கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சமீபத்தில் ஆலய நுழைவுப் போராட்டத்திற்காக தலித் மக்களை தயார்படுத்துவதற்காக ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தோம். ஏராளமான தலித் மக்கள் அக்கூட்டத்திற்கு திரண்டிருந்தனர். அக்கிராமத்தில் உள்ள பொதுக் கோவில் ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் இருப்பதையும் தலித்மக்கள் வழிபட அனுமதி மறுப்பதையும் சுட்டிக்காட்டி அது சட்டவிரோதமானது என்றும் அம்மக்களை ஆலயத்திற்கு அழைத்துசெல்ல வந்திருப்பதாகவும் தெரிவித்தோம். அப்போது அக்கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி எழுந்து ''நீங்கள் நல்லவர்களாக இருக்கிறீர்கள். கட்டாயம் எங்களை அழைத்துச் செல்வீர்கள். ஆனால் நாங்கள் ஆலயத்திற்குள் நுழையும் மறுநாள் இக்கிராமத்தில் எங்களுக்கு வேலை தரமாட்டார்கள். நாங்கள் நிலமற்ற கூலிகள். எல்லா நிலமும் அவர்களிடமே (சாதி இந்துக்களிடமே) உள்ளது. பிறகு நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் எப்படி கஞ்சி ஊத்த முடியும்? தயவு செய்து திரும்பிச் சென்றுவிடுங்கள். எங்களால் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள இயலாது'' என தெரிவித்தார். இது ஒரு கிராமத்தில் அல்ல. தமிழ்நாட்டில் இந்தியாவில் பல ஆயிரம் கிராமங்களின் நிலை இதுதான். அவர்கள் கையில் நிலம் இருந்திருந்தால், அடுத்தவேளை உணவுக்கு ஆதிக்க சக்திகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை இல்லாதிருந்தால் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகப் போராட அது தைரியம் அளித்திருக்கும் அல்லவா?

- ப.சம்பத் (தலித் பழங்குடியினர் நலத் திட்டங்களா? நகராத திட்டங்களா?)

மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளான உணவு, உறைவிடம், உடை மூன்றும் நிலத்திலிருந்து நிலத்தினாலேயே அமைவன. இந்த நிலத்தின் மீதான உரிமையை வென்றெடுத்த சமூகங்கள் ஆளும் வகுப்பினராக கோலோச்ச, நிலவுரிமை மறுக்கப்பட்ட சமூகங்கள் அடிமைவகுப்பாக, அன்றாடங் காய்ச்சிகளாக , கிராமத்துப் பொதுவீதிகளில் நடக்கவும், பொதுக்குளத்தில் நீர் எடுக்கவும் மறுக்கப்பட்ட தலித்துகளாக உள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தலித் மக்கள் தங்களது உரிமைக்காக இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக சங்கம் அமைத்து போராடி வருகின்றனர்.1810-இல் பரமக்குடியில் நடைபெற்ற தென் மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாநாடு தாழ்த்தப்பட்டோரின் முதல் மாநாடாக கருதப்படுகிறது. இதைத்தொடர்ந்து பழைய இராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் தாழ்த்தப்பட்டோரின் போராட்டங்கள் ஆங்காங்கு நடைபெற்றதாகவும், 1858-இல் முகவை மாவட்ட எழுச்சி, 1885-இல் தளிர்மருங்கூர் போராட்டம், 1906-இல் அரும்பூர் போராட்டம், 1927-இல் முத்துநாடு போராட்டம் 1930-இல் சட்டைக்கட்சி இயக்கம் என்று பல வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. இப்போராட்டங்கள் தென்மாவட்டங்களில் நடைபெற்ற தலித்துகளின் சுயமரியாதைக்கான தீண்டாமை ஒழிப்புப் போரட்டங்கள் ஆகும். அதாவது பிற தலித் மக்களைவிட ஒரளவுக்கு நிலஉரிமை பெற்றிருந்த தென்மாவட்ட தலித்துகளின் சுயமரியாதைக்கான போராட்டங்கள். இந்தப்போராட்டங்களின் ஒரு கூறாக தலித்துகளின் மண்ணுரிமைக்கானகோரிக்கைகள் இடம் பெற்றிருந்ததா? என்பது தெரியவில்லை. நமது அனுமானத்தில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனெனில் இச்சமூகம் ஒரளவுக்கு நில உரிமை பெற்றிருந்தது. அதன் காரணமாகவே இன்று வரை இச்சமூகம் நிலவுரிமை, பொருளாதார கோரிக்கைகளை விடவும் தங்கள் மீது திணிக்கப்படும் இழிவுகளுக்கு எதிராக வன்கொடுமைகளுக்கு எதிராக, சுயமரியாதை மீட்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.


தலித்துகளுக்கான நிலம் பற்றிய உரையாடல் கிறித்தவ பாதிரியார்களால் துவக்கப்படுகிறது என்பது மிகையல்ல. 1889 ஆம் ஆண்டு சர்ச் ஆப் ஸ்காட்லாண்டு (Free Church of Scotland) சபையைச்சேர்ந்த பாதிரியார் ஆண்ட்ரூ (Rev.Andrew) என்பவர் தாழ்த்தப்பட்டவர்களின் குறைகளைக் கண்டறிந்து அரசு கவனத்திற்கு கொண்டு சென்றார். மேலும் சென்னை மிஷினரிகளின் மாநாட்டில் (1891) பாதிரியார் உட்டே(Rev.W.woudie) என்பவர் ‘’The disabilities of Pariah” என்ற ஆய்வை சமர்ப்பித்தார். இதன் காரணமாக பிரிட்டிஷ் அரசு 1891 ஆம் ஆண்டு செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஜே.எச்.ஏ டிரெம்மன் ஹெரே(J.H.A. Tremen Heere) என்பவரை இது குறித்து விசாரணை செய்ய நியமித்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை விவரித்து சமர்ப்பிக்கப்பட்ட இவ்வறிக்கையை ஆதாரமாக கொண்டு வருவாய் வாரியம் ஒரு விரிவான அறிக்கையை இலண்டனுக்கு அனுப்பி வைத்தது. இவ்வறிக்கை தாழ்த்தப்பட்டோரின் நிலைமையை கூறியதோடு அவர்களுக்கு நிலம் வழங்கப்படவேண்டும் என்று பரிந்துரைத்தது. பிரிட்டிஷ் அரசு இக்கோரிக்கையை ஏற்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது. அரசாணை எண் 1010/ 1010A -1892 செப்டம்பர் 30ம் தேதி பிறப்பிக்கப்பட்டது.

அது முதற் கொண்டு இந்த ஆணையின் பேரில் பல்வேறு இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன் சென்னை அருந்ததியர் சங்கத்தலைவர் எச்.எம். ஜெகந்நாதன் போன்றவர்களால் நிலவுரிமை குறித்த கோரிக்கைகளும், நிலவுரிமைப்போராட்டங்களும் முன் எடுக்கப்பட்டுள்ளன என்ற போதிலும் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் மண்ணுரிமை மறுக்கப்பட்டவர்களாகவே இன்று வரை உள்ளனர் சுதந்திரத்திற்கு பின்பு காங்கிரஸ், திராவிடக் கட்சிகளால் நிறைவேற்றப்பட்ட நிலச்சீர்திருத்த சட்டங்களாலும் தலித் மக்களுக்கு மண்ணுரிமையை உறுதிசெய்ய முடியவில்லை. தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட நிலச்சீர்திருத்த சட்டங்கள் தலித்மக்களுக்கு நிலத்தை உறுதிசெய்யும் விதமாக நிறைவேற்றப்படாமல் சினிமா கதைவசனம் போல உச்சவரம்பா? மிச்ச வரம்பா? போன்ற வெற்றுச்சவடால்களையே உற்பத்தி செய்தது.


தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் தலித் மக்கள் தொகை 19.18 விழுக்காடாகும். ஆனால் தலித் மக்களின் பயன்பாட்டில் உள்ள நிலப்பரப்பு வெறும் 7.1 விழுக்காடு மட்டுமே. தலித் மக்களிலும் அருந்ததியர் சமூகம் முற்றிலுமாக மண்ணுரிமை மறுக்கப்பட்ட சமூகமாக உள்ளது.. கீழ் கண்ட அட்டவணை ஒவ்வொரு மாவட்டத்திலும் தலித் மக்களின் பயன்பாட்டில் உள்ள நிலப்பரப்பு குறித்த விவரங்களை அளிக்கிறது. இந்த அட்டவணையில் அருந்ததியர்கள் அதிகமாக வாழ்கிற மேற்கு மாவட்டங்களில் தலித்மக்களின் பயன்பாட்டில் உள்ள நிலப்பரப்பு மிகவும் குறைவாக இருப்பதிலிருந்து அருந்ததியர்களிடம் உள்ள நிலத்தின் விபரங்களை அறியலாம்.

மாவட்டத்தின் பெயர்

அட்டவணைச்சாதிகள் (தாழ்த்தப்பட்டோர்)1991ஆம் ஆண்டு

மக்கள் தொகை

தலித்களின்பயன்பாட்டிலுள்ள

நிலப்பரப்பு

சென்னை

13.79

0.00

செங்கற்பட்டு

25.97

10.60

வடார்க்காடு

20.73

7.33

தர்மபுரி

14.31

5.08

திருவண்ணாமலை

21.46

10.11

தென்னார்க்காடு

27.13

10.78

தஞ்சாவூர்

24.17

8.94

புதுக்கோட்டை

16.82

6.31

பசும்பொன்

16.02

7.41

மதுரை

14.60

5.52

காமராஜர்

18.46

9.91

ராமநாதபுரம்

18.06

10.77

சிதம்பரனார்

17.18

13.64

திருநெல்வேலி

17.89

11.95

கன்னியாகுமரி

4.80

0.63

திருச்சி

19.14

7.45

மேற்கு மண்டலம்

சேலம்

16.70

3.77

பெரியார்

17.16

1.85

நீலகிரி

30.22

0.90

கோவை

16.40

1.38

திண்டுக்கல்

19.41

4.29

 

*குறிப்பு-மாவட்டங்கள் 1991 ஆம் ஆண்டையவை. அதற்கு பின்பு தலித்துகளுக்கு நிலம் அளிப்பதற்கான எந்த நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படாததால் இப்புள்ளிவிபரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை.

ஆதாரம்: Thangaraj 2003 Land and Caste in Tamilnadu

அருந்ததியர்கள் அதிகமாக வாழ்கிற மாவட்டங்களிலேயே இவர்களிடம் நிலம் இல்லை எனும் போது இவர்கள் குறைவாக உள்ள மாவட்டங்களில் இவர்களிடம் நிலம் இருக்க வாய்ப்பில்லை. மேலும் மேற்கு மாவட்டங்களில் தலித் மக்களிடம் உள்ளதாக அரசுப் புள்ளிவிவரம் குறிப்பிடுகிற குறைந்த அளவு நிலம் கூட இப்பகுதிகளில் வாழ்கிற அருந்ததியரல்லாத பிற தலித் மக்களிடம் உள்ள நிலம் என்பதை நேரடி அனுபவத்திலிருந்து அறியும்போது தமிழகத்தில் விவசாய உற்பத்தியில் ஈடுபடும் ஒரு சமூகத்திற்கு முற்றிலுமாக மண்ணுரிமை மறுக்கப்பட்டிருப்பது அருந்ததியர்ளுக்கே . இந்த கசப்பான உண்மையை பல்வறு தலித் இயக்கத்தலைவர்கள் உணர்ந்திருந்த போதும் அருந்ததியர்களின் மண்ணுரிமைக்காக இதுவரை குரல் கொடுக்கவேயில்லை. முதன்முதலாக அருந்ததியருக்கு நிலம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை மார்க்சிஸ்ட் கட்சியின் மூலமாகவே வெளிப்பட்டது. கடந்த 2006 சட்டமன்ற தேர்தலின்போது நிலமற்றவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று தி.மு.க தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அத்திட்டத்தின் கீழ் அருந்ததியருக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்று அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டுக்காக நடத்தப்பட்ட மாநாடுகளில் வலியுறுத்தப்பட்டது. தமிழக வரலாற்றில் ஒரு தேர்தலில் நிலம் பற்றிய வாக்குறுதிகள் இடம் பெற்றது இதுவே முதல்முறை. ஆனால் வாக்குறுதி அளித்து வெற்றிபெற்றபின் இத்தேர்தல் வாக்குறுதி கிஞ்சித்தும் செயல்படுத்தப் படவில்லை. அதற்கு தமிழக அரசு கூறும் காரணம் தேவையான அளவு நிலம் இல்லை என்பதே.


1961 ஆம் ஆண்டின் சென்னை அறக்கட்டளைகள் சட்டம் (Madras public trust Act) கோயில்கள், மடங்கள், அறக்கட்டளைகள் ஆகியவை அதிகபட்சமாக 20 ஏக்கர் நிலம் மட்டுமே தங்கள் சாகுபடிக்கு வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது. ஆனால் தருமபுரி ஆதீனம் 3,500 ஏக்கர் நிலத்தையும், திருவாடுதுறை ஆதீனம் 8,000 ஏக்கர் நிலத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மயிலாடுதுறை, சீர்காழி, நன்னிலம், திருத்துறைப் பூண்டி, நாகப்பட்டினம் ஆகிய வட்டங்களில் மட்டும் 17,000 ஏக்கர் நிலம் பல்வேறு அறக்கட்டளைகளின் பெயரில் உள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 6,50,000ஏக்கர் நிலம் இவ்வகையில் மட்டும் விவசாயத்திற்கு சம்பந்தமில்லாதவர்களிடம் குவிந்து கிடக்கிறது.

மேலும் நில உச்சவரம்பு சட்டத்தில் உள்ள சில ஒட்டைகளை (எடுத்துக்காட்டாக தேயிலை, காபி போன்றவற்றைச் சாகுபடி செய்கின்ற பெருநிறுவனங்களுக்கும் கரும்பு போன்ற பணப்பயிர் சாகுபடி செய்வோருக்கும் நில உச்சவரம்புச்சட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது) நீக்கினாலே பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் அருந்ததியருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அளிப்பதற்கு கிடைத்துவிடும்.

மநுவின் சட்டங்களால் மண்ணுரிமை மறுக்கப்பட்ட அருந்ததியர்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சியிலோ,, சுதந்திரத்திற்கு பின்பு அமைந்த காங்கிரஸ், திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளிலோ தீர்வு அளிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல எந்த ஆட்சியாளர்களுக்கும் அது குறித்த சிந்தனையே இல்லை என்பது வெட்கக்கேடு.

நாடு செழிச்சிட மாடா ஒழச்சவன்

நாத்துப்பறிச்சவன் ஏத்தம் எறைச்சவன்

மூடாத மேனியும் ஒடா இளச்சவன்

போடா விதைகளும் போட்டு வளர்த்தவன்

அரைவயித்துக் கஞ்சி குடிக்கிறான்.-சிலநாள்

அதுவுங் கிடைக்காமத் துடிக்கிறான்


-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

- கவுதம சக்திவேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)