1.(கர்ப்பிணிப்பெண்டிர் இக்கதையை வாசிக்க வேண்டாமென எச்சரிக்கிறோம்.)

2.ஒரு நகைச்சுவைத் துணுக்கோடு நம்ம கதைய தொடங்குவோம்:

-தீண்டாமை ஓர் குற்றம்

தீண்டாமை ஓர் பாவச்செயல்

தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்-

3.

 -அன்பு நண்பா நாளைக்காலை சென்னைக்கு வருகிறேன் விமான நிலையத்தில் காத்திரு-

குதூகலம் தந்தது மும்பைத் தோழி மாதவியின் குறுஞ்செய்தி!

யேஞ்யப்பாஞ் நாலைந்து வருஷங்களுக்கப்புறம்! -வாராயோ தோழி வாராயோ-

பதிலொன்றை அனுப்பி விட்டு அலுவலகத்துக்கு விடுப்புக்கான காரணத்தை யோசிக்க ஆரம்பித்தான்! கைபேசி இசைத்தது மாதவி தான்!

-தோழா நலந்தானே! என்ன செய்வாயோ தெரியாது! நாலைந்து நாட்கள் என்னோடு வரவேண்டும். விக்கிரம சதுர்வேதி மங்கலம் எங்கே இருக்கு தெரியுமா?

நாம ரெண்டு பேரும் அந்த ஊருக்கு போறோம்! என்ன தோழா தூங்கிட்டயா பதிலே இல்ல?

-ம்.. ம்.. என்னத்த சொல்லஎங்க ஊருக்கு பக்கத்துல தான் நீங்க சொன்ன விக்கிரமசதுர்வேதி மங்கலம் நீங்க துரத்தும் வரை உங்களோடு நானிருப்பேன்.

அபயம் தந்தேன்! அஞ்சேல்!

நன்றி தோழா.. நாளை விரிவாய்ப் பேசலாம்!

கைபேசி மவுனித்து விட்டது.. மனது அசைபோட ஆரம்பித்து விட்டது.

-விக்கிரமசதுர்வேதிமங்கலம்…. மனோகரன் …. பிரேமா….

மரித்து போன 12 பேர்…. எரிந்து போன வீடுகள்..   கரிந்து போனப் பொருட்கள்! ….

                 

புரிந்து விட்டது மாதவியின் வருகை எதன் பொருட்டென்று!

**********************

தரையிறங்கியது விமானம்! தோழியின் தலைதெரிந்தது!

புன்னகை பூக்க பொறுமையோடு நடந்துவரும் தோழமைக்கு

கண்களாலேயே வணக்கம் சொல்கிறேன்.

-நலந்தானா நண்பா..-

-குறையொன்றுமில்லை--வாகனத்தை அழைத்தேன்! --போகலாம்-

-என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது நண்பா..எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்.

நிகழ்ந்தவைகளை விரிவாக விளக்குவாயா நண்பா..-

-உத்ததரவு தோழி! சில காட்சிகளை காட்டுவதன் மூலமாக சொல்லாத சேதிகள் சிலவற்றை சொல்லலாமென நினைக்கிறேன்! செய்திகளில் மிதந்தவையோடு நான் தரும் காட்சிகளையும் இணைத்தால் ஓரளவு உண்மை புரியும்.

-நல்லது இனி உன் முறை

காட்சி - 1

விக்கிரம சதுர்வேதி மங்கலம் - சோழர்களால் பிராமணர்களுக்கு தானமாக தந்த ஊர். சுற்றியுள்ள கிராமங்களை விழுங்கி விழுங்கி நகராட்சியாய் மாவட்ட தலைநகரமாய் பரிணமித்து மாநிலத்தின் மையப்பகுதியில் முக்கிய நகராய் விளங்குவது.

அண்ணா தொடங்கி வைத்த அரசு கல்லூரியில் எம்.ஏ தமிழ் படிப்பவன் மனோகரன்.

- மனோகரன் இக்கதையின் நாயகனா

- இந்தக் கதையில் சம்பவங்களும் நிகழ்வுகளுமே முக்கியமான கதாபாத்திரங்கள் தோழி மனோகரனும் பிரேமாவும் கதையை நடத்துபவர்கள்!

-சரிஞ்சரி தொடர்க!

- அறிவியல் இளங்கலையில் பிரேமா..

- யதேச்சையாக இரண்டு சைக்கிள்கள் கல்லூரி வளாகத்தில் மோதிக் கொண்டதில் இரண்டு மனசுகள் மலர்ந்தன.

*****

காதலை சொன்ன மாலை

காதலை சொன்ன மாலையில்

ஒரே வரிசையில் நீண்ட நட்சத்திரங்கள்

சதுரமாய்ச் சிரித்தது நிலவு.

மணலலைகள் கிளம்பிக் கடலக்குள் சென்றன

கரையிலிருந்து

திமிங்கலமொன்றினை விழுங்கியது

சின்ன நெத்திலி

பகலிலேயே அல்லிகள் பூக்க

பாலையிலிருந்து பீறிட்டன நீரூற்றுகள்

பூமி தொடவில்லை பாதங்கள்

சிறகு வரித்து பறக்க தொடங்கினேன்.

ஓன்பதாம் திசையில்

பட்டமரமொன்று புஷ்பித்தது விருட்சமாய்

இலைகளில் இருந்து கமழ்ந்தது சுகந்தம்

தீத்தொட இனிக்கிறது தித்திப்பாய்

மாலைச் சூரியன் பொழிந்தான் பனிமழை

எல்லாப் பறவைகளும்

காதல் பறவைகளாக மாறிவிட்டன

காதலைச் சொன்ன மாலையில்

.

வி.ச.மங்கலம் - பெரிய நகரமல்ல குறிப்பாக காதலர்களுக்கு உதவிசெய்ய ஓரிரண்டு மரத்தடிகள்.. ரெண்டு தியேட்டர்கள் ஒரேயொரு சிவன்கோயில். ஒரு பெருமாள் கோயில் எனக் கொஞ்சூண்டு இடத்திலேயே மனோகரனும் பிரேமாவும் காதலைப் பேணி வளர்த்தனர்.

ஒன்றை மட்டும் மறந்து….

-காதலுக்கு சாதியில்லை

மதமுமில்லையே

கண்கள் பேசும் வார்த்தையிலே

பேதமில்லையே….

- கண்ணதாசன் எழுதிய வரிகள் கேட்பதற்கு சுவை. ஆனால் நடைமுறையில் கண்ணுக்கு தெரியாத ஒரு பிசாசு நகருக்குள் உலவிக் கொண்டிருந்ததை அறியவில்லை அந்த இளசுகள்!

மனோகரன் - மாடர்குலம்! தாழ்ந்த சாதி

பிரேமா மரவெட்டிக்குலம்! ஒசந்த சாதி

உண்மையின் சூடு உறைக்க ஆரம்பித்தவுடன் இளமைகளுக்கு வேகம் வந்திட நண்பர்கள் துணையோடு அருகிலுள்ள மயிலம் முருகன் கோயிலில் அவசரத் திருமணம்! அதிகாரிகளை ‘கவனிக்க’ பதிவும் நடந்தது.

மனோகரனின் பெற்றோர் பெரிதாக சத்தம் போடல..

பிரேமாவின் தந்தைதான் சாமியாட்டம் ஆடிவிட்டார்.

காட்சி - 2

விக்கிரமசதுர்வேதி மங்கலத்தில் முக்கியமான இரண்டு பகுதிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

வி.மருதூர் பகுதி பிரேமாவின் சாதியின் பெரும்பான்மை:

வி.காலனி பகுதி மனோகரனின் கோட்டை

.

வி. காலனிக்கு அருகில்தான் பேருந்து நிலையம்! காய்கறி அங்காடி பெரிய கடைத்தெரு என வியாபாரத்தளங்கள்.! வி.மருதூர் பகுதி வியாபாரிகளுக்கு உழைப்புத் துணையாக வி.காலனி பாட்டாளிகள்!

கால ஓட்டத்தில் காலனியில் படித்தவர்கள் பெருக அரசுப்பணி…. பெங்களூர் வேலை ..எனப் படிப்படியாக காலனியின் முகம் மாற ஆரம்பித்தது.

குடிசைகள் குறைந்து புதிய வீடுகள்..வசதிகளின் குறியீடாய் வீடு கொள்ளாத மின் சாதனங்கள் ! புதிய புதிய வாகனங்கள்!

-பாத்தியாடா இந்த பசங்கள

நம்மகிட்ட கை கட்டி வேலை பாத்தவணுவோ

வூடும் வசதியா ஆயிட்டானுங்க

-நம்ம எதிர்க்க சைக்கிள் தள்ளிகிட்டு போனவன் மகன் இன்னைக்கு மோட்டார் சைக்கிள்ல பறக்குறான்

-மாடு தின்ன பயலுவுனுக்கு வந்த வாழ்வப்பாத்தியா

-தே.. பெர்சு.. ஏன் வயித்தெரிச்சல் புடிச்சு அலயிற..அவனுவ ஒழைச்சானுவோ.. படிச்சானுவோ..இப்போ நல்லாயிருக்கானுவோ.. நீயும் உன் புள்ளைகளை படிக்க வைய்யி! பத்தாங் கிளால் பெயிலுன்னவுடனயே தக்காளி கடைக்கு கூட்டுக்கிட்டு வந்துட்டல்ல..-

-போதும் நிறுத்துடா.. அட்வைஸ் சொல்றியா..பிச்சுபுடுவேன் பிச்சு-

-அட நம்ம கிருஷ்ணமூர்த்தி  !

-என்னா கிருஷ்ணமூர்த்தி ஒம்பொண்ணு அந்த மாடுவெட்டி பயனோட ஓடிப்போச்சுன்னு கேள்விப்பட்டேன்! யே..யப்பா! பெரிய்ய எடத்துலதான் சம்பந்தம் பேசி முடிச்சிக்கிற போ-

-சம்மந்தி சீர் கொடுக்க காலனிக்கு எங்களயெல்லாம் கூப்புடாதப்பா..--இந்த மாதிரி ஒரு பொளப்பு பொளக்கிறதுக்கு..ஒரு மொழம் கயித்துல தொங்கிடலாம்.-

-நானாயிருந்தா.. டெமக்ரான் நுவக்ரான்னு ஏதாவது பூச்சி மருந்து குடிச்சி உசிர வுட்டுட்டுருப்பேன்.

-கிருஷ்ணமூர்த்தி.. சொல்றன்னு தப்பா எடுத்துக்காத நமக்கெல்லாம் சாதி பெரும முக்கியம்பா-

-ஏதாவது ஒரு நல்லது கெட்டதுன்னா காலனியாளுவள நம்ம வூட்ல சேக்க முடியுமா.. சொல்லு பாக்கலாம்.-

-ஒனக்கு தெரியுமா? நம்ம பெர்சு ஒன்னு சொல்லும் ‘யாட்சி’ எளுதக்கூடாதாம்.. ‘யாஷி’ தான் சரியாம்-

-நம்மள்ளாம் அந்த காலத்துல ராசாவுங்களுக்கு படை நடத்துன பரம்பரப்பா….

-போன வாரம் கள்ளச்சாராயம் காய்ச்சி வித்தான்னு தங்கமணிய புடிச்சு போனானுங்களா.. அந்த தங்கமணி கூட ராசாவுக்கு வேல செஞ்ச பரம்பரதானா

-டேய் இவன் யார்றா இவன்.. குறுக்கு சால் ஓட்டிகிட்டு-

-கிருஷ்ணமூர்த்தி நாங்க சொல்றதக் கேளு அந்த பையனோட குடும்பத்துல பேசு! ஒன்னோட பொண்ணுகிட்டவும் பேசு! வேணுமின்னா நாங்க நாலஞ்சு பேர் வர்ரோம். எப்படியாவது அறுத்து வுட்டு நம்மவூட்டு பொண்ண கூட்டிட்டுக்கிட்டு வந்துரு அதுதான் நம்ம மரம்வெட்டி கொலத்துக்கு பெரும! 

-சரி மூத்தவரே.. நீ சொல்றாப்புல ஒரு தடவ பேசி பாக்கிறேன். வரட்டா-

-இதுல முக்கியமா கவனிக்க வேண்டியது என்னன்னா மாதவி அந்த ஜாதி அபிமானிங்கதான் பொண்ணோட அப்பாவ கேவலமா பேசி.. மனச ஒடச்சியிருக்காங்க..

கிருஷ்ணமூர்த்திக்கு உள்ளாற வருத்தமும் வலியும் இருந்தாலும் பெண்ணின் முடிவு பேரதிர்ச்சியை தந்தாலும்.. –“போனவ போய்ட்டா- நான் போயி ஆவுறதென்ன” என்கிற மனப்பாங்கு அவரை மவுனமாகவே தலைகுனிந்து நடக்க வைத்தது.

கிருஷ்ணமூர்த்தியின் மவுனம் மரவெட்டி மனிதர்களின் வக்கிரமனசுக்கு வடிகாலாக அமைந்து வாய்க்கு வந்தபடியெல்லாம் பேச வைத்தது

.

-மானங்கெட்டவன் போறாம்பாருஞ்தூ!

-தோ போறாம்பாரு.. மாடுவெட்டி சம்பந்தி

-பொண்ண வுட்டு பொழக்கிறதெல்லாம் ஒரு பொழப்பா-

காட்சி - 3

நடுவிலொரு பஞ்சாயத்து கூத்தும் நடந்தது!

இந்தப்பக்கம் நாலு பெரிய மனுசனுவோ! அந்தப்பக்கம் நாலு பெரிய மனுசாளுவோட எல்லாரும் ஒக்காந்து மனோகரனின் அப்பா அம்மாவை உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவைத்து பிரேமாவின் பாதுகாப்புக்கு தான் தான் பொறுப்பு என்று அவர்களிடம் எழுதி வாங்கியிருக்கியிருக்கிறார்கள்.

-ஏம்மா பிரேமா.. இவ்ளோ நடந்த பிறகும் என்னோட மான மரியாதயப்பத்தியெல்லாம் நீ கவலப்படல்ல! ரொம்ப சந்தோஷமா பெத்த வயிறு குளுந்ததும்மா! குளுந்தது-

மவுனமாக மண் பார்த்து நின்றாள் மகள்.

- ஏம்மா ஒங்கப்பா இவ்ளோ செஞ்சாருல்ல அவரு கூட போகவேண்டியது தான - ஒரு மரவெட்டி பிரமுகர் வாங்கி கொடுத்த சரக்குக்கு அளவாக வாய்திறந்தார்.

- ஏண்டா அவதான் சின்னப்பொண்ணு நீங்கள்ளா மாடு மாதிரி வளந்துருக்கிறீங்கல்ல.. எங்கவூட்டு பொண்ண எங்க கூட அனுப்பிட வேண்டியது தான.. - இது இன்னொரு மரவெட்டி.

- அய்யா.. இது ரெண்டு பேர் மனசு சம்பந்தப்பட்டது. சின்னஞ்சிறுசுக.. சேந்து வாழனும்னு ஆசப்படுதுங்க சேத்து வக்றது தான நமக்கு மருவாத

- இதோடா.. நாயம் பேசுறாரு நாயம்.. எங்க பேச்சுக்கு எதிர் பேச்ச பேசுற அளவுக்கு வளந்துட்டுங்கீளா

- ஏங்க.. நாங்கல்லாம் பேசவே கூடாதா வாய மூடிகிட்டு அடிமையாவே இருக்கனுமா.. காலம் மாறிகிட்டு வருதுன்றத மனசுல வச்சி பேசுங்க

- வாய்யா விஞ்ஞானி ஒங்க சாதிக்காரனுவோ ஜீன்ஸ் பேண்ட்ட கலர் சொக்கா போட்டுகிட்டு கூலிங் கிளாஸ் மாட்டிகினு எங்கசாதி பொண்ணுங்கள இழுத்துக்கிட்டு போயிடுவானுங்க! நாங்க பொங்கல் சாப்ட்டுக்கிட்டு இருக்கனுமாக்கும்..

- இது என்னாங்க பேச்சு! உங்க ஒறமொறல யாரும் பேண்ட் சட்ட கூலிங் கிளாசு போடறமேயில்லிங்கம்ளா? மரத்துக்கே பாவம் பாக்காத ஆளுங்க நீங்க.. மனுசனுக்கா பாக்க போறீங்க..

- டேய்.. என்ன வாய் நீளுது.. என்னமோ ஒங்க பயலுவ பண்றது காவியக்காதல் மாதிரி பேசுறீய்யா.. ச்சொம்மாடா ச்சொம்மா நாடகக் காதல் டா.. காதலே இல்ல.. டு பாக்கூர்..

-ஏங்க வீண்பேச்செல்லாம் எதுக்குங்க.. அவங்க மனசொத்து வாழுறதுன்னு முடிவு பண்ணிட்டாங்க.. கடவுள் முன்னிலைல கல்யாணமும் ஆயிடுத்து.. சட்டப்பூர்வமாக பதிவும் பண்ணிட்டாங்க..

-என்னா.ராசா..சட்டமெல்லாம் பேசுற.. ஒங்க சட்டம் மூங்கில் சட்டம் வளஞ்சிக்கும் எங்க சட்டம் இரும்பு சட்டம் பொளந்துக்கும்.. ஜாக்ரத..

- கடேய்சியா என்ன தான் சொல்றீங்க..

- ஏம்பா மனோகரா நீ என்னப்பா சொல்ற

- நான் என்னங்க சொல்றது.. என்னோட பிரேமாவை கண்கலங்காம கஷ்டப்படாம காப்பாத்துவன்.. இது எங்க கொலதெய்வம் அங்காளம்மன் மேல சத்தியம்!

- ஏம்மா பிரேமா.. நீ என்னம்மா சொல்ற..

நான் வாழ்ந்தா இவுருகூட தான் வாழுவேன்! என்ன இங்க எல்லாரும் மரியாதயாத்தான் நடத்துறாங்க..

- ஏண்டி.. இதே வயித்துல பெத்தன பெத்த தாயி.. ஒன்னோட கால புடிச்சி கெஞ்சி கேக்குறண்டி.. எங்ககூட வந்துடுடி..

- ஏம்மா என்னக் கூட்டிட்டு போயி கொல்லத்தான போறீங்க அத இங்கயே செய்யுங்க.. நாங்க சந்தோசமா சாவுறோம்..

- மூத்தவர கொஞ்சம் தனியா வர்ரிங்களா..

-சொல்லுங்க ஏட்டையா..

- தோ பாருங்க இவுங்க ரெண்டு பேரும் மேஜராயிட்டாங்க.. இந்த கல்யாணம் சட்டப்பூர்வமான செல்லுபடியாகும். ஆதனால இப்போ இத வுட்டுட்டு வேற வழில பாத்துக்குவோம்.. இதுதான் என்னோட யோசனை!

- யேப்பா கிருஷ்ணமூர்த்தி.. நாங்க இவ்ளோ சொல்லியும் ஒம்பொண்ணு அந்த மாடுவெட்டி பயலுகூடத்தான் போவன்றா. அவனுதுதான் ஒம்பொண்ணு க்கு ரொம்ப புடிச்சிருக்காம்.

நாங்க கிளம்புறம்.. எங்களுக்குன்னு சாதிக் கட்டுப்பாடு இருக்கு மரியாத இருக்கு.. ஒன்னாலயும் ஒம் பொண்ணாலயும் அத ஒழிக்க நாங்க தயாராயில்ல. என்னய்யா நான் சொல்றது..

- மூத்தவரு நீங்க தப்பாவா சொல்லப்போறீங்க.. கௌம்புங்கப்பா..

காட்சி - 4

காலையில் கிருஷ்ணமூர்த்தி மனைவி எழுந்து பார்த்தபோது கிருஷ்ணமூர்த்தி படுக்கையில் காணவில்லை. கதவு திறந்திருந்தது.தூரத்தில் ஒரு குரல் கேட்டது!

- யக்கா நம்ம கிருஷ்ணமூர்த்தி மாமன் பூச்சி மருந்து குடிச்சிட்டு கொல்லியாண்ட கெடக்கறாரு

- அய்யய்யோ.. இன்னாடி சொல்ற.. நெஞ்சில நெருப்பள்ளி கொட்டறியடீ..

- ஆமாயக்கா வந்து பாரேன்! ஓ யண்ணாவ்.. சின்னாப்பா.. ஓடியாங்களேன்.

மருதூர் ஏரியை ஒட்டி கிருஷ்ணமூர்த்திக்கு கொஞ்சம் நிலம் உண்டு வாயில் நுரை தள்ளி கிருஷ்ணமூர்த்தி கிடந்தார். இல்லை கிடந்தது.காதில் எறும்புகள் மொய்த்து செத்துக் கிடந்தன! .

அந்த பகுதியே பூச்சி மருந்து நெடி வீசியது.

- டேய் அல்லாத்துக்கும் அந்த.. மவனுவோ தாண்டா காரணம் கௌம்புங்கடா.. இன்னைக்கு நாமளா.. அவனுவளான்னு பாத்துடுவோம்.

- யார் யார் கிட்ட என்னன்ன வண்டி இருக்குதோ கொண் டாங்க நம்மாளுங்கள ஏத்திக்கங்க.. கையில கெடச்சத எடுத்துக்கங்க. கௌம்புங்க

காட்சி - 5

யே..யப்பா! வி.மருதூரில் தான் எத்தனை வகை வாகனங்கள் பைக்.. வேன்.. மினிவேன்.. டெம்போ.. மினிலாரி.. எத்தனை வகை ஆயுதங்கள்! கத்தி கடப்பாரை சம்மட்டி கோடாரி பெட்ரோல் கேன் பெட்ரோல் பாம்.. கிளம்பியது வெறிப்படை..

-அய்யய்யோ.. மருதூர் ஆளுவ காலனியாளுவள அடிக்க கும்பலா வந்துகினு இருக்காங்க.. ஓடியாங்க - -டேய்.. ஓடி வாடா.. போலிசுக்கு போன் பண்ணுடா..

-வெஸ்ட் ஸ்டேஷனுக்கு ஓடுடா.. டேய். 100க்கு கூப்பிட்டு சொல்லுடா..

காலனிக்குள் பரவியது பயம்! பீதி!

-கொளுத்துங்க.. எல்லா வூட்டயும் கொளுத்துங்க..

-கல்லு வூடு கட்டிட்ட அதப்புல ஆடுறானுங்க

-வண்டிய கொளுத்துடா..

-ஜன்னல ஒடைடா நல்லா அப்படிதான்.. சாமானுவ யெல்லாம் தூக்கிப்போட்டு கொளுத்து.. கேஸ தெறந்து வுட்டு நெருப்ப வய்யி

-டேய் பீரோவுல என்ன இருக்குன்னு பாரு..நகையா.. பணமா இருந்தா எடுத்துக்க.. துணியெல்லாம் ஒன்னு கூட வுட்டு வய்க்காத கொளுத்து எல்லாத்தையும் கொளுத்து.

-இந்த மாடு வெட்டி மவன்கனுக்கு பொஸ்தகம் ஒரு கேடு படிக்கிற திமிரு தான இந்த ஆட்டம் போட வைக்குது பொஸ்தகத்த கொளுத்துடா..சர்ட்டிபிகேட்டா கிழிச்சிபோடு.. எம்மவுனுங்க எப்டி கெவுர்மெண்ட் வேலைக்கு போறானுவோன்னு பாக்கலாம்.. கொளுத்து.. பத்த வை எல்லாத்தையும் பத்தவை ஒன்னு வுடாத..

-என்னா பேச்சு பேசுறானுவோ பத்திரம் ரேஷன்கார்டு வோட்டு கார்டு எது கெடச்சாலும்வுடாத..

வூடு வூடாப் பாரு டேய்.. நம்மாளுவங்க கிட்ட சொல்லிவை ஆளுங்க மேல கைய வெக்காத ஆமா சொத்து பத்துண்ணு ஒன்னும் இருக்கக்கூடாது திண்டாடி தெருவுக்கு வரணும்.. இந்த மாடுவெட்டி பசங்க. ரொம்பத்தான் தெனாவிட்டுல இருக்கானுங்கடா..

-களட்டுடா.. மோட்டாரை களட்டு அப்படியே நம்ம வண்டில வை சிலிண்டரைக் கூட வண்டில ஏத்து..

-ஒடைடா மீட்டர் சுச்சி பேனு ஏசி எல்லாத்தையும் அடிச்சி நொறுக்குடா

-மாரியம்மன் கோயில் உள்ள என்னா என்னா இருக்குன்னு பாரு.. தூக்கு எல்லாத்தையும் தூக்கு

-பீரோ கட்லு எல்லாத்தையும் ஏத்துடா நம்ம வண்டில ஆடு மாடுடெல்லாம் அடிக்காத நம்ம வண்டில ஏத்து பொருள்களை சாமான்களை மட்டும் அடிச்சு நொறுக்கு வூடே இருக்கக்கூடாது இந்த யாம்மவனுங்களுக்கு.

-உயிர் தப்பிக்க ஓடிய தருணத்தை பயன்படுத்திகொண்டு வேட்டை தொடங்கியது வெறியோடு ஆடிய வேட்டை.

-சவுண்டு சர்வீஸ் மயிறு சர்வீஸ் நசுக்குடா அதெல்லாம் நொறுக்குடா அந்த டி யூப் லைட் மெட்ரோமோக்ஸ் லைட்டெயல்லாம்..

-மாப்ள.. கிங்ஸ் பில்டர் கேட்டயே எடுத்துக்கடா பண்டலா எடுத்துக்க அந்த பீடி கட்டு வத்திபெட்டி எல்லாத்தையும் எடு மல்லாட்ட உண்ட எள் உண்ட முறுக்கு சிப்ஸ் பாக்கட்ட எடுத்து வய்யண்டா சைடிஷ்வுக்கு ஆவும்

-முருகன் பாத்திரக்கடை போடாங்க பாத்திரக்கூட மூத்திரக்கட எல்லாத்தையும் நசுக்கு இவனுங்க கெட்ட கேட்டுக்கு டிஷ் வேற.. டீவி இல்லன்னா தூக்கம் வராது பாரு..

-முடிஞ்சுதா டேய்.. எல்லாரும் ஒட்டுக்கா கௌம்புங்க ஒத்தனும் மாட்டிக்க கூடாது..

எரிந்தன வீடுகள் தணிந்தது வெறி சூறையாடப்பட்ட பொருட்கள் தெருக்களில் மிதிபட ஒரு புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது.

-ஆனா ஒன்ன மனசுல வச்சிக்கணும் மாதவி இந்த தாக்குதல் திடீரென நடந்ததல்ல தெளிவாக திட்டமிடப்பட்டது. மிகவும் நிதானமாக சுற்று வட்டார மரவெட்டி குழுவினரிடம் பேசி மூளைச்சலவை செய்து ஆள்களைத்திரட்டி ஆயுதம் எரிபொருட்களை கையாளும் முறை பற்றி சொல்லி கொடுத்து திருட்டில் கை தேர்ந்தவர்களைக் கொண்டு கொள்ளையடிக்கவும் செய்து ஆண்கள் வீட்டிலில்லாத நேரமாக திட்டமிட்டு உயிர்ச்சேதத்தை தவிர்த்த இந்த வெறியாட்டம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

-ஏன் தோழா உனக்கு நினைவிருக்கிறதா 2002-ல் குஜராத்திலும் கூட இப்படித்தானே நிகழ்ந்தது அவர்களுக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது அதைப்போலவே இவர்களுக்கு ஒரு காரணம் தேவையாய் இருந்தது. பிரேமா அப்பாவின் மரணம் அவர்களுக்கு வரமாக கிடைத்த தருணம் அப்படித்தானே..!

-மிகச் சரி மாதவி! இந்த நிகழ்வுக்கு சில தினங்களுக்கு முன் மரவெட்டிகள் சாய்ந்த அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகர் ராஜகுரு அந்தஸ்தில் இருப்பவர் இந்தப் பகுதிக்கு வந்து சிலரை சந்தித்து சென்றதாகவும் ஓர் செய்தி உண்டு எனவே இது தெளிவான திட்டமிட்ட தாக்குதல் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் விஷயம் இத்தோடு முடியவில்லை.

-அட.. இது என்ன புதுக்கதை..

-ஆமாம் இது பெருங்கதை.. ஒன்பது உயிர்கள் கொல்லப்பட்ட கதை

காட்சி – 6

விக்கிரம சதுர்வேதி மங்கலத்து வடக்கு பகுதியில் முத்து மாந்தோப்பு என்றொரு பகுதி உண்டு அந்த பகுதியும் மரவெட்டி சாதியார் பிரதானமாக வசிக்கக்கூடிய இடம் முத்துமாந்தோப்பு பகுதிக்கும் மருதூர் பகுதிக்கும் ‘உறவு நெருக்கம்’ உண்டு.

வி. காலனியில் வெறியாட்டம் முடிந்த மறுநாள் விடியற்காலையில் முத்து மாந்தோப்பு பகுதியைச் சார்ந்த ஒருவன் அரைபோதையோடு சைக்கிளில் மருதூர் நோக்கி மிதித்தான்.

-மாப்ள சேதி தெரியுமா வி.காலனி ஆளுங்க அக்கம் பக்கம் வூடுங்கனுக்கு தீ வச்சிறாங்க

முத்துமாந்தோப்புல முப்பது வூடு கொளுத்திட்டாங்க டா..

-ஏய்.. என்னப்பா சொல்ற..

-ஆமாண்டான்னா.. இப்போ அவுங்க எல்லாம் மருதூர் பக்கமா வந்துகிட்டு இருக்காங்க அதுதான் அவசரமா சைக்கிள்ள வந்தன்.

-டேய் ஓடியாங்கடா.. அவளுவ நம்ம வூட்டயெல்லாம் கொளுத்த வர்ராணுங்களாம்.

வதந்தி மிக வித்யாசமானதொரு பறவை! மிக விரைவில் மிக வேகமாய் பறக்கக்கூடிய மாயப்பறவை! முத்து மாந்தோப்புக்காரனின் சாராய வாயிலிருந்து வெளியேறிய பறவை மருதூர் முழுக்க உலா வந்தது.

****

-டேய் ஏரில எவண்டா மண்ணெடுக்கிறது

-நாங்க தான் சாமி.. கண்டமாணடி வண்டிக்காரங்க

-கண்டமாணடி யா எந்த தெருவுடா நீங்கள்ளாம்.

-என்னா புதுசா கேக்குறீங்க.. மாரியம்மன் கோயில் தெரு

-மாரியம்மன் கோயில் தெருவுதான் ரெண்டு இருக்க அங்க ஒன்னு ஊர்ல இருக்கு.. இன்னொன்று காலனில்ல இருக்கு

-சர்தாங்க.. காலனி தெரு ஆளுங்கதாங்க..

-அடங்.. மாள.. டேய் இவனவ ஒத்தனையும் வுடாதீங்கடா.. வெட்டுங்கடா.. வெட்டிக் கொல்லுங்கடா

-ஏங்க நாங்க என்னா தப்பு பண்ணோம்.!

-ம்ம். மசுறு தப்பு பண்ணிங்க ஒங்காளுவ தாண்டா வூட்ட கொளுத்த வர்ரானுங்க உங்கள கொளுத்துனா அவனுங்க அதப்பும் ஆட்டமும் அடங்கும்.

-டேய் ஓடுடா.. ஓடுங்கடா.. நம்மள வெட்டி கொளுத்திடு வாங்க..

-டேய் இந்த ஒம்பது பேரையும் மரத்துல கட்டுடா..

-ஏங்க வேணாங்க.. நாங்க அசலூருங்க.. உங்களுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லைங்க..

-ங்கொ.. மாள.. வாய்லயே போட்ரா.. பேசிக்கிட்டே இருக்கான் பாரு.. எந்த வூரா இருந்தா எனக்கென்னடா ரொம்பவும் துளுத்துக்கிட்டே போயி எங்களைத் தாண்டி போயிடுவிங்களே.. கட்டுங்கடா..

-யண்ணா வேணாண்ணா.. விட்டுடுங்கண்ணா..

-வெட்றா அவன..

ஆ! அய்யய்யோ.. கொல்றாங்களே!

ஒன்பது பேரையும் ஆயுதங்களால் தாக்கியும் தலையில் கல்லால் நசுக்கி கொன்ற காட்சிகளையும் எழுத்தில் கொண்டு வர இயலாது மாதவி. விஷுவலில் பார்த்தால் மிகக் கொடூரம் அந்த ஊருக்கு தொடர்பில்லாத ஒன்பது பேர் துடிதுடிக்க கொல்லப்பட்டது ஓர் புறமெனில் மேல்பெரும்பாக்கம் பகுதியில் நடந்தது மற்றோர் கொடூரம்

.

-இன்னும் கொலைகளா.. அடப்பாவிங்களா..

-அரசு கல்லூரிக்கு பின்புறம் உள்ள மேல்பெரும்பாக்கத்தில் என்ன நடந்தது தெரியுமா..?கப்பியாம்புலியூர் கிராமத்தை சார்ந்த மூன்று பேர் மாடுவெட்டி சமூகத்தினர் மேல் பெரும்பாக்கம் வழியாக விக்கிரம சதுர்வேதி மங்கலம் நகருக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களை இன்னாரெனத் தெரிந்து கொண்ட மரவெட்டி சாதியினர் எவ்வித விசாரணையுமில்லாமல் அடித்து இழுத்து வைக்கோலினால் சுற்றி எண்ணெய் ஊற்றி எரித்து கொன்று மேல்பெரும்பாக்கம் ஏரிக்கரையில் வீசியக் கொடுமையையும் நடந்தது

. முத்து மாந்தோப்பு வழியாகசென்று கொண்டிருந்த மாடுவெட்டி சமூகம் பெண்கள் இருவரை ஆடைகளை உருவி அம்மணமாக்கி பலபேர் முன்னிலையில் மானபங்கம் செய்த கொடுமை நாமெல்லாம் நாகரீக உலகில் தான் இருக்கிறோமா என்ற வினாவை எழுப்பியது மாதவி

-நண்பா ஏனென்று தெரியவில்லை..எந்த ஒருப் பிரச்னையிலும் பெண்களின் உடலோடு பிரச்னையைத் தொடர்புபடுத்தி அவமானப்படுத்துவதே வழக்கமாயிருக்கிறது.மணிப்பூர் பெண்கள் போல நம்மூர் பெண்களும் உடலை ஆயுதமாக்க பழக வேண்டும்..என்ன சொல்கிறாய்..

-நீ சரியாக தான் சொல்வாய் தோழி!

4.நீண்ட காலத்துக்கு பிறகு இந்த முக்கியமானப் பிரச்னையை ஒட்டி அரசியல்,சமூக,இலக்கியப் போராளிகள் ஒன்றிணந்து ஓர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதும் நிகழ்ந்ததே..

மக்கள் கவிஞர் இன்குலாப்-

“ ஒங்க தலைவன்

பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்

ஒங்க ஊர்வலத்துல

தர்ம அடிய வாங்கி கட்டவும்-

எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும்

நாங்க இருந்த படியே

இருக்கணுமா காலம் பூராவும்

மனுசங்கடா..

நாங்க மனுசங்கடா..

சதையும் எலும்பும்

நீங்க வச்ச தீயில் வேகுதே

ஒங்க சர்க்காரும் கோர்ட்டும்

அதுல எண்ணய ஊத்துதே

எதையெதையோ சலுகையின்னு

அறிவிக்கிறீங்க

நாங்க எரியுறப்போ

அவன் மசுரப் புடுங்கப் போணிங்க

டேய்!

மனுசங்கடா.. நாங்க மனுசங்கடா..

ஒன்னைப்போல அவனைப்போல

எட்டு சானு உசரமுள்ள மனுசங்கடா

நாங்க மனுசங்கடா..

தோழர் நல்லக்கண்ணு சிபிஐ:

இது அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூகப்பிரச்சனை. விக்கிரம சதுர்வேதி மங்கலத்தில் நடந்தது இந்தியாவின் தலைக்குனிவு சித்தர்கள் காலத்தில் இருந்து சாதி எதிப்புப் பேசிய மரபு நமக்கு இருக்கிறது. தேசிய பெரியாரிய கம்யூனிஸ்ட் இயக்கங்கள் அனைத்தும் சாதியை எதிர்த்துதான் அரசியல் செய்து வருகின்றன. காதல் கூடாது கலப்பு திருமணம் கூடாது என்று சொல்வது சமூகத்தை பின்னோக்கி இழுக்கும் பிற்போக்கு தனமான வேலை. விக்கிரமசதுர்வேதிமங்கலம் காலனியில் 40 வருஷமா நான் சேர்த்த சொத்து எல்லாம் போச்சே என்று ஒருவர் கதறினார். அப்படியானால் 40 ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்று அர்த்தம். புதிய சமூக மாற்றங்களை ஜீரணிக்க முடியாதவர்களின் இத்தகையப் போக்கு இத்தனை வருட தமிழகத்தின் பெருமையை சீரழித்து விடும்

.

தோழர் இரா. இராமமூர்த்தி சி.பி.எம், சட்டமன்ற உறுப்பினர்:

சாதி மோதலை உருவாக்கும் விதமாக செயல்படும் சாதிக்கட்சிகளின் நடவடிக்கைகளை மற்ற ஜனநாயக அமைப்புகள் அரசியல் கட்சியினர் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் வன்கொடுமை தடுப்பு சட்டம் இன்னமும் முழு வீச்சில் பயன்படுத்தப்பட வேண்டும். கௌவரக் கொலை என்ற பெயரிலான உயிர்ப் பலிகளுக்கு எதிராக அந்த சட்டத்தில் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும். சாதி மறுப்பு திருமணம் சாதியை ஒழிப்பதற்கான வழி என்பதைத் தாண்டி தன் வாழ்க்கைத் துணையாக யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒருவர் முடிவுசெய்வது அடிப்படை உரிமை இதற்கு எதிராகப் பேசுவதே அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.

கவிஞர் ஞானக்கூத்தன்:

மல்லாந்த மண்ணின் கர்ப்ப

வயிரெனத் தெரிந்த கீற்றுக் குடிசைகள்

சாம்பற் காடாய்ப் போயின

புகையோடு விடிந்த போதில்

ஊர்க்காரர் திரண்டு வந்தார்

குருவிகள் இவை என்றார்

குழந்தைகள் இவை என்றார்

பெண்களோ இவைகள்! கூலி

கன்றுகள் இவைகள் என்றார்

இரவிலேப் பொசுக்கப்பட்ட

அனைத்துக்கும் அஸ்தி கண்டார்

நாகரிகம் ஒன்று நீங்க

கவிஞர் கனிமொழி தி.மு.க:

-கட்சிகள் இயக்கங்கள் எல்லாம் பிரச்சாரம் செய்து சாதி ஒற்றுமையைத் தான் உருவாக்க முடியும். சாதியை ஒழிக்க முடியும் கலப்புத் திருமணங்கள் தான் ஒரே வழி. பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போடும் வழக்கத்தை விட்டொழித்து இந்தியாவுக்கே முன் மாதிரியாக இருக்கும் தமிழ்நாட்டில் மீண்டும் இத்தகைய நிலைமை உருவாவது ஆரோக்கியமானது அல்ல-

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸ்:

-ஒரு சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதால் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தையே வாபஸ் வாங்க வேண்டும் என்பதும் தவறானது. காலில் ஒரு புண் என்றால் காலையே வெட்ட முடியாது.-

திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி:

-சமூக நீதி கேட்டுப் போராடி முன்னேறியவர்கள் இப்போது அதே சமூக நீதிக்கு எதிராக செயல்படுகின்றனர்.

கவிஞர் பாரதி வசந்தன்:

-சேரிகளுக்கு கோவணம் கூட இல்லை

வெட்கம் கெட்டு பறக்கிறது தேசியக்கொடி

சேரிகள் வதைபடுகின்றன

ஒரு மசுறுக்கும் நியாயம் வழங்காமல்

சுழல்கிறது அசோக சக்கரம்

வாழ்வுரிமை எங்களுக்கு தந்ததுண்டா

வந்துட்டானுங்க வாய்கிழியப்பேச

வந்தே மாதரம்

தீண்டாமையை ஒழிக்க வக்கில்ல

இந்து மத வெறிநாய்கள் கத்துகின்றன

ஜெய் ஹிந்த்

எங்க பெண்களின் மானம் பறிபோகுதே

ஒரு நாளாவது சிறுக்கி மக தடுத்திருப்பாளா

பாரத மாதா

இயக்குநர் பாலாஜி சக்திவேல்:

-படிக்கிற வயதில் காதல் என்ன வேண்டிக்கிடக்கு- என்று சிலர் அங்கலாய்த்துக் கொள்கிறார்கள். படிக்கிற வயசில் காதலிக்காமல் கிழவன் ஆன பிறகா காதலிப்பார்கள்? சின்ன வயசு பெண் மனதில் காதல் என்கிற தப்பான விஷயத்தை விதைக்கிறார்களே என்று சிலர் சொல்கிறார்கள். நம் சமூகத்தில் பால்ய பிராணத்திலேயே ‘நீதான் இவனுக்கு பொண்டாட்டி’ஞ் அவன் தான் உன்னோட புருஷன்’ என்று பிஞ்சுகளின் நெஞ்சில் விதைத்தோமே அது தவறு இல்லையா..?

எழுத்தாளர் அன்பாதவன்:

சுவர்கள் வலிமையானவை

இதயங்களைப் போல..

வேண்டுமானால் கொளுத்தி மகிழலாம்

தாங்கும் போது

எம்மவர் கழுத்தை அறுத்ததை நினைத்து

வெட்டரிவாளும் தலைகுனிந்து வெட்கி.

தேர்வடங்கள் தீட்டாகுமா..

எம் கறுப்பு விரல்கள் தொட்டால்

நீதியில்லா தெய்வங்களை நிராகரிப்போம்

ஒரு ஊராட்சி தலைவர்

கொலை செய்தீர்கள்

ஒரு குடியரசுத் தலைவர்

வாய்ப்பு மறுத்தீர்கள்

எத்தனைக்காலம் எத்தனை பதவிகளில்

நீங்கள் மட்டுமே

தாமதமும் மறுப்பதின் மறைமுகமே..

சாட்டையடி.. சாணிப்பால்..

இப்போது சிறு நீரும் மலமும்

வன்கொடுமைச் சட்டங்கள்

பிடுங்கிய கண்ணகி சிலை போல்

குப்பையாய்க் கிடக்க

எத்தனை ஆண்டுக் காலம்

இந்த மண்ணில் அடிமைகளாய்

எமது கரங்கள் ஒன்றிணைத்து

எழுகிறோம்

புதிய உத்வேகத்தோடு

பழைய கேள்விகளுக்குப் பதிலாய்..

5.ரத்த காண்டம்

- அதெல்லாம் சரி நண்பா காதல் நிகழ்வு ஒன்று காலனி மக்கள் மீதான கலவரம் ஏற்படக் காரணமாயிற்று என்பதை புரிந்து கொள்கிறேன். அந்த ஜோடி மனோகரன்-பிரேமா என்னாவானார்கள்

- அது திருப்பங்கள் நிறைந்த கதை சாதாரணத் திருப்பங்கள் அல்ல கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட கொடூரம் கொடுமையும் மிக்க கதை சாதி தன் வலியப் பற்களால் இரண்டு சின்னஞ் சிறுசுகளின் குரல்வளையைக் கவ்விக் கடித்து ரத்தம் உறிஞ்சி தன் தாகம் தீர்த்த கதை

.

- நீ சொல்லிப் போகும் விஷயம் ரொம்பவும் திகிலாக இருக்கும் போல.. நண்பா..

- திகில் மட்டுமல்ல.. வலி தருவது- வேதனைத் தருவது இந்த லேப்டடாப்பில் மனோகரன் என்கிற ஃபோல்டருக்குள் போய்ப் பார்.. தோழி நான் சொல்லாமலேயே பலசங்கதிகள் புரியமுனக்கு அதற்குள் நீ சந்திக்க வேண்டிய நபர்கள் சிலரிடம் பேசி முன் தயாரிப்பு செய்ய செல்கிறேன்.. சரியா..

- நல்லது கிளம்பு நான் தொடர்கிறேன்.

கோப்பு – 1:

விக்கிரமசதுர்வேதி மங்கலம் கலவரத்துக்கு காரணமான காதல் ஜோடியை பிரித்தது.

தாயுடன் செல்ல கோர்ட் அனுமதி

விக்கிரமசதுர்வேதி மங்கலம் நகரைச் சேர்ந்த மனோகரன் பிரேமா.

வேறு வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் கடந்தாண்டு மயிலம் முருகன் கோயிலில் ரகசியத் திருணம் புரிந்ததும் திருமணம் பதிவு செய்யப்பட்டதும் வாசகர் அறிந்ததே.

பெண்ணின் தரப்பில் ‘கடத்தல்’ என்று புகார் செய்யப்பட்டது. போலிசார் இருவரையும் சேர்ந்து வாழும்படி கூறி அனுப்பினர். இதையடுத்து பிரேமாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி பூச்சி மருந்;து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக ஒரு தகவல் கூறுகிறது. இதை தொடர்ந்து விக்கிரம சதுர்வேதி மங்கலத்தில் சாதி கலவரம் மூண்டது. வி.காலனியில் வீடுகள் சூறையாடப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

விக்கிரம சதுர்வேதிமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பிழைக்க வந்த 12 அப்பாவிகள் பயங்கரமாக கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்த காதல் ஜோடி பிரிந்தது பிரேமா தன் தாயுடன் செல்வதாக நீதிமன்றத்தில் கூறினார் நீதிமன்றம் அவரது விருப்பப்படி தாயுடன் செல்ல அனுமதித்தது.

கோப்பு - 2

-பிரேமா திரும்பி வருவார்-

நம்பிக்கையோடு காத்திருக்கிறார் மனோகரன்

தமிழகத்தில் தமிழக அரசியல் சூழலில் ஏகப்பட்ட பதட்டத்தை விதைத்த அந்தக் காதல் இப்போது சாதிக்கு இரையாக்கப்பட்டு விட்டது.

விக்கிரம சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த மனோகரனும் பிரேமாவும் இப்போது ஒன்றாக இல்லை.

அந்த நகரில் வி.காலனிப்பகுதியில் நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கிய சாதிவெறி பிரேமா-மனோகரன் காதலையும் வன்முறையாகப் பிரித்திருக்கிறது.

-நான் அம்மாவுடன் போகிறேன்- என்று நீதிமன்றத்தில் கூறிய பிரேமாவின் முடிவு அவர் மனமுவந்து எடுத்த முடிவல்ல என்பது ஊரறிந்த ரகசியம் தான்.

தமிழகத்தில் சாதிவெறிக்குச் சவால் விட்ட இந்த ஜோடி மறுபடியும் இணைவார்களா என்பது இப்போது நம்முன் எஞ்சியிருக்கும் பதில் கணிக்க முடியாத கேள்வி!

‘உயர்நீதி மன்றத்தில் ஆஜராகப் போடும் பிரேமா மனோகரனை விட்டுப் பிரிந்து தனது தயாருடன் இணையப் போகிறார் என்ற செய்தி முந்தைய நாள் இரவே வெளியில் கசிந்திருந்தது. மனோகரனைத் தொடர்வு கொண்ட போது கடந்த வாரத்திலேயே இருவரும் பிரிக்கப்பட்டுவிட்டார்கள் என்பது தெரிய வந்தது.

பிரேமாவின் சார்பாக ஓர் வழக்குரைஞர் அணியும் மனோகரன் சார்பாக மற்றோர் அணியும் நீதிமன்றத்தில் திரண்டு நின்றது.

மனோகரன் பிரேமாவை நோக்கி பரிதவிப்புப் பார்வையை வீசி இறைஞ்சி கொண்டிருந்தார். ஆனால் மனோகரனின் பார்வையைக் கூடத் தவிர்த்த பிரேமா தலை கவிழ்ந்து விசும்பி அழுதபடியே இருந்தது ஓர் சோக சித்திரம் ஒரு மகத்தான காதலின் துயரம் மிக்க நிமிடங்கள் இவை.

நீதிமன்றத்தில் கேட்ட கேள்விக்கு ‘என்னை யாரும் கடத்தி வரவில்லை’ இப்போதைய மனநிலையில் அம்மாவுடன் இருப்பதை என் மனம் விரும்புகிறது. காதல், திருமணம், மனோகரன் குறித்தும் பிறகு முடிவு எடுக்கிறேன் என்று உடைந்த குரலில் நீதிபதியிடம் தெரிவித்தார் பிரேமா.

அவர் அம்மாவுடன் செல்ல நீதிமன்றம் அனுமதித்த போதிலும் நீதிமன்ற வளாகத்தில் வேறு யாருடனும் பேச அனுமதிக்கப்படவில்லை. மனோகரன் கட்டிய மாங்கல்யமும் பிரேமா கழுத்தில் இல்லை.

பிரேமா கரைந்த கதை

முதல் நான்கு மாதங்கள் பாண்டிச்சேரியிலும் சென்னையிலுமாக

மாறி மாறி வாழ்ந்தனர் இந்தக் காதலர்கள். பிரேமாவுடன் அவரது தாயார் மல்லிகா தொடர்ந்து தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் பிரேமாவின் தாயார் மல்லிகா மனோகரனின் பெற்றோரிடம் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். அப்போதெல்லாம் தான் ஒரு சூழ்நிலைக்கைதி என்றும் யாருக்கும் தெரியாமல் தான் அம்மா சொல்லும் போதெல்லாம் பிரேமா கண்ணிர் விட்டு அழுதிருக்கிறார். இதனிடையில் தான் கருவுற்றிருந்த நல்ல சேதியை அம்மாவிடம் பிரேமா சொல்ல மகளை வாழ்த்தியதோடு உடல் நலம் குறித்த அறிவுரைகளையும் மகளுக்கு தந்திருக்கிறார். ஆனால் அப்போதும் பிரேமாவால் மனோகரனை விட்டு எளிதில் பிரிய முடியாத அளவுக்கு அன்புப் பிணைப்பு இருந்துள்ளது.

பிரேமா மனோகரன் இணை சென்னையில் இருந்து விக்கிரம சதுர்வேதி மங்கலத்துக்கு குடியேறிய உடனே மீண்டும் பிரச்சனைகள் தொடங்கி விட்டன.

-அம்மாஞ் நான் பிரேமா பேசுறன்ஞ்-

-யம்மாடி.. எப்டிமா இருக்க.. நல்லாயிருக்கியா.. மாப்ள நல்லாயிருக்காரா நல்லா சாப்புடறயா.. வேளாவேளைக்கு சாப்புடனும்..-

டாக்டர் கிட்ட ரெகுலரா பொறியாஞ்

-அதெல்லாம் போறன்மா. நீ எப்படி இருக்க ஒடம்பு நல்லாயிருக்கா..-

-ஏதோ இருக்கம்மா.. உங்கப்பா போனதிலிருந்து மனசும் சரியில்ல. நீ பிரிந்தது பெரிய வேதனடியம்மா.. ஏம்மா.. உள்ளூர்லதான இருக்க உன்னை பாக்கனும் போல இருக்கும்மா..-

-இப்போதைக்கு வேணாம்மா.. இந்த களேபரம்லாம் முடியட்டும் நாங்க ரெண்டு பேரும் இங்க வந்திருக்கிறது ரொம்ப பேருக்கு தெரியாது.

-எங்கேயாவது வெளிய கோயில் கடைன்னு சொல்லிட்டு வாயேன். ஒரு அஞ்சு நிமிசம் ஒன்னோட மொகத்த பாத்துடறன் நான் பெத்த மகளேஞ்-

-சரிம்மாஞ் அவருகிட்ட கன்சல்ட் பண்ணிட்டு சொல்றன். வச்சிடறேன்.-

-பிரேமா.. நான் தான்ம்மா அம்மா பேசுறன் ஞ் ஒரு முக்கியமான தபால் வந்திருக்கும்மா ஒங்க அப்பாவோட வேலைய எனக்கு வாங்குறதுக்கு வாரிசு சர்டிபிகேட்ல எல்லாம் உன்னோட கையெழுத்து வேணும்மா தாயி.. அதனால தம்பிகிட்ட சொல்லிட்டு எங்கயாவது வெளிய வாம்மா..-

-எங்கம்மா வர்ரது.. வெளிய நாங்க வந்தாலே யார் யாரோ அடையாளம் தெரியாதவங்க எங்கள ஃபாலோ பண்ணிகிட்டு வர்ராங்கம்மா.. நீ வேணும்னா அவர்கிட்ட கேட்டுப்பாரேன்.-

-தம்பி பக்கத்துல தான் இருக்காப்புலயாஞ்-

-ஆமாம்மா ஏங்க உங்க அத்தை பேசணுமாம்.-

-வணக்கங்க அத்த.. எப்டி இருக்கீங்க.. நல்லா இருக்கீங்களா..?

-ஏதோ இருக்கிறேன் தம்பி.. எம்பொண்ணை பத்திரமா பாத்துக்க ராசா.. இப்போ அவ ஈருசுரு பொண்ணு.. சரிப்பா.. ஒரு பத்து நிமிஷம் பழைய பஸ் ஸ்டான்ட் பக்கத்துல வாலீஸ்வரர் கோயிலுக்கு பிரேமாவை கூட்டுட்டு வர்ரியா தம்பி-

-சரிங்க அத்த நாங்க கௌம்பறப்ப மறுபடியும் போன் பன்றோம். கோயில்ல பாக்கலாம்..

பிரேமாவின் தாயார் எங்கு சென்றாலும் அவரைக் கண்காணிக்க நான்கு கண்களுக்கு பணிக்கபட்டு இருந்தது.

வாலீஸ்வரர் கோயில் பிரகாரத்தில் அம்மா மகள் கட்டிப்பிடித்து கண்ணிர் மல்க உரையாடிய காட்சியை உரியவர்களுக்கு ‘போட்டு கொடுக்க’ சாதி அரசியல் தன் மாயக் கரங்களால் மகிமையை ஆரம்பித்தது.

அம்மாவை விட்டே மகளிடம் -தான் சீரியஸாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சொல்லி வரவைத்து அம்மாவிடமே தங்க வைத்து கொண்ட சூழ்ச்சியும் நடந்தது

.

-எங்கள் காதலை இழக்க மாட்டோம்! -

வேதனையிலும் நம்பிக்கையோடு மனோகரன் வாழ்க்கையிலும் வார்த்தைகளிலும் சிந்தனைகளிலும் வலிமையும் வேதனையையும் மட்டுமே சுமந்து நிற்கும் மனோகரனிடம் நமது செய்தியாளர் உரையாடியதிலிருந்து:

-சட்டபூர்வமான திருமண வயதை எட்டும் முன்னரே பிரேமாவை ஏன் அவசரமாக அழைத்துச் சென்றீர்கள்?

-என்கிட்ட முதல்முறை பிரேமா தன்னோடக் காதலைச் சொன்னப்பவே என்னோட சாதி குடும்பம் பத்தியெல்லாம் தெளிவாக சொல்லிட்டேன். -அதெல்லாம் எனக்கு தெரியும். நான் உன் மனசத்தான் காதலிக்கிறேன்’னு பிரேமா உறுதியா இருந்தாள்.

அப்புறம் ஒன்றரை வரு‘மா எங்க காதல் மேலும் தீவிரமடைந்தது போன வருசம்தான் எங்க காதல் அவங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு தெரிஞ்சது அப்போ நான் போலீஸ் வேலைக்கானத் தேர்ச்சில் கலந்து கொண்டிருந்தேன். உடல் தேர்வு மட்டும் மீதமிருந்தது. இதற்கிடையில் பிரேமாவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க.. வர்ர தையில கல்யாணம்னு உறுதியானதும் பிரேமா அதை என்கிட்ட சொல்லி அழுதாங்க.

-நான் ஒண்ணு நெனக்கிறேன்

நீ ஒண்ணு நெனக்கிற

நம்மள சுத்தி இருக்கிறவங்க வேற ஒன்னு நினைக்கிறாங்க.-

என்று சொல்லி சொல்லி அழுதா..இன்னும் நான்தான் நிறைய இருக்கே அதுவரைக்கும் பொறுமையா இருப்போம்னு சொன்னேன். ஆனா அடுத்த நாட்களிலேயே போன்ல என்னக் கூப்பிட்டு என்னை இப்பவே அழைச்சிட்டு போடா.. நீ இல்லாம என்னால வாழ முடியாதுடாஞ் எதையாவது காரணம் சொல்லி.. ன்னு கதறி அழுதா.. நண்பர்கள் கூட பேசிட்டு பிரேமாவை மயிலத்துக்கு வரவைத்து கோயில்ல திருமணம் செஞ்சி கிட்டோம்.

-பிறகு என்ன நடந்தது?

போன ஆகஸ்ட் 25ம் தேதி கல்யாணம் பண்ணிக்கிட்டோம் பாண்டில எங்க மாமா வீட்ல தங்கி இருந்தோம். அங்கே பிரேமாவைப் பார்க்க அவங்க அம்மா அவங்களோட பிரேமாவோட சொந்தக்காரங்க சில பேரும் வந்திருந்தாங்கஞ் பிரேமாவின் அம்மா பிரேமா கால்ல விழுந்து மடிப்பிச்சை கேக்குறன் குல மானத்தை காப்பாத்து என்னோட திரும்ப வந்துடு-ன்னு அழுதாங்க..

பிரேமா என் முகத்தை பார்த்தாள்! நான் பிரேமாவை சுயமாக முடிவெடுக்கும்படி சொன்னேன். பிரேமா அவங்களோட போக விரும்பவில்லை. ஒங்களுக்கு ஒங்க சாதியும் கவுரவம் தான் முக்கியமா தெரியுது என் மனசு புரியல..நான் உங்க கூட வந்தா கும்பல் கூடி என்னயக் கொன்னுப்போட்டாலும் போடுவீங்க.. ன்னு அவங்களோட போக மறுத்துட்டாங்க! அதற்கப்புறம் தான் ஊர் நெருக்குதலால் பிரேமா அப்பா மருந்து குடிச்சது! காலனில கலவரம் வந்தது அன்னைலயிருந்து நாங்க ஓடிக்கிட்டே இருக்கோம். (அழுகிறார்)

-நிலைமை உங்களுக்கு சாதகமாய் இல்லை என்கிற சூழலில் மீண்டும் ஏன் விக்கிரமதுர்வேதி மங்கலத்துக்கே வந்தீர்கள்?

-பாண்டிச்சேரியிலும் சென்னையிலும் நாங்க ஓர் நாளும் நிம்மதியான வாழ்க்கைய அனுபவிக்கவில்லை இடையில் பிரேமா கருவுற்றார். ஒரு குழந்தை பிறந்தா எல்லாப்பிரச்சனைகளும் சரியாகிவிடும் ன்னு நெனச்சோம்.! ஆனா இடைவிடாத பயணங்கள் அலைச்சலனாலயும் அதிகப்படியான மனபிரச்சனையாலும் கரு கலைஞ்சு போச்சு!

ஆனா! இவ்ளோ கஷ்டத்துக்கும் வலி வேதனைக்கு நடுவுலையும் எங்க ரெண்டு பேருக்கும் இடையில் சண்டையோ சலிப்போ வரல..இந்தக் காதலுக்காக நிறைய இழந்துட்டோம்ஞ் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தக் காதல இழக்கக் கூடாதுன்னு உறுதியா இருந்தோம் திட்டம்போட்டு சில பேரு பிரேமா அம்மா மூலமாக என் கிட்ட இருந்து என்னோட பிரேமாவை பிரிச்சுட்டாங்க..

-மீண்டும் உங்களிடம் பிரேமா வருவார் என்ற நம்பிக்கை உள்ளதா?

எங்க காதல் ஜெயிக்கணும்னு பிரேமா ஆசைப்பட்டா..நிச்சயமா என்னோட பிரேமா திரும்பிவருவா

நானும் பிரேமாவுக்காக எப்போதும் காத்திருப்பேன்.! இந்தக் கவிதை என்னோட பிரேமாவுக்கே நான் எழுதினது கதைப்படிச்சா எங்கிருந்தாலும் பறந்து வந்துடுவா..

நான் உனக்கு

என்ன எழுத வேண்டும் என்று

இதுவரையில் தெரியவில்லை

ஆனால் என்ன எழுதக் கூடாதெனத் தெரிகிறது.

நான் உன்னிடம்

என்ன பேச வேண்டும்

என்று தெரியவில்லை

ஆனால் என்ன பேசக்கூடாது என தெரிகிறது.

அதனால் தான் நீ நேரில் இருக்கையில்

பேசாமலும்

நீ தூரப்போய் விட்ட பிறகு

எழுதாமலும் இருக்கிறேன்.

கோப்பு - 3

காதல் திருமணம் செய்த மனோகரன் மர்ம மரணம். விக்கிரமசதுர்வேதி மங்கலத்தில் பதற்றம் 144 தடை உத்தரவு அமல்.

காதல் திருமணம் செய்த வாலிபர் மனோகரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இவர் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதால் விரிவான விசாரணை நடத்த வேண்டும் உன உறவினர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். இந்த சம்பவத்தால் விக்கிரம சதுர்வேதி மங்கலத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு 144 தடையுத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனோகரன் மரணம்

தற்கொலையா? கொலையா..? மர்மம் நீடிப்பு!

சென்னையிலிருந்து நேற்று திரும்பிய மனோகரன் விக்கிரம சதுர்வேதி மங்கலத்திற்கு வந்து தனது தந்தை பணிபுரியும் அலுவலகத்துக்கு வந்து செலவுக்கு பணம் கேட்டதாகவும் அவரது தந்தை தனது ஏ டி எம் அட்டையை கொடுத்தனுப்பியதாகவும் தெரிகிறது.

ஆனால் மாலை வரை மனோகரன் வீடு திரும்பவில்லை திருச்சி ரயில்பாதையில் ஓர் இளைஞர் இறந்து கிடப்பதாக வந்த செய்தி அறிந்து உறவினர் ஓடிச்சென்று பார்க்கையில் அது மனோகரனின் சடலம் என உறுதிசெய்யப்பட்டது. ரயில் பாதையிலிருந்து சற்று தூரத்தில் அவரது பைக் பை மற்றும் புத்தகங்கள் மனோகரனின் மரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது.

கோப்பு - 4

(ஈன்ற மகனவன் இறந்து போனான்:இருந்திருந்தால் அவன் எப்படி இருப்பான்?இழந்த சோகத்தின் இலக்கிய வடிவம்: இதில்அவலம் மிகுந்திருக்கும்: அழுகை பிறந்து விடும்! )

*

பச்ச மணலள்ளி நா(ன்)

பஸ்ஸூ போவ ரோட்டு போட்டேன்

எம்பஸ்ஸ நிறுத்துவடா

நாபெத்த ராஜா அம்மாளுக்குப்

பால்கட போடுவடா..

நா(ன்) காஞ்ச மணலள்ளி நா(ன்)

காருபோவ ரோட்டு போட்டேன்

ஏங்கார நிறுத்துவடா

நா பெத்த ராஜா அம்மாளுக்குக்

காப்பிகட போடுவடா..

நா(ன்) பத்தப் பவுனு வாங்கி

நாபெத்த ராஜா ஒனக்குப்

பவளம் மடிச்சேண்டா

பழனிமேல சொல்லே(ன்) பஞ்சாங்கத்த

ஒனக்குப் பாத்து சொன்னா தீராதுன்னா

இந்தப் பாவி தலயெழுத்துப்

பரமனிட்ட கட்டளன்னாஞ்

நா எட்டுப் பவுனு வாங்கி

நாபெத்த கோயிலவர் ஒனக்கு

எணய மடிச்சேண்டா

ஏழுமலை ஜோசியரு

எடுத்துச் சொல்லே(ன்) பஞ்சாங்கத்த

எனக்கு எடுத்துச் சொன்னா தீராதுன்னா

என்னோட தலையெழுத்து

ஈசனோட கட்டளன்னா

நா காசில குச்சி நட்டு

நா பெத்த ராஜா

நா கண்ணாலம் வக்கும் கொள்ளி

ஒனக்குக் காசி கிடுகடுங்கும்

கல்புரமும் நின்னெரியும்.

நா செஞ்சில குச்சி நட்டு

சீசவுக்கே வில் வளச்சேன்

எனக்குச் சீராளன் வக்கும் கொள்ளி

செஞ்சி கிடு கிடுங்கும்

சீரவம் போல் நின்னெரியும்.

எனக்குக் காசி நதியில

நா பெத்த ராஜா

கந்தரோட பாதத்தில்

நா கையேந்திப் பெத்தேண்டா பத்து மாசம்

எங் கண்ணுக்கு முன்னால

கலகப்பட்டுப் போய்ட்டியடா

எனக்குச் செஞ்சி நதியில்

சிவனுடைய பாதத்தில்

நா ஜெபஞ் சொல்லிப் பெத்தேனே

நா பெத்த ராஜா

எங் கண்ணுக்கு முன்னால

நீ சீரழிஞ்சி நிக்கறியே

மலய சுத்திக் கல்பொறுக்கி

நா பெத்த ராஜா உனக்கு நான்

மண்டபமும் உண்டு பண்ணேன்

ஒன்னோட மரத்துல பழுத்த பழம்

நா பெத்த ராஜா

ஒன்னோட மக்க தின்ன சொந்தமில்ல..

நா(ன்) கொளத்த சுத்திக் கல்பொறுக்கி

ஒனக்குக் கோபுரம் உண்டு பண்ணேன்

ஒன்னோட கொம்பில் பழுத்த பழம்

நா பெத்த ராஜா

ஒன்னோட கொழந்த தின்ன சொந்தமில்ல..

ஒன்னோட கொடிய தலயெழுத்து

நா பெத்த ராஜா

நா கொளத்தடிலே குந்தி யழுதேன்

ஒன்னோட கொடியமுடி சிக்குபட்டா

நா பெத்த ராஜா

நீ பொறந்த கோட்டயில ஆருமில்ல

எனக்கு மங்கத் தலயெழுத்து

நா பெத்த ராஜா

மரத்தடியில குந்தியழுதே(ன்)

உன்னோட மங்கமுடி சிக்குபட்டா

நா பெத்த ராஜா

மயிலு பொறா கூடுகட்டும்..

மயிலு பொறா கூடழிக்க

நா பெத்த ராஜா

நீ பொறந்த மதுரயில யாருமில்லை..

கோப்பு - 5

தனி நீதிபதி விசாரிக்க வேண்டும்.தொல். திருமா கோரிக்கை

விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது. வி.ச.மங்கலம் மனோகரனின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியையும் தாங்கவொண்ணா வேதனையையும் அளிக்கிறது. அவரது இறப்பில் மர்மம் உள்ளது அவரது இடதுபுற தலையில் அடிப்பட்டு மூளை வெளியே வந்துள்ளது.. உடலில் வேறெங்கும் காயமில்லை தற்கொலை செய்யும் அளவுக்கு மனவலிமை அற்றவர் அல்ல அவர் பணியில் இருக்கும் நீதிபதி ஒருவரின் தலைமையில் விசா ரணை ஆணையை அமைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

கோப்பு - 6

மனோகரனின் மரணம்:உண்மையை சரியான முறையில் போலீசார் விசாரிக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை

“தமிழன மக்களிடையே மனோகரனின் மரணச்செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் ஒருங்கே உருவாக்கியுள்ளது. இது மனோகரன் பிரேமா இருவரின் சாதி மறுப்புத் திருமணத்தை ஒட்டி நடந்துள்ள தொடர்பலியாகும்.

ஏற்கனவே பிரேமாவின் தந்தை உயிரிழந்ததும் அதைத் தொடர்ந்து வி.காலனி மக்கள் மேல நிகழ்ந்த கொடூரமானத் தாக்குதல்- தொடர்ச்சியாக 12 பேர் மனித உயிர்கள் சாதியின் பெயரால் படுகொலை செய்யப்பட்டதும் தொடர்ச்சியான வன்முறைகளும் ஆறாரணமாகப் பதிந்துள்ளன. அந்த வடு ஆறும் முன்னரே மனோகரனின் மரணம் நிகழ்ந்து விட்டது. சமூகநீதி பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணத்துக்கு இவ்வளவு பெரிய விலை கொடுக்க வேண்டும் என்கிற அவலநிலை மனோகரனின் மரணத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.

சாதி மறுப்புக் காதல் அல்லது திருமணம் செய்யும் இளம் தம்பதிகள் கொலை செய்யப்படுவது கௌரவக் கொலைகள் என்ற பெயரில் நாட்டின் பல பகுதிகளில் நடந்து வரும் கொடுமை தமிழகமும் அதற்கு விதி விலக்கல்ல. எனவே.. பிரிந்து போவதாக பிரேமா எடுத்த முடிவு சாதிய சமூக நிர்பந்தத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டதாகவே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலில் மனோகரனின் அகால மரணம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அரசும் காவல்துறையும் இதுகுறித்து சரியான முறையில் விசாரனை மேற்கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும்.

சாதிய ஒடுக்குமுறை சாதி ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள முற்போக்கு ஜனநாயக சக்தியின் தங்கள் வலுவானக் குரலை எழுப்பவேண்டும்.”

-

கோப்பு - 7

மனோகரனின் நாட்குறிப்பிலிருந்து சில கவிதைகள்

.

1.என்ன ஒரு தனிமை கொடுந்தனிமை

வட்டங்கள் விலக தனிப்புள்ளியாய்

இலைகளோடு மலர்களும் உதிரத் தனிமரமாய்

ஓளிர்ந்து உருகும் மெழுகாய்

என்ன ஒரு தனிமை கொடுந்தனிமை

2.கழியும் ராக்காலம் தன்னந்தனியே

சோறு சொந்தம் பணி படிப்பு விலக்கி

மூளையை ஆக்கிரமிக்கும் மோகப்படை

ஓங்காரமிட்டு அகோரப்பசியில்

அலையும் உள் மிருகம்

ஸ்கலிதம் குலைக்கும் காமக்கனவுகளில்

நிச்சயித்த பெண் தொட நீண்ட நாளிருக்கக்

கழியும் ராக்காலம் தன்னந்தனியே..

3.கல்லடி பட்ட மைக்காவாய்

நொறுங்கி போயிருக்கிறது

மனசு

வார்த்தைகளில் இவ்வளவிற்கு

வலியையும் வலிமையும்

வைத்து வீச முடியுமா?

நேர்க் கோடுகளாய் தொடங்கி

வளைக் கோடுகளாய் மாறி

வரை கோடுகளாய்த்

திசை பலவும் ஊடுருவி உட்சென்று

கிளறி ரணப்படுத்தும்

விவாதங்கள்

எதிரெதிர் முகங்களின்

பாராத விழிகள்

ஊமையாய் மொழிகள்

அமைதியும் சாந்தமும் தேடி

எட்டுத்திக்கும் ஏங்கித்தவிக்கும்

மென் மனம்.

6.-யுத்தகாண்டம்

- மிகவும் துயரத்திலிருக்கிறேன் தோழா.. ஒரு காதல் ஜோடி காதலின் பெயரால் இத்தனை வேதனைப்படுவதா

- எங்களுக்கு பழகிவிட்டது மாதவி! தமிழகத்தில் சாதியின் பெயரால் நிகழ்ந்த வன்முறைகளும் கலவரங்களும் ஓர் புறமெனில் சாதியைக் காப்பாற்ற சாதிக் கவுரவத்தை மீட்க உயிர் கொடுத்த இளந்தளிர்கள் ஏராளம்! மனோகரன் பிரேமா விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது!

ஆகவே ஊடகங்களின் பார்வையில் உலகுக்கு தெரிய வந்தது. இல்லையென்றால் பிரேமாவை புதைத்த இடத்திலும் புல் முளைத் திருக்கும்.

- சரி நண்பா

- உண்மை அறியும் குழுவின அறிக்கையின் பிரதியொன்றைத் தருகிறாயா.

ஆகட்டும் பார்க்கலாம்..

***

மாதவி இந்த உண்மை அறியும் குழு அறிக்கையை வாசி.! இந்தக் குழுவுல

எழுத்தாளர் இதயவேந்தன்,பேராசிரியர் அரங்கமல்லிகா,கவிஞர் கம்பீரன்,கவிஞர் கவின்மலர்,வழக்கறிஞர் டேவிட்,மனித உரிமை போராளி கல்யாணி இவங்க ஆறுபேரும் சம்பவம் நடந்த வி.காலனி மட்டுமல்லாமல் வி.மருதூர் பகுதிக்கும் போய் பல பேரை பாத்து பேசியிருக்காங்க..

- அந்த அறிக்கைய ஒனக்கு ஏதாவது உபயோகப்படுமா பாரு..

- கொடு நண்பா..

*****

7.உண்மை அறியும் குழு முன் சாட்சிகள் வாக்குமூலம்

1.            கலவரம் நிகழ்ந்த நாளான்று மாலையில் கோட்டாட்சி தலைவர் வி.ச.மங்கலம் நகரை சுற்றி வரும்போது காலனிக்கு அருகிலுள்ள அண்ணாசிலை பக்கத்தில் சைக்கிள் ரிக்க்ஷாக்களும் ஆட்டோ ரிக்க்ஷாக்களும் எரிந்து கொண்டிருப்பதைத தாம் பார்த்ததாக காவல் நிலையத்தில் தகவல் தந்தார். அதே நேரத்தில் பாபு என்கிற ஆட்டோ ரிக்க்ஷாக்காரரும் கிருஷ்ணன் என்கிற ரிக்க்ஷாக்காரரும் தம்மை மருதூர் பகுதியைச் சார்ந்த சிலர் தலையில் அடித்துக் காயப்படுத்தி தமது வாகனங்களை சேதப்படுத்தி கொளுத்தியதாக புகார் அளித்தனர்.

                அதே நேரத்தில் வி.காலனியில் நந்தனார்த் தெருவிலுள்ள வீடுகள் மருதூர் மரவெட்டி சமூகத்தினரால் தாக்கப்பட்டதென்றும் கொளுத்தப்பட்டதென்றும் காவல் துறைக்கு புகார் அளிக்கப் பட்டது.

2.            மேற்படி நாளில் மாலையில் மரவெட்டி சமூகத்தினர் சிலர் பயங்கர ஆயுதங்களை எடுத்துக் கொண்டும் தீப்பந்தங்களை ஏந்திக்கொண்டும் வி.காலனி சமூகத்தினருக்கு எதிராக கோஷம் போட்டுக்கொண்டு வி.காலனி தெருக்களுக்குள் நுழைந்து வீடுகளுக்கு தீ வைத்தனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் வீடுகளுக்கு தீ வைத்தவர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால் காவல்துறையின் எச்சரிக்கையை மீறி கலவரக்காரர்கள் அட்டூழியம் செய்ததால் தடியடிப் பிரயோகம் நடத்தி கலவரக்காரர்களை விரட்டினர். கலவரக்காரர்கள் காலினிக்குள் தீயணைப்பு வண்டிகளையும் அனுமதிக்கவில்லை. தங்களை மீறி சென்றால் தீயணைப்பு வண்டிகளையும் கொளுத்தி விடுவதாக பயமுறுத்தினர்.

3.            விக்கரம சதுர்வேதி மங்கலம் காவல்துறை அதிகாரிகளும் வருவாய்த்துறை அதிகாரிகளும் கலவரம் செய்யும் மரவெட்டி கூட்டத்தை கலைத்து கொண்டிருக்கும் போது மருதூர் பகுதியில் முத்து மாந்தோப்பு ஏரியாவைச் சேர்ந்த ஒரு சிலர் சென்று வி.காலனி ஆட்கள் வீடுகளை கொளுத்த வருகிறார்கள் என்கிற பொய் வதந்தியைப் பரப்பினார்கள் சிலர் தங்கள் பகுதி வழியாக சென்ற வெளியூரைச் சேர்ந்த பத்து மாடுவெட்டி சமூகத்தினரான கூலியாட்களைப் பிடித்து மரத்தில் கட்டி ஈவு இரக்கமின்றி காட்டு மிராண்டித்தனமாக தாக்கினார். அப்படி பிடித்து வைக்கப்பட்ட பத்து நபர்களில் ஒரு நபர் தப்பி ஓடிவிட்டார். அந்த ஒன்பது நபர்களையும் மிருகத்தனமாகக் கொன்று ஆறு நபர்களின் சடலங்களை மருதூர் ஏரியிலும் மற்ற மூன்று நபர்களின் சடலங்களை இரயில்வே பாலத்தின் கீழும் போட்டுச் சென்றனர்.

4.            தனது கண்ணெதிரிலேயே தமது வீடு உள்ளிட்ட உடைமைகள் நாசமாக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியில் உடல்நலம் பாதிப்படைந்த வி.காலனிப் பகுதியைச்சேர்ந்த தங்கம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

5.            பைக் வேன் டெம்பொ மினிலாரியில் சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் திரண்டுள்ளனர். பயங்கரமான ஆயுதங்களுடன் வி.காலனிக்குள் வெறியோடு நுழைந்தனர்.

6.            கடப்பாறை சம்மட்டி கோடாரி பெட்ரோல் கேன் பெட்ரோல் பாம் பாட்டில்களுடன் வெறிகூச்சலிட்டு புகுந்தக்கூட்டம் ஒவ்வொரு வீடாகச் சென்று கதவினை உடைத்து உள்ளே புகுந்து பீரோக்களை உடைத்து நகைகளையும் பணத்தினையும் கொள்ளையடித்துள்ளனர். துணிமணிகள் புத்தகங்கள் குடும்ப அட்டைகள் சான்றிதழ்கள் நிலப்பத்திரங்கள் போன்ற வாழ்வியல் ஆதாரங்களை அழித்ததோடு மட்டுமல்லாமல் மெத்தை சோபா போன்றவற்றைக் கிழித்தெறிந்து மொத்தமாக எரித்துள்ளனர். கேஸ் சிலிண்டர்களைக் கழற்றீ தாங்கள் கொண்டு வந்த வாகனங்களில் ஏற்றியுள்ளனர். தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோலை பெயிண்ட அடிக்கும் ஸ்ப்ரேயரில் நிரப்பி வீடுகள் முழுவதும் பீய்ச்சி அடித்துள்ளனர். பிறகு வெளியிலிருந்து பெட்ரோல் குண்டுகளை வீசித் தீக்கிரையாக்கியுள்ளனர்.

7.            ஓட்டு வீடுகளின் மேலே ஏறி பெரியக் கல்லால் அவற்றிலான உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். மின்சார மற்றும் தண்ணிர் பைப் லைன்களையும் மீட்டர் பெட்டிகளையும் அடித்து நொறுக்கி யுள்ளனர்.

8.            வீடுகளுக்கு வெளியே நின்றிருந்த சைக்கிள் மோட்டார் சைக்கிள் போன்ற இரு சக்கர வாகனங்களைத் தீயிட்டு கொளுத்திய வன்முறை கும்பல் உடைக்க முடியாத பீரோக்களையும் ஆடுகளையும் தங்களது வாகனங்களில் ஏற்றி சென்றுள்ளனர்.

9.            காலனித் தெருவிலுள்ள மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 4 கிலோ தங்கம் மற்றும் 32 கிலோ வெள்ளி போன்ற விலை உயர்ந்த நகைகளை அவை பாதுகாக்கப்பட்டிருந்த பெட்டகத்தை உடைத்துக் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

10.          வி.காலனிப் பகுதியில் சற்றேறக்குறைய 350க்கும் மேற்பட்ட வீடுகள் நொறுக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளாயின. 250க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சில நான்கு சக்கர வாகனங்கள் உருத் தெரியாமல் எரித்துச் சிதைக்கப் பட்டன.

11.          இந்த கொலைவெறித் தாக்குதல் ஆண்கள் பணிக்கு சென்றிருக்கும் மாலை வேளையில் திட்டமிட்டு தொடங்கப்பட்டதால் காலனிக்கு ஆண்கள் பெருமளவில் இல்லை. பெண்களோ தங்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு அக்கம் பக்கம் பகுதிகளான அலமேலுபுரம் வண்டிமேடு பகுதியில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள்.

12.          அழிவு வேலையைக் கூட நுணுக்கமாகவும் வக்கிரமாகவும் நிதானமாகவும் செய்து முடித்திருக்கிறார்கள். சாதி வெறியர்கள் தரைக்கு டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடுகளில் அவை தூள் தூளாக நொறுக்கப்பட்டிருக்கின்றன. பெட்டிக்கடை சவுண்டு சர்வீஸ் மரச்சாமான் வியாபாரம் பாத்திர வியாபாரம் போன்ற தொழில் செய்வோரின் ஆதாராங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கின்றன.

13.          மகளின் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த நகைகள் பாத்திரங்களை வன்முறைக் கும்பல் கொள்ளையடித்து சென்றதை வெறுமனே பார்த்து மனநிலைப் பாதிக்கப்பட்டார் ஒருவர்.

14.          கலவரத்தின் மருதூர் தெரு ஒன்றின் வழியாகச் சென்று கொண்டிருந்த செல்வமேரி, முத்தம்மாள் என்கிற இரண்டு மாடுவெட்டி சமூகத்துப் பெண்களை மருதூர் ஆட்கள் பிடித்து வைத்து ஆடைகளை உருவி அம்மணமாக்கி மானபங்கம் படுத்தியுள்ளனர்.

15.          கலவரம் நடந்ததன் மறுநாள் பகல் சுமார் 11 மணிக்கு மருதூர் கிராமத்தின் கர்ணம் (கணக்குப்பிள்ளை) தாலுக்கா அலுவலகம் சென்று மருதூர் ஏரியில் 9 சடலங்களும் இருப்பதாகவும் புகார் கொடுத்தார். மேல்ப்பெரும்பாக்கம் பகுதியில் 3 சடலங்கள் இருப்பதாகவும் தகவல் கிடைத்து போலீஸ் அதிகாரிகள் அவ்விடங்களுக்கு சென்று 12 சடலங்களை எடுத்துக்கொண்டு பிரேதப் பரிசோதனைக்காக விக்கரம சதுர்வேதி மங்கலம் பெரிய ஆஸ்பத்திரி எனப்படும் மாவட்ட மருத்துவமனைக்கு வந்தனர்.

16.          இறந்தவர்கள் அனைவருமே மாடுவெட்டி சமூகத்தை சார்ந்தவர்கள் என்று உறுதியானது அந்தப்பட்டியல் பின்வருமாறு.

1. மணிகுண்டு             ஆ/45

2. ஆறுமுகம்    ஆ/36

3. செல்லமுத்து            ஆ/48

4. வீரப்பன்      ஆ/44

5. பெருமாள்    ஆ/49

6. காத்தவராயன்         ஆ/40

7. சக்தி             ஆ/12

8. ரங்கசாமி     ஆ/37

9. சேகர்                       ஆ/34

 10. மண்ணாங்கட்டிஆ/55

11. இருசம்மாள்           பெ/38

12. திருமால்     ஆ/38

17. இது ஒரு காதல் திருமணம் தோற்றுவித்த கோபத்தில் வெடித்த வன்முறை அல்ல. நீண்டகாலமாக கனன்று கொண்டிருந்த சாதி வெறி. வி.காலனியைச் சார்ந்தவர்கள் கடினமாக உழைத்து முன்னேறி சம்பாதித்த பணத்தில் ஓரளவு வசதியாக வாழ்வதும் காலனி பிள்ளைகள் பொறுப்புணர்ந்து படித்து அரசுப்பணியில் அமர்வதும் தங்களிடம் கை கட்டி நின்றவர்கள் இன்றை சூழலில் தங்களைத் தாண்டி வளர்ந்து சுயமாக அவர்கள் எட்டியிருந்த வாழ்க்கைதரம்தான் சாதிவெறியர்களின் ஆத்திரத்தில் எண்ணெய் வார்த்திருக்கிறது.

18.          காலையில் தன்னிடமிருந்து பைக்கை வாங்கி ஓட்டியவன் மாலையில் அதனை எரித்திருப்பதாகவும் ஹோட்டல்களில் நண்பர்களாக ஒன்றாக அமர்ந்து உணவுண்டவர்கள் தான் தம் வீடுகளைக் குறிபார்த்து எரித்திருப்பதாகவும் கூறுகின்றனர் வி.காலனி இளைஞர்கள்.

19.          காலனி மக்களுடைய வாழ்க்கைத்தன்மை சற்று மேம்பட்டிருப்பதைப் பார்க்க சகிக்காமலும் வயிறெரிந்து கொண்டிருந்த ஆதிக்க சாதிவெறி தாக்குதல் நடத்துவதற்கு ஒரு தருணத்துக்காக காத்திருந்ததையே இந்த வெறியாட்டம் காட்டுகிறது. கடுமையாக உழைத்து சேர்த்த பணத்தில் அம்மக்கள் தங்கள் தலைமுறையிலேயே முதன்முறையாக எட்டியிருந்த பல வசதிகளை ஒவ்வொன்றாக தேடிக்கண்டு பிடித்து அழித்திருக்கின்றனர். ஓலைக்குடிசை அலுமினியப்பாத்திரம் சார்வு வாழ்கை மீளாக்கடன் என்கிற பழைய துர்பாக்கிய நிலைக்கு காலனி மக்களைத் தள்ள வேண்டும் என்கிற வன் மத்தை மனதில் கொண்டு தான் இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

•             மொத்தத்தில் 12 மனித உயிர்கள்

•             காலனி குடியிருப்புகள் கொள்ளை சூறையாடல் தீவைப்பு 445 வீடுகள் நாசம்

•             200க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிப்பு

•             ரூ. 7 கோடிக்கும் மேலான உடமைகள் சேதம்

8.வால்துண்டு:

-மாதவி கிடைத்த விவரங்களிலிருந்து இந்த சம்பவத்தை புரிந்து கொள்கிறாய்

தோழி உனது முடிவுகளை ஆமோதிக்கிறேன். ஆனால் நீ வேறு ஒரு ஊருக்கு செல்லவேண்டிய நிர்பந்தம் வந்துவிட்டது..

-என்ன சொல்கிறாய் நண்பா..!

இதோ இந்த செய்தியைப் படி.

-“என்ஜீனியர் கோகுல்ராஜ் திடீர் மரணம்! கொலையா போலீஸ் விசாரணை! ”

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

- அன்பாதவன்

Pin It