இவைகளை ஒழிப்பதற்கு இம்மாதிரி கண்டிப்பாக பேசுவதன் மூலம் நாம் கெட்ட பெயர் வாங்கிக் கொள்ள வேண்டியது தான். தோழர் பொன்னம் பலனார் கூறுவது நடு நிலைமையிலிருந்து யோசிக்கும் எவருக்கும் அக்கிரமம் என்றோ பொய் என்றோ ஏற்படாது.

சாமியைப் பற்றிக் குறை கூறுவதும் அக்கிரமமல்ல. கடவுள்களின் பேரால் இந்நாட்டில் சகிக்க முடியாத கொடுமைகள் நடப்பது எவ்வளவோ சொல்லிப் பார்த்தாகி விட்டது. எத்தனையோ கோடி ரூபாய்கள் வீணாக்கப் படுவதை தடுக்க எங்கள் இயக்கம் எவ்வளவோ சொல்லியும் வந்தது. இனி என்ன செய்வது இனியும் பச்சை பச்சையாகவே பேசினாலும் மக்கள் மனதில் பட்டு அவர்கள் திருந்த வேண்டும் என்ற எண்ணமே தவிர வேறு யாரிடத்திலும் துவேஷமோ சண்டையோ எங்களுக்கு கிடையாது. அவ்வித நோக்கத்துடனும் இது பேசப்படவே இல்லை.

கடவுளின் பேரால் மதத்தின் பேரால் மத ஆச்சாரிகள் புரோகிதர்கள் குருக்கள் பாதிரிகள் சங்கராச்சாரிகள் செய்யும் அநீதியும் அக்ரமமும் எவ்வளவு? சுயமரியாதைக்காரன் அவர்களின் குறைகளை கூறுவதிலுள்ள அக்கிரமம் எவ்வளவு என்பதை விசாரிக்க ஒருகமிஷன் ஏற்படுத்தி தீர்ப்புக் கூறச்செய்தால் சுயமரியாதைக்காரன் அயோக்கியத்தனமாகப் பேசுகிறானா அல்லது சங்கராச்சாரியும் அவரது கூட்டமும் பேசுவதும் எழுதுவதும் எழுதி வைத்திருப்பவைகளும் அயோக்கியத்தனமானதா என்பது வெளியாகும்.periyar 600சு. ம. காரர்கள் வாயில் பேசுகிறார்கள், இது நாளை காற்றோடு காற்றாப் பறந்து போகும். ஆனால் சங்கராச்சாரி கூட்டம் எழுத்தில் நம்மை நாய் பன்றி யிலும் கடையாய் எழுதி வைத்திருக்கிறார்கள். இதில் யார் அயோக்கியர்கள்.

மேலெழுந்த வாரியாக கவனிப்பதில் பிரயோசனமில்லை சுய மரியாதைக்காரன் சொல்வது என்ன என்பதை சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் எந்த அறிவுள்ள மனிதனும் சு. ம. காரன் மேல் குற்றம் சொல்ல முன்வர மாட்டான்.

இன்று நடக்கும் அக்கிரமங்களை யெல்லாம் மக்களுக்கு விளக்கி காட்டி அதனால் வரும் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் அனுபவிக்கவே சுயமரியாதைக்காரன் தயாராயிருந்து வந்திருக்கிறான். இதுவே காரணமல் லாது சங்கராச்சாரியையோ அரசியல் சங்கராச்சாரி காந்தியையோ அனாவசி யமாக குற்றம் சொல்லிக் கொண்டு திரியும் வேலை சு. ம. காரனுக்கு இல்லை.

தொழிலாளியின் நிலைமை.

தோழர்களே!

இந்நாட்டில் அல்லது உலகத்தில் தொழிலாளர்கள் என்னும் கூட்டம் எப்படி ஏற்பட்டது, அது ஏன் ஏற்பட்டிருக்கவேண்டும், தொழிலாளர் கடமை என்ன அவர்கள் நலனுறும் வழி எப்படி, அவர்களது தொழில் உழைப்பு சரியாக இருந்தும் அவர்களது வீழ்ச்சி வறுமைக்குக் காரணம் என்ன, இன்றும் இவர்கள் யாரால் எதனால் இந்த நிலைமையிலிருக்கிறார்கள் என்ற விஷயங் களை முதலில் கவனிக்க வேண்டும்.

தொழிலாளர்கள் என்பவர்கள் யார் என்றால் சரீர உழைப்பாளிகளே தான். பலர் பலவிதமான தொழில்களைச் செய்யலாம், ஒருவர் வெட்டலாம் ஒருவர் சுமை சுமக்கலாம், மற்றவர் முடையலாம், இன்னொருவர் சிறைக்க லாம் வெளுக்கலாம், மற்றொரு கூட்டம் புது புது விதமாக மக்களுக்கு வேண்டிய சாமான்களையும் செய்யலாம் - இவர்கள் முதலியவர்கள் எல்லாம் தொழிலாளிகளே ஆவார்கள். இவர்கள் ஏன் பிரிக்கப்பட்டு ஒருவருக்கொரு வர் சம்பந்தமில்லாமல் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை யோசித்தால் உண்மையும் அதிலுள்ள பலத்த சூழ்ச்சியும் விளங்காமல் போகாது.

மனிதன் ஆதியில் நாகரீகமில்லாமல் காட்டுமிராண்டித்தனமாகவும், கூட்டுறவு முறை என்பது சிறிதும் இல்லாது தனித்தனியே வாழ்ந்து வந்த காலம் நாகரீகம் என்பது தெரியாமலும் ஏதோ கிடைக்கும் வஸ்துவைத்தின்று தண்ணீர் குடித்து விட்டு வெட்டவெளிகளிலோ கல்பாறைகளிலோ படுத்து உறங்கிய காலம் நீங்கி மனிதன் மனிதனுடன் கூடி சமூகமாய் வாழ ஆரம்பித்த காலத்திலேதான் தொழிலாளி ஏற்பட்டிருக்கவேண்டும். ஏனெனில் மனிதன் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து விடுபட்டவுடன் பெண்டுபிள்ளை என்ற பாசம் ஏற்பட்டு கூடி வாழ நினைத்ததால் தனக்கென ஒரு குடிசை ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமாயிற்று. குடிசை கட்டவேண்டுமானால் அதற்குறிய சாமான்கள் கம்பு கழிகள் முதலியன திருத்தி அமைக்க தொழில்கள் செய்துதான் தீர வேண்டும். அதில் ஒருவருக்கொருவர் கூடி உதவி செய்துதான் ஆக வேண்டும்.

குடிசை வாழ்க்கையிலிருந்து இன்னும் கொஞ்சம் வாழ்வு உயர உயர அறிவுசிந்தனா சக்தியும் வளர வளர வாழ்க்கையில் சுகமாக இருக்க வேண்டி பல சௌகரியங்களை செய்து கொண்டான். அச்சௌகரியங்களை யடைவதற்கு தன்னாலும், பிறராலும் தேவையான வேலைகள் அவசியமாக இருந்தது. எனவே அவ்வப்போது தோன்றிய யுக்திக்குத் தகுந்த பிரகாரம் மனிதனுக்கு தேவைக்கு தகுந்த உபகரணங்களிலிருந்து இன்று நிலைமை வரையிலும் தொழில்கள் ஏற்பட்டன. முன் சொன்னபடி குகையிலிருந்து வந்ததற்கு பதிலாக குடிசைவேண்டும்போது அடுத்தவனும் சேர்ந்து கட்டிக் கொண்டான் என்ற முறையிலேயேதான் வர வர அறிவுக்குத் தகுந்தபடி தொழில் விருத்தியும் கூட்டுறவும் பெருகிவந்தது. அந்த நிலையில்தான் தனி மனிதன் குடும்ப மானான். இதனால் நாளாவட்டத்தில் அறிவு விருத்தியால் சிலருக்கு சோம் பேறித்தனம் ஏற்பட்டு அடுத்தவன் உழைப்பில் 3-வது மனிதன் உழைப்பில் சுகம் அனுபவிக்க எண்ணம் தோன்றிற்று. சோம்பேறித்தனமாக உண்டு உறங்குவதற்கே யோசனை கண்டுபிடிக்கவே இப்போதுள்ள துன்பங்கள் ஆதிகாலத்தில் ஏற்பட்டன. அதை எப்படி வைத்துக் கொண்டாலும் சரி, ஒருவன் உழைக்க அதில் மற்றவன் வாழ விரும்பும் காலம் ஏற்பட்ட அன்றே இத்தனை சூழ்ச்சிகளும், தீங்கும் ஏற்பட்டன. நிற்க,

இப்போது தொழிலுக்கு என்றே அவனுக்கு கூலியும் வரையறுக் கப்பட்டிருக்கிறது. நிலம் ஒருமனிதன் தனக்குச் சொந்தம் என்று சொல்லிக் கொண்டு ஒய்யாரமாக நாமம், விபூதியையணிந்து கொண்டு காலையிலும், மாலையிலும், வந்து ஏண்டா அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை என்று அதிகாரம் செய்து விட்டுப்போவான். ஆனால் நிலத்தில் வேலை செய்யும் தொழிலாளியோ, நிலம் கல்லும் முள்ளுமிருந்தாலும் அதை வெட்டி உழுது நீர் இறைத்து விதைத்து அறுத்து விளையும் தான்யத்தை மலை போலக் குவித்து வைத்து ஓடோடியும் முதலாளி என்பவனை அழைத்துக் கொண்டு வந்து அளந்து கொட்டிவிட்டுதான் இரத்த வேர்வை சொட்ட சொட்ட பாடுபட்டதற்கெல்லாம் 1, 2 கலம் மட்டும் பெற்றுக் கொண்டு திருப்தியடைய வேண்டும். இது கிருஷித்தொழில் செய்யும் தொழிலாளிகளுக்கு மட்டுமல்ல. மற்ற ஒவ்வொரு தொழிலும் இதுபோலவே சோம்பேறியே ஊதியமடைகிறான். இம்முறை மாற்றப்படாமலிருப்பதற்கு தொழிலாளிகள் பணம் காசு மீத்து மிச்சப்படுத்தி முன்னேறிவிடாமலிருப்பதற்கும் ஜாக்கிரதையான பாதுகாப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன.

ரூபாய்க்கு பத்துபடி சோளம் விற்றால் தொழிலாளிக்கு சம்பளம் மாச 1க்கு 28படி சோளமிருக்கும் 5படி சோளமாக விற்றால் மாதச்சம்பளம் 2 அல்லது 3ரூபாயாகத்தான் இருக்கும். எனவே இம்மாதிரி தொழிலாளிகள் முன்னேறாமலும் முதலாளிகள் அல்லது சோம்பேறி கூட்டத்தினர்கள் ஆதிக்கம் எப்போதும் வலுவடையவே அதற்கு சாமி மதம் சாத்திரம் புராணம் ராணுவம் அரசு முதலியவைகள் முதலாளி களால் ஏற்படுத்தியிருக்கிறது. இக்கொடுமைகள் நீங்கி இனி உலகமே சாந்தியையடைந்து உலக ஒற்றுமை சகோதரத்துவம் எல்லாம் உண்டாகவே முத லாளி தொழிலாளி சமத்துவம் என்னும் கிளர்ச்சி ஏற்பட்டது. உலகப் போராட்டத்திற்கும் அதிருப்திக்கும் கஷ்டத்திற்கும் காரணம் பாடுபடுகிறவன் சோம்பேறி அல்லது தொழிலாளி அவன் உழைப்பைத் தின்கிறவன் என்றும் இரண்டுவித தத்துவம் இருப்பதுதான்.

இது மாற்றப்பட்டு உலகில் தொழிலாளியன்றி சோம்பேறிக்கு இட மில்லை என்று சொல்லக்கூடிய நாளில்தான் “மனித சமூகம் தனது நிலையை அடைந்தது” என்று சொல்லமுடியும். அல்லது மிருகத்திலும் கேவலம் என்றுதான் சொல்லவேண்டும். மனிதனைத்தவிர உலகில் வேறு எந்த ஜந்துவேனும் அடுத்ததை ஏமாற்றி அடுத்த ஜந்துவின் உழைப்பில்தான் வாழவேண்டும் என்று இவ்வளவு சூழ்ச்சி செய்வதில்லை. ஆனால் மனித சமூகத்தில் மாத்திரம்தான் இந்த எண்ணம் இருந்துவருகிறது. இது மாறுவது தான் உண்மையான (மனிதசமூகத்தின்) முன்னேற்றமாகும். எந்த மனிதனாவது சோம்பேறிகளுக்கு பாடுபடவென்று பிறப்பதற்கு முடியவே முடியாது. வழக்க மில்லாத இயற்கைக்கு மாறான முறை இன்று மக்களிடமிருந்து வருகிறது.

அதுவும் உயர்ந்த லட்சியத்தின் பேரால் மதம், கடவுள், அவதார புருடர்கள் என்பவர்களின் வாக்கு சட்டம் ஆகியவைகளினால் அரசாட்சி முறையினால் பெரும்பான்மையான மக்கள் ஒரு சிறுகும்பலுக்கு உழைத்துப் போடவேண்டியதிருக்கிறது. இதை மாற்றி விடாமல் ஜாக்கிரதையாக பலவித பந்தோபஸ்து செய்யப்பட்டிருக்கிறது. அந்த பந்தோபஸ்து தான் தொழிலாளர் களிடையில் கடவுள் உணர்ச்சியைப் புகுத்தியதாகும். கடவுள் உணர்ச்சி மத நம்பிக்கைகளால் தான் கஷ்டப்படும் எந்த மனிதனும் நாம் பாடுபடவே பிறந்தோம் என்று கருதுகிறான். அது தலைவிதி ஜன்மப் பலன் என்று எண்ணுகிற இழிதகமைக்கு ஆதாரமாகிறது.

சாதாரணமாக நீங்கள் ஒரு கஷ்டப்பட்டு நிலத்தை வெட்டி உழுது பண்படுத்தி, விதைத்து அறுத்து முதலாளிக்குக் கொடுக்கும் ஒரு தொழி லாளியை ஏன் நீ இத்தனைபாடுபட்டுத் தேடிய தானியத்தைக் குவித்து கொடுத்து விட்டு நீ மட்டும் ஏன் சரியாக உணவுக்கும் இல்லாமல் பட்டினியாக ஓட்டைக் குடிசையில் முடக்கிக்கிடக்கிறாயா என்றும் ஏன் உனது உழைப்பின் பலனை நீ அனுபவிக்க முடியவில்லை என்றும் நீதானே எல்லாம் பாடுபட்டவன் என்றும் கேட்டீர்களானால் அவன் “நான் என்னசெய்வேன். நான் தான் பாடு பட்டேன், உழைத்தேன், அறுத்தேன், குவித்தேன். ஆனாலும் நமக்கு அநுபவிக்க கொடுத்து வைக்க வேண்டாமா? நமது தலைவிதிப்படி தானே எதுவும் நடக்கும்” என்று சற்றும் தயங்காமல் கூறுவான். அதுமட்டுமா. நமது கிரகம் என்றும் கிடைத்ததை உண்டு இருக்கவே கடவுள் கட்டளை என்றும் சொல்லுவான். ஆனால் முதலாளி என்பவனைப் பற்றி அவன் ஏன் பாடுபடாமல் அனுபவிக்கிறான் என்றால் போன ஜன்மத்தில் புண்ணியம் செய்தவன், லட்சுமி புத்திரன், கொடுத்துவைத்தவன் என்பது போன்ற வார்த்தைகளைச் சொல்வானே யன்றி மனம் நோகமாட்டான் எந்த தொழி லாளியாயும் நாம் தான் உழைத்தோம், நாம் தான் உழைத்தோம், நாம் அனுபவிப்பது தான் ஒழுங்கு, முதலாளி என்பது வெறும் சூழ்ச்சி தன்மை, அவனது செயல்கள் அக்கிரமமானது என்று எவனும் சொல்லவுமாட்டான்.

ஒரு கொத்தன் நாலு அடுக்கு ஐந்து அடுக்கு மாடி கட்டிக் கொடுத்து விட்டு அவன் மட்டும் மேல் கூறையும், சுவருமில்லாத ஈரமுள்ள “குடிசை” யில் பாயும், தலையணையுமின்றி படுத்து தூங்குவான். அவனையும் அந்தப்படி கேளுங்கள் அவனும் அவ்விதமே தலைவிதி என்று தான் பதில் சொல்வான். காசு மாலைகளையும், வைர நகைகளையும், சங்கிலியும் செய்து கொடுக்கும் தொழிலாளியின் மனைவி மக்களுக்கு கழுத்திலோ நூல் சறடு தான் இருக்கும். பட்டாடைகள் உயர்ந்த கம்பளங்கள் நெய்து கொடுக்கும் நெசவுத் தொழிலாளியும் தனது இடுப்பில் உடம்பை மறைக்கப் போதிய துணி இருக்காது. அவனது குழந்தைகளோ 10, 12 வயது வரையில் கோவணம் கட்டியே தான் அலையும் அவனும் நான் என்ன செய்வேன் எனது தலைவிதி முன் ஜென்மபலன் என்றுதான் சொல்லுவான். பாத்திரத் தொழிலாளர்களாகிய நீங்களும் அனலிலிருந்து காய்ந்து கொட்டியிடித்து அழகாக பாத்திரங்களைச் செய்து கொடுத்து விட்டு கூலிக்கு மண்டை யுடைத்துக் கொண்டு சோம்பேரிக் கூட்டத்தினர் மட்டும் தான் உல்லாசமாக வாழவும், நீங்கள் நாளுக்கு நாள் தரித்திரப்படவும் ஏன் என்று கேட்டால் நாம் என்ன செய்வோம். எல்லாம் கடவுள் பகவான் ஆண்டவன் என்று தான் சொல்வீர்கள். எந்த காரியத்திலும் பகவான் தலைவிதி சாமி மதம் என்பதை நம் மூளை புகுத்தியதால்தான் தொழிலாளிக்கு முதலாளி உயர்ந்தவன் உழைப்பாளி ஒடுங்கியே இருந்து தீர வேண்டும் என்ற நிபந்தனை ஏற்பட்டது.

ஆதியில் தொழிலாளி என்பதாகவே ஒரு (ஜாதி) திட்டம் ஏற்பாடு செய்து அடக்கியாள நினைத்த அன்றே தொழிளாளிக்கு அறிவிருந்து ஏன் நான் அடங்கி வாழவேண்டும் என்று கேட்டிருந்தால் இன்று முதலாளி தொழிலாளி என்னும் கூட்டமோ வித்தியாசமோ இருக்காது. ஆனால் கடவுள் உணர்ச்சியானது உங்களை அடங்கச்செய்து விட்டது. என்றைக்கும் வித்தியாசமிருக்கவே கடவுள் என்னும் ஒன்றைப் புகுத்தி அதுவும் புறண்டு விட்டால் என்ன செய்வது என்று மதத்தையும் ஜாதியையும் ஏற்படுத்தி தொழிலை பெயர்கொடுத்து அதை ஜாதியாக்கி ஜாதியில் உயர்வுதாழ்வு கற்பித்து அதைக் காப்பாற்றவே அரசாங்கம் போலீஸ் என்பதும் வைத்து முதலாளி தொழிலாளி முறை நிரந்தரமாகவே இருக்கச்செய்கிறது.

இந்த தொழிலாளி ஜாதி என்பதே மறைந்துவிட வேண்டுமானால் முதலாளித்தன்மை என்பது உலகில் எங்கும் இருக்கவேகூடாது என்று கூறவும் அதற்காக வேலை செய்யவும் தைரியமாக நீங்கள் முன்வரவேண்டும். முதலில் அரசாங்க சட்டங்கள் மாற்றப்பட வேலை செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு இன்னும் கடவுள்கடவுளென்று கத்திக்கொண்டிருந்தால் ஒருநாளும் அடிமை புத்தி விலகப் போவதில்லை.

திடீரென உங்கள் வருமையை நினைத்து இயற்கையாக உங்கள் இரத்தத்திலிருக்கும் உணர்ச்சியால் இரண்டொரு தடவை நீங்கள் முயற்சிக் கலாமே தவிர அதனால் நீங்கள் வெற்றியடைய முடியாது. நிச்சயமாக வெற்றிபெற வேண்டுமானால் கடவுள் தன்மை மதத்தின் பேராலுள்ள குருட்டு நம்பிக்கை, குறுகிய நோக்கம் ஒழித்து முன்வரவேண்டும். கடவுளும் மதமும் ஒழிந்த அந்நாளே தொழிலாளியின் விடுதலை நாளாகும்.

கடவுள் உணர்ச்சியை நீங்கள் எவ்வளவு விடாப்பிடியாகக் கொண்டா லும் காலமாறுபாட்டால் உங்கள் சந்ததிகள் அதை பின்பற்றுவது குறைந்து போகும். தொழிலாளிகளின் இத்தினை துன்பத்தைக்கண்டும், பார்த்தும், அனுபவித்தும் வந்த ஒரு தொழிலாளி இத்தனை ஆபத்துக்கும் தப்பி திருட்டுத்தனம் உண்மை மறுப்பு முதலிய பித்தலாட்டங்கள் எல்லாம் செய்து ஒருசமயம் நாளை அவனும் ஒரு முதலாளியாக ஆகிவிட்டால் தான் தொழிலாளியாக இருந்த காலத்திலுள்ள சம்பவங்களை மறந்துவிட்டு முதலாளி வர்க்கத்தில் ஐக்கியமாகி தொழிலாளிகளை கசக்குவான் என்பதில் சந்தேகமில்லை. அவனும் முதலாளியிடம் அடிமையாகவே இருந்து தந்திரமாக பிழைத்து முதலாளியை ஏமாற்றித்தான் வந்தவனாதலால் தன்கீழுள்ள தொழிலாளியையும், சந்தேகித்து கவனிப்பான். ஆனால் இன்று உலகமெங் கும் கிளர்ச்சி செய்யப்படும் நமது முயற்சியானது முதலாளி தொழிலாளி யாகவோ, தொழிலாளி முதலாளியாகவோ மாறிவிட முடியாது.

நமது முயற்சி உலகத்திலேயே முதலாளி தொழிலாளி வேற்றுமை ஒழிந்து முதலாளியென்றோ, தொழிலாளியென்றோ ஒரு தனி வகுப்பு இல்லாமல் யாவரும் சமமாக வாழ வேண்டும் என்பதேயாகும். இன்னும் நமது பிரயத்தனம் எது என்றால் இனி எக்காலத்திலும் அவ்வேற்றுமைகள் உண்டாகிவிடாமலும் மனித சமூகத்தில் உயர்வு தாழ்வு என்ற எவ்வித பிரிவுகளும் இல்லாமலும் இருக்க வேண்டும் என்பதாகும்.

ஒரு ஊரில் அல்லது ஒரு மாகாணத்தில் மட்டும் தொழிலாளி இல்லை, முதலாளி இல்லை என்றாய்விட்டால் மாத்திரம் போதாது. உலகிலேயே மக்களுள் முதலாளி தொழிலாளி ஏழை பணக்காரன் என்பதுள்பட எப்படிப் பட்ட முதலாளி ஆதிக்கம் என்பதும் இருக்கவேகூடாது.

இம்முறைகள் இலேசான மாறுதலின்மூலமாகி விடாது. சுலபத்தில் நிலைபெற்றும் விடாது. ஆதலால் கடுமையான சட்டங்கள் மூலமும், பிரசாரங் கள் மூலமும் மக்களின் மனமாற்றமடைந்த பிறகுதான் இன்பமாக வாழமுடியும்.

தொழிலாளி அடிமையாக நிரந்தரமாக வாழவேண்டுவதற்கு கிரம மாகவே இப்போதுள்ள ஜாதி சமூக முறை சட்டம் ஒழுக்கம் மத தர்மம் அரசாங்கம் என்பவை எல்லாம் இருக்கிறது. உலகில் இம்மாதிரியான வேற்றுமை தனிப்பட்ட கூட்டத்தின் ஆதிக்கம் என்பவை இல்லை என்றால் அரசாங்கம் ஜெயில் போலீஸ் இராணுவம் வேண்டியதில்லை. இன்று ஒரு நாடு தவிர உலகிலுள்ள அரசாங்கம் ராணுவமெல்லாம் பணக்காரனுடைய பாதுகாப்புக்கும் தொழிலாளிகளை அடக்கவுமே ஏற்பட்டது.

இராஜா என்றால் இக்கூட்டத்தில் பொறுக்கி எடுக்கப்பட்ட சோம்பேரி களின் பிரதிநிதி என்றுதான் அர்த்தம்.

இவைகள் எல்லாம் ஒழிவது என்று வந்துவிட்டால் உலகில் துவேஷம் ஆச்சரியம் அதிருப்தியே இருக்காது. இதற்கு வெறும் சங்கமும் பிள்ளையார் வணக்கமும் செய்து கூட்டம் போடுவதால் எதையும் அசைத்து விட முடியாது.

நமது முயற்சிகளை முதலாளிகள் கெட்டியான அஸ்திபாரத்துடன் எதிர்ப்பார்கள். இவைகளை தாங்கவும் தயாராக இருக்க வேண்டும். தொழி லாளர் நன்மைக்கு என்று வாயளவில் பேசுவதினால் எதுவும் வந்து விடாது.

சாதாரண கிளர்ச்சி கூட்டத்தின் மூலம் கொஞ்சம் கூலி அதிகமாக வேண்டுமானால் கிடைக்கலாம்-இவைகளால் முன்னேற்றம் எதுவும் இல்லை. முதலாளிகளுடன் வாதாடி 2 அணா அதிகமாக சம்பாதித்தால் மாத்திரம் போதாது. நீங்களும் தகுந்தபடி சுகப்படாமல் தற்கால வாழ்க்கை முறையில் முதலாளியைக் காப்பியடித்து அவனைப் போலவே நீங்களும் செலவு செய்து விடுவதும் 4 அணா மீதமிருப்பதை ஆடம்பரமாக செலவுச்செய்துவிட்டு மறுபடியும் முதலாளியிடமே போய் கெஞ்சுவதும், வாய்கட்டி, வயிற்றைக் கட்டி 10-ரூ. சம்பாதித்தால் உங்கள் மனைவி மக்கள் தேருக்கும், திருவிழா விற்கும், பண்டிகைக்கும் செலவு செய்வதும் தொழிலாள முன்னேற்றமாகாது. ஏனெனில் கடவுளும் சாமியும், பூதமும், தொழிலாளர்களுக்கென்றே ஏற்படுத்தி வைத்திருக்கிறது. எவ்விதத்திலாவது 10, 5 மீதப்படுத்தி வைத்து தொழிலாளி முன்னேறினால் முதலாளி தத்துவத்தை எதிர்க்க நேரிடும் அல்லவா? ஆதலால் வருடம் 4 உற்சவம், 12 பண்டிகை எடுத்ததெற்கெல்லாம் சடங்கு சாத்திரம் என்று ஏற்படுத்தி வைத்து சாம்பிலுக்காக முதலாளிகளையும் கொஞ்சம் செலவு செய்யச்செய்து தொழிலாளியை முழுப் பாப்பாராக்க ஓர் நல்ல வழி-இன்று மாரியம்மனுக்காக முதலாளி 5-ரூ. ஆடு வெட்டினால் தொழிலாளி என்பவன் 10-ரூ. ஆடுவெட்டினால்தான் பெருமையுண்டெனக் கருதி அதன் படியும் செய்கிறான். இவைகளை யெல்லாம் சமூகக் கட்டுப் பாடுகள் வழக்கங்கள் என்பதின் மூலம் மக்கள் பணம் கொட்டப்படுவதை கவனிக்க முடியாமல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

தொழிலாளிகள் அதிகமாக இருந்தால் அவர்களுக்குச் சமீபமாகவே 4 கள்ளுக்கடை, 2சாராயக்கடைகளும் வைத்துவிடுவார்கள். எல்லா விஷயத் திலும் முதலாளியுடன் போட்டி போட்டு சிலவு செய்தால் பழய கருப்பன் கருப்பன் தான் என்பதைத் தொழிலாளர்கள் சமூகம் கண்டிப்பாக உணர வேண்டும்.

இம்முறையில் தொழிலாளித்துவம் இருப்பது சமூக மூலம் ஸ்திரப் படுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கவனித்துப்பார்த்தால் விளங்கும். இவை ஒழிய வேண்டுமானால் அஸ்திவாரம் அதாவது சமூகம், ஜாதி, மதம், கடவுள் என்பவைகள் தான் முதலில் வெட்டி எறியப்படவேண்டும். நமது முதல் வேலை இவ்வேற்றுமைகளுக்கு அஸ்திவாரம் எங்கே என்று கண்டு பிடிப்பதுதான். கடவுள், சாமி, மதம் என்பவைகளை குறைபேசுகிறான் என்றே முதலாளிகளை குறை கூறுவதாகவோ நீங்கள் வருத்தப்படக்கூடாது. கடவுள் என்னும் உணர்ச்சி தொழிலாளர்களிடமிருந்து நீங்காதவரை ஒருக்காலும் முன்னேற்றமில்லை என்பதை மீண்டும் மீண்டும் வலி உருத்தவே இப்படிச் சொல்லுகிறேன்.

சாமியைத்தான் இழிவாகப் பேசுகிறேன் என்று கருதுவீர்கள். சாமி எங்கிருந்து வந்தது என்பது முன்னமேயே கூறினேன். முதலாளிகள் சூழ்ச்சியே சாமி ஏற்படுத்தியது. அச்சாமிகளினால் திருப்தியடைந்து வயிறு வளர்க்கும் ஒரு சோம்பேறிகள் தவிர வேறு எவனும் கடவுள்களின் யோக்கிய தைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டியதில்லை. யோசித்துப் பார்த்தால் அதன் புரட்டுவெட்ட வெளிச்சமாகும். இத்தனை ஆண்டுகளாக இருந்த கடவுள்களால் உங்களிடமுள்ள எந்தக் குறையைக்கடவுள்கள் நிவர்த்தித்து விட்டது என்று பார்க்க வேண்டும். இன்றைக்குத் தொழிலாளியை இந் நிலைமையில் வைத்திருக்க அவன் உழைப்பைக் கொள்ளைக் கொண்டு வாழும் முதலாளி சுகப்பட அக்கடவுள் ஏன் பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். வேண்டுமானால் தினசரி வாழ்க்கையிலும்கூட அக்கடவுள் உணர்ச்சி தொழிலாளியைக் கெடுத்து வருவதைத் தவிர வேறு வழி காணோம். முதலாளியும் சாமிக்கு பூஜை தடபுடல் செய்தால் தொழிலாளியும் அவ்விதமே.

தொழிலாளியும் பண்டிகை கொண்டாடுகிறான். ஏழை என்பவன் தனது சக்திக்குத் தகுந்தார்ப் போல் செலவு செய்யாமல் தனது சக்திக்கு மீறிப் பணக்காரனைப்பார்த்து செலவு செய்து கஷ்டப்படுகிறான். பணக்காரன் செலவு செய்வதில் பரவாயில்லை. 1000 பேர் தலையில் கையை வைத்து எந்த ஏழை வயிற்றிலாவது மண்ணடித்து அவன் ஆட்டம் போடுவான். நீயும் கையில் காசு இல்லாமல் கடன் வாங்கி அதைப்போலவே செலவு செய்தால் நஷ்டப்படுவதுமல்லாமல் பின்னும் அவனுக்கே அடிமை யாக வாய் பொத்தி நின்று முதலாளி ஆதிக்கத்தையும் எதேச்சாதிகாரத்தையும் உண்டாக்க உதவி செய்தவனாகிறாய். ஒரேவிதமாகவே நீங்கள் இருக்க வேண்டும். என்றைக்கும் மீறக்கூடாது சூழ்ச்சியே என்றைக்கும் அடிமையாக இருக்க வேண்டும் என்னும் சூழ்ச்சியேதான் இம்முறையான சோம்பேறிகள், முதலாளிகள், புரோகிதர்கள், பாதிரிகள், குருக்கள் என்பவர்களால் ஏற்படுத் தப்பட்டிருக்கிறன. உண்மையில் நீங்கள் கடவுளை நம்பிக்கொண்டிருந்தும் அதுபாடுபடும் மக்களைப் பட்டினி போட்டும் சோம்பேறி தின்று கொழுத்து சுகப்படவும் வைப்பது யோக்கியதையா? கள், கடவுள் பேரைச் சொல்லிச் செய்யும் பித்தலாட்டம் இன்னுமா விளங்கவில்லை.

உலகத்தில் எப்பாகத்திலேனும் இம்முறைகொஞ்சமேனும் இருந்தால் அங்கு வேற்றுமையும் கொடுமையும் இருந்தே தீரும். இக்கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டுமானால் பெரிய புரட்சி வேண்டும். ஆயிரக்கணக்கான வருஷமாக இருக்கும் இச்செயலை ஒழிக்க மிக்க தைரியம் வேண்டும். எந்த தேசத்தில் அரசன் பணக்காரன் இருக்கிறானோ அந்தத் தத்துவம் இருக் கிறதோ அங்கெல்லாம் சாமி பூதங்களிருக்கவும், முதலாளி கூட்டம் வாழவும் தொழிலாளி பட்டினிகிடக்கவும் சோம்பேறி சுகப்படவுமே தான் இருக்கிறது.

மற்ற தேசத்துடன் நமது நாட்டையும் ஒத்துப்பார்த்தால் தொழிலாளியின் நிலைமை கொஞ்சம் அதிகமாகவே, கஷ்டமாகவே இருக்கிறதே தவிர குறைவில்லை என்று சொல்லலாம். நமது முறையீடுகளையும் துன்பங்களையும் கண்டு மிக்க அனுதாபியைப்போலவே இன்று பெரிய தேச பக்தன் என்று சொல்லுகிறவர்கள் நம்மிடம் வந்து சேர்ந்து நம்மை விட ஆயிரம் பங்கு அதிகமாக முதலாளிக் கொடுமைகளை ஒழிக்க வேண்டும் என்றே பேசுவான். இந்த அக்கிரமம் சகிக்க முடியாது என்றே பேசுவான். ஆனால் நம்ம தயவால் கொஞ்சம் பதவி கிடைத்த உடனே முதலாளியிடம் சேர்ந்து கொண்டு உடனே தொழிலாளிகள் செய்வது அக்கிரமம் என்று கூப்பாடு போடுவான். ஏன் என்று கேட்டால் அக்கிரமம் செய்வது முதலாளியல்ல, சர்க்கார் தான் காரணம் என்று முதலாளியிடம் 5 ரூபாய் வாங்கிக்கொண்டு நம்மிடம் சமாதானம் சொல்லி சர்க்காரை சுட்டிக்காட்டி விட்டு இஸ்கே படுத்தி விட்டு விடுவான். நாமும் அவன் சொன்னபடி சர்க்காரிடம் முட்டிக்கொண்டு துப்பாக்கிக்கும், தடியடிக்கும், உயிரைவிடவும் போய்விடுவோம்.

(தொடர்ச்சி 16.04.1933 குடி அரசு)

(26.03.1933 குடி அரசு - அனுப்பபாளையம் சொற்பொழிவு தொடர்ச்சி

குடி அரசு - சொற்பொழிவு - 02.04.1933)

Pin It