வேதாந்தா நிறுவனம் பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு நிறுவனம். அதற்கும் பிற பிரிட்டிஷ் ஏகபோக நிறுவனங்களுக்கும் வேறுபாடில்லை.
அதன் உடைமையாளன் அனில் அகர்வால் பாட்னாவைச் சேர்ந்த ஒரு மார்வாடி என்பது தவிர இந்தியாவிற்கும் வேதாந்தாவிற்கும் சம்பந்தமில்லை.
வேதாந்தாவும் இன்னொரு பிரிட்டிஷ் கொள்ளைக்கார MNC அவ்வளவே!
வேதாந்தா ரிசோர்சஸ் சர்வதேச அளவில் சுரங்கம் மற்றும் கனிம உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பகாசுர நிறுவனங்களில் ஒன்று. அது செப்பு, அலுமினியம், துத்தநாகம், ஈயம், இரும்புத்தாது போன்றவற்றின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, ஜாம்பியா, சமீபத்தில் ஒரு ஜப்பானிய நிறுவனத்தை வாங்கியதன் மூலம் தைவான், கொரியாவிலும் செயல்படத் தொடங்கி உள்ளது. 2010-ல் அதன் சொத்து மதிப்பு 23.887 பில்லியன் டாலர்கள். (1 பில்லியன் =1000 மில்லியன்.
1 மில்லியன் =10 இலட்சம்.
1 டாலர் = 68.4 ரூபாய்.
நீங்களே வேதாந்தாவின் சொத்து மதிப்பை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 2010-ல் அதன் வருவாய் 7873 பில்லியன் டாலர்கள், அதன் லாபம் 598 பில்லியன் டாலர்கள். வேதாந்தா சுரங்கத் தொழிலில் உலக அளவில் 10 இடத்தில் உள்ள நிறுவனமாகும்.
வேதாந்தா பிரிட்டனின் மிகப் பெரும் ஏகபோக நிறுவனங்களில் ஒன்று என்பதுடன், உலக அளவில் சுரங்க தொழிலைக் கட்டுப்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்று. இந்தப் பின்னணியைத் தெளிவாக புரிந்து கொள்ளாமல், ஏன் தமிழக அரசு, ஒரு நிறுவனத்துக்காக இவ்வளவு கொடூரமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று புரிந்து கொள்ள முடியாது.
இத்தகையதொரு ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனத்தை மூடுவது இந்திய, தமிழக ஆளும் வர்க்கத்தின் தரகு முதலாளிய கொள்கைக்கே குழி பறிப்பதாகும். ஒரு வகையில் அவர்களின் இருத்தலுக்கே குழி பறிப்பதாகும்.
அடுத்ததாக, மீள முடியாத நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏகாதிபத்தியங்கள், அதிலிருந்து மீள, தமது சுமைகளை உலகத் தொழிலாளர்கள் மீதும், முக்கியமாக பின்தங்கிய நாடுகளின் மக்கள் மீதும் திணிக்கவே உலகமய, தாராளமயக் கொள்கைகளைத் திணித்துள்ளனர். இன்றைய சூழலில் இந்தியாவின் புதைந்து கிடக்கும் கனிம வளங்களைச் சூறையாடுவது அவர்களுக்கு ஜீவாதாரமான விசயமாகும். ஏகாதிபத்தியங்களின் பாதந்தாங்கிகளாகத் திகழும் தரகு முதலாளிகளுக்கும் இது ஜீவ-மரண விசயம்தான்.
சத்திஸ்கரிலும், ஜார்க்கண்ட்டிலும், ஒரிஸ்ஸாவிலும், கட்சிரோலியிலும் பல ஆயிரம் கோடி செலவு செய்து, பல ஆயிரம் துணை இராணுவப் படைகளை இறக்கி, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றுவிட்டு, மாவோயிச தீவிரவாதிகளை ஒடுக்குகிறோம் என்று கூறுவது எதற்காக? ஊஃபா சட்டத்தின் கீழ் 20,000த்துக்கும் மேலானவர்கள் பல ஆண்டுகளாக சிறைச் சாலையில் அடைத்து வைத்திருப்பது எதற்காக? ஆயிரக்கணக்கான கிராமங்களை எரித்து, அன்றாடம் வன்புணர்வு வெறியாட்டம் நடத்தி, போலி மோதல் படுகொலைகளை நடத்தி வருவது எதற்காக? அப்பகுதிகளில் பழங்குடி மக்கள் மாவோயிஸ்ட் கட்சியின் தலைமையில், தமது மக்கள் அரசை நிறுவும் போக்கில், இந்த ஏகாதிபத்திய தரகு முதலாளிய சூறையாடலை மக்கள் படை கொண்டு தடுத்து வருகின்றனர். பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நிறைவேற்ற முடியாமல் இந்திய அரசு தவிக்கிறது. பழங்குடிகளின் வாழ்விடங்களிலிருந்து அவர்களை அகற்றும் அதன் திட்டத்தை மக்கள் கெரில்லா விடுதலைப் படையின் வீரமிக்க போர் தடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான், இன்று அப்பகுதிகளில் மக்களுக்கெதிரான முழு யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது. இந்த கேடு கெட்ட சமூக அமைப்பை ஒழிப்பதற்கான மக்கள் யுத்தமும், ஏகாதிபத்திய சூறையாடலுக்கெதிரான போராட்டமும் ஒன்றிணைந்துள்ளதால் தான், இப்பகுதிகளில் அரசின் இராணுவ ஆட்சியையும் மீறி மக்கள் எதிர்ப்பு உறுதியுடன் முன்னேறுகிறது.
கட்சிரோலிப் படுகொலைகள் நடந்தபோது, அதை "இடது சாகச வாத மாவோயிஸ்ட்டுகளுக்கெதிரான போர்" என பல கூமுட்டைப் புரட்சியாளர்களும் கூட விமர்சித்தனர். ஆனால், இன்று மக்களுக்கெதிரான போர் தமிழகத்தின் வாசலைத் தாண்டி உள்ளே வந்துவிட்டது. இப்போது என்ன சொல்வார்கள் மக்களை தீவிரவாதிகள் என்றா?
இது மக்களுக்கு எதிரான யுத்தம்...
தமது லாப வெறிக்காக, நெருக்கடிகளை தீர்த்து கொள்வதற்காக மக்களின் வாழ்வாதரங்களை பறிப்பதற்காக, அவர்களை வாழ்விடங்களை விட்டு விரட்டுவதற்காக போராடிப் பெற்ற உரிமைகளை பறிப்பதற்காக கடைசி சொட்டு இரத்தம் வரை ஒட்ட சுரண்டுவதற்காக ஏகாதிபத்தியங்களாலும் அதன் அடிவருடிகளாலும் நடத்தப்படும் யுத்தம்...
அறவழியில் போராடினாலும் அமைதி வழியில் போராடினாலும், தமது நோக்கத்திற்கு அவை தடை ஏற்படுத்தும் எனில் அங்கும் துவக்குகள் தான் அவனது பதிலாக இருக்கும்.
கட்சிரோலியின் போலி மோதல் படுகொலைகளும், தூத்துக்குடியின் பச்சைப் படுகொலைகளும் வேறு வேறு அல்ல இரண்டுமே மக்களுக்கு எதிரான யுத்தத்தின் பகுதிகள் தான்.
இந்த யுத்தத்தில் மக்கள் வெல்ல வேண்டும் எனில், மக்கள் யுத்தப் பாதையில் முன்னேறுவதைத் தவிர வேறு வழியில்லை என எதிரி காட்டி விட்டான்.
ஆனால், இதை சாதிப்பது புரட்சிகர, சனநாயக சக்திகளின் கைகளில்தான் உள்ளது.
புரட்சிகர, சனநாயக சக்திகளே ஒன்று படுவோம்!
மக்களின் போர்க்குணமிக்க போராட்டங்களை வளர்த்தெடுப்போம்!
ஒன்றுபட்ட போராட்டங்களின் மூலம் அரசு அடக்குமுறைகளை தகர்த்தெறிவோம்!
- விவேக்