labours_560

(உத்தரப் பிரதேசம் நொய்டாவில் பூமிக்கு அடியில் மின்சார ஒயர்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்)

நெஞ்சுணர்ந்த வலியின் பரவலில்
உடல் தளர்ந்து சோர்கிறது

மீன்கொத்தும் பறவையின் கூரிய அலகென
மனிதம் இரைகொத்த நடக்கும் வாழ்வு
வலியின் மீது பூசிய புன்னகையின் சாயத்தில்
உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கிறது
காலத்தின் கைகள்

சகதிச் சேற்றின் ஈரமெனினும்
சுவாசம் அறுக்கும் குப்பை நாற்றமெனினும்
கண்களைப் பிய்க்கும் கழிவின் குழியெனினும்
தலைகீழாய் தொங்கியாவது திணறுகிறது
வாழ்வின் நிமிடம்

புதைகுழியில் மண்ணாய் புதைந்தும்
வயல்வெளியில் எருவாய் உதிர்ந்தும்
நீள்சாலைகளில் கற்களிடையே தாராய் கசிந்தும்
உடல்கொள்ளும் மாற்றங்களில்
நிரம்புகின்றன பசிவயிறுகள்

உழைப்பின் நரம்புகள் புடைக்கபுடைக்க
கொப்பளிக்கும் குருதியில் ஆவியாகும்
வியர்வைத் துளிகள் ஆகாயத்தின் பரப்பெங்கும்
மேகங்களாகின்றன

பாறைகளைக் குடைந்தும்
பள்ளங்களில் நிறைந்தும்
தீச்சூளைகளில் வெந்தும்
பாதாளங்களில் விஷ வாயுக்களை
சுவாசித்தும்
அமுதம் கடைய வேண்டியிருக்கிறது
அசுர வாழ்விற்கு

Pin It