‘தலித் முரசு' இதழில் 2001 முதல் 2010 வரை தோழர் ஜெயராணி அவர்கள் மீனாமயில் என்ற பெயரில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து – ‘ஜாதியற்றவளின் குரல்' என்ற நூல் – 2014 ஆம் ஆண்டில் கருப்புப் பிரதிகள் மற்றும் தலித் முரசு சார்பில் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கு ‘காம்பட் கம்யூனலிசம்' என்ற ஆங்கில இதழின் ஆசிரியர் தீஸ்தா செடல்வாட் அவர்களும் அறிஞர் எஸ்.வி. ராஜதுரை அவர்களும் அணிந்துரை எழுதி சிறப்பித்துள்ளனர். ஓராண்டுக்குள் இந்நூல் இரண்டாவது பதிப்பைக் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

jeyarani 400இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘ஜாதியற்றவளின் குரல்' – 2014 ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரைத் தொகுப்புக்கான ‘ஆனந்த விகடன்' விருதைப் பெற்றுள்ளது. விருதுக்கான சான்றில் விகடன் ஏடு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:

‘‘இந்திய தலித் மக்களின் வாழ்க்கை குறித்த குறுக்குவெட்டுச் சித்திரத்தை அறிய உதவும் நூல். பத்திரிகையாளரான ஜெயராணி, மாநிலம் எங்கும் பல ஆண்டுகளாக சேகரித்த கட்டுரைகளின் தொகுப்பு. எந்த ஒரு சிக்கலையும் அதன் அடியாழம் வரையில் சென்று ஆராய்வதும், ஆதாரங்களை முன்வைத்து எழுதுவதுமாக ஒவ்வொரு கட்டுரையும் கடும் உழைப்புடன் எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட சாதியினர் அடர்த்தியாக இருப்பது ஏன், கிறித்துவ மதத்துக்குள் சாதியின் பாத்திரம் என்ன, தலித்துகளுக்குள் உள்சாதி பாகுபாடுகள் எப்படிச் செயல்படுகின்றன... என 360 டிகிரியில் சமூகத்தை அணுகுகிறார் ஜெயராணி. ஒவ்வொரு செய்திக்குப் பின்னும் நாம் கவனிக்க மறுக்கும் மிகப்பெரிய சமூக அவலம் மறைந்திருக்கிறது என்பதை அழுத்தமாக உணர்த்துகிறது ‘ஜாதியற்றவளின் குரல்'.''

தற்பொழுது கனடா வாழ் தமிழர்களால் ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘இலக்கியத்தோட்டம்' 2014 ஆம் ஆண்டிற்கான ‘அ புனைவு' விருதை ‘ஜாதியற்றவளின் குரலுக்கு' வழங்கியுள்ளது. கனடாவில் 23.06. 2015 அன்று நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்ட இவ்விருதின் சான்றிதழில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

‘‘திண்டுக்கல் மாவட்டம் அழகன்பட்டி என்ற கிராமத்தில் பிறந்த ஜெயராணி, ஆங்கில இலக்கியம் இளங்கலையும், தொடர்பியல் முதுகலையும் பயின்றார். கடந்த 15 ஆண்டுகளாக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணியாற்றி வரும் ஜெயராணி தமிழின் முன்னணி வெகுஜன இதழ்களான ஆனந்த விகடன், குமுதம், இந்தியா டுடே போன்ற பத்திரிகைகளில் பணிபுரிந்த போதும் – இவரது எழுத்துகள் – ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் இன்னல்களையே பதிவு செய்தன. சாதி எதிர்ப்பு, சிறுபான்மையினர் நலன், பாலின சமத்துவம், குழந்தைகள் உரிமை சார்ந்து நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இந்தியாவின் சாதியக் கட்டமைப்பை கேள்விக்குட்படுத்தும் கட்டுரைகளை களப்பணி மற்றும் தரவுகளின் அடிப்படையாக வைத்து இவர் எழுதி வருகிறார். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2010 வரையில் ‘தலித் முரசு' இதழில் எழுதிய கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை மட்டுமே ‘ஜாதியற்றவளின் குரல்' என்ற நூலில் வெளிவந்திருக்கின்றன. அத்துடன் புகைப்படக் கலைஞர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர் எனப் பல்வேறு தளங்களிலும் இவர் இயங்கி வருகிறார். தற்போது ‘புதிய வாழ்வியல் மலர்' என்ற இதழில் நிர்வாக ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

தனது எழுத்துகளை சமூக மாற்றத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்தி வரும் ஜெயராணி, தொடர்ச்சியாக பல அங்கீகாரங்களையும் பெற்று வந்திருக்கிறார். 2005 ஆம் ஆண்டு முஸ்லிம் பெண்களின் சம உரிமைப் போராட்டம் குறித்து ஆனந்த விகடனில் வெளிவந்த ‘இளைப்பாற விரும்புகிறோம்' என்ற கட்டுரைக்கு ‘சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்'பின் சிறந்த கட்டுரை சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. 2006 ஆம் ஆண்டு ‘இந்தியா டுடே ' இதழ் 36 ஆளுமை மிக்க பெண்களில் ஒருவராக இவரை பாராட்டி கவுரவித்தது. காட்சி ஊடகத்தில் செறிவான பங்களிப்பிற்காக அன்னை தெரஸா பல்கலைக்கழகம் இவருக்கு 2009 ஆம் ஆண்டு விருது வழங்கியது. ‘தமிழ்நாடு மாற்றுப் பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் பேரவை'யின் சமூக மாற்றத்திற்கான குரல் விருதை 2011 ஆம் ஆண்டு வென்றார். மதுரை இறையியல் கல்லூரி ‘விடுதலை வேர்' விருதை 2012 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கியது.

ஜெயராணி அவர்களுடைய ‘ஜாதியற்றவளின் குரல்' நூலுக்கு 2014 ஆம் ஆண்டு ‘அ – புனைவு'ப் பிரிவில் பரிசு வழங்குவதில் தமிழ் இலக்கியத்தோட்டம் பெருமையடைகிறது.''

Pin It