தமிழ் ஈழம் அமைய அய்.நா. வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், குறிப்பாக இடதுசாரி பசுமைக் கட்சிகளும், தமிழ் ஈழ மக்களவைகளின் அனைத்து உலகச் செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த ஈழத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினை குறித்த கருத்தரங்கம், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைக் குழு கூடும் அரங்கில் ஜூலை 2 நடந்தது.
பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை நடந்த இந்தக் கருத்தரங்கில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல நாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பால் மர்பி தொடக்க உரை ஆற்றினார்.
இடதுசாரி பசுமை இயக்கத்தின் முக்கிய நிர்வாகியான டாஞ்சா நீமர் தலைமை தாங்கினார்.
வைகோ பேசியதாவது:
2009 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டபோது, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, ஜெர்மனி கொண்டு வந்த தீர்மானத்தை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரித்தன.
2010 ஜனவரியில் டப்ளின் தீர்ப்பு ஆயம் சிங்கள அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டுமென்று அறிவித்தது.
இந்த அரங்கில் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன். சூடான் அதிபர் அல்பசீரை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி தண்டனையும் விதித்தார்களே? நூரெம்பெர்க் நீதிமன்றத்தில் நாஜிக் தளபதிகளைத் தண்டித்தார்களே? இதோ, கடந்த வாரத்தில், செர்பிய முஸ்லிம்கள் 8000 பேரை, 95 இல் படுகொலை செய்தான் என்று, போஸ்னியாவின் தளபதி ராட்கோ மிலாடிக்கைக் கைது செய்து விட்டார்களே? ஏன், ராஜபக்சேயைக் கூண்டில் ஏற்றக் கூடாது?
அவன் சகோதரர்களையும், கொலைகாரக் கூட்டாளிகளையும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். அதற்கு ஐ.நா.மன்றம் ஏற்பாடு செய்ய வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம், அந்த முயற்சியில் ஈடுபட வேண்டும்.
நடேசனும், புலித்தேவனும் கொல்லப்பட்டது கொடுமை அல்லவா? இசைப்பிரியா எனும் தமிழ்த் தங்கையை, கொடூரமாகக் கற்பழித்துச் சிங்கள ராணுவத்தினர் கொன்றார்களே? அத் தங்கையின் நிர்வாண உடலைச் சுற்றி நின்று கும்மாளம் அடித்தார்களே? என்ன பாவம் செய்தார்கள்? எட்டுத் தமிழ் இளைஞர்களை, கண்களைக் கட்டி, கைகளைக் கட்டி அம்மணமாக இழுத்துக் கொண்டு வந்து, காலால் மிதித்துக் கீழே, பிடரியில் சுட்டுக் கொன்றார்களே?
சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இந்தக் காணொளி முற்றிலும் உண்மையானது என்றும், இது கௌரவமான போர்க் குற்றங்கள் என்றும், ஐ.நா. மன்றத்தின் உலகில் அநியாயப் படுகொலைகளை விசாரணையை ஆய்வு செய்யும் ஐ.நா.வின் அதிகாரியான கிறிஸ்டோபர் ஹெய்ன்ஸ் என்பவர், ஜெனிவாவில் மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கையாகத் தாக்கல் செய்து விட்டார்.
கிழக்குத் தைமூர் தனிநாடாக வாக்கெடுப்பு நடத்திய ஐ.நா. மன்றம், தெற்கு சூடான் தனி நாடாக வாக்கெடுப்பு நடத்திய ஐ.நா. மன்றம், கொசாவா தனிநாடாக அனுமதித்த ஐ.நா. மன்றம், தமிழ் ஈழம் சுதந்திர தேசமாவதற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டாமா?
ஆம். வாக்கெடுப்பு வேண்டும். அனைத்து நாடுகளின் பார்வையாளர்களின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். வெளிநாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களும், அந்தந்த நாடுகளிலேயே பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பிரஸ்ஸல்ஸ் மாநாடு அறிவிக்கும் செய்தி, ராஜபக்சே மீது போர்க் குற்ற விசாரணை, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான வெகுஜன வாக்கெடுப்பு என்பதாக இருக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், இலங்கையில் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவமும் காவல்துறையும் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
சிங்களர் குடியேற்றங்கள் அடியோடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வீடு வாசல்களை இழந்து முகாம்களில் வைக்கப்பட்டு உள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து உலகச் செஞ்சிலுவைச் சங்கமும், அனைத்து உலகத் தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.
சிங்கள ராணுவத்தாலும், போலீசாலும் கைது செய்யப்பட்டு உள்ள தமிழ் இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வைகோ உரையாற்றினார்.