இராமாலை பயிற்சி முகாமின் தாக்கம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேஇராமாலை கிராமத்தில் திராவிடர் விடுதலைக்கழகம் மே 26, 27 தேதிகளில் நடத்தியபயிலரங்கம் மிகப் பெரும் தாக்கங்களை உருவாக்கியது. திராவிடர் விடுதலைக் கழகம் பயிற்சி முகாம்நடத்திய இராமாலை கிராமத்துக்கு அருகே உள்ளது கிருஷ்ணாபுரம். இந்த கிராமத்தில் ஆதி திராவிடர் சமூகத்தினர் பெரும் எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். அவர்களையொட்டி அருந்ததிய சமூகத்தினரின் சுமார் 20 குடும்பங்கள் மட்டுமே இருக்கின்றன. அருந்ததியர் குடியிருப்புகளையொட்டி மிகப் பெரும் புளியமரம் ஒன்று எந்த நேரத்திலும் உடைந்து விழக்கூடிய நிலையில் இருந்தது. இதனால் தங்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்பதால் இந்தமரத்தை அகற்றக் கோரி கடந்த 10 ஆண்டுகளாக அருந்ததிய சமூகத்தினர் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவரிடமும் வருவாய் அலுவலகத்திலும் புகார் அளித்து வந்தனர். எவரும் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் கழகப் பயிற்சி முகாம் நடப்பதற்கு அய்ந்து நாள் முன்பு மரத்தின் ஒரு பகுதி உடைந்து குடியிருப்புகளின் மீது விழுந்துவிட்டது. குடியிருப்புகளில் எவரும் இல்லாததால் உயிர்ச் தேசம் ஏதும் இல்லை. மரத்தின் மற்றொரு பகுதி எந்த நேரத்திலும் உடைந்து விழக் கூடிய ஆபத்தான நிலையில் மக்கள்அஞ்சிக் கொண்டிருந்தனர். கழகத் தோழர் சிவா, இத்தகவலை கழகத் தலைவரிடம் கூறியவுடன், 26ஆம்தேதி இரவு பயிற்சி முகாம் நிறைவடைந்தவுடன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பாதிக்கப்பட்ட கிராமத்துக்குச் சென்று மக்களை சந்தித்தனர். மக்கள் தங்களின் பாதுகாப்பற்ற நிலையையும் அதிகாரிகள் மரம் விழுந்த பிறகு அவ்விடத்திற்கு வந்து காரில் இருந்தபடியே பார்வையிட்டு, ‘எதற்காக மரத்துக்கு அருகில் குடியிருக்கிறீர்கள்’ என்று கடுமையாகப் பேசிவிட்டு சென்றதாகக் கூறினார்கள். ஆதி திராவிடர் சமூகத்தைச் சார்ந்த பஞ்சாயத்து தலைவர் பகுதிக்கே வரவில்லை. இந்த நிலையில் கழகத் தோழர்களோடு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நேரில் சென்று பார்வையிட்ட செய்தி பரவியதும் அரசு நிர்வாகம் சுறுசுறுப்படைந்தது. அடுத்த நாள் காலையிலேயே பஞ்சாயத்துத் தலைவர், ‘ஏன் வெளியாட்களை அழைத்து வந்தீர்கள்’ என்று மிரட்டிச் சென்றிருக்கிறார்.
27ஆம் தேதி கழகத் தலைவர் கொளத்தூர் மணிதாசில்தாருடன் தொடர்பு கொண்டு, கிருஷ்ணாபுரம்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாஎன்று கேட்டதோடு, நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாவிட்டால் அங்கேயே மேலும் சில நாட்கள்தங்கி, பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கப்போவதாகக் கூறினார். தாசில்தார், ‘மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி, ஏலம் விட உரிய அனுமதி பெற்றுவிட்டோம் உடன் நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றும் கூறினார்.
அடுத்த 24 மணி நேரத்தில் 28ஆம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து எந்தநேரத்திலும் விழக்கூடிய மரத்தை வெட்டியதோடு, ஏற்கெனவே உடைந்து வீழ்ந்திருந்த மரத்தையும்வெட்டி ஏலம் விட்டனர். 10 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட கோரிக்கை கழகத்தின் தலையீட்டால் 24 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. மாவட்டக் கழக அமைப்பாளர் சிவாவிடம் வருவாய் அலுவலர், காவல்துறை உளவுப் பிரிவினர் தொடர்பு கொண்டு, “வேறு எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் எங்களின் கவனத்துக்கு கொண்டு வாருங்கள்; நாங்கள் தீர்த்துவைக்கிறோம்” என்று கூறியதோடு, அருந்ததிய மக்களிடமும் சென்று ஏற்கெனவே ஆத்திரத்தில்பேசிய கடும் சொற்களுக்காக வருத்தமும் தெரிவித்தனர்.பயிற்சி முகாம் அருந்ததிய சமூகத்தைச் சார்ந்தகுழந்தைகளிடம் விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் உருவாகியிருப்பதை உணர முடிந்தது.
7ஆவது வகுப்புக்குமேல் படிக்க மாட்டேன் என்று கூறி, பள்ளிப் படிப்பை நிறுத்திய ஒரு பெண், பயிற்சியில்பங்கேற்ற பிறகு, தான் மீண்டும் பள்ளியில் சேர்ந்துபடிக்க விரும்புவதாக பெற்றோர்களிடம் கூறிபள்ளியில் சேர்ந்துள்ளார்.தீபா, சரளா, அருள்செல்வி என்ற பெண்கள், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவர்கள்.இவர்கள் மீண்டும் படிப்பைத் தொடர விரும்பியநிலையில் மாவட்ட அமைப்பாளர் சிவா அவர்களைகாட்பாடியில் உள்ள ‘சோலை உண்டு-உறைவிடப்பள்ளி’யில் 6ஆம் வகுப்பிலும், 9ஆம் வகுப்புகளிலும் சேர்த்துள்ளார். இராமாலை பயிற்சி முகாம்அக்கிராமத்தில் உருவாக்கியுள்ள தாக்கங்கள் இவை.பயிற்சி முகாமில் செல்வகுமார்-பூஜா இணையரின் ஆண் மகவுக்கு ‘அழகிரி’ என்றும், மோகன்குமார்-வைரமணி இணையரின் இரண்டா வது பெண்குழந்தைக்கு ‘கயல்விழி’ என்றும் கழகத் தலைவர்கொளத்தூர் மணி பெயர் சூட்டினார்.
பயிற்சி முகாம் வெற்றி பெற, மாவட்டஅமைப்பாளர் சிவா, கழகத் தோழர்கள் மோகன், நவீன்குமார், கார்த்திக், செந்தில், கஜேந்திரன், சந்தோஷ் குமார், மாவட்ட அமைப்பாளர் திலீபன், நரேன் ஆகியோர் முன்னின்று செயல்பட்டனர்.
ஒரே நேரத்தில் நடந்த இரு பயிலரங்குகள்
குடியாத்தம் அருகே உள்ளஇராமாலை கிராமத்தில் மாவட்டகழக அமைப்பாளர் சிவாவின் முயற்சியால் அவருக்குசொந்தமான தோப்பில் கழகசார்பில் பெரியார்-அம்பேத்கர் பயிலரங்கம், மே 26, 27 தேதிகளில் நடைபெற்றது. ஒரே நேரத்தில்சிறுவர் சிறுமியர்களுக்கு தனியாகவும், தோழர்களுக்கு தனியாகவும் பயிற்சிகள் நடந்தன. கழகத் தோழர் ஆசிரியர் ஈரோடுசிவக்குமார், சிறுவர் சிறுமி யருக்குபெரியார் குறித்தும், ஜாதி, கடவுள், மதம் குறித்தும் மிக எளிமையாக குழந்தைகளுக்கு புரிந்திடும் வகையில் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக பேசி கலந்துரையாடினார். இரண்டு நாள்களிலும் காவை இளவரசன், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை குழந்தைகளுக்கு நடத்தி பகுத்தறிவு அறிவியல் கருத்துகளை விளக்கினார். குழந்தைகள் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தோழர்களுக்காக நடந்த பயிலரங்கத்தில் - முதல் நாள் விடுதலை இராசேந்திரன், ‘அம்பேத்கர்-பெரியார் தேவையும்-அவசியமும்’ என்ற தலைப்பிலும், எழுத்தாளர் அழகிய பெரியவன், ‘அடிப்படை வாதமும் ஜனநாயகம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியும்’ என்ற தலைப்பிலும், கொளத்தூர் மணி, ‘அம்பேத்கரும் இந்துமதமும்’ எனும் தலைப்பிலும் வகுப்பு எடுததனர்.இரண்டாம் நாள் மே 27 அன்று ‘வன்கொடுமை தடுப்புச் சட்டம்’ குறித்து வழக்கறிஞர் துரை அருண், ‘இடஒதுக்கீடு உரிமையும்-வரலாறும், பின்னணியும்’ என்ற தலைப்பில் பால்.பிரபாகரனும், ‘பெரியார் இயக்கத்தின் மீதான விமர்சனங்கள்’ எனும்தலைப்பில் கொளத்தூர் மணியும் வகுப்புகளை எடுத்தனர்.
அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, காவலாண்டியூர் ஈசுவரன், சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் உமாபதி, அய்யனார், செந்தில் எப்.டி.எல்., அருண், வேலூர் மாவட்ட கழக அமைப்பாளர் நெமிலி தீலிபன், நரேன் ஆகியோர் இரண்டுநாள் பயிற்சி முகாம்களிலும் பங்கேற்றனர்.