எனது தாய்மொழி பற்று பற்றியோ, தமிழ் பற்று பற்றியோ, தமிழார்வம் பற்றியோ மற்றவருக்கு வலிந்து எடுத்துக்கூற அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை.

எனினும் ஆறறிவு பெற்ற அனைவரும் மொழி பற்று என்பதை இயற்கையானதாகவே ஒப்புக்கொள்வார்கள் என்றே கருதுகிறேன்.

இத்தோடு ஆயிரத்தோராவது முறையாக நான் கூறிக்கொள்ள விரும்புவது, தமிழ் வேறு நான் வேறு அல்ல. நான் பச்சைத்தமிழன். அதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை. நாம் அனைவரும் பச்சைத்தமிழர்கள்தான் என்பதை வெளிக்கூற வேண்டாம், குறைந்த பட்சம் உணரக்கூட முடியாத அளவிற்கு நாம் மூடர்கள் அல்ல.

அதுவும் வெளிமாநிலங்களில் பிறந்து வாழும் என் போன்றவர்களுக்குத்தான் எத்தனை சிக்கல்கள். ஆனாலும் நம்மவர்களில் பலர், தமிழன் என்று அடையாளம் காணப்படுவதில் கூட சங்கடப்படுவதை தாராளமாகக் காணலாம். சரி போகட்டும் என்றால், அவர்கள் சங்கடப்படுவதோடு மட்டுமன்றி, அடுத்தவர்களையும் சங்கடப்படுத்தும் போக்கு மலிந்து விட்டது.

ஒரு முறை நானும் என் தமிழ் நண்பர்களும் கல்லூரி வளாகத்தினுள் தமிழில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது குஜராத்தி மாணவன் ஒருவன் எங்களை அணுகி, நீங்கள் மதராசியா என்று ஏளனமாக கேட்டான். உடனே என் நண்பன் ஒருவன் பதற்றத்துடன் மறுத்து இfல்லை, இல்லை தெலுங்கு என்றான். இதைக் கேட்ட எனக்கு என் நண்பன் மேல் கோபம் வந்து ஒரு பிடி பிடித்துவிட்டேன். வட இந்தியாவில் தென்னிந்தியர் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மதராசி என்றுதான் கூறுவர். தமிழன் என்று கூறியிருந்தால் கூட அவனுக்கு ஒன்றும் விளங்கியிருக்கப் போவதில்லை. ஆனால் தான் தமிழன் என்று கூற தமிழனுக்குத்தான் எவ்வளவு தயக்கம் என்று எண்ணி மருகிப் போனேன். இன்றும் பெரும்பாலோர் இப்படித்தான் உள்ளனர்.

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா

எனும் வரிகள் இன்னும் ஏட்டளவிலேயே இருப்பது கண்டு தமிழர்கள் அனைவரும் வெட்கப் பட வேண்டும். பின்னர் அந்த பக்குவமில்லாத குஜராத்தி மாணவனை அவன் நண்பர்களும் கண்டித்தது வேறு கதை.

இதையெல்லாம் இங்கு ஏன் கூறுகிறேன் என்றால், என் குழந்தைக்கு அழகுத்தமிழில் ஆதவன் என்று பெயரிட்டால், ஏன் வேறு நல்லப் பெயர் கிடைக்கவில்லையா என்று ஏளனப் பார்வையோடு, கேட்கவும் செய்கிறார்கள். இவர்களின் அகராதியில் நல்லப்பெயர் என்பதின் பொருள் என்னவென்று யாமறியோம், பராபரமே. இவர்களெல்லாம் என்ன காரணத்தினால் தத்தம் குழந்தைகளுக்கு வடநாட்டுப் பெயரை சூட்டுகிறார்களோ அவர்களுக்கே கூட விளங்காது. கேட்டால் பிடித்திருக்கிறது என்று மட்டுமே கூறுவார்கள். ஆனால் நாம் தமிழ் மீது கொண்ட பற்றினால் அவ்வாறு சூட்டுகிறோம். அல்லது பிடித்திருக்கிறது என்று கூட நினைத்துக் கொள்ளலாம். அதை விடுத்து கருத்துக் கூறுகிறேன் என்று நம் மனதை காயப்படுத்தாமல் இருந்தால் சரி.

மற்றவர் என்ன நினைப்பாரகள் என்பது முக்கியமில்லை. நாம் விரும்பியபடி கூட பெயர் சூட்டிக்கொள்ளக்கூடாதோ? ஒரு முறை எங்கள் உறவினர் ஒருவர், வாயில் வருகிறார்போல் ஒரு பெயர் வைக்க கூடாதோ? என்றார். அதற்காக, வாந்தி என்று பெயர் வைக்க முடியுமா?

மேலும் ஒருவர் கூறியது வடநாட்டில் நாம் வசித்து வருவதால், இவர்களுக்குப் புரிகிற மாதிரியான வடநாட்டுப் பெயர்தான் வைக்க வேண்டுமாம். வடநாட்டில் உள்ளவர்கள் முதலில் தத்தம் பெயரின் பொருளையாவது முழுமையாக அறிந்துள்ளார்களா, என்பதை முதலில் தெளிவுப்படுத்த வேண்டும், இவர்கள். தமிழ்நாட்டில் உள்ள எத்தனை வடநாட்டவர் அங்கு தமிழில் பெயர் சூட்டியுள்ளனர்? அட, அங்கே தமிழனே கூட தமிழ் மறந்து போனானே.

ஆதவன் என்கிற நான்கெழுத்து சொல்லில் அப்படியென்ன கடினமான உச்சரிப்பு இருக்க முடியும். எனது, அருள் என்ற மூன்றெழுத்துக் கொண்ட பெயரை காதில் வாங்கி எழுதக்கூட முடியாத இவர்களுக்காக இவர்களை நம்பி இன்னும் சுருக்கமாக இரண்டெழுத்தில் என்னால் பெயர் தேட இயலாது. பின்னர் அதுவும் புரியாமல் ஓரெழுத்து பெயரிருந்தால் கூட அவர்களுக்கு சௌகரியமாகலாம். இனி இதுபோன்ற சப்பைக் கட்டு காரணத்தை விட்டுவிடுமாறு எனதருமை தமிழன்பர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இப்பொழுதெல்லோரும் சோதிட கணிப்பின்படியே பெயர் சூட்ட விழைகின்றனர். ஆனால் சோதிடர் கூறும் எழுத்துக்களின்படி தமிழில் பெயர் தேடுவதென்பது இயலாத காரியம். அதனாலேயே பெரும்பாலானோர் புரியாத ஏதோ ஒரு மொழியில் பெயர் வைத்து பெருமையும் பெருமிதமும் அடைகின்றளர்.

ஒரு காலத்தில் இங்கும் (அகமதாபாத்) தமிழரிடையே சுயமரியாதை இயக்கங்கள் செல்வாக்கு பெற்றிருந்தன. தமிழகத்திலேயே நீர்த்து போய்விட்ட சுயமரியாதைகள் வெளிமாநிலங்களில் வாழும் தமிழரிடம் எதிர்பார்ப்பதும் தவறுதான். அதனால்தானோ என்னவோ தமிழில் பெயர் சூட்டுவதை வெட்கமான செயலாக கருதுகிறார்கள், வெட்கங் கெட்டவர்கள்.

இப்படி சாதாரணமாக ஒரு தமிழ்ப் பெயரைச் சூட்டத்தான் எத்தனை எத்தனை தயக்கங்கள், தடங்கல்கள், சோதனைகள், போதனைகள், அப்பப்பா. தமிழர்களான நாம், ஏன் நற்றமிழில் பெயர் சூட்ட இயலாமல் இருக்கிறோம் என்று கேட்கக்கூட உரிமையற்று நாதியற்று போனதை என்னவென்று சொல்வது. மேலும் இச்சிறிய விடயத்துக்காக இவ்வளவு தூரம் விளக்கவுரை எழுதுவதும் தமிழனின் விதியென்றுதான் நொந்துக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

- த.வெ.சு.அருள் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It