நூல் அறிமுகம்

திறவுகோல்

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் உதவியாளர் அருணகிரி, மங்கையர்க்கரசி பதிப்பகத்தின் வெளியீடாக ‘திறவுகோல்’ என்னும் 76 பக்க பயனுள்ள நூலை வெளியிட்டுள்ளார். உடல்நலனைப் பாதுகாப்பதற்கான கருவிகள், அவைகளைப் பயன்படுத்தும் விதம், உணவு, பழக்கவழக்கங்கள், மருத்துவமனைகள் குறித்த தகவல்கள், கணினிப் பயன்பாடு, பேருந்து, தொடர்வண்டி முன்பயணப் பதிவு முறைகள், இணையதள பயன்பாடு, தகவல் அறியும் உரிமை, நுகர்வோர் உரிமை முதலான வாழ்க்கைக்குத் தேவையான அரியதகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

தொடர்புக்கு : ஐஸ்வர்யா புக்ஸ், 2/18 - ஏ, கோகுலம் குடியிருப்பு-1, நொளம்பூர், சென்னை - 85.

செல்பேசி : 9444393903.

நோர்வே : நள்ளிரவில் சூரியன் உதிக்கும்நாடு.

பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்களுக்கு வாஞ்சையோடு தஞ்சம் தருகிற நாடுதான் நோர்வே! பூமிப்பந்தின் வடமுனையான ஆர்க்டிக்வட்டத்தில் ஸ்காண்டிநேவியா தீபகற்பத்தில் அமைந்துள்ள இந்நாடு தான் உலக அமைதிக்கான நோபல் பரிசை வழங்கிச் சிறப்பிக்கிறது. அங்கு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் ஆய்வு மாணவனாகப் பயிற்சியும் பணியும் பெறச் சென்ற தமிழ்ச் செல்வன் அவர்களது பயண இலக்கியமாக இந்நூல் திகழுகிறது.

நோர்வே நாட்டு வரலாறு, அரசியல் கட்சிகள், தேர்தல் முறை, புவியியல், தட்பவெப்பநிலை, விழாக்கள், மக்களின் உணவு, பழக்க வழக்கங்கள், பண்பாடு முதலான விவரங்களை, எழில் கொஞ்சும் வண்ணப்படங்களுடன், சுற்றுலா மைய வெளியீடு போல வடிவமைத்த நூலாசிரியர், தமது திருமண விழாவில் இந்நூலை வெளியிட்டுப் புதுமை சேர்த்துள்ளார்.

வெளியீடு : பூர்ணிமா பதிப்பகம், 6/23, மணியக்கார தெரு,பெண்ணாகரம் - 628002. தர்மபுரி மாவட்டம்.

செல்பேசி : 9842297156.

யானை மலையைக் காப்போம்

யானை கால்களை மடித்து உட்கார்ந்து இருப்பதைப் போன்ற கம்பீரமான தோற்றத்துடன் மதுரை மேலூர்ச்சாலையை அடுத்து அமைந்துள்ள யானை மலையின் பன்முகத்தனித் தன்மைகளை இச்சிறு நூல் விளக்குகிறது. ‘சங்கொலி’ இதழில் வெளிவந்த கட்டுரைகள், அருணகிரியின் பயணக்கட்டுரை, படங்கள், யானை மலையை உடைத்து சிற்பக்கலைப் பூங்கா அமைக்கும் அரசின் முயற்சிக்கு ம.தி.மு.கழகத்தின் எதிர்ப்பு, அரசு ஆணையைத் திரும்பப் பெற்றது முதலிய விவரங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

விலை    :ரூ. 20/- , பக்கங்கள் : 64, வெளியீடு :மதுரை மாவட்ட ம.தி.மு.க. யானை மலைக்கிளை, 2/869, திருமோகூர்சாலை, யானைமலை, ஒத்தக்கடை, மதுரை - 625 107. செல் : 9443794751.

முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன்

தமிழீழ விடுதலைக்கும், தமிழின உணர்வுக்கும் தன்னையே கொடையாகத் தந்த மாவீரன் முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாற்றையும், அவரின் படைப்பாற்றலையும், எழுத்தாயுதமான அவரது இறுதி மடலையும், அவரின் புகழ்பாடும் ஈழக்கவிஞர்கள் புதுவை.இரத்தின துரை, காசி ஆனந்தன் ஆகியோரின் எழுச்சிப் பாக்களையும், கலைவேலு அவர்களது ஆய்வுக்கட்டுரையையும் தொகுத்து வீரக் காவியமாய் தமிழ்த்தேசம் பெருமையுடன் வெளியிட்டுள்ளது.

வரலாறாக, போராட்டமாக, நம்பிக்கையாக எந்நாளும் வாழ்ந்து கொண்டிருக்கும். முத்துக்குமாரின் வாழ்க்கைத் தடத்தை நூலாசிரியர் ஆ.கலைச்செல்வன் நமக்குப்படம் பிடித்துக் காட்டுகிறார். அண்ணனாக, தொலைக்காட்சித் தொடர் இயக்குனராக, அலுவலகக் காவலராக, சுடர்விட்ட முத்துக்குமாரின் ஒளிப்படங்கள் நம்நெஞ்சை நெகிழச் செய்கின்றன.

வெளியீடு : தமிழ்த்தேசம், 87/3, காமராசர் நகர்,

3ஆவது தெரு, சூளைமேடு, சென்னை - 94.

தொலைபேசி - 23610603.

விலை : ரூ .60, பக்கங்கள் : 160,

ஆட்சி மன்றங்களில் அண்ணா

ம.தி.மு.க. அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் பொறியாளர் மு.செந்திலதிபன் அவர்கள் அண்ணா நூற்றாண்டு நினைவு வெளியீடாக இந்நூலை வெளியிட்டுள்ளார். ஆட்சி மன்றங்களில் அண்ணா, அண்ணா வளர்த்த அறநெறி அரசியல், இலட்சியப் பாதையிலே நாம், காஞ்சியின் திராவிடநாடு, தமிழின மறுமலர்ச்சித் தலைவர் அண்ணா ஆகிய தலைப்பில்  அண்ணாவின் இலட்சிய உறுதியையும், தியாக மனப்பான்மையையும் இந்நூல் விவரித்து விளக்குகிறது.

வெளியீடு : ஆனந்தி பதிப்பகம், 26, 3ஆவது முதன்மைச்சாலை, கிருட்டிணாநகர், குரோம்பேட்டை,

சென்னை - 44. செல்பேசி : 9443119206.

விலை    : ரூ.35/-  பக்கங்கள் : 72

- ஆ. வந்தியத்தேவன்.