ஈழத தமிழர்களுக்காக - தீக்குளித்து வீரமரணமடைந்த போராளி முத்துக்குமாருக்கு பெரியார் திராவிடர் கழக சார்பில் ஆனூர் செகதீசன், விடுதலை இராசேந்திரன் மற்றும் ஏராளமான தோழர்கள் இறுதி வணக்கம் செலுத்தினர். 'எரியும் ஈழத்துக்காக - எரிந்த மாவீரன் முத்துக்குமாருக்கு வீர வணக்கம்' என்ற சுவரொட்டி கழக சார்பில் ஒட்டப்பட்டது. 3 நாளும் தோழர்கள் முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த கொளத்தூரில் இருந்து இறுதி ஊர்வலத்திலும் கழகத்தினர் பங்கேற்றனர்.

இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அலை கடலாக திரண்டு, உணர்ச்சி முழக்கமிட்டு வந்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. ஈழத் தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் காங்கிரஸ் - அதற்கு துணை போகும் தி.மு.க. - விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் ஜெயலலிதா - நஞ்சை கக்கும் பார்ப்பனர்கள் - பார்ப்பன ஊடகங்களை எதிர்த்து முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கக் கோரியும் - விடுலைப் புலிகளை ஆதரித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வீரமரணமடைந்த முத்துக்குமார் உருவப் படத்தோடு தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் படத்தையும் உயர்த்திப் பிடித்து வந்தனர்.

இறுதி ஊர்வலம் 12 கிலோ மீட்டர் தூரம் பயணித்தது. மூலகொத்தளம் இடுகாட்டை அடைவதற்கு 8 மணி நேரம் ஆனது. வழி நெடுக ஆண்களும், பெண்களும் ஏராளமாகத் திரண்டு, உணர்ச்சிப் பொங்க கண்களில் நீர் மல்க, ஊர்வலத்தைப் பார்வையிட்டனர். ஊர்வலத்தில் வந்தோருக்கு குடிநீர் , மோர் - குளிர்பானங்களை வழங்கி, தங்களது உணர்வை வெளிப்படுத்தினர்.

சோனியா - மன்மோகன் சிங் - கலைஞர் - ஜெயலலிதா - 'இந்து' ராம் - 'துக்ளக்' சோ ஆகியோர் ஈழத் தமிழருக்கு துரோகம் செய்வதை விளக்கிடும் கார்ட்டூன் படங்களை 'பாசிசத்துக்கு எதிரான பத்திரிகையாளர்' என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் கரங்களில் உயர்த்திப் பிடித்து முழக்கமிட்டு வந்தனர். ஏராளமான பெண்களும் இறுதி ஊர்வலத்தில் வந்தது குறிப்பிடத்தக்கது.

3 நாட்களும் கொளத்தூர் பகுதி முழுதும் வர்த்தகர்கள் கடைகளை மூடி, தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் த. வெள்ளையன் - இறுதி நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். பழ. நெடுமாறன், தொல். திருமாவளவன், வைகோ, ஆர். நல்லக்கண்ணு மற்றும் திரைப்படத் துறையைச் சார்ந்த நடிகர்கள், கலைஞர்கள், ஏராளமாகத் திரண்டு வந்து வீரவணக்கம் செலுத்தி எழுச்சி உரையாற்றினர்.

விடுதலைப்புலிகள் - போராளி முத்துக்குமாருக்கு அனுப்பிய இரங்கல் செய்தியை பலத்த கரவொலிக்கிடையே வைகோ ஒலிபெருக்கியில் படித்தார். அலைபேசியில் விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் இரங்கல் அறிக்கையின் வாசகங்களைக் கூற, அதை அப்படியே வைகோ திரண்டிருந்த கூட்டத்தில் கூறியபோது, கூட்டத்தினர் உணர்ச்சி எரிமலைகளாய் ஆர்ப்பரித்தனர்.

உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கூட்டத்தினர் உணர்வுகள் கட்டுக்கடங்காத நிலையில் இயக்குநர் சேரன், மேடையில் பல மணி நேரம் நின்று ஒலி பெருக்கி வழியாக கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தி வந்தார்.

மூன்றாவது நாள் - தமிழகம் முழுதுமிருந்தும் மாணவர்களும், இளைஞர்களும் திரண்டு வந்து போராளி முத்துக்குமாருக்கு இறுதி வணக்கம் செலுத்தினர். அண்மைக்கால சென்னை வரலாற்றில் இப்படி ஒரு உணர்ச்சி மிக்க இறுதி ஊர்வலத்தை மாநகர் சந்திக்கவில்லை என்பதே பலரின் கருத்தாக இருந்தது.

Pin It