கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

 

கலைஞர் தலைமையிலான அரசு 2006ஆம் ஆண்டு பதவியேற்றதும், சமச்சீர்க் கல்வி குறித்துச் சிந்திக்கத் தொடங்கியது. தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கல்வி முறைகளைச் சமப்படுத்தி, எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியான கல்வியை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இதற்காக 2006 செப்டம்பரில், மேனாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை 2007இல் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 2010ஆம் கல்வியாண்டு முதல், ஐந்தாம் வகுப்பு வரையில், சமச்சீர்க் கல்வித் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்தக் கல்வியாண்டிலிருந்து அத்திட்டம் 10ஆம் வகுப்புவரை நீட்டிக்கப்பட இருந்தது. இத்திட்டம் நடைமுறைக்கு வருமானால், மாநகராட்சிப் பள்ளி, அரசுப் பள்ளி, தனியார்ப் பள்ளி, மெட்ரிக்குலேசன் பள்ளி என எந்தப் பள்ளியில் படித்தாலும் ஒரே பாடத்திட்டம் அமையும். அதனால் பிள்ளைகளுக்குள் ஏற்றத்தாழ்வு இல்லாத சமச்சீரான நிலை உருவாகும். இதற்காக பலகோடி ரூபாய் செலவிடப்பட்டு ஒரே மாதிரியான பாடத்திட்டத்தைக் கொண்ட பாட நூல்கள் அச்சிடப்பட்டன. ஆனால் இப்போது, ஆட்சிக்கு வந்திருக்கும் புது அரசோ அத்திட்டத்தையே தள்ளி வைத்துவிட்டது. அல்லது, மறைமுகமாகக்  கைவிட்டுவிட்டது. இப்போது மீண்டும் பல கோடிகள் செலவழிக்கப்பட்டு, புதிய பாட நூல்கள் அச்சேற்றப்பட்டுள்ளன. சமத்துவமும் போயிற்று, நம் வரிப்பணமும் போயிற்று.