இந்தியாவில் கையால் மலமள்ளும் வேலையை 12 லட்சம் பேர் செய்வதாக இவ்வழக்கைத் தொடுத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் சமூக நீதி மற்றும் அதிகாரப்படுத்தும் அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, (2002 – 2003) 6 லட்சத்து 76 ஆயிரத்து ஒன்பது பேர் இவ்வேலையை செய்கின்றனர். இவர்களில் 95 சதவிகிதம் பேர் தலித் மக்கள். 1993 ஆம் ஆண்டு முதல் பாதாளச் சாக்கடையில் இறங்கி வேலை செய்யும்போது இறந்தவர்களின் குடும்பத்தினரைக் கண்டுபிடித்து, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும். 

– நீதிபதி பி. சதாசிவம், உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி, 27.03.2014 அன்று அளித்த தீர்ப்பில்.  

meendezhuvom 600கற்பனையில் உருவாகும் தேசியம்!

மக்களவையை தேசிய இனங்களின் அவையாக மாற்றக்கோரி, 5.4.2014 அன்று சென்னையில் "தமிழர் முன்னணி' சார்பில் தமிழர் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டிற்காகப் பரப்புரை செய்யப்பட்ட துண்டறிக்கையில், ""பெருவாரியான மாநிலங்கள் தேசிய இன அடிப்படையில் உருவானதே. தனித்துவமான மொழியையும் பண்பாட்டையும் வரலாற்றையும் நிலப்பரப்பையும் மரபுகளையும் கொண்டு வாழும் இவர்களின் முதன்மையான அடையாளம் தேசிய இனமாகவே உள்ளது. எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அவர்கள் ஒரே அடையாளத்தின் கீழ் தங்களை தமிழர்கள், கன்னடர்கள், பஞ்சாபியர்கள், வங்காளிகள் என அழைத்து தேசிய இனமாகவே வாழ்கிறார்கள்...

வரலாற்றிலும், தற்போதும் நடந்து வரும் போராட்டங்கள் அனைத்துமே தன்னுடைய இனத்தையும், மொழியையும், மண்ணையும், பண்பாட்டையும், பொருளியலையும், கடலையும், அதிகாரத்தையும் பாதுகாப்பதற்கான பல்வேறு தேசிய இனங்களின் இனப்போராட்டக் களமாகவே இந்தியா உள்ளது'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய இன அடையாளமே இந்தியாவில் உள்ள மக்களின் முதன்மையான அடையாளம் என்று இவர்கள் வாதிடுகின்றனர். ஆனால், இத்தேசிய இன மக்கள் ஜாதிய அடையாளத்துடனேயே தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் தொடங்கி இன்று வரை நடத்தப்படும் அணுவுலை எதிர்ப்பு போராட்டம்வரை, தேசிய இனங்களின் இனப் போராட்டக் களமாகவே இந்தியா உள்ளதாம்.

வியப்பாக இருக்கிறது. ஒவ்வொரு தேசிய இனத்திற்குள்ளேயே நடக்கும் ஜாதிப் போராட்டங்கள் பற்றி ஒரு வரிகூட இங்கு குறிப்பிடப்படவில்லை. "தேசிய இனங்கள் தேசிய இனம் என்ற வகையில் சம மதிப்பு படைத்தவர்கள்' என்கிறது இக்குறிப்பு. ஆனால் எந்த ஒரு தேசிய இனத்திற்குள்ளும் உள்ள மக்களிடம் சம மதிப்பு பேணப்படவில்லையே!  அது ஏன்? ஒரு தேசிய இனத்திற்குள்ளேயே சமமதிப்பு இல்லாதபோது, பல்வேறு தேசிய இனங்கள் எப்படி சமமாக இருக்க முடியும்?

இந்தியாவில் ஜாதி என்ற முதன்மை முரண்பாட்டை ஆளும் வகுப்பினர் இருட்டடிப்பு செய்து, இந்திய தேசியத்தை முதன்மைப்படுத்துவதற்கும்; தமிழ்த்தேசியவாதிகள் தமிழ்த்தேசியத்தை முன்வைத்து, அதே இருட்டடிப்பை செய்வதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. "ஜாதி உள்நாட்டுப் பிரச்சினை' என அய்.நா. அவையில் அடம்பிடிக்கிறது இந்தியத் தேசியம். ஈழப்பிரச்சினை தவிர, எப்பொழுதாவது அய்.நா.வில் சாதி விவாதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த்தேசியம் முன்னிறுத்தியிருக்கிறதா? அவ்வாறு முன்வைத்தவர்களை அது ஆதரித்திருக்கிறதா?

மேலும், "இந்திய நாடாளுமன்றம் தேசிய இனங்களுக்கு சம பிரதிநிதித்துவம் வழங்குவதுதான் ஜனநாயகம்' என்கிறது அக்குறிப்பு. தமிழன் என்ற தேசிய இனத்திற்கு சம பிரதிநிதித்துவம் வழங்கினால், எந்தத் தமிழன் அதை அனுபவிப்பான்? ஊர்த் தமிழனா, சேரித் தமிழனா?

இரண்டு தமிழனும்தான் என்பது பதிலாக இருக்குமென்றால், இன்றே ஊரும் சேரியும் இணைக்கப்பட்டாக வேண்டும். இல்லையெனில் அதற்கு சாத்தியமில்லை.  "எத்தனை கோடி பேர் இருந்தாலும் தமிழர்கள் தமிழர்கள்தான். தேசிய இனங்களின் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் இவர்கள் சமமதிப்பு படைத்தவர்களே' என்றும் அக்குறிப்பு கூறுகிறது.

தமிழ்த்தேசியத்தில் சிறுபான்மை இன மக்களாக இருக்கும் சேரித் தமிழர் களின் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ளாமல், எல்லா நிலைகளிலும் அவர்களுக்கு சம பிரதிநிதித்துவம் அளிக்க இவர்கள் முன்வருவார்களா? ஆனால் நடைமுறையில் அதற்கான அறிகுறி ஏதுமில்லை.

அம்பேத்கர் குறிப்பிட்டதுபோல, இங்கு ஒவ்வொரு ஜாதியும் ஒரு தேசிய இனமாகத் தன்னைக் கருதிக் கொள்கிறது. முதலில் இதை தேசியத்திற்கான மிகப்பெரிய ஆபத்தாக, முதன்மை முரண்பாடாகக் கருதி இம்முரணைத் தீர்க்க முன்வர வேண்டும். அப்பொழுதுதான் "தமிழன்' என்றொரு தேசிய இனம் உருவாகும். ஜாதியையும் இந்து பண்பாட்டையும் உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் தமிழனை தேசிய இனமாகக் கற்பனை செய்து கொண்டு பேசுவது, கட்சி நடத்தப் பயன்படுமே ஒழிய, தமிழனை மனிதனாக்கப் பயன்படாது.          

நான் தெலுங்கு பேசும் தமிழன்!

சென்னை திருவான்மியூரில் உள்ள "பனுவல் புத்தக விற்பனை நிலையம்' ஏப்ரல் (2014) மதத்தை அம்பேத்கர் – சமூக நீதி மாதமாகக் கொண்டாடியது. பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், ஆவணப்படத் திரையிடல்கள் மற்றும் விவாத அரங்கம் என 20 நாட்களாக சிறப்பாக நடத்தியது. பனுவல் குழுவினரை "தலித் முரசு' நெஞ்சாரப் பாராட்டுகிறது.அங்கு நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், "அருந்ததியரும் இட ஒதுக்கீடும்' என்ற தலைப்பில் கவிஞர் மதிவண்ணன் பேசினார்.

"அருந்ததியர்கள் தமிழ்நாட்டின் தொல்குடிகள்; அவர்கள் வந்தேறிகள் அல்லர்' என வரலாற்றுச் சான்றுகளோடு விளக்கினார். சாதி இந்துக்களின், தமிழ்த் தேசியவாதிகளின் பொய்யுரைக்கு தலித் அறிவுஜீவிகள்கூட ஆட்பட்டுள்ளனர் என்பதை ஆதங்கத்தோடு பதிவு செய்தார். ஆனால், தூங்குவதுபோல நடிப்பவர்களிடம் இச்சான்றுகள் எல்லாம் பயன் தராது.

அருந்ததியர்கள் தெலுங்கு மொழி பேசுவதை இங்குள்ள தமிழர்கள் அவர்களின் கூடுதல் தகுதியாகப் பார்க்கத் தவறுகின்றனர். தெலுங்கு மொழி பேசுவதால் அவர்களைத் "தெலுங்கர்'கள் எனப் பாகுபடுத்துகின்றனர். "இங்கிலீஷ்' பேசுபவனெல்லாம் பிரிட்டிஷ்காரனாகிவிடுவானா என்ன? தமிழன் ஆங்கிலம் பேசுவதை ஆதரிக்கும்/ஏற்கும்/அதை கூடுதல் அறிவாக, தகுதியாகப் பார்க்கும் தமிழர்கள், இந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட தெலுங்கு மொழி பேசுவோரை மட்டும் அந்நியராகப் பார்க்கும் நோக்கம் என்ன?

அருந்ததியர்கள் தமிழர்கள்தான் என்ற வரலாற்றுப் பேருண்மையை குதர்க்கவாதிகளிடம் விளக்கிக் கொண்டிருப்பதைவிட, "நான் தெலுங்கு பேசும் தமிழன்' என்று பிரகடனப்படுத்திக் கொள்ள நாம் முன்வர வேண்டும்.

"தமிழை தாய் மொழியாகக் கொண்டவன்தான் தமிழன்' என்று சாதி இந்துக்கள் முன்னிறுத்தும் போலி அளவுகோலை முறியடிக்க, நாம் "ஜாதியற்றவன்தான் தமிழன்' என்ற முழக்கத்தைப் பதிலடியாக்க வேண்டும். சாதி அமைப்பின் கடைகோடியில் இருக்கும் அருந்ததியர்கள்தான் உண்மையிலேயே ஜாதியற்றவர்கள். அந்த வகையில் "தமிழன்' என்ற சொல்லுக்கு முழு தகுதி கொண்டோர் வேறு யார் உளர்?                                    

 இந்தியப் பிரதமரின் அலுவலகம்தான் இந்தியாவின் அனைத்து நிர்வாகங்களையும் கட்டுப்படுத்தக்கூடியது. ஆனால், இவ்வலுவலகத்தில்  01.01.2013 அன்று தெரிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, "குரூப் ஏ' என்று சொல்லப்படும் உயர் பணிகளில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஒருவர்கூட இல்லை. இங்கு "குரூப் ஏ' அலுவலர்களில் இரண்டே இரண்டு பேர்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்.

மற்ற 49 பேரும் திறந்தவெளி போட்டியில் வந்தவர்களே. மத்திய அமைச்சகத்தில் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, துணைக்குடியரசுத் தலைவரின் அலுவலகத்தில் உள்ள அய்ந்து "குரூப் ஏ' அலுவலர்களில் ஒருவர்கூட தலித் இல்லை. குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரேயொரு "குரூப் ஏ' அலுவலர்கூட இல்லை.

இங்கு பட்டியல் சாதியைச் சேர்ந்த மூன்று அலுவலர்களும் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ஒரு அலுவலரும் பணிபுரிகிறார்கள். எஞ்சியுள்ள 27 "குரூப் ஏ' அதிகாரிகள் அனைவரும் திறந்தவெளி போட்டியில் வந்தவர்களே. அதேபோல, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகத்திலும் ஒரேயொரு பிற்படுத்தப்பட்டவர்கூட இல்லை.

– சென்னையைச் சேர்ந்த இ. முரளிதரன் என்ற தகவல் பெறும்  உரிமைச் சட்ட ஆர்வலர் பெற்ற புள்ளிவிவரங்கள் , "இந்தியன் எக்ஸ்பிரஸ்' 22.4.2014

ஒடுக்குமுறைக்கு உதவும் ஜாதியும் மதமும்!

பாஷாசிங் என்ற பத்திரிகையாளர் எழுதியுள்ள "பார்க்கப்படாதவர்கள்' :

இந்தியாவில் கையால் மலமள்ளுபவர்களைப் பற்றிய உண்மை (Unseen - The truth about India's Manual Scavengers) என்றொரு ஆங்கில நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. அம்முக்கிய நூலின் ஒரு பகுதியை மட்டும் இங்கு வெளியிடுகிறோம் : "வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகள் இருந்ததாக அறியப்பட்டாலும், சாதி அமைப்பு வளர்ச்சி பெற்ற போதே கையால் மலமள்ளும் வழக்கமும்  தோன்றியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, அகமதாபாத்திலிருந்து 62 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லோதல் என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், (மொகஞ்சதாரோ) அரப்பா நாகரிகத்தின்போது (2500 கி.மு.) ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறை வசதி இருந்ததும், அவை சுடு செங்கற்களால் கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டிகளுடன் இணைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு கிடைத்த பல்வேறு தரவுகள், கையால் மலமள்ளுதல் என்பது அடிமைகளுக்கு இடப்பட்ட வேலை என்பதாகக் குறிப்பிடுகின்றன.

இந்தியாவிற்கு வந்த முகலாயர்களின் வருகையுடன் சிலர் இதை இணைத்துப் பார்க்கின்றனர். இதன் மூலம் அவர்கள் மீது பழியை சுமத்துகின்றனர். ஆனால், வரலாற்றை காவிமயமாக சித்தரிக்கும் இவ்வாதத்தில் சத்தில்லை. ஆனால் சாதி அமைப்பு இந்து மதத்திலிருந்து பிறந்தது என்பதையும், கையால் மலமள்ளும் வேலை கொடூரமான ஜாதி அமைப்புடன் தொடர்புடையது என்பதையும், இவ்வமைப்புதான் பல நூற்றாண்டுகளாக மனிதத்தன்மையற்ற இப்பணியை தலித்துகள் மீது திணித்தது என்பதையும் பலரும் மறந்து விடுகின்றனர்.

இந்தியத் துணைக்கண்டத்தில் – இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் – கையால் மலமள்ளும் வழக்கம் இன்றுவரை பரவலாக நீடித்து வருகிறது. அதுமட்டுமல்ல; அது சாதி அல்லது மதம் அல்லது பல இடங்களில் இரண்டுடனும் தொடர்புடையதாக இருக்கிறது.'' அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல் இது.                                   

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.