தமிழ்நாடு இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மய்யம்  என்ற அமைப்பு 2007 முதல் 2012 வரை கள ஆய்வு செய்த 531 வன்கொடுமை வழக்குகளில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எந்த அளவிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிற ஆய்வினை மேற்கொண்டது. அதற்கு "நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும்' என்று தலைப்பிட்ட நூலை 23.03.2014 அன்று சென்னையில் வெளியிட்டது. இவ்விழாவில் தமிழகத்தின் முக்கிய ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர்.

murugappan 600ஆர்.நல்லக்கண்ணு : "இந்நூல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பற்றிய ஆய்வு நூலாக இருந்தாலும் ஜாதி ஒழிப்பிற்குமான முக்கிய ஆவணமாக உள்ளது. இது தலித் அல்லது பழங்குடியினருக்கு உள்ள தனிப்பட்ட பிரச்சனை என்று கருதாமல், சமுதாயத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய கடமை உள்ளதை இந்த நேரத்தில் நாம் அனைவரும் உணர்ந்து, இதனை எல்லா மட்டத்திலும் கொண்டு செல்ல வேண்டும்.''

வே.வசந்திதேவி : ""மிகச் சரியான நேரத்தில் வெளியாகியுள்ள மிகப் பொருத்தமான நூல் இது. தலித், பழங்குடியினர் மற்றும் இச்சமூகங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், தலித் கிறித்துவர்கள் மிகக் குறைந்த அளவில் உள்ள குறவர் சமூகம் ஆகிய அனைவர் மீதான வன்கொடுமைகள் குறித்தும் மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ள மிகச் சிறந்த கையேடாக இது திகழ்கிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தினை நீக்கவேண்டும் என்று கூறுபவர்களுக்கு இந்நூல் நல்ல பதிலடியாகும்.''

வ.கீதா : "1921 முதல் தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமைகள் குறித்த தொகுப்பு மிகச் சிறப்பான ஒன்று; இது மிகுந்த ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியதுமாகும். குறிப்பாக, தொடக்கத்தில் ஆதிக்கச் சாதியினர் நிகழ்த்திய சாதிய வன்கொடுமைகளை கண்டும்காணாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது காவல் மற்றும் வருவாய்த்துறை.

ஆனால் 1980 க்குப் பிறகான சம்பவங்களைக் கண்ணுற்றால் தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீது காவல் மற்றும் வருவாய்த்துறையினரே நேரடியாக வன்கொடுமையினை நிகழ்த்துகின்றனர். இதற்கான சமூக, பொருளாதார, அரசியல் பின்னணி குறித்தும் தொகுப்பாளர்கள் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும். மேலும், வாச்சாத்தி போன்ற சில சாதகமான தீர்ப்புகள் மற்றும் சம்பவங்களையும் இணைக்கலாம். இது படிப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையினை உருவாக்கும்.''

கோ.சுகுமாரன் : "இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என்று பலரும் பொதுவாகக் கூறுவார்கள். எப்படி சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை மிகத் தெளிவாக, விரிவாக இந்நூல் கூறுகிறது.

சட்டத்தினை நடைமுறைப்படுத்தப் போராடுகின்ற பல்வேறு அமைப்புகளைக் கொண்ட தமிழகத்தின் நிலையே இப்படியென்றால் புதுச்சேரியின் நிலையினை சொல்லவே வேண்டாம். புதுச்சேரிக்கு   இச்சட்டம் செல்லாது என விவரமில்லாமல் காவல் அதிகாரி கூறுவதிலிருந்துதான் இந்நூலே தொடங்குகிறது.

காவல்துறை சட்டத்திற்கு எதிராகச் செயல்படுவது அனைவருக்கும் தெரிந்த நிலையில், நீதிமன்றமும் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளில் எப்படி அக்கறையில்லாமல் செயல்படுகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.''

கா.கிருஷ்ணன்:"இந்தநூல் இப்போதைய தமிழகத்தின் சமூகச்சூழலில் மிக மிக அவசியமான ஒன்று. தலித் மற்றும் பழங்குடியினர் மீதானவன் கொடுமைகள் குறித்தும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் அத்தனை அம்சங்களும் நடை முறைப்படுத்தப்பட்ட விதம் குறித்தும் எந்த வொருதகவலும் விடுபட்டுப் போகாமல் அனைத்தையும் கவனத்தில் வைத்து சிறப்புற தொகுக்கப்பட்டுள்ளது.''   

Pin It