியப் பேராதிக்கத்திலிருந்தும் இந்திமொழிப் பேரின ஆதிக்கத்திலிருந்தும் இந்துத்துவப் பார்ப்பன ஆதிக்கத்திலிருந்தும் பெறுகிற விடுதலை தான் - அதாவது தேசியப் புரட்சிதான். மேலே குறிப் பிட்ட சமூக மாற்றங்களுக்கான முன்தேவையாகி விட்டது.

எனவே இந்தியத்தை முறியடிக்கும் தமிழ்த் தேசி யப் புரட்சி - முதலாளியத்தை முறியடிக்கும் வர்க்கப் புரட்சி - பார்ப்பனியத்தை முறியடிக்கும் சமூகப் புரட்சி - ஆகிய மூன்று பரிமாணங்கள் அடங்கிய முப்பரிமாணப் புரட்சியை முன்மொழியும் கவிஞனே புரட்சிக்கவி எனப்படுவான்.

பாரதிதாசன் மேற் சொன்ன மூன்று தளங்களிலும் தன் இலக்கியப் பங்களிப்பை முழுமையாகச் செய்த ஒரு முன்னோடியாவார்.

தேசியப் புரட்சி

பாரதிதாசனின் ஆசான் என்று பாரதி கருதப்பட்டாலும், பாரதியின் கருத்துகள் மறுமலர்ச்சியைச் சார்ந்தனவாயிருந்தன. தமிழ் வாழ வேண்டும்; தமிழர்கள் வாழ வேண்டும்; தமிழ்நாடு வாழ வேண்டும்.அத்துடன் இந்தியாவும் வாழவேண்டும் என்ற மனிதநேய நோக்கு அவனுக்கிருந்தது.

`வாழிய செந்தமிழ்; வாழ்க
நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு’

என்பதுதான் பாரதியின் கோட்பாடு. இந்தச் சிந்தனையில் நன்மை விழையும் நோக்கு இருந்ததே ஒழிய, புரட்சிக்கான நோக்கு காணப்படவில்லை. புரட்சி நோக்கு என்பது எப்படி இருக்கும்?

தமிழ் வாழ்க என்பது பொதுநோக்கு;
தமிழ் விடுதலை பெறவேண்டும் என்பது புரட்சிநோக்கு.
தமிழ்நாடு வாழ்க என்பது பொதுநோக்கு;

தமிழ்நாடு இந்தியச் சிறையிலிருந்து விடுபட வேண்டும் என்பது புரட்சி நோக்கு. தமிழையும், தமிழ்நாட்டையும் பாரதிதாசன் அணுகும் பார்வையைப் பாருங்கள்.

"செந்தமிழை; செந்தமிழர்
நாட்டைச் சிறை மீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம்
நடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து
வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய்
கருங்குயிலே’’

இதுதான் பாரதிதாசன் பார்வை. இதன் பொருள் என்ன?

"செந்தமிழைச் சிறை மீட்க வேண்டும்; செந்தமிழ் நாட்டைச் சிறை மீட்க வேண்டும்; அதற்காக உலகமே நடுங்குமாறு தமிழர் தம் உள்ளத்தில் வெந்தணல் - புரட்சித் தீ - ஒன்று விரைவாக வளர்க்கவேண்டும்’’- இதுதான் பாரதிதாசன் நோக்கு.

"இந்தி - வடமொழி -ஆங்கிலம் ஆகிய ஆதிக்க மொழிகளின் சிறையிலிருந்து அன்னைத் தமிழ் விடுதலை பெறவேண்டும்; இந்தியச் சிறையிலிருந்தும், பார்ப்பனியத் தளையிலிருந்தும் தமிழ்நாடு விடுதலை பெறவேண்டும். அதற்கான புரட்சித் தீ ஒன்று தமிழர் உள்ளங்களில் பூத்துச் சுடர வேண்டும்’’ - என்பதன்றோ அவரது செல்நெறி என்று தெளிவாகிறது இக்கவிதையில் தமிழ் விடுதலை, தமிழர் விடுதலை, தமிழ்நாடு
விடுதலை என்ற சிந்தனைதான் தமிழ்ச்சூழலில் புரட்சிச் சிந்தனை என்ற முத்திரையைப் பெறும். தமிழ்க் கவிதை இலக்கியத்தில் இந்த முத்திரையைப் பதித்த முதற்பெரும் பாவலன் பாரதிதாசனே.

பொதுவுடைமைப் புரட்சி

பாரதிதாசன் தன்னை முழுமையாக ஆட்படுத்திக் கொண்ட புரட்சிக் கோட்பாடு, பொதுவுடைமை.

`முப்பதுகோடி மக்களின் சங்கம்,
முழுமைக்கும் பொதுவுடைமை’

என்று பாரதி முதன்முதலில் பயன்படுத்திய சொல் அது. பொதுவுடைமை, புரட்சி என்ற இரண்டு சொற்களைத் தமிழுக்கு வழங்கியவன் பாரதிதான். ஆனால் பொது வுடைமை என்ற சொல்லைக் `கம்யூனிசம்’ என்ற சித்தாந்தத்தைக் குறிக்கும் சொல்லாக அவன் பயன்படுத்தவில்லை. `இந்திய நாடு முப்பது கோடி மக்களுக்கும் பொதுச் சொத்து’ என்ற பொருளில்தான் பொதுவு டைமை என்ற சொல்லைப் பயன்படுத்தினான். கம்யூனிசத்தைக் குறிக்கும் நல்ல தமிழ்ச் சொல்லாக அது இருந்ததால், பொதுவுடைமைவாதிகள் அதைத் தம் கருத்தியலுக்கும், கட்சிப் பெயருக்கும் பயன்படுத்தினார்கள். எனவே அந்தச் சொல்லின் இன்றைய பொருளில் பாரதி அதை அன்று எழுதவில்லை.

ஆனால் பாரதிதாசன் பொதுவுடைமையை ஒரு சொல்லாக அன்று, ஒரு கோட்பாடாகவே கற்றவன்; அவ்வாறே அதை ஏற்றவன். புதுவை அதற்கேற்ற தளமாக அவனுக்கிருந்தது.

"பொதுவுடைமைக் கொள்கை
திசை எட்டும் சேர்ப்போம்
புனித மோடதை எங்கள்
உயிரென்று காப்போம்’’

என்கிறான் பாரதிதாசன் பொதுவுடைமை அவனுக்கு வெறும் சொல் அன்று; சித்தாந்தமே. அதைத்தன் உயிர் என்கிறான். இவ்வளவு வலிவோடும் தெளிவோடும் பொதுவுடைமைத் தத்துவத்தை உயர்த்திப்பிடித்த தமிழ்க் கவிஞனாக முதலில் வெளிப்பட்டவன் பாரதிதாசனே. `பொதுவுடைமை என் உயிர்’ என்ற பிரகடனம் வெறும் உணர்ச்சிப்பூர்வமானதன்று; அறிவியல் பூர்வமானது என்பதை அவனது `புரட்சிக்கவி’ என்ற குறுங்காவியம் கூறும்.

உழைப்பே தொழிலாளியின் படைப்பு

எனவே ஒவ்வொரு படைப்பும் தொழிலாளியின் உரிமைப்பொருளாகிறது - என்ற மார்க்சியப் பொருளாதாரத்தைத் தன் கவிதையில் சொன்னவன் பாரதிதாசன். உதாரணத்துக்கு உழைப்பாளியின் வேர்வை பற்றிய பார்வையை எடுத்துக் கொள் வோம்.

வேர்வை பற்றி பாரதியும் பாடியிருக்கிறான்.

“அரும்பும் வேர்வை உதிர்த்துப்
புவிமேல்
ஆயிரம் தொழில் செய்திடுவீரே
பெரும்புகழ் உமக்கே
இசைக்கின்றேன்
பிரம்ம தேவன் கலை இங்கு நீரே’

என்பன பாரதியின் வரிகள்.

'படைப்புக் கடவுளான பிரம்மாவுக்குச் சமமானவர்கள் தொழிலாளர்கள். அவர்கள் வியர்வை உதிர்த்துப் புரியும் ஆயிரம் தொழில்களின் அற்புதத்தைப் புகழ்ந்து பாடுவேன்” என்பது வேர்வை பற்றிய பாரதியின் பார்வை.

உழைப்பாளி சிந்தும் வேர்வையைப் புகழ்வதோடு பாரதியின் பணி முடிந்து விடுகிறது.

பாரதிதாசனின் பார்வை பாரதியைத் தாண்டி வேர்வையின் எல்லைக்கே போகிறது. உழைப்பைப் புகழ்வதால் உழைப்பாளியின் வயிற்றுக் குச் சோறு கிடைக்குமா?

வேர்வை என்பது என்ன? உழைப்பு? உழைப்பு என்பது அவனது படைப்பு. எனவே உழைப்புக்குரிய விலை அவன் படைப்பேயாகும். என்ற மார்க்சியத்தைப் பாரதிதாசன் பாடும் வரிகள் இவை:

“உடலைக் கசக்கி உதிர்த்த
வேர்வையின்
ஒவ்வொரு துளியிலும் கண்டேன்
இவ்வுலகு உழைப்பவர்க்கு
உரியதென்பதையே’’

வேர்வை பற்றிய பாரதி தாசன் பார்வை இது. உழைப்பின் வேர்வை புகழுக்குரியது என்றான் பாரதி இல்லை; இந்த புவியே அதற்குரியது என்றான் பாரதிதாசன். இருவருக்குமிடையில் உள்ளது பார்வை முரண் மட்டுமன்று. சித்தாந்த முரண்! இந்தப் புவியே உழைப்பின் படைப்பு; எனவே இந்த புவியே அவனுக்குரியது என்பது
பொதுவுடைமைப் பார்வை. மார்க்சிய நோக்கு. பாரதிக்கு அந்த முதிர்ச்சி இல்லை. எனவே அந்தப் பார்வையுமில்லை.

சுருக்கமாகச் சொன்னால், வேர்வையில் பாரதி காண்பது அழகியல்; பாரதி தாசனுக்கோ அது அறிவியல் - அறிவியல் சார்ந்த பொருளியல்.

'கஞ்சி குடிப்பதற்கில்லார் - அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமில்லார்’ என்பது பாரதியின் மிகச் சிறந்த வரி.

ஏழைகளுக்கு இல்லாமை என்பது இரண்டு.

ஒன்று - கஞ்சி இல்லாமை;

இரண்டு - கஞ்சி கிடைக்காத காரணத்தைக் காணும் அறிவில்லாமை.

இந்த எல்லைவரை சிந்தித்த பாரதி, கஞ்சி பறிக்கப்படும் காரணத்தைக் காட்டியிருந்தால், அவன் சமூகச் சிந்தனை முழுமை பெற்றிருக்கும். ஆனால், கஞ்சியில்லாக் காரணத்தை அறிய முடியாத அறிவிலிகளாக உழைக்கும் மக்கள் இருப்பதாகக் கவலைப்படுகிற பாரதி, கடைசிவரை அந்தக் காரணத்தை நமக்குக் காட்டாமலே கவிதையை முடித்துவிட்டான்.

வள்ளுவர் காலத்திலிருந்து பாரதி காலம் வரை ஏழையின் கண்ணீரைப் பாடிய கவிஞர்கள் ஏழ்மைக்குக் காரணம் என்ன என்பதைத் தெளிவுபடுத்த இயலாமற் போனார்கள். நிலக்கிழாரியம் ஆட்சி செலுத்திய வள்ளுவர் காலத்தில், மன்னராதிக்கத்தின் நிலவுடைமைச் சுரண்டல்தான் மக்களின் வறுமைக்குக் காரணம். இதைப் பகுத்துப் பார்க்கும் இருபதாம் நூற்றாண்டின் பொருளியல் சித்தாந்தம். இரண்டாம் நூற்றாண்டில் எழவில்லையே என்று வள்ளுவனை விமர்சிப்பது அறிவீனம். ஆனால் வறுமைக்கான காரணத்தை நவீன நூற்றாண்டில் வாழ்ந்த மெத்தப்படித்த பாரதியே அறிந்திருக்கவில்லை என்பதுதான் நமக்கு வியப்பளிக்கிறது.

'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’

என்று பாரதி ஆவேசப்பட்டது என்னவோ உண்மை. ஆனால் உணவின்றிப் பசியால் வாடுவதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து அந்தக் காரணத்தை அழிப்பதற்குப் பதிலாக ஜெகத்தினை அழித்திடுவது என்ற ஆவேசத்தில் அறவியல் இருக்கலாம்; அதில் அறிவியல் இல்லை.

இந்த அறச்சீற்றம் வள்ளுவனுக்கே இருந்தது. "பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை ஒரு வனுக்கு நேருமானால், அந்த இழிநிலைமைக்குக் காரணமான இறைவன் அழிந்து போகட்டும்" என்று சபித்தான்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம், வாடிய வடலூர் அடிகளிடம் மனித நேயத்தையும் தாண்டிய உயிர் நேயம் - பயிர் நேயமாகப் பயிர்களின் பசிக்காகவும் வருந்துகிற உயிர் நேயமாகத் தளும்பியது.

வறுமைக்குக் காரணம் எது என்று அறிவியல் ரீதியாக அறியமுடியாத காலங்களில் வள்ளுவரும், வள்ளலாரும் அறநெறியில் நின்று வறியவர்களுக்காக வருந்தினார்கள் என்ற செய்தியே தமிழுக்கும் தமிழனுக்கும் நிறைவுதருவதாகும்.

பாரதியின் காலம் இருபதாம் நூற்றாண்டு என்பது மட்டுமன்று; உழைப்புச் சுரண்டலே வறுமைக்குக் காரணம் என்ற புரட்சிகரப் பொருளியல் தத்துவம் பாரெங்கும் பரவியிருந்த காலம். வறுமையின் காரணம் எது என்பது பற்றி பாரதி அறிந்தே இருந்தார். `அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமில்லார்’ என்ற வரியிலேயே அந்த அறிவு அவருக்கிருந்தது என்பது வெளிப்பட்டு விடுகிறது.

கஞ்சியின்மைக்கான காரணம் தெரிந்தும், அதைக் கவிதையாக்க முடியாதபடி பாரதியைத் தடுத்தது எதுவென்று தெரியவில்லை.

இங்கேதான் பாரதியைத் தாண்டி விசுவரூபமெடுக்கிறான் பாரதிதாசன். பொதுவுடைமைச் சிந்தனை பொறி பறக்கிறது அவன் பாட்டில்.

கைத்திறனும் வாய்த்திறனும்
கொண்ட பேர்கள்
கண்மூடி மக்களது நிலத்தை
யெல்லாம்
கொத்திக் கொண்டு ஏப்பம்
விட்டு வந்ததாலே
கூலி மக்கள் அதிகரித்தார்,
என்ன செய்வேன்
பொத்தல் இலைக் கலமானார்
ஏழை மக்கள்
புனல் நிறைந்த தொட்டியைப்
போல் ஆனார் செல்வர்.

என்று பொருளாதார விளக்கம் தருகிறார் பாரதிதாசன் உலகப்பன் பாட்டில்.

கையளவு நிலத்தில் பாடுபடுகிற உழவன் இருக்கிறான். அதுவும் கண்ணை உறுத்துகிறது நிலக்கிழாருக்கு. வறுமையில் அவனுக்குக் கடன் கொடுத்து, கடனுக்காக நிலத்தையே கொத்திப் பிடுங்கிக் கொள்கிறார். எனவே குறுநில உழவன் கூலி உழவனாகிறான். ஏற்கெனவே உள்ள கூலி உழவர்கள் பட்டாளத்தில் இவனும் சேர்கிறான்.

கூலிமக்கள் எவ்வாறு அதிகரித்தார்கள் என்ற சமூகச் சித்திரத்தைப் பொருளியல் நோக்கில் துல்லியமாகத் தீட்டிக் காட்டுவதோடு நிற்கவில்லை பாரதிதாசன். பொத்தல் கலத்தில் ஊற்றும் நீர் வடிந்துவிடும். அதுபோல் பொருளாதார ஓட்டைகளால் உழைப்பவன் உழைப்பு வடிந்துவிடுகிறது. அதுபோய்ச் சேர்கிற இடம் முதலாளிகள் என்கிற நீர்த் தொட்டி. இவ்வாறு உழைப்பு ஒரு பக்கம் உறிஞ்சப்படுவதும், இன்னொரு பக்கம் அது முதலாளிகளி டம் மூலதனமாகச் சேர்ந்து புனல் நிறைந்த தொட்டியாவதும்தான் மார்க்சிய மொழியில் வர்க்கச் சுரண்டல் என்றழைக்கப்படுகிறது. வர்க்க முரண்தான் வர்க்க மோதலை உருவாக்குகிறது. வர்க்க மோதல்கள் வர்க்கப் போராக முதிர்ந்தபின் புரட்சி வெடிக்கிறது. புரட்சியின் முடிவில் முதலாளியம் ஒழிக்கப்பட்டு பாட்டாளிகளின் அரசு பிறக்கிறது. உழைப்பு விடுதலை பெறுகிறது; தொழில்கள் மக்களின் பொதுவுடைமையாகின்றன. இதுதான் பொதுவுடைமைப் புரட்சி.

இதை உள்வாங்கிக் கொண்டுதான் பாரதிதாசன் தன் கவிதையில் சிவப்புச் சிந்தனையைத் திறந்து காட்டுகிறார்.

"இந்த நிலை இருப்பதனால்
உலகப்பா நீ
புதுக்கணக்குப் போட்டுவிடு;
பொருளையெல்லாம்
பொதுவாக எல்லார்க்கும்
குத்தகை செய்.’’

`குத்தகை செய்’ என்ற தொடர் `உரிமையாக்கு’ என்ற பொருளில்தான் ஆளப்பட்டிருக்கிறது.

"பொருளைப் பொதுவாக்கு... தனி உடைமைதான் வறுமைக்குக் காரணம். வறுமைப் பிணிக்கு மருந்து பொதுவுடைமைதான்’’ - என்று தனக்கு ஏற்பட்ட நம்பிக்கையை, தமிழனுக்கான நம்பிக்கையாக மாற்ற முனையும் தத்துவப் போராளியாக நிமிர்ந்து நின்று தமிழ்த் தளத்தில் ஒரு அரசியல் தளத்தை நிறுவி விடுகிறார் பாரதிதாசன்.

இந்தப் பின்னணியில் மீண்டும் பாரதியிடம் வருவோம். பஞ்சத்தாலும் பட்டினியாலும் மடிகிற மக்களைப் பார்த்துப் பதறுகிற பாரதியை இங்கே நாம் பார்க்கிறோம்.

“பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்தே
துஞ்சி மடிகின்றாரே - இவர்
துயர்களைத் தீர்க்க ஓர்
வழியில்லையே - அந்தோ
நெஞ்சு பொறுக்குதில்லையே’’

படிப்பவனையும் கண்ணீர்விடச் செய்யும் பாரதியின் கண்ணீர் வரிகள் இவை.

`இந்தப் பட்டினிக் கொடுமையைத் தீர்க்க ஒரு வழி தெரியவில்லையே’ - என்று தன் கையறு நிலையைக் கண்டு நெஞ்சு நெக்குருகுகிறான் பாரதி.

இதே நிலையைப் பாரதிதாசனும் பார்க்கிறான். இந்த வறுமைக் கொடுமைக்கு ஒரு வழியில்லையே என்று அவன் ஒப்பாரி வைக்க வில்லை. மாறாக, ``இதற்கெல்லாம் தீர்வாக ஒரு வழி இருக்கிறது’’ - என்று நமக்கெல்லாம் அந்த வழியைத் திறந்து காட்டுகிறான். பாரதிதாசன், இதோ:

ஆடுகிறாய் உலகப்பா
யோசித்துப்பார்
ஆர்ப்பாட்டக்காரர் இதை
ஒப்பாரப்பா
தேடப்பா ஒரு வழியை என்று
சொன்னேன்

என்று தேடிய வழியைக் கண்டடைகிறான் பாரதிதாசன் அவன் காட்டும் வழி என்ன?

“ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
உதையப் பராகிவிடில் ஓர்
நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆகிடுவர் உணரப்பா நீ’’

இதுதான் பாரதிதாசன் காட்டும் வழி. உயரப்பராயிருக்கும் முதலாளிகள்தாம் உழைப்பவர் ஓடேந்தும் நிலை அடையக்காரணம். எனவே அவர்களின் தனிவுடைமைக் கொள்ளைகளைத் தடுக்க ஒரே வழி; ஓடப்பராயிருக்கும் உழைப் போரையும் உயரத்தில் இருக்கும் உயரப்பர்களான முதலாளிகளையும் ஒரே நிலையில் சமமானவர்களாக - ஒப்பப்பர்களாக மாற்றுவதுதான் என்கிறார். எப்படி மாற்ற முடியும், அவர்கள் மனம் திருந்தி மாறுவார்களா என்றால் மாறமாட்டார்கள். பிறகு வேறுவழி?

`ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்பராக வேண்டும்’ -

அடியாத மாடு படியாது - என்பதுதான் பாரதிதாசனின் தீர்வு. வன்முறை ஒரு தீர்வுக்கு வழியாகுமா - என்று கேட்கப்படலாம். இதுபோன்ற சூழலில் வள்ளுவரே வன்முறையை பரிந்துரைக்கிறார் - என்பது தெரியுமா உங்களுக்கு?

பல்லை உடைக்கும் வலுமிக்க கையுடையவர்களுக்குத்தான் பணிவார்கள் எச்சில் கையையும் (காக்காவுக்கு) உதறாத கஞ்சர்கள் என்னும் கயவர்கள்’ என்பார் அய்யன் வள்ளுவர்.

`ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லாதவர்க்கு’

என்கிறது அந்தக் குறள்.

வன்முறையை மறக்கருணை என்கின்றன பக்தி இலக்கியங்கள். கொடிய வரைக் கொன்று அடிய வரைக் காப்பது (துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலன) என்ற இறைவனின் செயல் கருணையின் பாற்பட்டது. வன்முறையில் வெளிப்படும் கருணை என்பதால் மரியாதையாக அதை மறக்கருணை என்கிறார்கள்.

அரசாங்கமே ஒரு வன்முறை நிறுவனம்தான். தனது எதிரிகளை அடித்துக் கொல்வதோ அல்லது தூக்கிலிட்டுக் கொல்வதோ அல்லது என்கவுன்ட்டரில் கொல்வதோ அன்றாட நடை முறை. அரசைப் பொறுத்த வரை அவை கொலைகள் அல்ல. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்ற பெயரில் அரசின் வன்முறை நியாயப் படுத்தப்படுகிறது.

புரட்சியின் மூலம் பொதுவுடைமையைப் பெற்றெடுப்பதற்கு ஒரு மருத்துவச்சி போலிருந்து உதவி புரிவதே வன்முறையின் பங்கு என்பதே மார்க்சியம். அதன் மூலம் உழைக்கும் மக்கள் இழக்கப்போவது தங்கள் அடிமைச் சங்கிலிகளைத்தான். பெறப் போவதோ இந்தப் பேருலகம் - என்று தம் பொதுவுடைமை அறிக்கையை முடித்திருப்பார்கள் மார்க்சும் ஏங்கல்சும்.

பாரதிதாசன் அந்த அறிக் கையைப் படிந்திருக்கக் கூடும். எனவேதான் பாரதி அறியாத அல்லது அறிந்தும் ஏற்காத அந்த வர்க்கதர்மத்தைத் துணிச்சலோடு வெளியிடுகிறார் பாரதிதாசன்.

ஒரு புதிய சமூக மாற்றத்தை வரவேற்கும் தார்மிகத் துணிவும் தத்துவத் தெளிவும் படைத்த முதற் பெருங்கவிஞனாக வெளிப்பட்டமையால்தான் புதுவைக் கவி பாரதிதாசன் புரட்சிக்கவிஞன் என்ற இலக்கணத்துக்கு முற்றிலும் பொருத்தமானவனாகிறான்.

சமூகப் புரட்சி

சமூகப் புரட்சி பற்றிய சிந்தனையே ஒரு புரட்சிக் கவிஞனை முழுமைப்படுத்துகிறது. பாரதி வேதகால மகிமைகளைக் கொண்டாடியவன். எனவே சாதி ஒழிப்பு அவன் இலக்காக இல்லை. எல்லா வண்ணங்களையும் கொண்ட ஒரு தாய்ப் பூனையின் குட்டிகள் ஒன்றாக வாழ்வது போல் எல்லா வர்ணங்களின் மக்களும் ஒன்றுபட்டு வாழ முடியாதா என்பது பாரதியின் கேள்வி. வர்ண ஒழிப்பு, வர்ணாசிரம ஒழிப்பு என்பதைப் பாரதி தன் பாடு பொருளாகத் தேர்வு செய்யவில்லை. அவன் காலத்திலேயே முளைவிட்ட திராவிடச் சிந்தனையை அவன் வெறுத்தான். இந்தியாவை ஆரியநாடு என்றழைப்பதிலே அவன் மகிழ்ந்தான்.

இவற்றில் பாரதிதாசன் பாரதிக்கு நேர் எதிர்முனை யில் நின்றான். வேதியக் கருத்தியலையும் சாதிய ஒடுக்கு முறைகளையும் தன் உள்ளீடாகக் கொண்ட பார்ப்பனியத்தைக் கடுமையாகச் சாடினான்; ஆரிய மொழியால் ஆரியப் பண்பாட்டால் தமிழர் அழிவுற்ற சீர்கேட்டைக் களைய ஆரியத்தை அழிப்பதொன்றே வழி எனக் கருதினான். சாதி ஒழிப்பின் எல்லை தீண்டாமை ஒழிப்பே என்றும் பாடினான்.

“சதுர் வர்ணம் வேதன் பெற்றால்
சாற்றும் பஞ்சமர் தம்மை
எது பெற்றுப் போட்டதடி - சகியே
எது பெற்றுப் போட்டதடி?’’

என்று வினவுகிறான் பாரதி தாசன், நான்கு வர்ணங்களைப் பிரம்மன் படைத்தான் என்கிறீர்களே.

அவ்வாறெனில் ஐந்தாம் வர்ணமான பஞ்சமரை (தலித்துகளை) யார் படைத்தது என்பது பாரதிதாசனின் கேள்வி. இந்த வினாவுக்கு ஆரியம் இன்றுவரை விடையளிக்க வில்லை.

பார்ப்பனர் மட்டுமல்லர், பார்ப்பனரல்லாதாரும் கூடத் தம் ஊருக்குள் தாழ்த்தப்பட்டோர் நுழையக் கூடாதென்று தடை விதித்துள்ளனர். இந்த மூடத் தனத்தைப் பார்ப்பனரல்லாதார் சார்பில் சுயவிமர்சனம் செய்கிறான் பாரதிதாசன்.

(அடுத்த இதழில்...)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com