2003-ஆம் ஆண்டு, இதே போன்ற ஒரு கோடைக் காலம், ஜூலை மாதத்தில் புதிய புத்தகம் பேசுது மாத இதழின் மாதிரிப் பிரதிகள் நம் பார்வைக்கு வந்தன. தமிழில், துறைகள் சார்ந்த சிறப்பு இதழ்கள் என்று வகைப்படுத்துவோமானால் இரு கை விரல்களுக்குள் அடங்கி விடக்கூடியவை மட்டுமே வந்துள்ளன. கடந்த ஐம்பதாண்டுகளில் எனது சிறிய வாசகப் பரப்பெல்லைக்குள் அத்தகைய குறிப்பிடத்தக்க சில இதழ்கள் இவை எனலாம். 

நூலகம் - நூலகத்துறை சார்ந்து 7 ஆண்டுகள் வெளியானது. 

வானொலி - வானொலி ஊடகத்துறை சார்ந்தது. 

கூட்டுறவு, வேளாண்மை, நாடகக்கலை, கலைக்கதிர் இவை தவிர குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்க இதழ்கள் என ஒரு பட்டியலிடலாம். ஆனால் புத்தகங்களுக்காக என்றே புத்தக அறிமுகம், விமர்சனம், புத்தகங்களைப் பற்றிய தகவல்கள், புத்தக விளம்பரங்கள், புத்தகப் பதிப்பாளர்கள் - படைப்பாளர்களின் நேர்காணல்கள் - இப்படியானவற்றை மட்டுமே தாங்கிய ஓர் இதழ் வந்திருக்கிறதா தமிழில்? நானறிந்த வரை, இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பின்னணியில் ‘புத்தகம் பேசுது’ என்று பெயர் தாங்கிய ஓர் இதழ், பேச ஆரம்பித்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன என்று இப்போது நூறு இதழ்களையும் ஒரு சேரப் பார்க்கையில் நம்ப முடியாத அளவிற்குப் பரவசமான உணர்வுதான் ஏற்படுகிறது. 

இந்தியன் ரெவ்யூ ஆஃப் புக்ஸ் என்ற ஆங்கில இதழ் சில ஆண்டுகள் வெளியாகி நின்று விட்டது. அதனுடைய வாசகர்களுள் ஒருவனாக பல சந்தர்ப்பங்களில் - தமிழில் இப்படி ஒன்று வராதா என்று ஏங்கியதுண்டு. சவுத் விஷன் தோழர் பாலாஜியிடம் பேசும் போதெல்லாம், அவர் தனது பதிப்புக்கனவுகளுள் ஒன்றாக இத்தகைய புத்தகம் சார்ந்த இதழ் ஒன்றை நடத்துவது பற்றிப் பேசாமல் அந்த உரையாடல் நிறைந்ததே கிடையாது. ‘பாரதி புத்தகாலயம்’ சார்பில் தோழர் நாகராஜன் முன்கை எடுத்து தோழர் சூரிய சந்திரனின் பொறுப்பில் இதழ்கள் வெளி வரத் துவங்கின. வாசிப்பின் அவசியம் பற்றியும், புத்தகங்களின் சுவையுணர்ந்து அறிவார்ந்த மக்களாகப் பயனடைய வேண்டியதன் தேவை குறித்தும் முதல் இதழிலிருந்தே இடைவிடாத ஒரு குரல் புத்தகம் பேசுது இதழ்களில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இதோ இதைக் கேளுங்கள்: 

தமிழ் எழுத்துலகிலும், வாசகப்பரப்பிலும் பெருமூச்சு இருந்து கொண்டே இருக்கிறது. படைப்பாளிகளின் எழுத்துகள் காகிதங்களில் அச்சேறிக் கொண்டிருக்கின்றன. வாசகர்களின் அலமாரிகளில் புத்தகங்கள் மூடியபடியே இருக்கின்றன. அப்படியே புத்தகங்கள் திறக்கப்பட்டாலும் இதயங்கள் மூடியே இருக்கின்றன. புதிய சங்கம் என்று ஒரு முயற்சியை, தனது பயணத்தின் மிகத் தொடக்க நாட்களிலேயே முயன்று பார்த்தது புத்தகம் பேசுது. ஒரு படைப்பாளியின் படைப்புகள் அனைத்தையும் குறித்த ஒரு ஒட்டு மொத்த ஆய்வரங்கு நடத்துவது என்பதே புதிய சங்கம். அதைப் பற்றிய அறிமுகத்தின் சில வரிகள் தான் மேலே தரப்பட்டுள்ளன. 

தமிழ்ச் சூழலில், புத்தகங்களோடு உறவுகொண்டுள்ள ஒவ்வொருவரும் உணர்ந்து தவிக்கிற ஒரு செய்தியைத் தான் மேற்கண்ட வரிகள் பிரதிபலிக்கின்றன. வெறும் ஏக்கப்பெருமூச்சை விட்டபடி எத்தனை நாள் துயின்றிருப்பாய் என் அருமைத் தமிழ்நாடே! என்று நிலமதிர, வாசக நெஞ் சங்கள் அதிரக் குரல் கொடுத்துக்கொண்டே - செயல்களில் இறங்கியது புத்தகம்பேசுது. முதல் 6 இதழ்கள் மாதிரி (டம்மி)ப் பிரதிகளாகவே அமைந்தன. அது வரையில் வெளியான சிறந்த புத்தகம் பேசுது இதழின் முதல் பிரதியை (2003) மூத்த எழுத்தாளர் தி.க. சிவசங்கரன் அவர்கள் வெளியிட சி.ஐ.டி.யூ. அகில இந்திய தலைவர் ஏ.கே. பத்மநாபன் பெற்றுக்கொண்டார். 

தமிழ்ப்புத்தகங்களைப் பட்டியலிட்டுத் தந்தது புத்தகம் பேசுது. உதாரணமாக முதல் ஆண்டு - 6வது இதழில் மட்டும் பின்வரும் எண்ணிக்கையிலான நூல்கள் 4 தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டு பட்டியலாகத் தரப்பட்டுள்ளன. 

வாழ்க்கை வரலாறுகள்- 207, கவிதைகள்- 108, சிறுகதைத் தொகுதிகள்- 46, திறனாய்வுகள் - கட்டுரைகள் - 6

மொத்தம் 367 

புத்தக வாசிப்பு - வாசித்தவற்றில் சிறந்த நூல்களின் மேன்மைமிக்க பகுதிகளில் மனம் ஒன்றுதல் - சுவைத்து உள்வாங்கியவற்றைத் திரும்பத்திரும்ப அசை போடுதல் - நண்பர்களிடம் உரையாடல்களில் அசை போட்டவற்றைப் பகிர்ந்து பரவசப்படுதல் - எழுதும் கடிதங்களில், கட்டுரைகளில், குறிப்புகளில், பத்திகளில் அவற்றைப் பதிவு செய்தல் - இது ஒரு சக்கர வட்டச் சுழற்சியான செயற்பாடு. ‘இரசிகமணி’ டி.கே.சி. போன்றவர்கள் தமது வாழ்நாள் செயல்பாடாகக் கொண்டிருந்தது இத்தகையதே. ‘புத்தகம் பேசுது’வின் நூறு இதழ்களிலும் இச்செயல்பாடு நடத்திருக்கிறதா ? ஆம்; ஒவ்வொரு இதழிலும் குறைந்தபட்சம் ஒரு பத்தியிலிருந்து அதிகபட்சம் 5, 6 பக்கங்களுக்காவது இத்தகைய ‘ரசனை’ப் பதிவுகள் தொடர்ந்து இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், ‘புதிய புத்தகம் பேசுது’ வின் பதிவுகளில் அடிப்படை நோக்கம் ஒன்று பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. குன்றின் மீது விளக்காகச் சில வெளிப்படையாக ஒளிர்ந்து பொலிகின்றன. நிலத்தடி நீராகவும், மலரினூடே மணமாகவும் சில பகுதிகள் நுட்பமாய்த் தேடியடைய வேண்டியவையாய் அமைந்து ஒளிர்கின்றன.

எளிமை, தெளிவு, வெளிப்படைத்தன்மை இவை யெல்லாம் இரத்தத்தில் கலந்து விட்டாற்போல் இயல்பாக புத்தகம் பேசுது படைப்புகளில் ஊடாடி வருவதை நாம் காண முடிகிறது.

தாய்மொழியின் - எந்த நாடாக, எந்த மொழியாக இருப்பினும் அவரவர் நாட்டிற்கு அவரவர் தாய்மொழியின் - இன்றியமையாத தன்மையை உரத்துப் பேசி வந்திருக்கிறது புத்தகம் பேசுது. இதற்கு, ஒரு சோற்றுப் பதமாக ‘எல்லை காந்தி’கான் அப்துல் கபார்கானின் சுயசரிதையை அறிமுகம் செய்கையில் - பின் வரும் வரிகளைத் தந்திருக்கிறார் பாலமுருகன். ‘சோளகர் தொட்டி’யைப் படைத்தவரும், சிறந்த மனித நேய வழக்கறிஞருமான அவர் எல்லை காந்தியின் சுயசரிதையை அறிமுகம் செய்திருப்பதில் ஒரு சிறப்பு இருக்கிறது. தாய் மொழி பற்றிய இவ்வரிகளை மட்டும் பார்க்கலாம்: Òஒரு நாடு அதன் மொழியாலேயே அறியப்படும். தன் சொந்த மொழியை மறந்த நாட்டை உண்மையில் ஒரு நாடு என்று அழைக்க முடியாது. சொந்தமொழியை மறந்த நாடு உலக வரைபடத்திலிருந்து மறைந்து போகும்.’

செம்மொழித் தமிழ் மாநாட்டின் கோலாகலங்களுக்கு நடுவே, இந்தக் குரலின் உள்ளார்ந்த உணர்வு, நமது தமிழ்ப்பெருமக்களுக்கு ஏற்படுமா?

‘புத்தக அறிமுகம்’ என்பது த £ன் இவ்விதழின் மிக ப் பிரதானமான பணியாக அ ¬ ம ந் தி ரு க் கி ற து . ப ல்லா யி ர க் க ண க் க £ ன புத்தகங்களை, கடந்த 100 இதழ்களின் வாயிலாக அறிமுகம் செய்திருக்கிறது. உதாரணமாக விளம்பரம் ஒன்று - அரைப்பக்க அளவிற்கு - வந்திருக்கிறது. அதில் மட்டும் 78 புத்தகங்களின் தலைப்புகள், ஆசிரியர்கள், விலை முதலிய அடிப்படையான தகவல்கள் வாசகர்களுக்காகத் தரப்பட்டுள்ளன. ஒற்றை வரிக்குறிப்பில்தொடங்கி, ஒரு பத்தி, சில பத்திகள், அரை - முழுப்பக்கம், என்பதாக எல்லா விதமான அளவுகளிலும், வடிவங்களிலும் புத்தக விளம்பரங்கள் வந்துள்ளன. இவற்றை மட்டுமே கூர்மையாகப் படித்து உள்வாங்கிக்கொள்கிற ஒரு வாசகருக்கு சமகால இலக்கியப் பரப்பில வீசியடிக்கிற அலைகளில் மிதக்கிற சுகானுபவம் கிட்டாமற் போகாது.

‘விளம்பரம் தானே!’ என்று உதட்டைப் பிதுக்குகிறவர்கள் சிபிச்செல்வனின் கட்டுரை ஒன்றைப் படிக்க வேண்டும். அவரை நீண்ட காலமாகத் தேடியலைந்து கொண்டிருந்த ஒரு சிறந்த வாசகர், புத்தகம் பேசுது இதழில் சிபிச் செல்வனின் ‘கறுப்புநாய்’ விளம்பரம் படித்துவிட்டு வந்து தன்னை சந்தித்த பரவசமிக்க வினாடிகளைப் பதிவு செய்திருக்கிறார் அவர்.

‘புத்தகம் பேசுது’ இதழின் மற்றொரு சிறப்பம்சம் தமிழ்நாட்டின் மிக முக்கிய இலக்கியப் படைப்பாளிகள் கலை - இலக்கிய - அரசியல் - பதிப்புத்துறை - நூலகம் - திரைத்துறை சார்ந்த ஆளுமைகள் ஆக மொத்தம் 73 பேர்களின் நேர் காணல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்திருப்பது. 87-ம் வயதிலும் அயராத எழுச்சியோடு இலக்கிய - அரசியல் பணியாற்றும் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர்; கவிஞரும் கட்டுரையாளருமான கனிமொழி; பறவையியல் - கல்வெட்டு - தொல்லியல், வரலாற்று ஆய்வு - நூலகத் துறை வளர்ச்சி எனப் பன்முக ஈடுபாடுகளுடன் ஆச்சரியப்படுத்தும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திரைப்படம் - ஓவியம் - எழுத்து - பேச்சு அனைத்திலும் வெற்றிக்கொடி நாட்டிவரும் கலைஞர் சிவகுமார், ‘திசை எட்டும்’ என்று நல்லிலக்கியங்களை மொழி பெயர்த்து வழங்கும் குறிஞ்சி வேலன், வீட்டை அடகு வைத்துப் புத்தகம் வெளியிட்டவரான லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, தமிழ்ப்பதிப்புலகின் ஜாம்பவான்களான பாரிநிலையம் க.செல்லப்பன், ஸ்டார் பிரசுரம் கண. ராமநாதன், இரா.முத்துக்குமாரசாI, விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம், மக்கள் சிந்தனைப்பேரவை மூலம் ஈரோட்டில் புத்தகக் கண்காட்சியை ஒரு வேள்வியென நடத்தும் ஸ்டாலின் குணசேகரன், சுற்றுச் சூழலிய சிந்தனையாளரும், திரைக்கலை ஆய்வாளருமான தியோடர் பாஸ்கரன் - இப்படியாக ஆளுமைகளின் பட்டியல் தொடர்கிறது.

படைப்பாளிகளும் - களப்பணியாற்றுபவர்களும் - ஒன்றிணைகிற புள்ளிகளில் விகசிப்பவர்களாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ச. தமிழ்செல்வன், ஆதவன் தீட்சண்யா, ‘ஆயிஷா’ இரா.நடராசன், பொன்னீலன், கருக்கு பாமா, பத்மாவதி விவேகானந்தன், ச.பாலமுருகன், மறைந்த கந்தர்வன், தி.க.சிவசங்கரன், பா.செயப்பிரகாசம், பூமணி, இன்குலாப், இந்திரன், மேலாண்மை பென்னுசாI, திலகவதி, ஜோடிகுரூஸ், தங்கர்பச்சான், கவிஞர் பாலா, விழிப்பு நடராஜன், த.உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், பிரபஞ்சன், சோலை.சுந்தரபெருமாள், க.பஞ்சாங்கம், லட்சுமணப் பெருமாள், ரவிக்குமார், சா.கந்தசாI, செ.தில்லைநாயகம், கே.வரதராசன், எஸ்.ஏ.பெருமாள், அ.மார்க்ஸ், சு.வெங்கடேசன், ஜே.பி.பி.மோரே, பண்டியக்கண்ணன், மதிவண்ணன், எஸ்.பி.ஜனநாதன் - தேனி. சீருடையான்.

இவ்வாறாகப் பன்முகங்களும் - பலவண்ணங்களும் கொண்ட, விரிந்த, வெவ்வேறான கோணங்களில் சிந்தித்துச் செயல்படுகிறவர்கள் தமது எண்ணங்களை மிக விரிவாகவும் - ஆழமா கவும் தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கிறார்கள்.

‘புத்தகம் பேசுது’வின் வடிவத்தில் 2006-ஆம் ஆண்டு ஒரு மாற்றம் செய்யப்பட்டது. நாளிதழை இரண்டாக மடித்தாற் போன்ற ‘டேபுலாய்ட்’ அளவில் வெளியானது. இந்த வடிவில், இடவசதி தாராளமாக இருந்ததால் விரிவான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தொடர்களாக நான்கு அம்சங்கள் வெளிவந்தன. தமிழின் முன்னணிப் படைப்பாளியான எஸ்.ராமகிருஷ்ணன் ‘கோடுகள் இல்லாத வரை படம்’ தொடரை எழுதி வந்தார். வாஸ்கோட காமா, மார்க்கோ போலோ, இபின் பதூதா, அல்பெரூனி - உள்ளிட்ட பயணிகளின் திரைகடலோடிய அநுபவங்களைப் பற்றிய சுவையான தொடர் இது.

Òஆதியில் கோவா பழங்குடியினரின் வாழ்விடமாக இருந்தது. அவர்களைக் கொன்று அந்த நிலப்பகுதியைக் கிறிஸ்துவ ராஜ்யமாக்கியதில் முதற்காரணகர்த்தா வாஸ்கோடகாமா. காமாவின் கடற்பயணம் எத்தனை சாகசங்களும், விசித்திரங்களும் நிறைந்ததோ அத்தனை அளவு வன்முறையும், வெறிச் செயலும், கட்டுப்பாடற்ற அராஜகமும் கொண்டது. வாஸ்கோட காமா போன்ற கடலோடிகள் தான் நாடு பிடிக்கும் ஆசைகளுக்கு அடிகோலிட்டவர்கள். அவர்களைக் கடல்வழி கண்டு பிடித்தவர்கள் என்று கொண்டாட முடியாது. மாறாக, ராஜ விசுவாசம் என்ற பெயரில் பல தேசங்களைக் கொள்ளையடித்து உயிர்க்கொலை செய்தவர்கள் என்றுதான் கொள்ள வேண்டும். . .’

வெறும் நிகழ்ச்சித் தொகுப்பாக இல்லாமல் இத்தகைய சமூக - அரசியல் சார்ந்த விமரிசனப் பார்வையுடன் எழுதியிருக்கிறார் எஸ்ரா.

‘ஒரு புத்தகத்தை முன்வைத்து...’ என்ற தொடரை ச.தமிழ்ச்செல்வன் எழுதி வந்தார். ஒவ்வொரு கட்டுரையிலும் ஏதேனும் ஒரு புத்தகத்தைத் தேர்வு செய்து அதனுடன் தொடர்புள்ள வேறு சில புத்தகங்களையும் தனது சிந்தனைகளையும் இணைத்து தனக்கே உரிய உணர்ச்சி ததும்பும் நடையில் எழுதியிருக்கிறார் தமிழ்ச்செல்வன். உதாரணமாக, டி.தருமராஜனின் தொகுப்பில் ‘சனங்களின் சாமிகள்’, நூலைப்பற்றிய கட்டுரையில் இந்தப் பகுதியைப் பார்க்கலாம்: Ò-இச்சாமிகள் அநேகமாக அதிகாரத்தால் கொல்லப்பட்ட அல்லது தற்கொலை செய்து கொண்ட அன்றைய மனிதர்கள் தாம். ரத்தக்கறை படிந்த ஒரு வரலாறு இம்மனிதச் சாமிகளுக்குப் பின்னே இருக்கிறது. காலம் காலமாகக் காயம்பட்ட நம் மக்களின் சாமிகள் மட்டும் காயமில்லாமல் எப்படி வந்திருக்க முடியும்?

ஒரு சாமியின் கதையைக் கேட்டால் கண்ணீர் வருகிறது. கண்ணீர் ததும்பும் வரலாறு வருகிறது. சாதிய ஆதிக்கத்தின் வன்முறை ஆடிய ஆட்டத்தின் கொடுமை கண்முன் விரிகிறது. அச்சாமிக்குரிய பூசனைப் பொருட்களை ஆராய்ந்தால் அப்பகுதியின் புவியியலும் விவசாய உற்பத்தி முறைகளும் தெரிகின்றன. . ‘ -இந்த நூலை வெளியிட்டது நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி, பாளையங்கோட்டை. இம் மையம் நடத்திய ஒரு வார கால ‘சனங்களின் சாமிகள்’ மாநாட்டில் வாசிக்கப்பட்ட 16 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இது போலவே கோவை சி.ஞான பாரதியின் சிறுகதைத் தொகுதி, ஆ.சுப்ரமணியனின் ‘நாட்டார் வழக்காற்றியல்’, வேலூர்ப்புரட்சி-1806 (ந.சஞ்சீவி)-போன்று பல நூல்களைத் தமிழ்ச்செல்வன் அறிமுகம் செய்திருக்கும் விதம் மிக வித்தியாசமானது.

நவீனத்துவமிக்க மொழிநடையில் சிறுகதைகளையும், அனுபவத் தொடர்களையும் எழுதிவரும் சிறந்த படைப்பாளி ஜா.மாதவராஜ், இவர், உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு அரசுகளால் தடை செய்யப்பட்ட நூல்களைப் பற்றி ‘காற்றுக்கென்ன வேலி’ எனும் தொடரை எழுதினார்.

இத்தொடரில் ஒரு நூல் - ‘மேற்கு முனையில் எல்லாம் அமைதியாக இருக்கிறது’ (கிறீறீ ஹீuவீமீt ஷீஸீ tலீமீ ஷ்மீstமீக்ஷீஸீ யீக்ஷீஷீஸீt) - இதை எழுதியவரான எரிக்மரியா ரெமார்க்யூ, தனது 18 வயதில் கனவுகள் ததும்பும் பருவத்தில் ஜெர்மனிக்காக முதல் உலகப் போரில் பங்கு பெற வேண்டியிருந்தது. 4 வருடங்கள் 1918-ல் போர் முடிகிறது. வெறுமை, இழப்புகள் - முடிந்த வாழ்க்கை விரட்டுகிறது. போர் கொடுமையாக இருப்பதை உணர்கிறார். போர் மகத்தானது என்கிற அபிப்ராயம் அவருக்குத் துளியும் இல்லை.

மாறிமாறி ஊட்டப்படுகிற தேசபக்தி குறித்த பிரமைகளுக்கு மாற்றாகத் தன் எழுத்தைத் தவிர வேறு எதுவும் அவரிடம் இல்லை. இந்த மன அழுத்தங்களோடு ரெமார்க்யூ எழுதி 1929-ல் வெளிவந்த புத்தகம் இது. முதல் வருடத்திலேயே 10 லட்சம் பிரதிகள் விற்றன. அதாவது முதல் உலகப் போரில் ஜெர்மனி தன் மக்களில் எத்தனை பேரை இழந்திருந்ததோ அதில் ஏறத்தாழ பாதியளவு பிரதிகள். அமெரிக்க சினிமாக் கம்பெனி ஒன்று 1930-ல் இதைப் படமாக்கியது. 1932-க்குள் 29 மொழிகளில் வெளியானது. இதை எழுதியதால் ரெமார்க்யூ ஜெர்மனியிலிருந்து அகதியாய் வெளியேறினார். அவரது இளைய சகோதரி ஜெர்மனியில் நாஜிகளால் கொலை செய்யப்பட்டார். 1932-ல் தடை செய்யப்பட்ட இப்புத்தகம், 1952-ல்தான் தடை நீக்கப்பட்டு விடுதலை பெற்றது. உலக முழுவதும் 80 லட்சம் பிரதிகள் விற்பனையான நூல் இது’ - என்று விரிவாக அறிமுகம் செய்கிறார் மாதவராஜ்.

Òஇலக்கியங்கள், தடைகளை மீறி மக்களை நெருங்கி விடுவதுதான் சுவாரஸ்யம், தொடர்ந்து அதிகார அமைப்புகள் தோற்றுப் போகிற இடமாக இலக்கியமே இருக்கிறது. இலக்கியம், எழுத்து என்பன காற்றுப் போல, சுதந்திர தாகம் இயல்பிலேயே கொண்டவை. காற்றுக்கு வேலி கட்ட முடியாது. காலவெளியில் எழுத்துகளின் இப்படிப் பட்டவெற்றிகளைக் கொஞ்சம் தொகுத்துப் பார்க்கலாம் எனத் தோன்றுகிறது...’ -இப்படியான ஒரு பார்வையுடன் மாதவராஜின் கூர்மையான மொழி, தடைவேலிகளைத் தகர்த்தவாறே பயணம் செய்கிறது.

நான்காவது தொடரை மிக அறிவார்ந்த தொனியில் எழுதியவர் பேரா.ராமானுஜம், ‘படைப்பாற்றலின் அரசியல்’ என்ற தொடரில் படைப்பும் -விமர்சனமும், எது அறிவு, படைப்புக்கு வாழ்நாள் உண்டா - என்பன போன்ற தலைப்புகளில் படைப்பாற்றலின் கூறுகளையும் - உள்ளூற ஊடாடும் அரசியலையும் அலசுகிறார் ராமானுஜம்.

Òபடைப்பு அனுபவமாக, செயல்பாடாக, வாழ்க்கையில் ஒன்றாக, மக்களின் யதார்த்தத்துடன் கலந்து உணரப்படும் போது அதன் விமரிசன சக்தி பன்மடங்கு உயர்கிறது. படைப்புகளுக்கும் - படைப்பாற்றலுக்கும் அடிப்படையான அரசியல் பணி உண்டு. சமூகத்தின் அரசியலைப் பிரதிபலித்து அதே நேரம் அதை விமர்சிக்கும் தன்மை படைப்பாற்றலில் மிக முக்கியமானது. படைப்புகள் அதிகாரத்தின் பக்கம் மிக முக்கியமாக அதை நியாயப்படுத்தும் பணியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதே போல் அதிகாரத்தைக் கேள்வி கேட்பதிலும், விமரிசிப்பதிலும், வேறு வழிகளைக் காட்டுவதிலும் படைப்புகளுக்கு முக்கியப்பங்குண்டு’

-என்பதாக நிறுவுகிறார் பேரா.ராமானுஜம். இவைதவிர செய்தியின் அரசியல் குறித்து ரா. விஜயசங்கரின் தொடர், உலக சினிமா குறித்து அஜயன்பாலாவின் தொடர், வ. கீதாவின் ‘விமர்சனம் பழக’, தான் வாசித்த புத்தகங்கள் குறித்த பிரபஞ்சனின் தொடர், உலக நூலகங்கள் பற்றி சுந்தர், பள்ளித்தளம் பற்றி இரா. நடராசன் (கல்வி முறைகள் சார்ந்த நூல்கள்) - எழுதிய தொடர்களும் இடம் பெற்று வந்துள்ளன.

நோபல் பரிசு பெற்ற நாடின் கார்டிமர், பாப்லோ நெரூடா, போன்றோரின் ஏற்புரைகளை இரா. நடராசன், விஜயசங்கர், அப்பணசாமி ஆகியோர் அற்புதமான உணர்ச்சிமிக்க நடையில் மொழியாக்கித் தந்துள்ளனர்.

100 இதழ்களிலுமாக - பல்லாயிரக்கணக்கான புத்தகங்களையும், அவற்றின் உன்னதமான கருத்துகளையும் மேற்கண்டவாறு புத்தகம் பேசுது தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வந்திருக்கிறது. இதன் அடிப்படை இலட்சியத்தை பாப்லோ நெரூடாவின் வார்த்தைகளிலேயே தொகுத்துரைக்கலாம்: Òமனித குலத்துக்கு ஒருவன் வழங்கும் ரொட்டி, உண்மை, திராட்சை ரசம், கனவுகள் - ஆகிய எல்லாவற்றிலும் படைப்பு ஓர் அங்கமாகும். தினசரிக் கடமைகளில் ஈடுபட்டிருக்கும் மக்கள் அனைவருக்கும் தன் கடமையை ஆற்றும் இந்தப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்வதன் மூலம் மனித குலத்தின் வேர்வையிலும், ரொட்டியிலும், திராட்சை ரசத்திலும், கனவுகளிலும் கவிஞன் பங்கேற்கிறான்; பங்கேற்கவேண்டும். . . !

- கமலாலயன்

Pin It