தலையங்கம்
மனித இனத்தையே அதிர்ச்சியில் உறைய வைக்கக்கூடிய இனப்படுகொலை, ஈழத்தில் நடந்தேறியிருக்கிறது. ஆனால் அண்டை நாடான இந்தியா அகிம்சை வழியில் வன்மம் காக்கிறது. சொந்த நாட்டு மக்கள் (20 கோடி தலித்துகள்) சாதி என்னும் இனவெறிக்கு ஆட்பட்டிருப்பினும், அய்.நா. அவையில் ‘சாதி இனவெறி அல்ல; எனவே அதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது' என்று இந்திய அரசு தடுத்துவிட்டது. தன் நாட்டு மக்களுக்கே துரோகம் இழைக்கும் இந்திய அரசு, அண்டை நாட்டின் இனவெறியை மட்டும் எப்படி எதிர்க்கும்? உலக அரங்கில் (அய்.நா. அவை) இலங்கை அரசின் இனவெறிக்குத் துணை நின்ற இந்திய அரசைக் கண்டிப்பவர்கள், சாதி வெறிக்கு ஆதரவாக அது நின்றதைக் கண்டிக்கவுமில்லை; கண்டுகொள்ளவுமில்லை.
ஈழத்தில் ஒரே வாரத்தில் முப்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருப்பது, தமிழ்ச் சமூகத்தையும்கூட துணுக்குறச் செய்யவில்லை. தன் சாதியை பாதிக்காத எத்தகைய அதிர்ச்சியும் தமிழர்களிடையே கோபத்தையோ, வருத்தத்தையோ ஏற்படுத்தாது என்பது இன்னொரு முறை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய சாதிக்காரன் கொல்லப்பட்டான் என்றதும் எழும் ஆத்திரத்திற்கும் பதற்றத்திற்கும் அளவே இல்லை. அவனிடம் தமிழன் என்ற உணர்வு மேலோங்கி இருந்திருக்குமேயானால், சக தமிழன் வாயில் மலத்தைத் திணித்த போதே ஒட்டுமொத்த சமூகமும் கிளர்ந்தெழுந்திருக்கும். இன்று தமிழினம் அழிக்கப்படுவதைப் பற்றி வாய் கிழியப் பேசும் தமிழ்த் தலைவர்களும்/இயக்கங்களும்கூட, அப்போது சொரணையின்றிதானே கிடந்தனர், எங்கோ ஓரிடத்தில் நடக்கும் அவலம் என்று. ஈழப் படுகொலையைக் காணும் உலகச் சமூகத்தின் மவுனமும் அப்படித்தான் இருக்கிறது.
மீண்டும் மீண்டும் சொல்கிறோம் : ஜாதிகளாலான தமிழ்ச் சமூகத்தை ஜாதியற்றதாக்க முனையாதவரை, அதற்கு முன்னுரிமை அளிக்காதவரை, சாதி ஒழிப்புக்காக உண்மையாகப் போராடாதவரை – தமிழினம் வேறு எதற்காகவும் தன்னியல்பாகக் கிளர்ந்தெழுந்து போராடப் போவதில்லை. இப்பேருண்மையை ஏற்க மறுத்து, அதை மறைப்பதற்குதான் தமிழ்ச் சமூகம் அரசியல் முகமூடியை அணிந்து கொள்கிறது. சுய லாபங்களுக்காக தனித்தனிக் கட்சிகளாகப் பிரிந்து நின்று, தமிழின ஒற்றுமைக்குத் தடையாக இருப்பது அரசியலே என்று கூறி, தங்களையே ஏமாற்றிக் கொள்கின்றனர். இத்தகைய அரசியல் நாடகத்தின் உச்சக்கட்ட காட்சியில்தான் பார்ப்பனரான ஜெயலலிதா ஈழத் தாயானதும்; சூத்திரரான கருணாநிதி தமிழினத் துரோகியானதும்! கால் நூற்றாண்டுக்கும் மேலாக, தங்களின் இன்னுயிரை ஈந்து நடத்தும் ஒரு விடுதலைக்கானப் போராட்டத்தில், ஊழல் கட்சி நடத்தும் ஒரு சாதாரண அரசியல்வாதி விடுதலையைப் பெற்றுத் தந்துவிடுவார் என்று பிரச்சாரம் செய்யப்பட்டதைப் போல, உலகில் வேறெங்கும் ஒரு விடுதலைப் போர் இவ்வளவு மலிவாக ஆக்கப்பட்டதில்லை!
"கடைசியாகப் போர் நடந்த பகுதியில் இருந்து மட்டும் 3 நாட்களில் 80 ஆயிரம் பேர் தப்பி வந்துள்ளனர். கடந்த சில மாதங்களில் மட்டும் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்து அகதிகளாக வந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் உடல் நலக்குறைவு, பட்டினி, சரியான ஊட்டச்சத்து இன்மை, உடலில் நீர்ச்சத்து குறைவு போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். இலங்கை அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களில் யாருக்குமே மருத்துவ வசதியோ, உணவோ, இடவசதியோ இன்றி தவிக்கின்றனர். வவுனியா, யாழ்ப்பாணம், திரிகோணமலை ஆகிய இடங்களில் உள்ள நிவாரண முகாம்களில் அளவுக்கு மீறி மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இச்சூழ்நிலையில் தற்பொழுது அதிகளவில் மீட்கப்பட்ட மக்களும் அங்கு தங்க வைக்கப்பட்டால், பெரும் பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும். தற்பொழுது மீட்கப்பட்டவர்கள் அனைவருமே ஏற்கனவே கவலைக்கிடமான நிலையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது'' என்று அகதிகளுக்கான அய்.நா. அவைப் பிரிவின் (UNHCR) அறிக்கை (19.5.09) தெரிவிக்கிறது.
பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று, லட்சக்கணக்கானவர்களை அவர்களுடைய பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து நிர்கதியாக்கி, இடம் பெயர்த்து – ராணுவத் தடுப்பு முகாம்களிலும், சிறைச்சாலைகளிலும், சித்திரவதைக் கூடங்களிலும் அடைத்து வைத்துள்ள நிலையில் – ஆயுதப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பினும், அதற்கான தேவையை எவரும் மறுத்துவிட முடியாது. இருப்பினும், களத்தில் இன்னல்களை சந்திக்கும் ஈழத் தமிழர்கள்தான் இதைத் தீர்மானிக்க வேண்டும். இக்கட்டான இத்தருணத்தில் மிக முக்கியமாக ஒரு மீளாய்வு தேவைப்படுகிறது. இங்கிருக்கும் தொப்புள் கொடி உறவுகளும், புலம் பெயர்ந்த தமிழர்களும் அரசியல் அந்தரத்தில் பந்தல் கட்டி விடலாம் என்ற கற்பனைக்கு இனியும் ஆட்படுவது, மீண்டும் கசப்பான முடிவுக்கே இட்டுச் செல்லும்.