கீற்றில் தேட...

வாழ்க்கையைப் பேசாத இலக்கியம் வகையற்றுப் போகும் என்பது இலக்கிய நியதி. சொற்பூச்சுகளால், மேனாமினுக்குத் தனங்களால், வாய்ப் பந்தல் போடுவோர் காலநதியில் கரைந்து போவர் என்பது வரலாறு. அதிலும் கவிதை என்பது மிக நுட்பமாகக் கையாளப்பட வேண்டிய வடிவம். இதைப் புரிந்து கொண்டவர்களுக்கு வார்த்தைகள் வசப்படும். வடிவமும் புலப்படும்.

"இரவின் விழிப்பு' மு.முருகேசின் அகநி வெளியீடாக வெளிவந்திருக்கும் காலத்திற்கேற்ற கருத்துமிகு தொகுப்பாக எனக்குப்படுகிறது. ஏதோ புத்தகம் போட்டால் சரி என்ற வகையில் எப்போதும் முருகேஷ் படைப்புகளைத் தேர்வு செய்வதில்லை. அகநி வெளியீட்டிற்கு ஆயுசுபூராவும் ஒரு நற்பெயர் நிலைக்க வேண்டுமென்பதில் கருத்தாக இருக்க அவர் நிறுவனத்திலிருந்து இந்நூல் வெளிவருவதே இதன் தகுதியைப் பறைசாற்றும்.

எங்கள் மருத நிலத்து மண்ணி லிருந்து முகிழ்த்துச் சிரிக்கும் தம்பி சக்தியை முதலில் என் கவிதை உதடுகளால் உச்சி முகர்கிறேன். ஒரு மூத்த அண்ணன் என்பதில் இது எனது கடமை மட்டுமல்ல. கைகோர்த்து முன் அழைத்துச் செல்லும் பொறுப்பும் அக்கறையும் கூட. தறிகெட்டுத் திரியும் இன்றைய இள ரத்தங்களுக்கு மத்தியில் கவிதையை நேசிக்கவும், புத்தகங்களை வாசிக்கவும் எழுந்துவரும் தம்பிகள், மகத்துவமிக்க நாளைய உலகின் மாமனிதர்களாகத் தெரிகிறார்கள். இவர்களை மேலும் கொண்டாடுவதன் மூலம் மட்டுமே நல்ல விளைச்சல்களை நிரம்பப்பெற முடியும். 

செல்பேசிகளில் காலத்தைத் தொலைக்கும் இளைஞர்களுக்கு மத்தியில், சக்தியின் வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை களாக உள்ளன.

படிப்பவரைப் பாசத்தால் உதைக்கிறார். நேசத்தால் வதைக்கிறார். எல்லார் மனத்தையும் கொள்ளை கொண்டு கவிதைக்குள் புதைக்கிறார்.

“என் தாத்தாவிற்கு சமர்ப்பணமாய்
இருந்துவிட்டுப் போகட்டும்
என் கவிதைகள்''

என்ற அவரின் வார்த்தைகள் உண்மையான அன்பின் ஜீவ நெருப்பு. முதியவர்களை எட்டியுதைக்கும் கொடுஞ்செயல்கள் அரங்கேறும் நம்பிக்கையற்ற உலகில் இச்சமர்ப்பணம் ஒற்றை வெளிச்சக் கீற்று. பரிசுத்தமான பாசத்தின் ஊற்று.

வார்த்தைச் சிக்கனம் கவிதையை மேலும் மெருகூட்டும். அழகூட்டும். இக்கலையைச் சக்தி மிகக் கச்சிதமாகவே புரிந்து வைத்திருக்கிறார். ஆகவே தான் வாழ்வின் துயரத்தையும், கிராமத்து நக்கல் நையாண்டித் தனங்களையும் மிக அழகாகத் தன் கவிதையில் அவரால் பொருத்த முடிகிறது. "நகைப்பா' வடிவில் அவர் வடித்திருக்கும் ஒரு கவிதைச் சொட்டை நீங்களும் பருகிப்பாருங்கள். மூன்று வரிகளுக்குள் எத்தனை நுட்பமான செய்திகள்?!

"முன்னிரவு தான்

வேண்டி விட்டு வந்தேன்

காலையில் களவாடப்பட்டிருந்தார் கடவுள்' என்று போகிறபோக்கில் அசாதாரணமாகச் சொல்லிச் செல்லும் சக்தி பிரிதொரு இடத்தில், அதே சூழலை வேறுவிதமாகக் கையாளும் தொனியில் ஆச்சர்யமும் அவமானமும் ஒருசேர நெளிய வைக்கிறார்.

“பிரார்த்தித்துவிட்டு

வெளி வந்தேன்

வாசலெங்கும்

பிச்சைக்காரர்கள்''

வல்லரசு கனவிலிருக்கும் எதார்த்தம் புரியாத இளஞ்சிட்டுகளுக்கு இவ்விரு கவிதைகளும் போதிமரத்து ஞான வார்த்தைகள்...

"இத்தனை ஆயிரம்

உயிர்கள் செத்து மடிந்தும்

திறவாத புத்தனின் கண்கள்

இனி திறந்தாலென்ன

அழிந்தாலென்ன' என்று கேட்கும் இந்த ஒற்றைக் கவிதை போதும். சக்தியின் சக்தியைப் புரிந்து கொள்வதற்கு இன்னும் கொஞ்சம் பரந்த பார்வை.

பறவை மனசு. வார்த்தைத் தேடல். விரிந்த வாசிப்பு இவைகள் போதும். இவைகள் போதும்... சக்தியை மகாசக்தியாக நிச்சயம் நாம் காணலாம்.

"எனக்கான வாழ்வை வாழ்ந்தே தீருவேன்' என்றும் அடுத்த தொகுப்பில் சந்திப்போம் என்றும் நம்பிக்கைச் சிறகு விரிக்கும் தம்பி சக்தியைப் பார்க்க ஆசையாக இருக்கிறது. இரவின் விழிப்பை ஆராதித்து வரவேற்போம் வாருங்கள்.

இரவின் விழிப்பு சக்தி

அகநி பதிப்பகம்

3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு,

வந்தவாசி - 604 408

விலை ரூ.40

பேசி : 9444360421