நமது தமிழ் மொழியின் நாளிதழ்கள், வார, இருவார மாத, இருமாத, காலாண்டு, அரையாண்டு, என அடிப்படை இதழ்களில் புத்தகங்களுக்கென்று கிடைக்க வேண்டிய இடம் கிடைப்பதில்லை. அவ்விதம் புத்தக அறிமுகம், விமர்சனம் அல்லது புத்தக விளம்பரம் கூட இடம்பெறும் பட்சத்தில், எங்கும் குழு ஆதிக்கங்களே கோலோச்சுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. சில தினசரிகளில் ‘சுவிட், காரம், காப்பி’ என்பது போல புத்தகம் பற்றிப் பேசுவதும் ஒரு சடங்கிற்காக இடம் பிடிப்பதாக நண்பர்கள் சொல்வது உண்டு. இவ்விஷயத்தில் தினமணி, தீக்கதிர் போன்ற தினசரிகளின் நிலைப்பாடு வேறு. பொதுவாக பெரும்பான்மை வாசகர்களை, வெகுஜனங்களைப் புத்தகம் பற்றியச் செய்திகள் சென்றடைகின்றனவா என்பதில் சந்தேகம் உண்டு.

தமிழ்ப் புத்தக உலகம் மிகப் பெரியது. வெறும் இலக்கிய நூல்களே மாதம் நூற்றுக்கணக்கில் வெளிவருகிறது. இன்ன பிற தமிழ் இலக்கிய வகைப்பாடுகளோடு பக்தி இலக்கியத்தைச் சேர்க்காமல் போனால் கூட சராசரியாக 1000 புத்தகங்கள் (அதாவது புதிய நூல்கள்) என்பது இந்தியாவின் பல்வேறு மொழிகளின் புத்தக உலகோடு ஒப்பிடும் போது சற்றும் குறைந்தது அல்ல. இலக்கியத்திற்கு அப்பால் இலக்கிய விமர்சன நூல்கள், ஆய்வுக் கட்டுரைத் தொகுப்புகள், அரசியல் நூல்கள், தத்துவ விமர்சனப் புத்தகங்கள், மொழி பெயர்ப்புகள், சிறுபிரசுரங்கள், பாடநூல்கள், கலாசார அமைப்புகளின் வெளியீடுகள் எனப் பரந்து விரிந்த இந்த முடிவற்ற புத்தக வெளியில் புத்தகங்களைப் பற்றிப் பேசுவதற்குத் தமிழில் பிரத்யேகமாக ஒரு இதழ் கூட இருக்கவில்லை.

நமது புதிய புத்தகம் பேசுது இதழ் தொடங்கப்பட்ட போது அதற்குக் கிடைத்த வரவேற்பு இப்போது நினைத்தாலும் நன்றியோடு நினைத்துப் போற்றத்தக்கதாக உள்ளது. நூறு மாதங்கள் கடந்து விட்டன. இதழ் வெறும் புத்தகப் பட்டியல்களை வெளியிட்டுக் கொண்டிருந்த ஆரம்ப காலத்தில் கூட தரமான விமர்சன அறிமுகக் கட்டுரைகளை கைவிடவில்லை. இதுவரை இந்த நூறு இதழ்களின் மூலம் கிட்டத்தட்ட பல ஆயிரக்கணக்கான புத்தகங்களை, புத்தகங்கள் குறித்த தகவல்களை நமது வாசகர்களுக்கு நம்மால் எடுத்துச் செல்ல முடிந்திருக்கிறது எனும்போது நமது தமிழ் வாசகர்களின் வெற்றியாக இதைக் கொண்டாடுவதோடு அந்த வாசகத் தோழமைக்கே இந்த வெற்றியைக் காணிக்கை ஆக்குவதுமே பொருத்தம் என்றும் சொல்லத் தோன்றுகிறது.

தமிழின் சக பதிப்பாளர்களின் துணையின்றி இதனைச் சாதித்திருக்க சாத்தியமில்லை. தமிழ் எழுத்துலக ஜாம்பவான்களும், கலை இலக்கிய, தத்துவத் துறைகளில் தமக்கென்று ஒரு முத்திரை பதித்தவர்களையும் நாம் நேர்காணல்கள் மூலம் வாசகர்களுக்கு மாதம் தோறும் அறிமுகம் செய்து வருகிறோம். இத்தகைய நேர்காணல்கள், குழுமனப்பான்மையும் காழ்ப்புணர்ச்சியும் இன்றி வாசகர்களின் பொதுப் பார்வையை மட்டுமே கருத்தில் கொண்டு தரத்தையும் சற்றும் விட்டுக்கொடுக்காமல் அவை வெளிவருகின்றன. அவரது கருத்தோடு ஒரு புதிய (இளம்) வாசகருக்கு அவர் குறித்த முழுமையான தகவல்கள் சென்றடைவதை இந்த நேர்காணல்கள் நோக்கமாகக் கொண்டவை என்பதையும் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
ஒரு புத்தகத்தை விமர்சனம் அல்லது அறிமுகம் செய்யும் போது மூன்று விதிகளைப் புதிய புத்தகம் பேசுது மனதில் கொண்டு இயங்குகிறது.

1. நமது விமர்சனம் / அறிமுகம் அந்தப் புத்தகத்திற்கு உண்மையானதாக இருக்கவேண்டும்.
2. நமது விமர்சனம் / அறிமுகம் வாசகர்களுக்கு உண்மையானதாக இருக்க வேண்டும்.
3. நமது விமர்சனம் / அறிமுகம் தமிழ் எழுத்துலகத்திற்கு உண்மையானதாக இருக்க வேண்டும்.

நூல் விமர்சனங்கள் மற்றும் அறிமுகங்கள் என்பன நூல் குறித்த எதிர் வினைகளையும் கொண்டிருக்கலாம் தான். ஆனால் அவை அந்தப் புத்தகத்திற்கு உண்மையானதாக தனிமனித காழ்ப்புணர்ச்சியற்று இருப்பது அவசியம். குழு மனப்பான்மைக்கும் தனிமனித அவதூறுகளுக்கும் புதிய புத்தகம் பேசுது இதழில் இடமில்லை. தமிழ் எழுத்துலகத்திற்கு என்றென்றும் ஓர் உற்ற தோழனாகச் செயல்படுவதைப் புதிய புத்தகம் பேசுது விரும்புகிறது.

சமூக விடுதலை உணர்வும் அறிவியல் விழிப்புணர்வும், மனிதநேயமும் கொண்ட படைப்புகளையும் படைப்பாளிகளையும் வாசகர்களுக்கு அடையாளம் காட்டும் தனது இலட்சியத்திலிருந்து இதழ் ஒரு போதும் பின்வாங்கியதில்லை. கடந்த 99 இதழ்கள் மட்டுமல்ல இந்த 100வது இதழையும் சேர்த்து பக்கங்களை இட்டு நிரப்புவதற்காக எதையோ வெளியிட்டு புத்தகங்களுக்கான ஒரு மாத இதழ் என்பதை வெற்றுச் சடங்காக ஒரு போதும் அது சமசரம் செய்தது இல்லை. புத்தகம் என்பது துடிதுடிப்புடன் என்றும் பரந்து விரிந்து கொண்டிருக்கும் பல்வேறு துறைசார் அனுபவங்களின் தொகுப்பு எனலாம்.

ஒரு முற்போக்கு சமுதாயத்தில் புத்தகம் என்பது ஒரு விடுதலைப்பாத்திரத்தை வகிக்க முடியும். ஏழ்மை, அறியாமை, மூடநம்பிக்கைகள், மனித சுரண்டல் இவற்றிலிருந்து ஒரு நியாயமான நிலைநோக்கிய ஜீவ மரணப் போராட்டத்திற்கான இந்த வெற்றியை நோக்கிய ஒரு கிரியா ஊக்கியாகப் புத்தகம் நமது சமுதாயத்தில் செயல்படமுடியும் என்றே புதிய புத்தகம் பேசுது ஆசிரியர்குழு கருதுகிறது. இதழைத் தொடர்ந்து வாசிக்கும் ஒருவர் நாம் புத்தகத்தை ஒரு வியாபாரச் சரக்காகவோ சந்தைக் (நுகர்வு) கலாசாரத்தின் ஒரு அங்கமாகவோ பார்க்கவில்லை என்பதையும் அதை தமிழ்ச் சமூக, பொருளாதார, பாலியல், சாதி, மத, இன, பிரதேச ஏற்றத்தாழ்வுகளை உடைத்தெறியும் ஒற்றை ஆயுதமாக அணுகுவதையும் உணர்ந்திருக்க முடியும். அத்தகைய புரிதலோடு நாம் அடுத்து வரும் இதழ்களையும் அணுக முடியும்.

மக்களிடையே சமூக மாற்றம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பெரிய சக்தியாக, அரசியல் செயல்பாடாக நாம் புத்தகக் கண்காட்சியைப் பார்க்கிறோம். அதனால்தான் புதிய புத்தகம் பேசுது இதழ் பாப்பாசி உட்பட பல்வேறு தோழமை அமைப்புகளுடன் இணைந்து புத்தகக்காட்சிகளை நடத்துவதில் பெரும்பங்கு வகித்து வருகிறது. பண்டிகைகளுக்குச் சிறப்பிதழ்கள் போடுபவர்களிடமிருந்து வேறுபட்டு அதனால்தான் நாம் சென்னை, திருப்பூர், நெய்வேலி, ஈரோடு, மதுரை, கோவை என்று புத்தகக் கண்காட்சிகளுக்கான சிறப்பு இதழ்களைத் தயாரித்து வருகிறோம். அத்தகைய இதழ்களுக்கு வாசகர்களிடம் கிடைத்த ஏகோபித்த ஆதரவு வரும் ஆண்டிலும் அவ்விதமாகச் செயல்பட நம்மை ஊக்குவித்துள்ளது.

தமிழின் தன்னிகரற்ற சிறப்பு முயற்சிகளாக ‘புதிய புத்தகம் பேசுது’ இதழ் தயாரித்த ‘சிறப்பு மலர்கள்’ வாசகர்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளன. இதுவரை 6 சிறப்பு மலர்கள் வெளிவந்துள்ளன. 2008 சென்னை புத்தகக்காட்சியில் 10 நாட்களும் 10 தலைப்புகளில் 10 ஆளுமைகள் தயாரித்த ‘10க்குப் 10த்து’ சிறப்பிதழ் வெளிவந்தது. தமிழ்ப் பதிப்புலக வரலாற்றுச் சிறப்பிதழ், உலகப் புத்தகதின, காப்புரிமை குறித்த சிறப்பிதழ் ஆகியவை சர்வதேச அளவிலான புத்தக உலகை தமிழ் வாசகனின் சிந்தனா வாயிற் படியில் சென்று இறக்கும் அரிய முயற்சிகள் ஆகும். முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்தப் புதிய புத்தகம் பேசுது 100வது இதழும் ஒரு ‘நாட்டுடைமை ஆக்கப்பட்ட தமிழ் எழுத்துகள்’ குறித்த கருவூலமாக வெளிவருகிறது. அத்தகைய வரிசையில் நாம் ஆண்டுதோறும் நடத்தும் உலகப் புத்தக தினத்தின் - வாசகர் - எழுத்தாளர் - பதிப்பாளர் - சங்கமம் நிகழ்வையும் குறிப்பிடவேண்டும்.

புத்தகங்களை வாசகர்களுக்கு எடுத்துச் செல்வதற்காகவே தொடங்கப்பட்ட ஒரு இதழின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்க வேண்டும். நமது 100 இதழ்களின் மொத்தச் செய்தி குறித்து கமலாலயன், வீ. அரசு ஆகியோர்களின் கட்டுரைகள் இதே இதழில் இடம் பெறுகிற இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சூழலில், இச்செயல்பாட்டில், வளர்ச்சியில் என்றென்றும் உடனிருந்த தோழமை நெஞ்சங்களான சக பதிப்பாளர்கள், நண்பர்கள் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்சம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அரசு நூலகத்துறை மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கும், வாசகர்களுக்கும் புதிய புத்தகம் பேசுது நன்றியைக் காணிக்கை ஆக்குகிறது. மேலும் இவ்விதழ் சிறக்க விளம்பரம் அளித்துவரும் நல்லி சில்க்ஸ், இந்தியன் வங்கி, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், ஸ்ரீராம் சிட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

இதுவரை தமிழ்ப் பதிப்புலகம், எழுத்துலகம், வாசகர் உலகம் இவற்றை இணைக்கும் பாலமாகச் செயல்பட்டு வரும் நாம், வருங்காலங்களில் இந்த உறவைப் பலப் படுத்துவதோடு பிறமொழி நூல்கள், சர்வதேசப் புத்தகத் திருவிழாக்கள் குறித்த செய்திகள், தோழமை இதழ்களை அறிமுகம் செய்தல், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், ஆராய்ச்சி, மாணவர்களிடம் ஆசிரியப் பெருமக்களிடம் வாசிப்பைப் பரவலாக எடுத்துச் செல்லுதல் உட்பட பல்வேறு தளங்களில் நமது பார்வையைச் செலுத்த இருக்கிறோம். தமிழ்ப் புத்தகங்களுக்கு என்று ஒரு இணையதளத்தை (www.thamizhbooks.com) ஏற்கனவே கொண்டிருக்கிறோம் என்றாலும் அதனை விரிவுபடுத்தி புத்தகச் செயல்பாட்டிற்கான முக்கிய வெளியாக அதனை மாற்ற இருக்கிறோம். இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலும் புத்தகங்கள் கிடைக்கவும், 200க்கும் மேற்பட்ட நகரங்களில் பாரதி புத்தகாலயம் தனது கிளைகளைத் தொடங்கவும், வழிவகை செய்ய இருக்கிறது என்கிற மகிழ்ச்சியான செய்தியையும் பகிர்தல் அவசியம்.

இந்த 100வது இதழை நாட்டுடைமை ஆக்கப்பட்டோர் குறித்த சிறப்பிதழாகத் தயாரித்த வேளையில் தமிழகம் தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், எந்த மொழி இலக்கியத்திலும், ஒரு அரசு எழுத்துக்களை நாட்டுடைமை ஆக்கி மக்களிடம் அந்த எழுத்துக்கள் செல்லவும், படைப்பாளிகளின் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்டு சமூகத்தில் ஒரு அந்தஸ்தோடு வாழ வழி செய்ததாகச் சரித்திரமே இல்லை என்பதும், அவ்விதம் செய்திருக்கும், செய்து கொண்டிருக்கும் ஒரே அரசாங்கம் தமிழக அரசாங்கம்தான் என்பதும் சிலிர்க்க வைக்கும் உண்மையாக நம் முன் விரிவதைப் பார்க்கிறோம். இலக்கிய உலகை மதித்துப் போற்றும் இத்தகைய போக்கை என்றென்றும் ஆதரிப்போம். அனைவருக்கும் நன்றி. பயணம் தொடரும்.

இவ்விதழ் தயாரிப்புக்கு உதவிய நூலக ஞானி திரு. ப. பெருமாள், திரு. பெ.சு. மணி, முனைவர் பு. ஜார்ஜ், நூலக இயக்குனர் திரு. க. அறிவொளி, விருபா.காம். திரு. து. குமரேசன், முல்லைப் பதிப்பகம் திரு. மு. பழனி, ராணி மைந்தன், தமிழ்மகன், தளவாய்சுந்தரம், ரெங்கையாமுருகன், பாஸ்கர் (கலைஞர் டி.வி.), கோ. கணேஷ் ஆகியோர்களுக்கும் மற்றும் சாகித்ய அகாதெI, தமிழ் வளர்ச்சித்துறை ஆகிய நிறுவனங்களுக்கும் நன்றி.

- புத்தகம் பேசுது ஆசிரியர் குழு.

Pin It