கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

வேதாந்தா ரிசோர்சஸ் லிட்., உலகளாவிய அளவில் இயங்கும் ஒரு பெருங்குழும நிறுவனமாகும். இதன் தலைமையகம் இங்கிலாந்தில் உள்ள இலண்டன் மாநகர். இதன் முதன்மைத் தொழில் சுரங்கம் மற்றும் கனிம வளங்கள் சார்ந்தது. வேதாந்த நிறுவனம் இந்தியாவின் தேசிய பங்குச் சந்தையிலும், இலண்டன், மற்றும் நியூயார்க் பங்குச் சந்தையிலும் பட்டியல் இடப்பட்டுள்ளது.

வேதாந்தாவின் தலையாய சொந்தக்காரர் அனில் அகர்வால் என்கின்ற மார்வாடி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இந்தியத் தரகு முதலாளி. இவர் 1969 இல் மும்பையில் பழைய இரும்பு, ஓட்டை உடல்சல்களை வாங்கி விற்கும் வணிகத்தை தன் தந்தையுடன் சேர்ந்து தொடங்கினார். 1979 இல் இவர் சேம்சர் இசுடெர்லிங் கார்ப்பரேசன் என்ற நிறுவனத்தை விலைக்கு வாங்கி அதற்கு இசுடர்லைட் இண்டசுட்ரீசு என்று பெயர் மாற்றம் செய்ததைத் தொடர்ந்து 1988 இல் இசுடெர்லைட் இண்டசுட்ரீசு (இந்தியா) லிட்., என்ற பெயரில் பொதுமக்கள் பங்குகள் விநியோகத்தின் மூலம் மூலதனச் சந்தையில் நுழைந்தார்

இது இரும்பு அல்லாத (Non-ferrous) வேதியியல் தன்மை கொண்ட உலோகங்களின் மிகப் பெரிய குழுமங்களை இந்தியாவில் கொண்டுள்ளது. சாம்பியா, தென் ஆப்ரிக்கா, லைபீரியா, அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் இயங்கி வருகிறது. மேலும் ஆசுத்திரேலியா, சாம்பியா ஆகிய நாடுகளில் சுரங்கத் தொழிலையும், எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனங்களையம் கொண்டுள்ளது. இதன் முதன்மையான விளைபொருட்கள் துத்தநாகம், ஈயம், வெள்ளி, எண்ணெய் மற்றும் எரிவாயு, இரும்புத் தாது, எஃகு, அலுமினியம், செம்பு, தங்கம் மற்றும் மின்சாரம் முதலியன.

இது இந்தியாவில் ஒடிசா, சட்டீசுகர், கோவா, தமிழ்நாடு மற்றும் ராசசுதான் ஆகிய மாநிலங்களில் சுரங்கங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. ஒடிசாவிலும், பஞ்சாபிலும் வணிக ரீதியிலான இரண்டு மின் நிலையங்களை நிறுவியுள்ளது.

இதன் துணை நிறுவனங்கள் இசுடர்லைட் இண்டசுட்ரீசு, இந்துசுதான் சிங் லிட்., சேச கோவா, பாரத் அலுமினியம் கம்பெனி, மால்கோ, வேதாந்த அலுமினியம், இசுடர்லைட் எனர்சி, ஆசுத்திரேலியன் காப்பர் மைன்சு, இசுடர்லைட் டெக்னாலசீசு, கொன்கோலா காப்பர் மைன்சு, கெய்ன் இந்தியா லிட்., முதலியன. இது இயங்கும் எல்லா இடங்களிலும் சட்ட விதிகள் மீறல், சுற்றுச்சூழல் மாசு, மனித உரிமைகள் மீறல் போன்ற பல மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது.

தமிழ்நாடு தூத்துக்குடியில் உள்ள இசுடர்லைட் தாமிர உருக்காலை மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் மிக மோசமான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. இது சிலி நாட்டிலிருந்து இரண்டாம்கை நிறுவனமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. இது தமிழ்நாட்டில் நிறுவப்படுவதற்கு முன் நான்கு மாநிலங்களில் இருந்து மக்களின் தொடர்ந்த போராட்டங்களால் விரட்டியடிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி நகரில் 22.05.2018 அன்று நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, காவல்துறையின் வன்முறை ஆகியவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்காக மக்கள் உரிமைக் கழகத்தின் உண்மை அறியும் குழுவினர் கடந்த 30.05.2018, 31.05.2018 ஆகிய தேதிகளில் கள ஆய்வு நடத்தினர். அக்குழுவின் பரிந்துரைகள்: 

_1.   14 பேரின் உயிரைக் காவு வாங்கிவிட்டு, நூற்றுக்கணக்கான மக்களை உடல் ஊனமாக ஆக்கிவிட்டிருப்பது, கொடூரமான ஒடுக்குமுறை ஆகும். தமிழக அரசு வெளியிட்டுள்ள ஸ்டெர்லைட்டை மூடுவதற்கான அரசாணை என்பது உரிய காரணத்தையும், அறிவியல் பூர்வமான ஆதாரங்களையும் உள்ளடக்கியதாக அமையவில்லை. மேற்படி அரசாணைக்கு எத்தகைய சட்ட வலிமையும் இல்லை. சட்ட வலிமையற்ற இந்த அரசாணைக்குப் பதிலாக மக்களுக்கும், இயற்கைக்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தமிழ்நாட்டில் நிறுவப்படுவதில்லை என்கிற கொள்கை முடிவினைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்.

  1. துப்பாக்கிச் சூடு மற்றும் காவல்துறையின் வெறித்தனமான வன்முறையினால் பலியான 14 பேரின் சாவிற்கும், நூற்றுக்கணக்கான மக்களின் இரத்தக் காயத்திற்கும் காரணமான காவல்துறையினர், ஏவிய ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீது கொலை வழக்கு மற்றும் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்.
  2. ஸ்டெர்லைட் ஆலையின் முதல் மற்றும் இரண்டாம் யூனிட்டுகளுக்காகத் தமிழக அரசு கையகப்படுத்திய விவசாய நிலங்களை உரிய விவசாயிகளிடமே திரும்ப வழங்க வேண்டும்.
  3. மக்களுக்கும், இயற்கைக்கும் பேரழிவு ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நலனில் அக்கறை கொண்ட அறிவியலாளர்கள், மருத்துவர்கள், நீதிபதிகள் ஆகியோரைக் கொண்ட விசாரணை ஆணையம் அமைத்து, ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சிக்கல்கள், ஸ்டெர்லைட் ஆலையின் விதி மீறல்கள், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும், பாதிப்புகளை மறு சீரமைப்பு செய்வதற்கான முழுப் பொறுப்பையும் ஸ்டெர்லைட் நிறுவனத்தையே ஏற்கச் செய்ய வேண்டும்.
  4. ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கும் கட்சிகளுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையிலான உறவு குறித்தும், ஸ்டெர்லைட் நிறுவனத்தால் அவர்கள் பெற்ற ஆதாயம் குறித்தும்; மே-22, 23 ஆகிய தேதிகளில் நிகழ்ந்த வன்முறைக் குறித்தும் மக்கள் நலனில் அக்கறையுள்ள ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திரு.சந்துரு, திரு.ஹரிபரந்தாமன் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்களைக் கொண்ட சுதந்திரமான விசாரணைக்குழுவினை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
  5. விசாரணை என்கிற பெயரில் அப்பாவி பொதுமக்களையும், சமூக முன்னணியாளர்களையும் கைது செய்யும், துன்புறுத்தும் நடவடிக்கைகள், சமூக முன்னணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் அனைத்தையும் காவல்துறை கைவிட வேண்டும்.
  6. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் உட்பட்ட வழக்குகள் அனைத்தையும் இரத்து செய்ய வேண்டும். கைது நடவடிக்கையை கைவிட வேண்டும்.
  7. காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டு பாளையங்கோட்டைச் சிறையில் உயிரிழந்த பரத்ராஜாவின் குடும்பத்துக்கும் தமிழக அரசு முழு இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.

9.    ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறையின் அடக்குமுறையால் பலியான 14 பேருக்கும் நினைவுச் சின்னம் அமைக்க, தூத்துக்குடியின் மையப்பகுதியில் அரசு இடம் ஒதுக்கித் தர வேண்டும்.