தலித் விடுதலையே தன் எழுத்தின் இலக்காக இருக்க வேண்டும் என்பதில் கறாராக இருக்கும் வடலூர் ஆதிரை, கடலூர் மாவட்டம் வடலூரில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் அமல்ராஜ். ஆதிரை என்ற பெயரில் எழுதி வருகிறார். ஆதிரை என்பது அய்ம்பெருங்காப்பியங்களில் ஒன்றான "மணிமேகலை' என்னும் காப்பியத்தில் வரும் ஒரு பாத்திரம். சாத்துவன் என்னும் புலவனின் மனைவி ஆதிரை, புலையர் இனத்தைச் சார்ந்தவர். உலகில் பசி நோயைத் தீர்க்கப் புறப்பட்ட பவுத்த துறவியான மாதவி, தன்னுடைய அட்சயப்பாத்திரத்தில் ஆதிரையிடம்தான் முதல்பிடி சோற்றைப் பிச்சை பெறுகிறார். ஆகையினால் அப்பெயரை தன் எழுத்துக்கான பெயராக்கிக் கொண்டார்.

vadaloor_aathiraiதன் பள்ளிக் காலங்களியே எழுதத் தொடங்கிவிட்டதாகக் கூறும் ஆதிரை, பள்ளியில் நிகழ்ந்த சாதி பாகுபாடே தான் எழுத வந்ததற்கான காரணம் என்கிறார். திருச்சியிலுள்ள புனித ஜோசப் பள்ளியில் உள்ள "இனிகோ' என்ற தலித் விடுதியில் தங்கிப் படிக்கின்றபோது ஏற்பட்ட அனுபவ வெளியில்தான் கவிதைகள் உருக்கொண்டதாகக் கூறுகிறார். பள்ளியில் நடைபெற்ற சாதிய சிக்கல்களைக் கேட்டதற்காகவே அவர் பதினொன்றாம் வகுப்பிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டு, கடலூருக்கு வந்து படித்திருக்கிறார்.

நேரடியாக, துணிச்சலுடன் எல்லாவற்றையும் கவிதையில் கொண்டுவரும் திறன் பெற்றுள்ளார் ஆதிரை. அவருடைய மூன்று நூல்கள் அண்மை யில் வெளிவந்துள்ளன : "மண்குதிரை', "நிச்சயம் மலரும்', "ஒற்றைப் பனை'. இத்தொகுப்புகள் நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. இவருடைய கவிதைத் தளம், உள்ளதை உள்ளவாறே எவ்விதமான பாசாங்குகளும் இல்லாமல் வாசகர்களின் உள்ளத்தில் சென்று, நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.

தலித் வாழ்வின் அனைத்து இழிவுகளுக்கும் காரணமான பார்ப்பனியத்தை அவர் சாடுகிறார். மனிதர்களை மட்டுமல்ல; கடவுளர்களையும் தீண்டாத சாதிய வாழ்க்கை என்பது, சாதி இந்துக்களின் வாழ்வில் மட்டுமே சாத்தியமாகியுள்ளது என்னும் அவருடைய கவிதைகள் உண்மையானவை. எங்க குல சாமிகூட தீண்டாமை இருட்டுல / கையிலுள்ள அருவாயில சாணக்கூட பிடிக்கல - "அரைக்காசு' என்னும் கவிதை இவ்வாறு முடியும்.

எல்லாரையும் இந்து என்னும் வட்டத்துக்குள் அடைக்க முயலும் இந்துத்துவ அரசியலுக்கு எதிராக, ஒரு தலித் எழுத்தாளரிடமிருந்து வருகின்ற சொல்லாடல்கள் தாம் இவை. தலித்துகளையும் "இந்து' என்று சொல்லி, அவர்களை தங்கள் ஆதிக்கத்திற்கு அடியாட்களாக மாற்ற நினைக்கும் இந்து கோட்பாட்டிற்கு எதிரான சமரை நிகழ்த்தக்கூடியவை. கடவுளை வணங்கும் வணக்க முறைகளிலேயே பெரிய பிளவுள்ள பண்பாட்டைக் கொண்டிருக்கின்ற தலித்துகளை இந்துக்கள் என்று சொல்லும் சூழ்ச்சி, இவ்வரிகளில் சுட்டிக் காட்டப்படுகின்றன.

தலித்துகளின் வாழ்விடங்களிலுள்ள சிறு தெய்வங்களை, அவை மிகவும் அதிகமாகப் பணம் செலவழிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட கோயிலில் வைக்கப்பட்டிருந்தாலும், அக்கடவுளர்களைக் காணக் கூட தயாரில்லை. ஆனால், இந்துக்கள் பட்டியலில் தலித்துகளும் வந்துவிட வேண்டும் என்னும் இந்துத்துவ அரசியல் கணக்கை முடித்து வைக்கின்றன, ஆதிரையின் கவிதைகள்.

தலித் எழுத்து என்பது புரட்சியாளர் அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பிறகு வலுப்பெற்றபோது, தாமும் தலித் விடுதலைக்காக எழுத வேண்டும் என்னும் வேட்கையுடன் வெளிப்பட்ட ஆயிரக்கணக்கான தலித் இளைஞர்களில் ஆதிரையும் ஒருவர். எதை எழுதுவது என்னும் எண்ணம் உள்ளே தலைதூக்கிய போது, அவர் வாழும் கடலூர் மாவட்டத்தில் நிகழும் சாதியப் போக்குகள், அவருடைய உள்ளத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றும் காலங்களில் கடலூரில் இருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. அப்போது வெளிப்படையாகத் தெரிந்த சாதிய வேறுபாடுகள் அவரை எழுத வைத்திருக்கின்றன.

இந்தக் காலத்திலுமா இப்படி என்று அவர் திமிறிய போது, அவர் எழுதுகோலிலிருந்து நமக்குக் கிடைத்தவைதான் அவருடைய ஆக்கங்கள். ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளுக்கு அவர் களப்பணியாற்றச் சென்றபோது, அந்தப் பள்ளிகளில் நிலவும் கல்வி இல்லா சூழல், தலித் மக்களின் வாழ்வை அழிக்கக்கூடியதாக இருந்திருக்கிறது. சரியான பயிற்சிகள் அவர்களுக்குத் தரப்படவில்லை. கல்வியில் பின் தங்கியநிலை தலித் மக்களுக்கு மீண்டும் ஏற்படும் என்னும் ஆதங்கம் அவருக்குள் இருக்கிறது. அதுவே "மழலை வாசம்' என்னும் கவிதையாக முகிழ்த்துள்ளது.

"கூரையில்லா குடிசையாய்' என்னும் கவிதையில் அவர் நிகழ்த்தும் தலித் நுண் அரசியல் அசாதாரணமானது. தலித்துகளுக்கு வழங்கப்படும் சில சட்ட உரிமைகளும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளும் அவர்களை விடுதலை பெற்றவர்களாக மாற்றிவிடும் என்னும் எண்ணம் எல்லாருக்கும் இருக்கிறது. "நீயும் படி; அவனப் போல வேலைக்குப் போ; நல்லா வாழு அப்புறம் சாதி எங்கிருக்கும் பாக்கலாம்' என்று பேசுபவர்கள் இன்று அதிகம் பேர். ஆனால் இவை மட்டும் தலித் விடுதலையைக் கொண்டு வருமா?

உதவித் தொகை / வாங்கியே / எங்கள் உரிமைகள் / முடமாக்கப்பட்டன / இடஒதுக்கீடு / கதவை சாத்திவிட்டு / சன்னலத் திறந்துவிட்ட / கூரையில்லா குடிசையாக / சாதி வெறிமட்டும் / புதுப்பிக்கப்பட்ட மாளிகையாய் / அடிக்கடி / உள்ளாட்சியில் வெற்றி / பொம்மையாகவே/ தலைவர்கள் /ஊமையாக / வீட்டுக்காவலில் - இந்த வரிகள், தலித்துகளின் இன்றைய நிலையைக் காட்டுகின்றன. வாழ்வதற்கான அனைத்தும் இன்று தலித்துகளுக்கு வழங்கப்படுகிறது. அவற்றைப் பயன்படுத்திக்கொண்டால் வளமாக வாழலாம். ஆனால், சுயமரியாதையான ஒரு சமூகத்தினை எங்ஙனம் உருவாக்க இயலும்? ஜனநாயகம் அற்ற சூழலில் வாழ்வு வசதிகள் மட்டும் கிடைத்தால் போதுமா? அதுவா விடுதலை? என்னும் நிறைய கேள்விகளை, அவர் கவிதைகள் நம்முள் கிளறிவிடுகின்றன.

vadalur_aathirai_bookஒரு தலித் எழுத்து செய்ய வேண்டிய கிளறலை ஆதிரையின் கவிதைகள் செய்கின்றன. "குழிவிழுந்த கன்னத்துடன்' என்னும் கவிதை பொது அரசியல் இயக்கங்களில் தொண்டாற்றும் தலித் தொண்டனின் நிலை பற்றி பேசுகிறது. பணப்பட்டுவாடா / சிறந்த தொண்டன் விருது / எங்களின் எட்டப்பனுக்கு. ஒரு தலித் அரசியல் கட்சியில் எத்தகைய நிலையிலிருந்தாலும், அவன் தூக்கி எறியப்படுகின்ற இலையாகவே எல்லாருக்கும் பயன்படுகிறான் என்பதைக் கூறுகிறார். தலித் விடுதலைக்கான வேலைகளைச் செய்யாமல் பிற கட்சிகளுக்காகப் பணியாற்றுவது, எட்டப்பன் வேலை என்பது அவருடைய கவிதைக் கருத்து.

வடலூர் ஆதிரை தமிழ்தேசியத்திலும் அக்கறை கொண் டுள்ளார். தமிழ்த் தேசியம் சாதியை ஒழிக்குமா என்று கேட்டதற்கு, நிச்சயமாக முடியாது என்கிறார். ஆனால், இன்றைக்கு தமிழ்த் தேசியம் தலித்துகளால் பேசப்படும்போது, அதனால் அமைகின்ற அரசால் அதன் சட்டதிட்டங்களின் அடிப்படையில் சாதி ஒழிய வாய்ப்பிருக்கிறது என்பது அவருடைய நம்பிக்கை.

ஈழ விடுதலை மற்றும் ஈழப்பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து "நிச்சயம் மலரும் ஈழம்' என்னும் தொகுப்பினை ஆதிரை கொண்டு வந்துள்ளார். தின்று கொழுத்த பன்றியைப் போல் / நிமிர்ந்து நிற்கிறது / இறையாண்மை / திண்ணை அடியின் ஓரத்தில் / அயர்ந்து உறங்குது / தீண்டாமை.

வடலூர் ராமலிங்க சுவாமிகள் பற்றி பேசாத வடலூர்க்காரர்கள் யாராவது இருப்பார்களா? ராமலிங்கர் மதத்தை மறுத்தவர், பூசை போன்ற வழிபாடுகளை வேண்டாம் என்றவர், மூடப்பழக்கங்கள் கூடாது என்றவர். அதற்காக அவர் சிலை வழிபாட்டைத் தவிர்த்தார்; வேண்டாம் என்றார். தான் நிறுவிய அமைப்புகளுக்கு சபை என்று பெயர் வைத்தார். சபையில் அனைவரும் சமம் என்பது அவர் கொள்கை. ஒளியினை அவர் வணங்கினார்.

ஆனால் தற்போது நிகழும் இந்து மயமாக்கலில், முதல் கட்டமாக அங்கே சிவனின் சிலையை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, அதை ஓர் ஆய்வாகச் செய்ய வேண்டும் என்பது ஆதிரையின் அடுத்த முயற்சி. ராமலிங்கனாரின் பல கொள்கைகள் புத்தரோடு ஒத்துப் போவதால், பவுத்தத்திற்கும் அவருக்குமான தொடர்பைக் கூட ஆராயலாம். பண்பாட்டு ரீதியான இத்தகைய ஆய்வுகள் ஒரு வகையில் தலித் எழுச்சிக்கு உதவக்கூடும்.

தலித் விடுதலைக்கான சமூக மாற்றத்தை முன்வைப்பதே தன் கவிதைகளின் குறிக்கோள் என்று கூறும் ஆதிரை, தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பதில் பெரும் ஆர்வமுள்ளவர். அதற்காக அவர் தேர்ந்தெடுத்து இருக்கும் கவிதை வடிவம் என்பது மிகவும் எளிமையானது; நேரானது. வாசிப்போரின் மனதைத் தைக்கக்கூடியது.

தொடக்க நிலை தலித் எழுத்தாளர்களுக்கு உள்ள பிரச்சினை வடலூர் ஆதிரைக்கும் உண்டு. அவருடைய கவிதைகளை வெளியிட பதிப்பகங்கள் எதுவும் முன்வராத போதும் தன்னுடைய பொருளாதாரச் சூழலையும் கடந்து, அவர் மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவருடைய தன்னம்பிக்கையும் சமூக மாற்றத்திற்கான அவருடைய எழுத்தும் - தலித் இலக்கியப் பரப்பில் அவருக்கு ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுத் தரும் என்பதில் அய்யமேதும் இல்லை.

வடலூர் ஆதிரையை தொடர்பு கொள்ள : 97504 52394

Pin It