சென்ற இதழில் வெளிவந்த ஞான. அலாய்சியஸ் அவர்களின் பேட்டி இந்த இதழிலும்...
அயோத்திதாசர் ஒரு சிந்தனையாளராக மட்டுமின்றி அவர் ஒரு மருத்துவராக, ஒரு பத்திரிகையாளராக, ஓர் இயக்கவாதியாக, பல்வேறு பரிமாணங்கள் உள்ளவராகத் திகழ்ந்திருக்கிறார். தாங்கள் ஆய்வு செய்த போது, அவருடைய பிற பரிமாணங்களைக் கண்டறிந்திருப்பீர்கள். அது குறித்துச் சொல்லுங்கள்
கிராம்சி என்னும் இத்தாலிய நாட்டு அறிஞர், அறிவுஜீவிகளை இரண்டு வகையாகப் பிரிக்கிறார். ஒன்று class intellectuals அதாவது, வர்க்கத்தில் வேரூன்றியோர். தெரிந்தோ தெரியாமலோ, தனது வர்க்கப் பின்னணியில் மூழ்கி, அந்த வர்க்கக் கருத்துகளையும் நலன்களையும் பிரதிபலிப்பவர். இரண்டாவது வகை, organic intellectuals அதாவது, தனது வர்க்கப் பின்னணியில் வேரூன்றியிருந்தாலும், அதனையும் கடந்து சிந்தித்து முழு சமூகத்தின் நலன்களைத் தனது எண்ணங்கள் மூலம் நிலை நிறுத்துபவர்; தன் குழுமத்தின் நலன்களையும் பெரும் சமுதாயத்தின் நலன்களுடன் இணைத்தும் ஒன்றுபடுத்தியும் பார்ப்போர்.
அயோத்திதாசர் இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். நீங்கள் சொல்வது போல, அவர் பல பரிமாணங்களைக் கொண்ட அறிவு ஜீவியாகத் திகழ்கிறார். இப்பரிமாணங்கள் மேலோட்டமாகவே தென்படுகின்றன. ஆனால், இவற்றைத் தாண்டி அயோத்திதாசர் சிந்தனையில் பல தளங்கள் காணப்படுகின்றன. தன் குழும நலன்களை உள்ளடக்கிய இன்றைய பெரும் சமுதாயத்தின் நலன் என்னும் உரைகல் கொண்டு தமிழ், இந்திய சமுதாயங்களின் பண்பாடு, வரலாறு, இலக்கியம், சமயம் ஆகியவற்றை அலசுகிறார். அவற்றை ஆய்ந்தெடுத்து இன்றைய தேவைக்காக கட்டமைக்கிறார். அவருக்கென்று சிறப்புத்தளம் இல்லை. வாழ்க்கையின் எல்லாத் தளங்களுமே அவருக்குப் பாடம். ஏனெனில், அவரது நோக்கம், சமூகத்தின் ஒட்டுமொத்தமான நலனும் முன்னேற்றமுமே.
அயோத்திதாசரை நான் இவ்வாறு வர்ணிக்கும்போது, நான் அவர் கூறும் எல்லாவற்றையுமே விமர்சனமின்றி ஏற்றுக் கொள்கிறேன்; அல்லது மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென நினைக்கிறேன் என்றாகாது. ஆனால், அயோத்திதாசரின் எழுத்துகளை முழுமையாகப் படித்துணரும்போது, ஓர் புதிய கோணம் முற்றிலும் நவீனமான கோணம், கண்ணோட்டம் உருவாகும் என்பது நிச்சயம். இன்றைய காலகட்டத்தில் எல்லா சமூக இயக்கங்களும், சிறப்பாக தலித் இயக்கங்களும் ஓரளவுக்கு மேல் முன்னேற முடியாமலும், முயற்சி செய்து பெற்ற சில நன்மைகளை நிலைநிறுத்த முடியாமலும் திணறுவதை நாம் காண்கிறோம். ஆனால், இரு துருவங்களாகப் பிரிந்து கிடக்கும், கலாச்சாரத் தளங்கள் அயோத்திதாசர் சிந்தனையால் கட்டாயமாக வளம் பெறும். மூன்றாவது உத்தி உருவாகவும் உறுதி பெறவும் வழிவகுக்கும்.
"அயோத்திதாசர் சிந்தனைகள்' வெளிவந்து அய்ந்தாண்டுகளுக்கு மேலாகின்றன. குறிப்பிட்ட அளவு பிரதிகளே அச்சடிக்கப்பட்டு வெளியாகியுள்ளதால் பரவ வேண்டிய அளவுக்கு அது பரவவில்லை. பரவிய பிரதிகளும் கவனமாக வாசிக்கப்படவில்லை என்றே தெரிகிறது. தமிழகத்தைப் பொருத்த மட்டிலும், சமுதாய முன்னேற்றத்தை விரும்பும் அறிவுஜீவிகள், அவர்கள் தலித்தாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி நேர்மையுள்ளவராக இருந்தால் அயோத்திதாசர் சிந்தனைகள், வற்றாத ஊற்றாக வருங்காலத்தில் உதவும் என்பதை உணர்வார்கள். இது, அவரைப் பின்பற்றிச் செல்வோருக்கும் அவரிடமிருந்து மாறுபட்டுச் செல்வோருக்கும் பொருந்தும்.
அயோத்திதாசர் முன்வைத்த தமிழ்த் தேசியம், இன்றைய நிலையில் எந்த அளவுக்குப் பொருந்தி வருகிறது?
அய்யா ஆனைத்து அவர்கள், அயோத்திதாசர் பற்றிய ஒரு மதிப்பீட்டுரையில், அயோத்திதாசரே முதன் முதலாக "தமிழன்' என்ற அடையாளத்தை முன்வைத்தார் என்று குறிப்பிட்டார். அயோத்திதாசர் பணி செய்த காலம், கீழ்மட்டத்தினர் சிறப்பாக பறையர்கள் தங்களுக்கென நவீனத்தில் புதியதொரு சமூக அரசியல் அடையாளத்தைத் தேடி நின்றனர். திராவிடர், ஆதி திராவிடர், பஞ்சமர், பிள்ளை என்னும் பல்வேறு முன்வைப்புகளுக்கிடையே அயோத்திதாசர் "தமிழன்' என்னும் அடையாளத்தை முன்வைக்கிறார். சாதியை விட்டொழித்தவன் தமிழன், ஆதித்தமிழன்; சாதியில் ஒட்டிக் கொண்டவன் பாதித் தமிழன், மீதித்தமிழன். ஏனென்றால் அவன் சாதித் தமிழன். இதுதான் பண்டிதர் பார்வை.
அதே காலகட்டத்திலும் அதற்குச் சற்றுப் பின்னும், இந்திய நாடெங்கும் உள்ள தாழ்த்தப்பட்ட குழுமங்களைச் சேர்ந்தோர், தங்களுக்கென புதுப் புது அடையாளங்களைத் தேடிக் கொண்டனர். 150க்கும் மேற்பட்ட அடையாள மாற்ற விண்ணப்பங்கள் செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இவைகளில், ஒன்றிலாவது மொழி, பண்பாடு அனைத்தையும் சுற்றி வளைத்து உரிமை கொண்டாடும் அடையாளம் கோரப்படவில்லை.
ஆனால், அயோத்திதாசர் மட்டுமே "தமிழன்' என்ற அடையாளத்தைத் துணிவுடனும் நம்பிக்கையுடனும் முன்வைக்கிறார்; சர்ச்சைக்கு உள்ளாக்குகிறார். ஓர் பரந்துபட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயம், நவீன எழுச்சியின் காலகட்டத்தில் பெரியதொரு இனக்குழுவின் அடையாளத்தை மேற்கொள்ள முனைவது அரசியல், தேசிய அரசியல் நடவடிக்கையாகும். தேசம் என்பது முன்னர் கூறியபடி, தள்ளப்பட்ட சமூகத்தினர் முன்னுக்கு இழுக்கப்பட்டு, எல்லாருக்கும் உரித்தான சமநிலையடைவதே. இந்த நிலைக்கு அயோத்திதாசர் தனது முன்னுரிமையைப் பிரகடனப்படுத்துகிறார்.
இது, இன்றைய நிலைக்கு எப்படிப் பொருந்தும் என்பதே கேள்வி! உலகமயமாகும் இந்நாளில் மொழிவழி தேசம், குறுகிய வட்டமாகாதா என்ற கேள்விக்கு இரண்டு பதில்கள் உள்ளன. ஒன்று, பண்பாட்டுக் கண்ணோட்டத்திலிருந்து; மற்றது அதிகாரக் கண்ணோட்டத்திலிருந்து. உலகமயமாகும் பொழுதே இன்னொரு இயங்கியலும் உடன் வருவது கவனிக்கத் தக்கது. நவீனத்தில் உருவான அரசியல் அமைப்புக்குப் பெயர் தேசம் அரசு. சுருக்கமாக இதன் உட்கருத்து ஒரு அதிகாரம் அரசு. இது கொள்கையளவில் உருவான ஒரு கற்பனை. ஆனால், உண்மையில் இன்று காணப்படுவது உலகெங்கும் பல பண்பாடு ஒரு அரசு; அல்லது ஒரு பண்பாடு பல அரசு. பொருளாதார ரீதியில் உலகம் ஓர்மையடையும் காலகட்டத்தில், பண்பாட்டு ரீதியில் ஒவ்வொரு பண்பாடும், இது காறும் ஒரு அரசுக்குள் இருந்தவை, தனக்கென தனியரசு கோரி போராட்டங்கள் நடத்துவது கண்கூடு. இப்போராட்டத்திலிருந்து வெகுசில தேச அரசுகளே தப்பியுள்ளன.
காரணம் என்னவெனில், தேசம் என்பது பண்பாடும், அதிகாரமும் ஒருங்கிணைந்த சமூக அமைப்பே. ஓர் அரசமைப்பில் பண்பாடுகளுக்கிடையில் பொருளாதாரம், தன்மானம் முதலியவற்றில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. இதனைப் போக்க, தொடக்க காலத்தில் ஜனநாயகப் போராட்டங்கள் நடந்தாலும், இருக்கும் அரசியல் அமைப்புகளுக்குள் ஏற்றத் தாழ்வுகள் மறைய வழியில்லை. எனவே, தனிநாடு கோரிக்கை எழும்புகிறது. இது இன்றைய உலகில் ஏறக்குறைய எல்லா தேச அரசுகளிலும் நடப்பவை. சமூக அறிவியலாளர் இதனை Internal Colonialism- உள்காலனியம் என்று கணித்திருக்கின்றனர். பன்னாட்டு அமைப்புக்குள் எல்லா பண்பாடுகளும், முன்னேற்றப்பாதை தடைபடுவதை உணர்கின்றனர். இது, பண்பாடு ரீதியான கண்ணோட்டம்.
ஆனால், தலித்துகளின் நிலையிலிருந்து பார்க்கும்போது, அதிகாரரீதியான கண்ணோட்டம் இதைவிட முக்கியத்துவம் அடைகிறது. பண்பாட்டுக் குழுக்கள் அதிகாரத்தின் சமபங்கீடே. அதிகாரம் சமநிலைப் படுத்தப்படுவதே தேசம் என்று முன்பு கண்டோம். நவீனத்திற்கு முற்பட்ட காலத்தில் படிநிலைப் படுத்தப்பட்ட சமூக அமைப்பு, மொழி பண்பாடு மூலமாகவே உருவாக்கப்பட்டு, அவை மூலமாகவே நிலைநிறுத்தப்பட்டு, அவை மூலமாகவே திரும்பத் திரும்ப உருவாக்கப்படுகிறது. இந்நிலையை மாற்ற வரலாறு, மொழி, சமயம், பண்பாட்டு குறியீடுகளின் வாயிலாக உருப்பெற ஏற்றத்தாழ்வுகள் ஒவ்வொன்றாக உருக்குலைக்கப்பட வேண்டும். இந்த உருக்குலைப்பு, எந்த வழியாக சமுதாயம் உருப்பெற்றதோ அந்த வழியாகவே நடைபெற வேண்டும். அயோத்திதாசர் மொழியில் சொல்ல வேண்டுமானால், “எந்த வழியாக நாம் தாழ்த்தப்பட்டோமோ அதே வழியாகவே சென்றுதான் நாம் உயர முடியும்."
இந்தியாவில் ஏற்றத்தாழ்வான வரலாற்று மூலம் உருவான சமூதாய அமைப்பு ஒன்றல்ல; பல. பிறப்பினால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைக் கற்பிக்கும் சாதி / வர்ண முறைகள் ஒன்றல்ல, பல. சாஸ்திரங்களில் மட்டுமே ஓர்மையான வர்ண முறையைச் சந்திக்க முடியும். சமுதாயத்தில் அது பண்பாட்டுக்குப் பண்பாடு மாறுபட்டும் வேறுபட்டுமே வெளிப்படும். சாதியை ஒழிக்க, ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொண்டு சமூகத்தில் வெற்றி பெற முனையும் தனிநபர்களும், குழுக்களும் சாதி முறையை அதன் மாறுபாடான சமூகத் தளத்தில்தான் சந்திக்க வேண்டும். சாஸ்திரத்தில் அல்ல.
பெருவாரியான தலித் மக்களின் எதிர்காலம் சாதி ஒழிப்பில்தான் அடங்கியிருக்கிறது என்பதே என் முடிவு. இது உண்மையானால், சாதிமுறையின் பண்பாட்டு அம்சத்தை சந்தித்தே ஆகவேண்டும். பண்பாட்டுக்குள் அதிகார சமத்துவ நிலை ஓங்குவதே தேசம் தேசியம். எனவே, பண்பாட்டுக் குழுவின் அடிமட்டத்தில் இருக்கும் தலித்துகளின் முன்னேற்றம் உயர்வுமே தேச உருவாக்கமும், தலித் விடுதலையுமாகும். இவை இரண்டும் ஒன்றேயன்றி இரண்டல்ல. படிநிலைப் படுத்தப்பட்ட பண்பாட்டை உருக்குலைத்து, சமநிலைப் பண்பாடு, அதாவது தேசம் உருவாவது தலித் எழுச்சியினால்தான் சாத்தியமாகும்.
மொழி, தனிப்பட்ட வரலாறு, பெருவாரி மக்களின் சமய நடவடிக்கைகள் இவற்றிற்குள்புகுந்தே இந்த தலித் எழுச்சி உயிரெடுக்க வேண்டும். அப்பொழுதுதான் பண்பாட்டுச் செயல்பாடுகள் மறைவதற்குப் பதிலாக மாறும்; சமநிலைநோக்கி உருவெடுக்கும், பண்பாட்டு அடிப்படையிலான சமத்துவமே நிலைநிற்கும். நவீன கொள்கையான சமத்துவம், அசமத்துவ பண்பாட்டுக்குள் ஆணியடித்து நிலைநிறுத்தப்பட வேண்டும். அப்பொழுது தான் ஒட்டுமொத்தமாக எல்லா தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விடுதலை கிட்டும்.
நமது சூழலில், தமிழ்த் தேசியம் சமத்துவத்தை நோக்கிய தலித் எழுச்சியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களே. சமத்துவமில்லாத தமிழ்த் தேசியம், மேல் மட்டத்தினரின் வெற்றுக் கூக்குரலாகவே இருக்கும். தலித் போராட்டம், தமிழ்த் தேசியம் இல்லாவிட்டால் வரையறுக்கப்படாத, தனி நபர்களின் முன்னேற்றமாகவும், அடைந்த சாதனைகள் நிலைநிறுத்தப்படாமலே அழிந்து போகும். சமத்துவத்தை நோக்கிய போராட்டம், பண்பாட்டு வரையறுப்புக்குள் நிகழும்போது அதுவே தேசியமாகிறது
நேர்காணல் : பாண்டியன்