இந்தியாவில் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒரு குற்றம் பெண்களுக்கு எதிராக நடக்கிறது. தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 2007ஆம் ஆண்டில் மட்டும் இம்மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 9,819 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் உத்திரப் பிரதேசத்தில் மட்டும் 2,113வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேசிய குற்றப் பதிவு ஆணையம்

"யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க"

என்றொரு தலைப்பை நாம் தொடர்ச்சியாக "தலித் முரசில்' பயன்படுத்தி வந்தோம். இத்தலைப்பின் கீழ் வரும் செய்திகள் அனைத்தும் ஜாதியின் இருப்பை அம்பலப்படுத்துவதாக இருந்தது. தற்பொழுது "எங்கே பிராமணன்?' என்ற "துக்ளக்' சோவின் தொடரை "ஜெயா தொலைக்காட்சி' ஒளிபரப்புகிறது. நம் வாசகர்களின் புரிதலுக்காக சொல்கிறோம். எங்கெல்லாம் ஜாதி இருக்கிறதோ, அங்கெல்லாம் "பிராமணனும்' இருப்பான்!

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்கேரி கிராமத்தில் தலித் விவசாயிகள் அறுவடை செய்த கேழ்வரகு கதிர்களை வெளியே கொண்டு வர (பொது) பாதை மறுக்கப்பட்டுள்ளது. “கேழ்வரகு எடுத்துக் கொண்டு எங்க நிலத்துக்குள் கால் வைக்கக் கூடாதுன்னு'' சாதி இந்துக்கள் தலித்துகளை மிரட்டி வருகின்றனர் ("தீக்கதிர்' 31.1.2009).

- உத்திரப்பிரதேசம் லக்னோவின் ஜஸ்வந்பூர் பகுதியில் உள்ள சந்தையில் 6 வயது தலித் சிறுமியை திருட்டுக் குற்றம் சுமத்தி, அச்சிறுமியின் முடியையும் காதுகளையும் பிடித்து தூக்கி, திருடியதை ஒப்புக் கொள்ளச் சொல்லி துன்புறுத்திய சப்-இன்ஸ்பெக்டர் (படம் காண்க) பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இக்கொடுமை பெருமளவில் கண்டிக்கப்பட்டுள்ளது

("தினகரன்' 4.2.2009).

யாருடைய அதிகாரத்திற்கு யார் பாடுபடுவது?

மேற்கு வங்கத்தை கடந்த 31 ஆண்டுகளாக இடதுசாரிகள்தான் ஆள்கின்றனர். அங்கு இன்றளவும் கையால் ரிக்ஷா இழுக்கும் கொடுமை தொடர்ந்தாலும், அதை இந்தியாவிலேயே முற்போக்கு மாநிலமாகத்தான் மார்க்சியவாதிகள் முழங்குகின்றனர்.

அப்புறம், அங்கு சாதியில்லை; தலித்துகள் மீது வன்கொடுமை இல்லை என்றெல்லாம்கூட அவர்கள் சொல்வதுண்டு. ஆனால் மேற்கு வங்க அமைச்சரவை பற்றிய ஒரு புள்ளிவிவரம், அதைப் பிற்போக்கு மாநிலமாகவே காட்டுகிறது. அங்குள்ள தலித் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கை ஒன்றரை கோடி (29.2%). இம்மக்களை 75 சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் (தனித் தொகுதி இடஒதுக்கீடு கட்டாயம் அல்லவா?).

ஆனால் அமைச்சரவையில் 7 தலித் மற்றும் பழங்குடி அமைச்சர்கள்தான் அங்கம் வகிக்கின்றனர். தலித் மக்கள் தொகைக்கு இணையாக உள்ள முஸ்லிம் மக்களுக்கு 5 அமைச்சர் பதவியும்; மூன்றரை கோடி இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (41%) இரண்டே இரண்டு அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 22.45 லட்சம் (2.8%) உள்ள பார்ப்பனர்களை, 64 பார்ப்பன சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். மேலும், பார்ப்பனர்களுக்கு 18 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கடுத்த நிலையில் உள்ள சாதி இந்துக்களுக்கு (3.4%) 9 அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் நிலச்சீர்திருத்தம் மிகச் சிறப்பாக நடந்தது என்றும், அங்கு ஜாதி வாசனையே இல்லை என்றும் முழங்குகிறார்கள் சி.பி.எம். கட்சியினர். சாதி ரீதியான பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டிருப்பதைத்தான் "ஜாதி வாசனை'யே இல்லை என்கிறார்கள் போலும்! வர்க்கம்தான் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்; பொருளாதார அளவுகோல்தான் வேண்டும் என்றெல்லாம் இவர்கள் முழங்குவதற்கு ஒரே காரணம் : மநுதர்ம சமூக அமைப்பில் இன்றுவரை முதல் நிலையில் இருக்கும் பார்ப்பனர்களுக்கு (பிறவி முதலாளிகள்) நிலையான அதிகாரத்தை வழங்க வேண்டும். அதற்கு பார்ப்பனர் அல்லாத (பிறவித் தொழிலாளர்கள்) மக்கள் பாடுபட வேண்டும்!

"தள்ளி வைக்கப்பட்ட' தலித்துகள்

தஞ்சை மாவட்டத்தில் உள்ளது, கருக்காடிப்பட்டி என்ற கிராமம். அய்யாயிரம் பேர் கொண்ட இக்கிராமத்தில் 250 தலித்துகள் இருக்கின்றனர். வேறென்ன? இம்மக்கள் ஊருக்கு வெளியே "தள்ளி' வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள இரு தலித் மாணவர்கள் ஊரின் தொடக்கத்தில் உள்ள பாலக்கட்டையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த கள்ளர் சாதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள்,

"ஏண்டா, கீழ் சாதிப் பயலுகளே, நாங்க உட்காரும் பாலத்தில நீங்க எப்படி உட்காரலாம்' என்று கேட்டு, அதை எதிர்த்த இரு தலித்துகளையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இவர்களை உடனே மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, புகாரும் அளித்துள்ளனர். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட பல்வேறு ஊர் முக்கியஸ்தர்கள், வழக்கை திரும்பப் பெறும்படி கேட்டுள்ளனர்.

வழக்கை திரும்பப் பெற மறுத்ததால், ஊர்க்கூட்டம் கூட்டி "தலித்துகளுக்கு வேலை கொடுக்கக் கூடாது, கடைகளில் பொருட்கள் கொடுக்கக் கூடாது, குளத்தில் குளிக்க அனுமதிக்கக் கூடாது' என்று கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

இப்பிரச்சினைக்காகப் போராடி வரும் ஒரத்த நாடு ஒன்றிய "இளஞ்சிறுத்தைப் பாசறை' செயலாளர் அன்பு, “நாங்கள் கொடுத்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத போலிஸ், அவர்கள் புகாருக்காக எங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் துடிக்கிறது. ஊர்க்கூட்டம் போட்டு தலித் மக்களைத் தள்ளி வைத்து விட்டார்கள். அவர்களுக்கு ஆதரவாக முக்குலத்தோர் பாதுகாப்புப் பேரவை தலைவர் செங்குட்டுவன் வாண்டையார் இருப்பதால், போலிஸ் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்'' என்கிறார் ("குமுதம் ரிப்போர்ட்டர்' 8.1.2009).

தலித்துகளுக்கு போராட்டம் பழகிப் போன ஒன்றுதான். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் ஒரு புறம் சாதி இந்துக்களின் குறியீடான மூக்கையா தேவருக்கு விழா எடுத்துக் கொண்டு, மறுபுறம் சாதி இந்துக்களுக்கு எதிராகவும் போராடப் போவதாக அறிவித்திருப்பது, எத்தகைய பலனை அளிக்கப் போகிறது?

கரம்சேடு தீர்ப்பு : வன்கொடுமைகளைத் தடுக்குமா?

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ளது கரம்சேடு கிராமம். இங்கு 17.7.1985 அன்று, ஒரு தலித் சாதி இந்து பண்ணையாரின் ஆதிக்கத்திற்கு கட்டுப்படவில்லை என்ற காரணத்தால், பண்ணையார் ஆட்கள் தலித்துகளை கடுமையாகத் தாக்கினர். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக 159 பேர் கைது செய்யப்பட்டனர். ஓங்கோல் நீதிமன்றம் இவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியது.

மேல் முறையீட்டில் 5 பேருக்கு ஆயுளும், எஞ்சியுள்ளவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல் முறையீட்டு வழக்கில் 1998இல் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதே ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

10 ஆண்டுகள் கழித்து 19.12.2008 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் முக்கிய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் மற்ற 30 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. காலம் கடந்தும் நீதி வழங்கப்பட்டுள்ளது. தண்டனை வழங்கப்பட்டால், குற்றங்கள் தடுக்கப்படும் என்று சொல்லப்படுவதுண்டு. இருப்பினும் கரம்சேடு தீர்ப்பு, சுண்டூர் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தவில்லை. இந்து (மத) பயங்கரத்திற்குள் வாழ்ந்து கொண்டு, நீதிமன்றங்கள் நியாயம் வழங்கும் என்று தலித்துகள் காத்திருப்பதிலும் நியாயமில்லை!

அவதூறுகள் முடிவதில்லை...

பெரியார் மீதான அவதூறுகள் இன்னும் முடிவுக்கு வந்துவிடவில்லை என்றே தோன்றுகிறது. 2009ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியை தோழர் யாக்கன் வெளியிட்டுள்ளார். அதில் புத்தர் முதல் பெரியார் வரை, பல்வேறு தலைவர்களின் படத்தை வெளியிட்டு, அவர்களைப் பற்றி சில குறிப்புகளையும் பதிவு செய்துள்ளார். இதுவரை எவருமே குறிப்பிடாத வகையில், "தந்தை ஈ.வே.ராமசாமி பெரியார்' என்று விளித்துள்ளார். இதை அறியாமை என்று கூட விட்டுவிடலாம்.

“கடந்த நூறாண்டுகளாக நவீன சமூக, அரசியல், இலக்கியப் போக்குகளை தீர்மானித்த இடை நிலை சாதி அறிவாளிகள் தான் பண்டிதர் அயோத்திதாசரின் சமூக, அரசியல், இலக்கியப் பங்களிப்பை தமிழ்ச் சமூக அறிவுத் தளத்திலிருந்து திட்டமிட்டு மறைத்தனர்'' (இதை இந்தப் பக்கத்தில் குறிப்பிடுவதற்கான காரணம் என்ன?) மேலும், “1918 முதலே அரசியலிலும் சமூக போராட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு,பண்டிதர் அயோத்தி தாசர் அவரது "தமிழன்' இதழ் மூலமாக பரப்பிய பகுத்தறிவுக் கருத்துக்களையும், இந்து மத எதிர்ப்புச் சிந்தனைகளையும் மக்களிடையே கொண்டு சென்றவர் பெரியார்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“பெரியாரால் சகித்துக் கொள்ள முடியாததால் தான் அயோத்தி தாசரையும் அவரது சிந்தனைகளையும் இருட்டடிப்புச் செய்தார்'' என்று ரவிக்குமாரால் சொல்லப்பட்ட அவதூறுக்கும், மேற்குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. அயோத்திதாசரின் கருத்துக்களைத் தான் பெரியார் பரப்பினார் என்றால், பெரியாரை இவர்களெல்லாம் தூக்கிக் கொண்டாடி இருக்க வேண்டாமா? பெரியார் மீது நேரடியாக அவதூறு செய்வது "தற்காலிகமாக' நிறுத்தப்பட்டுள்ளது என்பதால், "பெரியாருக்கு என்று சொந்தக் கருத்து ஏதுமில்லை; அவர் அயோத்திதாசருடைய கருத்துக்களைத்தான் பரப்பினார்' என்று திரிக்கத் துணிந்துள்ளனர்.

பண்டிதர் அயோத்திதாசர் தமிழ் மொழியை முதன்மைப் படுத்தியவர். தமிழர் து தமிழர் அல்லாதவர் என்றுதான் அவர் சமூகத்தை வேறுபடுத்தினார். பார்ப்பனர்களை "பிராமணர்'கள் என்று விளித்தவர் பண்டிதர். பகுத்தறிவுக் கருத்துக்களையும், இந்து மத எதிர்ப்பையும் அவர் இலக்கிய நயத்தோடு சொன்னவர். ஆனால், பெரியார் மொழியை முதன்மைப் படுத்தவில்லை; இன வேறுபாட்டைத் தான் (திராவிடர் து ஆரியர்) முதன்மைப்படுத்தினார்.

அவருடைய பகுத்தறிவுப் பிரச்சாரம் நேரடியானது. நெற்றியில் அடித்தாற் போல் அமைந்திருக்கும் அவருடைய கடவுள் மறுப்பு வாசகமே அதைப் பறை சாற்றும். "பிராமணர்'களை பார்ப்பனர்கள் என்றே அடையாளப்படுத்திய பெரியார், இந்து கடவுளர்களை செருப்பால் அடித்து மக்கள் மொழியில் பரப்புரை செய்தவர். சுருங்கச் சொன்னால், பெரியார் ஒரு சுய சிந்தனையாளர்.

Pin It