இலங்கை அல்லது இந்திய மரபார்ந்த மார்க்சியர்களின் விடுதலைப் புலிகளின் மீதான ஓரு பிரதானமான குற்றச்சாட்டு அவர்கள் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் என்பது. அதனோடு அவர்கள் உருவாக்க விரும்பிய சமூகம் முதலாளித்துவ சந்தைப் பொருளாதார சமூகம் என்பது. யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம் மக்களின் வெளியேற்றம் மற்றும் யாழ் வெள்ளாளர் கருத்தியலை ஏற்ற தலித்திய விரோதிகள் புலிகள் என்பதும் சேர்ந்து இவர்களைப் பொறுத்து புலிகள் முழு வலதுசாரிகளாகவும் ஆனார்கள். இலங்கை தொடர்பாக நடந்து வரும் இனக்கொலை மற்றும் மனித உரிமை விவாதங்களில் மரபார்ந்த மார்க்சியர்களிடம் பொதிந்திருக்கும் மௌனத்திற்கான காரணங்களை இப்படியாகவன்றி நாம் வேறுவிதமாக விளங்கிக் கொள்ள முடியாது.

பின்நவீனத்துவம், மார்க்சியம் கடந்த தரிசனம் என்று சொல்லப்படுவதாலும், தமிழகத்தில்  இருத்தலியலை முன்வைத்துப் பேசிய விமர்சன மார்க்சியம் சீனா உள்ளான சோசலிச நாடுகளிலும் நிலவி வந்த மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை செய்தன என்பதாலும், இது ஒரு கோட்பாட்டு நிலைபாடு எனும் அளவில் இதனை நாம் நிதானமாகப் பரிசீலிக்க வேண்டும்.

தேசியம் குறித்து அதிகமும் எழுதிய மார்க்சியரான ரொனால்ட் மங்க் தேசிய விடுதலைப் போராட்டம் முற்போக்கானதாக அமைய வேண்டுமானால் அது ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்பதனை ஒரு முன்நிபந்தனையாக வைத்தார். மேற்கத்திய காலனியாதிக்கத்திற்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டங்கள் இயல்பாகவே ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மையைக் கொண்டிருந்தன. பெரும்பாலுமான நாடுகள் முதலாளித்துவமல்லாத சோசலிசம் நோக்கிய அரசியலையும் தேர்ந்து கொண்டன. அவைகள் நடைமுறையில் சோசலிச நாடுகள் இல்லையெனினும் தமது யாப்பில் சோசலிசம் எனும் வார்த்தையைச் சேர்த்துக் கொண்டன. ஆப்ரிக்க இலத்தீனமெரிக்க ஆசிய நாடுகளின் விடுதலைப் போரட்டங்களை ஆய்வு செய்கிற ஒரு வரலாற்று மாணவன் இதனை உணர முடியும். சோசலிசத்தைத் தனது யாப்பில் கொண்ட இந்திய உதாரணம் இதற்குப் போதுமானது.
 
இனத் தேசிய விடுதலைப் போராட்டங்கள் பெரும்பாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைபாட்டையும், மார்க்சியர்களின் பாலான விலக்கத்தையும் கொண்டிருக்க என்ன காரணம்? இரண்டு காரணங்கள். ஒன்று இனத்தை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்கள் பாசிசமாகச் சீரழிவதற்கான வரலாற்று நிலைகள் என்றும் அப்போராட்டங்களில் உண்டு. இட்லர், முசோலினி, பிராங்கோ எனச் சான்றுகளும் இருக்கின்றன. திராவிடநாடு அரசியலும் அதனது கலாச்சாரக் கோருதல்களும் பாசிசமாகவும் இனவெறியாகவும் தமிழக இடதுசாரிகளால் பார்க்கப்பட்டிருக்கிறது. திராவிட மரபு பாசிசமாக ஆகவில்லை எனும் வரலாறு நமக்கு முன்பு இருக்கிறது.

இரண்டாவது காரணம், வரலாறற்ற தேசியங்கள் என்பது குறித்த மார்க்சிய மரபு. வரலாறற்ற தேசியங்களுக்கு போராடும் உரிமையை ஏற்கத் தேவையில்லை. இத்தகைய போராட்டங்கள் கலாச்சாரமற்றதாகவும் காட்டுமிராண்டித்தனமானதாகவும் வரலாற்றைப் பின்தள்ளுவதாகவுமே இருக்கும் என இதனை ஒரு கோட்பாட்டு நியாயமாக விரிக்கலாம். ஆப்ரிக்க தேசிய விடுதலைத் தலைவரான அமில்கார் காப்ரேல் இந்த மார்க்சிய மரபை மறுத்திருக்கிறார்.

நம்காலத்தில் தமது இனமக்களின் விடுதலையைப் பேசிய கிழக்கு திமோரின் குசாமா சனானவும், குர்திஸ் விடுதலை இயக்கத்தலைவரான அப்துல்லா ஒச்சலானும் நடைமுறையில் இந்த மார்க்சிய மரபை மறுத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தமது விடுதலைப் போராட்டத்தைத் துவங்கிய காலங்களில் சர்வதேசியத்தை ஏற்ற, சோசலிசத்தை ஏற்ற, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்பதனை எவரும் மறந்துவிட வேண்டிய அவசியம் இன்றும் இல்லை.

சோவியத் யூனியனும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் தேசியங்களாக சிதறிப் போனதற்கான காரணங்களில் ஒன்றாக நிலவிய சோசலிச ஆட்சியாளர்கள் தேசிய இனப் பிரச்சினையை எதேச்சாதிகாரமாகக் கையாண்டதும் ஒரு காரணம் என்பதனை இலங்கை மார்க்சியரான ரெஜி சிறிவர்த்தனா போன்றவர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள். சோவியத் யூனியன் யுகோஸ்லாவிய சிதறல் அதற்கான நடைமுறைச் சான்றாக எம்முன் இருக்கிறது.

தொண்ணூறுகளின் துவக்கம் கடந்த இருபது ஆண்டுகளில் உருவாகின எந்தத் தேசமும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதனைத் தமது பிரதான அரசியலாகக் கொண்டிருக்கவில்லை. இதற்கான காரணம் தேசியம் குறித்த வரலாற்றுரீதியில் முன்நோக்கிய பார்வை சோவியத் யூனியன் மற்றும் சீனா என இரு முகாம்களையும் போற்றிய இருபிரிவான மரபார்ந்த மார்க்சியரிடமும் இல்லை. இனத்தேசிய விடுதலைப் போராட்டத்தின் பண்பு குறித்த புரிதல் அவர்களிடம் இல்லை. இனக்கொலை என்பது எமது நூற்றாண்டின் மிகப்பெரும் பிரச்சினை என்ற உணர்வும் அவர்களிடம் இல்லை. இந்தக் காரணங்களால்தான் ஈழத்தில் இனக்கொலை நடந்திருக்கிறது அல்லது மனித உரிமை மீறல் நிகழ்ந்திருக்கிறது என்று இவர்கள் அறிக்கைகளில் அல்லது கட்டுரைகளில் பேசினாலும், இத்தகைய இயக்கங்களை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். நடைமுறையில் மௌனம் காக்கிறார்கள்.

இலங்கையின் போர்க் குற்றங்கள் மனிதஉரிமை மீறல்கள் பற்றி இலங்கை அரசாங்கம் நேர்மையாக விசாரித்துக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் என இவர்கள் கருதுகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை உள்பட மனித உரிமை விவகாரத்தில் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் செய்வது இலங்கையின் இறையாண்மையில் தலையீடு என்கிறார்கள். மனித உரிமை சம்பந்தமான இலங்கையின் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் பிரச்சினை ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின்பற்பட்டது என இவர்கள் சொல்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கையால் தமிழ்மக்களுக்கு நீதியோ தீர்வோ கிடைக்காது என்கிறார்கள். அதே வேளையில் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களை விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்கிறார்கள். இதன் மூலம் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீட்டைத் தடுத்து நிறுத்த முடியும் எனவும் சொல்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் இன்றைய நிகழ்ச்சி நிரல் ஏகாதிபத்தியத்தினது என்பதுவே தவறான சித்தரிப்பாகும். அதனது நிகழ்ச்சி நிரல், அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள், சீனா, ரஸ்யா போன்ற நாடுகளினது தேசிய நலன்களின் அடிப்படையிலான நிகழ்ச்சி நிரல். அதனால்தான் இந்த நாடுகள் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றன. தமது நாட்டின் நலன்களைக் காக்க வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தும் இந்த நாடுகள் ஏன் பிறரது நலன்களை அறத்தின் அடிப்படையில் காக்க முடியவில்லை? சீனாவின் மனித உரிமையை அமெரிக்கா விமர்சிக்காதுவிட்டால், சீனாவும் அமெரிக்காவை விமர்சிக்காது. இதுதான் நிதர்சன அரசியல். இந்தப் போக்கில்தான் இந்தியாவினது நிகழ்ச்சி நிரலாகவும் ஐக்கிய நாடுகளின் நிரல் ஆகவேண்டும் என்பதனால்தான் இந்தியாவும் பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினராக முண்டியடித்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் மட்டுமல்ல சீனா, ரஸ்யா, இந்தியா போன்ற நாடுகளும்தான் இன்று உலகைக் கூறுபோட்டுக் கொண்டிருக்கின்றன. இனக்கொலைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிற ஒரு மக்கள் கூட்டத்தின் இருத்தலுக்கு இந்த நிகழ்ச்சி நிரலினால்  பயன் விளையுமானால் இந்த நிகழ்ச்சிநிரலை அந்த மக்கள் கூட்டம் வரவேற்கவே வேண்டும். இதனால் ஏகாதிபத்தியத் தலையீடு வரும் என்பது ஓரு பயனற்றவாதம். இலங்கை அரசு மேற்கத்திய நாடுகளையும் அமெரிக்காவையும் எதிர்ப்பதில் எந்தவிதமான ஏகாதிபத்திய எதிர்ப்புக் குணாம்சமும் இல்லை. மேற்கத்திய நாடுகளிடம் அது ஏற்றுமதி ஜிஎஸ்பி சலுகை பெற்றுப் கொண்டிருந்துபோது உள்நாட்டில் கடுமையாகச் சுரண்டப்பட்ட சுதந்திர வர்த்தக வலய வியர்வைத் தொழிலாளரின் மீதான உழைப்புச் சுரண்டலில் எந்தவிதமான ஏகாதிபத்திய எதிர்ப்பும் இல்லை.

ஆப்ரிக்காவில் குவிந்து கொண்டிருக்கும் சீன இந்திய மூலதனத்தில் எந்தவிதமான முற்போக்குத் தன்மையும் இல்லை. அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இன்று முன்னைய இன்றைய சோசலிச நாடுகளிலெங்கும் நீக்கமற தனது மூலதனங்களைக் கொண்டுதான் இருக்கின்றன. சமபலநிலைக்காக அந்த நாடுகள் போராடவும் செய்யத்தான் செய்கின்றன. இந்தியா ஒரே சமயத்தில் அமெரிக்காவினது நண்பனாகவும் சீனாவினது நண்பனாகவும் இருக்க முயற்சிக்கிறது. இலங்கையிலும் இந்திய சீன மூலதனமும் அரசியல் தலையீடும் இருக்குமானால் அமெரிக்க மேற்கத்திய மூலதனத்தினால் அல்லது அரசியல் தலையீட்டினால் எதுவும் தலைகீழ் மாற்றமோ அல்லது புரட்சிகர மற்றும் எதிர்புரட்சிகரமாற்றாமோ வற்துவிடப் போவதில்லை. இந்த நகர்வுகளால் இலங்கைத் தமிழரது இருப்பும் அரசியல் உரிமையும் நிலைநாட்டப்பட்டு, இனக்கொலை நடவடிக்கை நிறுத்தப்படுமானால் அது ஈழத் தமிழருக்கு நன்மையையே கொண்டு தரும்.

இலங்கை அரசு பற்றிய திட்டவட்டமான நிலைபாடுகளை மரபான இலங்கை இந்திய மார்க்சியர் கொண்டிருக்கவில்லை.  இலங்கை அரசு தொடர்பான ஒரு பிரமையை இக்கட்சிகள் தமிழ் மக்களிடம் விதைக்க முனைகின்றன. இலங்கை அரசை எதிர்த்த அல்லது வலியுறுத்துகிற எல்லாவிதமான இயக்கங்களையும் நீர்த்துப் போகச் செய்கிற நடைமுறைப் பண்பற்ற அறிக்கைகளை மட்டுமே இக்கட்சிகள் தமது அரசியல் நிலைபாடுகளாகக் கொண்டிருக்கின்றன.

மனித உரிமை அரசியல் என்பது ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல் என்பது கெடுபிடிப் போர்க்கால கட்டத்தின் இடதுசாரி வாய்ப்பாடு. நிலவிய சோசலிசம் தகர்ந்து போனதற்கு ஏகாதிபத்திய ஊடுறுவலும் பிரச்சாரங்களும் மட்டுமே காரணமாக இருக்கவில்லை. நிலவிய சோசலிச சமூகத்தில் கட்சியின் எதேச்சாதிகாரம் நீக்கமற நிறைந்திருந்தது. மனித உரிமை ஜனநாயக அவாக்கள் சிறுபான்மையினர் உரிமைகள் என்பன நிராகரிக்கப்பட்டன. மேற்கத்திய விமர்சன மார்க்சியம் என்பதுவே இதனைப் பற்றியதுதான். தனது நாட்டில் சோசலிசத்தைக் கட்டியதாகச் சொன்ன மாவோவின் அரசுதான் ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தேடுக்கப்பட்ட சோசலிஸ்ட்டான அலேண்டேவின் அரசை சி.ஜ.ஏவின் உதவியுடன் இரத்தத்தில் மூழ்கடித்த கொடுங்கோலன் பினோசேவை ஆதரித்தது. அதனது தொடர்ச்சியாகவே தியானென்மென் படுகொலையையும் நாம் பார்க்க முடியும்.

ஸ்டாலினது ரஸ்யா துவங்கி, மாவோவின் சீனா ஈராக, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வரை இந்நாடுகளில் மனித உரிமைகள் நிராகரிக்கப்பட்டன என்பதை இன்று எவரும் ஏற்க வேண்டும். சோவியத் யூனியனது வீழ்ச்சியைத் துரிதப்படுத்தியதும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அவை வீழக் காரணமாக அமைந்தவர்களும் அந்த மக்கள்தான் என்பதனை மறந்துவிட்டு, வெறுமனே ஏகாதிபத்தியச் சதி என அதனைப் பேசிக் கொண்டிருப்பது பயனற்ற வாதம்.

ஈழமக்களின் போராட்டம் வீழ்ந்ததற்கான பிரதானமான காரணங்கள் இரண்டு. வீழ்ச்சியின் உள்ளகக் காரணமாக விடுதலைப் புலிகளின் அரசியல் தூரதரிசனமற்ற நிலைபாட்டையும், சகலமுரண்களையும் அழித்தொழிப்பின் மூலம் சாதிக்க நினைத்த அதனது செயல்பாட்டிலும், தனது சொந்த மக்களின் மீதான அதிகாரத்தைச் செலுத்தியதிலும், யாழ் இஸ்லாமிய மக்களை வெளியேற்றிய இனக்கொலை முஸ்தீபு கொண்ட நடவடிக்கையிலும் நாம் காணலாம். தமிழர்களுக்கிடையிலேயே கணிசமான எதிரிகளை இதனால் விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள். புறநிலைக் காரணமாக, நிலவிய உலகை அரசியல் பொருளாதார ஒழுங்கை மிகச் சாதுரியமாகப் பாவித்து, உலக நாடுகள் அனைவரதும் ஆதரவை ‘பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவாகத் திருப்பிய’ இலங்கை அரசின் செயல்பாட்டைச் சொல்லலாம். இதில் இலங்கை அரசு சார்ந்த காரணம், வஞ்சகமான, இனக்கொலைப் பண்பு கொண்ட, கொடுங்கோன்மையான காரணம்.

விடுதலைப் புலிகளின் தவறுகளை முன்வைத்து இன்றும் தொடரும் இந்த இனக்கொலை நடவடிக்கையை, அதற்குக் காரணமான இலங்கை அரசின் தன்மையை எவரும் பின்தள்ளிவிட முடியாது. இலங்கை அரசிடம் இறைஞ்சிக் கொண்டிருப்பதும், அதற்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருப்பதும் அபத்தமான அரசியல் நிலைபாடுகளாகவே இருக்கும். இன்றைய இலங்கை அரசு எந்தவிதமான அரசியல் தீர்வும் முன்வைக்க விரும்பாத, தமது ‘பயங்கரவாத ஒழிப்பு’ இராணுவ அனுபவத்தை ஒரு ராணுவக் கோட்பாடாக்கி அதனை உலக நாடுகளுக்கு விற்கவிரும்பும் ஒரு கொடுங்கோன்மை அரசு. இந்த அரசு போர்க்குற்றங்களை ஒப்புக்கொள்ளப்போவதும் இல்லை. குற்றவாளிகளை அது தண்டிக்கப் போவதும் இல்லை. 

இலங்கை அரசின் மீதான சர்வதேச ரீதியிலான அரசியல் நெருக்கடிகளும், அரசுக்கு எதிரான போராட்டங்களும் மட்டுமே இலங்கை அரசை வழிக்குக் கொண்டுவர முடியும். தண்டிக்கப்பட வேண்டியவர்களிடமே நீதி கேட்பது போன்றது மரபார்ந்த மார்க்சியர்களின் இலங்கை அரசு நோக்கிய  அறிக்கைகள். இந்திய மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக இந்திய அரசு நிலைபாட்டை எதிர்க்கிறவர்கள் அதே இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கை செய்யும், தொடரும் இனப்படுகொலைச் செயல்பாடுகளை விடுதலைப் புலிகளின் தவறுகளைக் காட்டிப் பேசாமல் இருப்பது, தமிழக மனித உரிமை மார்க்சியர்களின் இரட்டை நிலைபாடுகளாகவே ஆகிறது.

இலங்கை அரசுக்கு எதிரான, மனித உரிமைகளை வலியுறுத்திய தமிழக தமிழ்த் தேசியர்களின் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டங்கள் தமது தார்மீகத் தன்மையை அறம்சார்ந்த அதனது போராட்ட வழிமுறைகளின் மூலமே தக்கவைத்துக் கொள்ள முடியும். பெரியாரிய, தலித்திய, மார்க்சிய  அரசியலை முன்வைக்கிற அரசியலே இங்கு இந்தப் பாத்திரத்தை எடுக்க முடியும். ‘தமிழகத்திலுள்ள சிங்களவர்களைக் கொல்வோம்’ என்கிற வெறி அரசியல் தார்மீக அரசியலாக ஆகாது.

மனித உரிமைப் பிரச்சினை இன்று இரு முனைகளில் பேசப்பட்டு வருகிறது. ஒன்று அமெரிக்க மேற்கத்திய அரசு மட்டத்திலும், தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை மட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பிறிதொரு முனையில் சுயாதீனமான டப்ளின் மக்கள் தீர்ப்பாயம், அம்னஸ்டி இன்டர்நேசனல் போன்றவை முன்னெடுத்து வருகின்றன. இந்த இரண்டாவதான அமைப்புகளின் மனித உரிமை நிகழ்ச்சி நிரல் ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரல் என எவரேனும் வாதிடுவார்களானால் அவர்களது தமிழக மட்டத்திலான அனைத்து மனித உரிமை அரசியலையுமே நாம் சந்தேகத்துடன்தான் பார்க்க வேண்டும்.

தமது கண்களுக்கு முன்னால் நடந்திருக்கும் இனப்படுகொலை குறித்துக் கண்களை மூடிக்கொண்டிருந்துவிட்டு, தமிழக மனித உரிமை குறித்து உண்மை அறியும் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருப்பது தந்திர அரசியலாகுமே தவிர அது மனித உரிமை அக்கறையின் பாற்பட்ட நடவடிக்கை ஆகாது. இதைப் போன்றே இனப்படுகொலை பற்றிப் பேசாது மாவோயிஸ்ட்டுகள் பற்றி மட்டுமே தேர்ந்தெடுத்துப் பேசுவதும் ஜனநாயக நடவடிக்கை ஆக முடியாது. இரண்டு பிரச்சினைகளும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாததாகும். நமது கண்முன்னால் நடந்து முடிந்திருக்கும் இனக்கொலை குறித்த நடைமுறைத் திட்டம் என்பதுவே இன்று தேவை. இதற்கு நீட்டி முழக்கிய மேற்கோள்களால் நிரப்பப்பட்ட வெற்றுப் பகுப்பாய்வுகளால் எந்தப் பயனும் இல்லை. திட்டவட்டமான தீர்மானங்களும் அதனையொட்டிய செயல்பாடுகளும்தான் இன்று அவசியம். மரபான மார்க்சியர்கள் அதற்குத் தமது கடந்த காலத்தைக் கடந்து வரவேண்டும்.

- யமுனா ராஜேந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It