நமக்குத் தெரியும் - ஏன் இங்கு கிராமங்கள் இரண்டாகப் பிரிந்திருக்கின்றன என. நமக்குத் தெரியும் மனிதரை மனிதர் ஏன் வணங்குகிறார்கள் என, வதைக்கிறார்கள் என. நமக்குத் தெரியும், நம் ரத்தமல்லாத ஒருவரை ஏன் ஒடுக்க வேண்டுமென. நமக்குத் தெரியும், ஏன் கருப்பும் வெள்ளையும் கலக்கக் கூடாதென. நமக்குத் தெரியும், ஏன் அதிகாரமும் அடிமைத்தனமும் அழியக் கூடாதென. நமக்குத் தெரியும், மதமும் சாதியும் ஏன் நீடித்திருக்க வேண்டுமென. இங்கு எல்லா அநீதிகளும் தெரிந்தேதான் நடந்தேறுகின்றன. நாம்தான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவற்றை நடத்துகிறோம். ஆனால் எதுவுமே நடவாதது போல் நடிப்பதே நலமாகத் தெரிகிறது!

விரும்பியபடியே மிக வசதியான ஒரு வாழ்க்கையை வாழ்வதாக நாம் கற்பனை செய்து கொண்டுள்ளோம். சாதி, மத, பாலின மற்றும் வர்க்க ரீதியான பாகுபாடுகள் மலிந்திருக்கும் ஒரு சமூகத்தில் - இக்கற்பனை மிக மூர்க்கமானது, சுயநலமிக்கது. சுயநலங்கள் எப்போதும் தற்காலிக சுகங்களை மட்டுமே அளிக்கின்றன. இந்த உண்மையை ஏற்க மறுத்து வாழ்கிறோம். பிறரையும் அப்படி வாழ அறிவுறுத்துகிறோம். நமக்கு நேராத எதுவும் நம் துயரமல்ல. நமக்கு நேராத வரை, எந்த அநீதியும் ஏதோவொரு வகையில் நீதியே! கண்களும் காதுகளும் உணர்வுகளும் மரத்துப் போயிருந்தால் மட்டுமே இங்கு "நல்வாழ்வு' சாத்தியப்படுகிறது.

amina_lavalசட்டப்பூர்வமாக ஜனநாயகத்தைக் கொண்டாடும் ஒரு நாட்டில் தன் கருத்தை சொல்வதோ, விரும்பிய வாழ்க்கையை வாழ்வதோ, சுய மரியாதையோடு தலை நிமிர்வதோ அத்தனை எளிதானதாக இல்லை. காரணம், ஆழமாக நீண்டு கிடக்கும் பாகுபாட்டின் வேர்கள், ஒவ்வொருவர் கால்களையும் கழுத்தையும் இறுக்கிப் பிடித்திருக்கின்றன. மத நம்பிக்கைக்கு புறம்பாகவோ, சாதியை மீறியோ ஒருவர் செயல்பட விளைந்தால், இந்த வேர்கள் இரக்கமில்லாமல் முறுக்கிக் கொல்கின்றன.

கவுரவக் கொலைகளாக இன்று ஊடகங்கள் பிரபலப்படுத்திக் கொண்டிருக்கும் சாதி - மத வக்கிரக் கொலைகள் நவீனக் குற்றமல்ல. பல நூற்றாண்டுகளாக பல நாடுகளிலும் ஊறிக் கிடக்கும் கொடுமைதான். விலங்குகளைப் போல வாழ்ந்து வந்த மனிதர்கள், சில நெறிகளோடு வாழத் தலைப்பட்டு, மதங்களையும் குடும்ப அமைப்பையும் உருவாக்கினர். குழுக்களாக வாழ்ந்து வந்த மனித இனத்தில் பலமுள்ள, தகுதியுள்ள யாரும் தனிக் குழுவை அமைத்து தலைமையாக மாறிவிட முடிந்த காலத்தில் - தனக்கு சேவை செய்ய அடிமை வேண்டுமென நினைத்தவர்களும், உலகின் வளங்களை தான் மட்டுமே அனுபவிக்க விரும்பியவர்கள், மதங்களையும் குடும்ப அமைப்பையும் பயன்படுத்திக் கொண்டனர்.

மதங்கள் மனிதர்களைப் பாகுபடுத்தி பிரித்து வைத்தன. குடும்ப அமைப்பு பெண்களை சிறைப்படுத்தியது. மதங்கள் மனிதர்களை ஆளத் தொடங்கிய பின்னர், குடும்ப அமைப்பு வலுப்பெறத் தொடங்கிய நிலையில், பெண்கள் சக உயிரினம் என்பதே ஆண்களுக்கு மறந்து போனது. ஒரு பண்டத்தைப் போல, சொத்துகளைப் போல பெண்கள் கருதப்பட்டனர், பாதுகாக்கப்பட்டனர்.

ஒவ்வொரு ஆணும், தான் சார்ந்த மதத்தின் அடையாளச் சின்னங்களாக, தன் மதம் போதிக்கும் கட்டுப்பாடுகளைத் தாங்கி நிற்கும் பண்பாட்டுத் தூண்களாக பெண்கள் திகழ வேண்டுமென எதிர்பார்த்து, அதை செயல்படுத்தவும் செய்தனர். தனிப்பட்ட முறையில் தனக்கென உரிமைகளோ, மரியாதையோ வேண்டுமென கருதவில்லை. மத விதிமுறைகளைப் பின்பற்றுவதே தனக்கான கவுரவமாக ஆண்கள் கருதத் தொடங்க, அந்த பாரம் முழுவதும் பெண்கள் மேல் விழுந்து அழுத்தியது. வீட்டை விட்டு வெளியேறவும், உடலைப் பேணவும், பேசவும், சிரிக்கவும், நிமிரவும், கற்கவும், அறிவைப் பெருக்கவும் தடை விதிக்கப்பட்டது. பெண்களை அடிமைப்படுத்துவதிலும் கவுரவச் சின்னமாக வளர்ப்பதிலும் உலகின் எந்த மதமும் எதற்கும் சளைத்ததில்லை என்றாலும், கவுரவக் கொலைகள் பெருமளவில் நடந்தேறுவது - இஸ்லாத்திலும் இந்து மதத்தின் சாதியக் கட்டமைப்பிலும்தான்.

குடும்பத்திற்கோ, சாதிக்கோ, மதத்திற்கோ "களங்கம்' உண்டாகும் வகையில் ஒரு பெண் நடந்து கொண்டால், அந்தப் பெண்ணை குடும்பத்தினரோ, சாதிக்காரர்களோ, மதத்தினரோ வெளிப்படையாகவே கொலை செய்யலாம். இக்கொலைகளை சட்டத்திற்கு அஞ்சி, மறைமுகமாக நிகழ்த்த வேண்டிய அவசியமில்லை. குடும்ப மற்றும் சாதி - மத மரியாதையைக் காப்பாற்ற நிகழ்த்தப்படும் இக்கொலைகளை, குற்றமாக சாதி - மத ஆதிக்கவாதிகள் கருதுவதில்லை. குடும்பத்திற்கும் சாதிக்கும் மதத்திற்கும் களங்கம் ஏற்படுத்துபவரை கொல்வதன் மூலம், இழந்த கவுரவத்தை திரும்பப் பெறுவதாக ஆறுதலடைகின்றனர். உறவுகள் மற்றும் சக சாதிக்காரர்கள் முன்னிலையில் தலை நிமிர்ந்து நடக்க இந்த கவுரவக் கொலைகள் உதவுகின்றன!

கவுரவக் கொலை என்பது, எந்தப் பாலினத்தையும் குறிக்காத பொது சொல்லாடல். ஆனால் 99 சதவிகிதம் இதற்கு பலியாவது பெண்களே! இஸ்லாமிய மதத்தைப் பொருத்தவரை, மதக் கட்டுப்பாடுகள் பெரும்பாலும் பெண்களை குறி வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதால், பெரும்பாலும் இந்த கவுரவக் கொலைகளுக்கு பலியாவது முஸ்லிம் பெண்கள்தான். எகிப்து, ஜோர்டான், மொராக்கோ, பாகிஸ்தான், துருக்கி, ஏமன், அரபு நாடுகள் மற்றும் பிற பெர்ஷிய, வளைகுடா நாடுகளிலும் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் முஸ்லிம்களிடமும் கவுரவக் கொலை செய்யும் பழக்கம், மிகத் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு அசைவும் நெருங்க கண்காணிக்கப்பட்டு, மத விதிமுறைகளில் இருந்து இம்மி பிசகினாலும் சொந்த உறவுகளாலேயே மரண தண்டனை பெறுகின்றனர் பெண்கள். உடைக் கட்டுப்பாட்டில் குறை வைத்தாலோ (இங்கு குறை என்பது பர்தா அணியாததையோ, நாகரிக உடைகளில் நடமாடுவதையோ குறிக்கவில்லை. கால் சுண்டுவிரல் தெரிந்தாலும் அது கொலைக் குற்றமே) குடும்பத்தினரால் நிச்சயிக்கப்படும் திருமணத்தை மறுத்தாலோ, தன் விருப்பத்திற்கு திருமணம் செய்ய முயன்றாலோ, திருமணத்தை மீறிய பாலியல் உறவுகளில், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டாலோ, கொடுமைக்கார கணவனோடு வாழ மறுத்தாலோ - மதக் கட்டுப்பாடுகளை மீறியதாக கொலை செய்யலாம்.

இதில் கொடுமை என்னவென்றால், ஒரு பெண் வல்லுறவுக்கு ஆளானாலும் கவுரவம் பறிபோனதாக, பாதிக்கப்பட்ட பெண் கவுரவக் கொலை செய்யப்படுவார். பத்தாண்டுகளுக்கு முன்னர், உலக நாடுகளிடம் அடைக்கலம் கேட்டு அலைந்த அமினா லாவல் என்ற நைஜீரியப் பெண்ணை எவரும் மறந்திருக்க முடியாது. மனித உரிமைகளை மதிப்போரை பதற்றத்திற்குள்ளாக்கிய கொடூரம் அது. கணவனை இழந்த அமினா, முகம் தெரியாத நபரால் வல்லுறவு செய்யப்பட்டு, கர்ப்பமடைந்த நிலையில், இஸ்லாமிய சமூகத்திற்கு களங்கம் உண்டாக்கியதாக அமினாவை கல்லால் அடித்துக் கொல்லத் துடித்தனர் மதவாதிகள். குழந்தை பிறக்கும் வரை அவருக்கான தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. உயிர் வாழ வேண்டிய கட்டாயத்தில் உலகத்தின் முன் மன்றாடினார் அமினா. தன் குழந்தையை இறுக அணைத்தபடி போராடிய அமினாவின் முகம், இரக்கம் கொண்ட இதயங்களை சஞ்சலப்படுத்தியது. கடைசி வரை அவரை கொன்று விடத் துடித்த மதவாதிகளிடமிருந்து தப்பித்தார் அமினா. கவுரவக் கொலை அச்சுறுத்தலுக்கு, அமினா தொடக்கமும் அல்ல முடிவும் அல்ல.

மதவெறியும் ஆணாதிக்கமும் எத்தனை கொடூரமானது என்பதற்கும், அவை ஒருபோதும் மனித உரிமைகளை மதிப்பதில்லை என்பதற்கும் வெட்ட வெளிச்சமான எடுத்துக்காட்டுதான் கவுரவக் கொலைகள். இது ஏதோ என்றோவொரு நாள் உலகின் ஏதோவொரு மூலையில் நடக்கும் அவலம் அல்ல. அய்க்கிய நாடுகள் அவை - ஒவ்வொரு ஆண்டும் அய்யாயிரம் கவுரவக் கொலைகள் நடந்தேறுவதை உறுதி செய்துள்ளது. துருக்கியில் வாரம் ஒரு கொலை, லெபனானில் மாதம் நான்கைந்து கொலைகள், பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரம் கொலைகள் என ஒவ்வொரு நாடும் அளிக்கும் புள்ளி விவரம் நம்மை அதிர்ச்சியில் உறையச் செய்கின்றன.

கவுரவக் கொலைகள் மத நலனுக்காகவும் கவுரவத்தை மீட்கவுமே நடத்தப்படுவதால், அது குற்றச் செயலாகக் கருதப்படுவதில்லை. இக் குற்றம் மிகத் தீவிரமாக நடந்தேறும் பல நாடுகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை அல்லது குறைந்த அளவிலான சிறை தண்டனையோடு தப்பித்து விடுகின்றனர். தண்டனைகள் கடுமையாக இல்லாததால், கொலை செய்தாலும் ஓரிரு ஆண்டுகளில் வெளி வந்துவிடலாம் என்ற துணிச்சல் மதவாத ஆண்களின் கவுரவ உணர்வை மேலும் தூண்டுகின்றன. பதினெட்டு வயதிற்குட்பட்ட குடும்ப உறுப்பினரைக் கொண்டு கொலை செய்தால், குழந்தைகள் சட்டப்படி தண்டனை கிடைக்கும் எனக் கருதி, சிறுவர்களைக் கொண்டு கொலை செய்வதும் நடக்கிறது.

1999 இல் வடமேற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி வல்லுறவு செய்யப்பட்டாள். உடனே காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், உள்ளூர் பஞ்சாயத்து கூடி, பாதிக்கப்பட்ட சிறுமி கற்பை இழந்து குடும்பத்திற்கு அவமானத்தை உண்டாக்கி விட்டதாக கொதித்தனர். எல்லோர் முன்னிலையிலும் சிறுமியை அடித்துக் கொல்ல முடிவு செய்து, சிறுமியின் பருவ வயது சகோதரர்களைக் கொண்டே அக்கொடுமையை நடத்தினர்.

பெரும்பாலான கவுரவக் கொலைகள் தற்கொலைகளாகவும் விபத்துகளாகவும் சித்தரிக்கப்பட்டு, புள்ளிவிவரங்களுக்குள் அடங்காமல் போகின்றன. பாகிஸ்தானில் "கரோ கரி' என்ற பெயரில், துளி கருணையுமின்றி பெண்களை கொலை செய்வது தொடர்கிறது. நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை மறுத்ததற்காக, மூன்று பெண்கள் உயிரோடு புதைக்கப்பட்ட கொடுமையும், எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த மகளை மாமனார் சந்தேகப்பட்டதால் தகப்பனே கொடுமைப்படுத்தி, கொலை செய்ததும் மனித உரிமை ஆர்வலர்களை உறைய வைத்தாலும் மத நம்பிக்கை கொண்ட மக்களையும் அரசையும் எந்த விதத்திலும் அது அசைக்கவில்லை. ஆண் எனும் சர்வாதிகாரி மதம் என்னும் ஆயுதத்தைக் கொண்டு தன்னை ஒடுக்குகிறான் என்ற புரிதலின்றி பெண்களும் இந்த கொடூரத்தை ஆதரிக்கவே செய்கின்றனர். "குடும்பத்தில் உள்ள பெண்கள் - தாய், மாமியார், சகோதரி - கவுரவக் கொலைகளை ஆதரிக்கின்றனர். இது அவர்களது சமூக மனநிலை' எனப் பதிவு செய்கிறது அம்னஸ்டி இன்டர்நேஷனல். தங்கள் மீதான ஒடுக்குமுறைகளை ஒடுக்கப்பட்டோரே நியாயப்படுத்தும் பாடத்தை, மதங்கள் எப்போதோ கற்றுக் கொடுத்துவிட்டன.

சமூக இணையதளமான "பேஸ்புக்' கில் ஆணுடன் உரையாடியதற்காகவும், வானொலியில் நண்பர் ஒருவரால் பாடல் சமர்ப்பிக்கப்பட்டதற்காகவும் தந்தையரே மகள்களை கொன்றிருக்கின்றனர். மத அடிப்படைவாதிகளைப் பொருத்தவரை, பெண்கள் ஆண்களின் உடைமை. அவ்வளவே. அவர்களுக்கென தனியாக உயிர் இருக்கிறது என்பதைக் கூட ஆண்களின் ஆதிக்க மனம் ஏற்றுக் கொள்வதில்லை என்பதையே இந்த கொடூரங்கள் உணர்த்துகின்றன. இஸ்லாமிய நாடுகளில் புரையோடிப் போன கவுரவக் கொலை வழக்கம், இந்தியாவில் படிந்திருப்பது ஜாதி வடிவத்தில். உலகளவில் எந்த அநீதியை சுட்டிக்காட்டினாலும் அது சாதிக் கொடுமையில் இடம் பிடிக்காமல் போகாது.

இந்தியாவிற்கு வெளியே நடக்கும் கவுரவக் கொலைகள், மதக் கட்டுப்பாடுகளையும் ஆணாதிக்கத்தையும் நிலைநிறுத்த நடத்தப்படுகின்றன. இந்தியாவில் அவை இடம்பெறுவது சாதிக்காக. இங்கு எந்தவொரு மனிதருக்கும் சாதிதான் முதல் அடையாளம். பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லா நிகழ்வுகளிலும் சாதியை அழுந்த பதித்துவிட, ஒவ்வொரு சாதியினரும் முனை கின்றனர். இவர்கள் தங்கள் சாதி அடையாளத்தையும் கவுரவத்தையும் அழுந்த பதிப்பது திருமணங்களில்தான். தன் சாதிக்காரரை வரன் பார்த்து, தன் சாதிக்காரர்களை அழைத்து, தன் சாதிக்குரிய சடங்குகளோடு, தன் சாதி தலைவர் தலைமை தாங்க திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடிப்பதை, ஆதிக்க சாதியினர் வாழ்வின் லட்சியமாகவே கொண்டிருக்கின்றனர். திருமணத்தை மீறியதோர் சாதிய நிகழ்வு அவர்களுக்கு இல்லை. பிள்ளைகளின் காதல் செயல்பாடுகளால் இந்த லட்சியத்திற்கு இடையூறு நேரும் போது, சொந்த சாதிக்காரர்களிடம் தலைகுனிவு உண்டாவதாகப் பதறுகின்றனர்.

ஆதிக்க சாதியினரைப் பொருத்தவரை, காதல் என்பது கெட்ட வார்த்தை! சாதி மறுப்புத் திருமணம் செய்த மகன்/மகளை அல்லது அவர்கள் நேசித்தவரை அல்லது இருவரையும் கொலை செய்வதன் மூலம் - சாதியின் மீது படிந்த கரையைத் துடைப்பதாக நினைத்துக் கொள்கின்றனர். சாதியின் பெயரால் நடக்கும் இந்த கவுரவக் கொலைகளுக்கு காலங்காலமாக பலிகள் விழுகின்றன. வட இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களிலேயே கவுரவக் கொலைகள் அதிகம் நடப்பதாக சுட்டிக் காட்டப்பட்டாலும், உண்மையில் சாதி எங்கெல்லாம் வேரூன்றி இருக்கிறதோ, அங்கெல்லாம் கவுரவக் கொலைகள் நடந்திருக்கும்/நடந்து கொண்டிருக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியும்.

கிராமப்புறங்கள் சாதியின் பிறப்பிடமாகத் திகழ்கின்றன. இன்றும் சாதிக்கு கட்டுப்பட்டுதான் கிராமப்புற மக்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு அரசமைப்புச் சட்டமெல்லாம் இரண்டாம்பட்சம்தான். ஊராகவும் சேரியாகவும் பிரிந்து கிடக்கும் கிராமங்கள் முழுக்க முழுக்க, ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரிலும், சாதி வழக்கம் என்ற முறையிலும் இங்கு நடந்தேறும் அநீதிகள், கற்காலத்திற்கும் ஒத்துவராத உரிமை மீறல்கள். சாதி விதிகளை ஒடுக்கப்பட்டவர்கள் மீறினால், அவர்களுக்கு மிகக் கொடுமையான தண்டனைகளை வழங்குகிறது ஊர் பஞ்சாயத்து.

காதல் கொண்டு, உயர்த்தப்பட்ட சாதியினரும் தாழ்த்தப்பட்டோரும் திருமணம் செய்தால், அவர்களை தேடிக் கண்டுபிடித்து கொலை செய்துவிட வெறியோடு அலைகின்றனர். வேற்று சாதியைச் சேர்ந்த காதலர்கள் ஊரைவிட்டு ஓடிவந்து நகரத்தின் நெரிசலில் முகம் தெரியாத மனிதர்களிடையே வாழ்ந்துவிட சிறிதளவேனும் இன்று வாய்ப்பிருப்பதாக நாம் நம்புகிறோம். அது உண்மையல்ல. காதலுக்காக உயிரை விட்டவர்களுக்கும் உயிருக்காக காதலை விட்டவர்களுக்கும் இடையில் - சாதி மட்டும் தன் இருப்பை நிலைநாட்டியிருப்பது கண்கூடாகத் தெரியும். ஆதிக்க சாதியினர் தலித்துகளை கொன்றால் அது வன்கொலை. ஆதிக்க சாதியினர் சாதிக்காக தன் சாதியினரையே கொன்றால் அது கவுரவக் கொலை. வித்தியாசம் அவ்வளவே. விளைவு ஒன்றுதான்.

மதுரை மாவட்டம் கட்டிக்குளத்தை சேர்ந்த மேகலாவும் எம். புட்டுக்குளத்தைச் சேர்ந்த சிவக்குமாரும் காதலித்து வந்தனர். ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் வசதியில் குறை இருந்ததால், தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் சூழ வேறொருவருக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார். மேகலா சில வாரங்களில், சிவக்குமாருடனேயே புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டார். இருவரும் அங்கேயே தங்கியிருந்த நிலையில், தீவிர தேடுதலுக்குப் பின்னர் மேகலாவின் தந்தை விஜயன் அவர்களை கண்டுபிடித்து, இருவரையும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் சேர்த்து வைப்பதாகக் கூறி அழைத்து வந்தார். சிவக்குமாரை அழைத்துச் சென்ற விஜயன் திரும்பி வரும் போது, அவர் அணிந்திருந்த சட்டை முழுவதும் ரத்தக்கறை.

சிவா எங்கே என்று கேட்டு மேகலா கதற, குடும்ப மானத்தை கெடுத்துவிட்டதாக சாடியபடி எல்லோருமாக சேர்ந்து, மேகலாவை மிக மோசமாகத் தாக்கத் தொடங்கினர். கட்டிக்குளத்திலேயே சிவாவை கொன்றுவிட்டு தந்தை விஜயனும் அண்ணன் பிரபாகரனும் தலைமறைவாக, மேகலாவால் இழந்த சாதி கவுரவத்தை சிவாவைக் கொன்று மீட்டுவிட்டதாக சாதிக்காரர்கள் பெருமைப்படுகின்றனர். "கல்யாணத்துக்கப்புறம் மக ஓடிப் போனா, விஜயன் எப்படி தலை நிமிர்ந்து நடக்க முடியும்? கொலை செஞ்சதுக்கப்புறம் ஜாதி கவுரவத்தை காப்பாத்திட்டதா எல்லோரும் பெருøமப்படுறாங்க' என்கிறார், கட்டிக்குளத்தைச் சேர்ந்த முதியவர்.

அதே ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சொல்லும் நியாயம், சாதிக்கு இன்னும் வலு சேர்ப்பதாக உள்ளது. "சிவக்குமார் தாழ்த்தப்பட்டவனா இருந்திருந்தா, அவனை கொலை செய்றதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா ஒரே ஜாதியில் இருந்துட்டு அவனை கொன்னது சரியில்லை' என்கிறார்கள். "எவிடன்ஸ்' என்ற அமைப்பின் பாதுகாப்பில் இருக்கும் மேகலா, தன் உறவுகளால் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் ("இந்தியன் எக்ஸ்பிரஸ்' சூலை 18, 2010). மகளின் வாழ்வே சிதைந்தாலும் சரி, கொலைப்பழியில் சிறைக்கு சென்றாலும் சரி, சாதி கவுரவமே முக்கியம் என்று கருதும் மனநிலையை எந்த வக்கிரத்தில் சேர்ப்பது?

அழுந்த வேரூன்றியிருக்கும் சாதியை அழிக்கவல்ல ஆயுதமாக - காதலும் சாதி மறுப்புத் திருமணங்களும் இருப்பதாலேயே இந்த சாதிய சமூகம் அதை எதிர்க்கிறது. முன்பைப் போல அல்ல. இன்றைய இளைஞர்களுக்கு சந்திப்பதற்கும், பேசிக் கொள்வதற்கும் வாய்ப்புகள் அதிகம். சாதியில் ஊறிய மனதை காதல் மட்டுமே தூய்மைப்படுத்த வல்லது என்ற நிலையில், சாதி மாறி காதலிப்பவர்களுக்கான எச்சரிக்கையாகவே கவுரவக் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. சாதி மறுப்புத் திருமணம் செய்கிறவர்களின் குடும்பத்தை தள்ளி வைப்பதும், வீட்டிலிருக்கும் மற்ற பெண்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என கற்பனை செய்து கொள்வதும் காதலர்களை உடனே தண்டிக்க விரட்டுகிறது.

வீட்டுப் பெண்களுக்கு சாதி ஒழுக்கத்தையும் குடும்ப கவுரவத்தையும் கற்றுக் கொடுக்காமல் வளர்த்துவிட்டதாக உண்டாகும் பழியில் இருந்து தப்பிக்க அரிவாளைத் தூக்குகின்றனர். வேறு என்ன செய்தாலும் சாதி வெறியை திருப்திப்படுத்த முடியாது என்பதாலேயே கொலை செய்து கோபத்தை ஆற்றிக் கொள்கின்றனர். தனிமனித கவுரவத்தோடு சேர்த்து ஊட்டி வளர்க்கப்படும் சாதியை, காதல் எனும் கால்களால் மிக எளிதாக எட்டி உதைப்போர் அதற்கு கொடுக்கும் விலை அவர்களது உயிர்.

காதல் என்பது தனிப்பட்ட நபரின் விருப்பம். அது பிரச்சனைக்குரியதானால், அதிகபட்சமாக அந்த குடும்பம் மட்டுமே எதிர்வினையாற்ற வேண்டும். ஆனால் இங்கு ஏன் எட்டுப்பட்டி ஜனங்களும் கூடி முடிவெடுக்கிறார்கள்? ஏனென்றால், சாதியால் தனியாக இயங்க முடியாது. அதுவொரு கும்பல் மனப்பான்மை. தனியாக இயங்க நேர்ந்தால் அது அழிந்து போகும். தனிமனித விருப்பங்களை சாதி விருப்பங்களாக மாற்றுவதும், சாதி கட்டுப்பாடுகளைக் கொண்டு தனிநபர் விருப்பங்களை முடக்குவதுமாக - மனித உரிமைகளுக்கும் ஜனநாயகத்திற்கும் கடுமையான சவாலாகத் திகழ்கிறது சாதி. சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்போருக்கு தனிப்பட்ட வாழ்க்கை என ஒன்று கிடையவே கிடையாது. எல்லாமே பொது. எல்லாமே சாதிக்கானது. அதனால்தான் குடும்பத்தில் ஒரு பிரச்சனை என்றாலும் ஊரே உள்ளே நுழைந்து உசுப்பேற்றி விடுகிறது. இது போன்ற காட்சிகளெல்லாம் திரைப் படங்களில் மட்டுமே நடப்பதாக நாம் நம்பினால், அது முட்டாள்தனம்.

நிலக்கோட்டை வட்டம் மலைப்பட்டியைச் சேர்ந்த சங்கீதாவின் காதலும் மரணமும், சாதி என்பது இழப்புகளையும் இழிவுகளையும் மட்டுமே உண்டாக்கும் கும்பல் மனப்பான்மை என்பதை உணர்த்தும் பாடம். கம்பளத்து நாயக்கராகப் பிறந்த சங்கீதா, கல்லூரிக்குப் போகும் பேருந்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பாலச்சந்தரை சந்தித்து காதல் கொண்டார். இரண்டாண்டுகள் கடந்த நிலையில் சங்கீதாவின் வீட்டிற்கு இது தெரிய வந்தது. அன்று முதலே சங்கீதா பல வகைகளிலும் கொடுமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் பாலச்சந்தரை ரகசியமாக சந்தித்த சங்கீதா, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்த, இருவரும் ஊரைவிட்டே சென்றனர். பாலச்சந்தரின் ஊரான எத்திலோட்டிற்கு சங்கீதாவை தேடி வந்த உறவினர்களிடம், எப்படியேனும் கண்டுபிடித்து அனுப்பி வைப்பதாக சமாதானப்படுத்தினார், பாலச்சந்தரின் தாய் லீலாவதி. ஆனால் சங்கீதா பெற்றோருடன் போக மறுக்கவே, உதவி கேட்டு நிலக்கோட்டை காவல் நிலையத்திற்கு போனார் லீலாவதி. ஆனால், அங்கு சங்கீதா அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

காவல் நிலையத்தில் வைத்தே சங்கீதாவை அடித்து உதைத்தனர் உறவினர்கள். பதினைந்து ஊர்களைச் சேர்ந்த கம்பளத்து நாயக்கர்கள் ஒன்று கூடி, சங்கீதாவிற்கு தகுந்த பாடம் புகட்ட முடிவு செய்தனர். அதன்படி, மாட்டுக் கொட்டடியில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கிடத்தப்பட்டார். நாய் தட்டில்தான் அவருக்கு உணவு கொடுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவரை காலித்ததால், சாதிக்கு களங்கம் உண்டானதாக ஊரையே கழுவி சுத்தம் செய்தனர். ஊர் கோயிலுக்கு வெள்ளையடிக்கப்பட்டது. சரியாக மூன்றாவது நாள், சங்கீதாவிற்கு விஷ ஊசி போட்டுவிட்டு உயிர் பிரிவதற்கு காத்திருந்தனர். ஆனால் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும் போதே, தோட்டத்தில் வைத்து எரித்து, அந்த சாம்பலை "கெட்ட ஆவிகள்' தாக்காமல் இருக்க ஊரைச் சுற்றி தூவினார்கள் ("இந்தியன் எக்ஸ்பிரஸ்' சூலை 18, 2010).

கிராமப்புறங்களில் கல்வியறிவு பெறாமல் இன்றும் மரத்தடியில் அமர்ந்து நீதிபதிகளைப் போல தீர்ப்பு சொல்லும் மக்கள் மட்டுமல்லர்; படித்து உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியானாலும் நாட்டின் முதல் குடிமகனாக அமர்ந்தாலும் சாதிக்குதான் முதல் மரியாதை அல்லது அவமரியாதை. கடந்த ஏப்ரல் மாதம் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த செய்தியாளர் நிருபமா பதக், அவரது வீட்டிலேயே சடலமாகக் கிடந்தார். நிருபமா மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாக முதலில் தெரிவித்த பெற்றோர், பின்னர் ஒரு தற்கொலை கடிதத்தை காண்பித்து, அவர் மின்விசிறியில் தூக்குப் போட்டுக் கொண்டதாகக் கூறினர். ஊடகங்களில் நிருபமாவின் மரணம் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கை வந்து சேர்ந்தது. இறக்கும் போது நிருபமா மூன்று மாதங்கள் கர்ப்பமாக இருந்ததாகவும், அவர் மூச்சுத் திணறி இறந்திருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு, அதன் பின்னரே இது கவுரவக் கொலை என தெரிய வந்தது. பார்ப்பனரான நிருபமா, வேற்று சாதியை சேர்ந்த ஒருவரை காதலித்து கர்ப்பமடைந்திருக்கிறார். இதை சகிக்க முடியாத தாய் சுதா தேவியே மகளை கொன்றிருக்கிறார். சாதி ஆதிக்கத்தை கட்டிக் காப்பாற்றுவதில் பெண்களும் ஆண்கள் அளவிற்கு வெறியுடனேயே இருக்கிறார்கள் என்பதற்கு சுதா தேவி ஓர் எடுத்துக்காட்டு.

அநீதி என்பது ஒன்றே ஒன்றுதான். உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ மனிதரை மனிதர் ஒடுக்கும் அவலம். அதற்கு வேறு முகங்களோ, வடிவங்களோ இல்லை. அது மதத்தாலோ, சாதியாலோ, இன, பாலின, வர்க்க வேறுபாடுகளாலோ விழைந்திருக்கலாம். ஏதோவொரு வரையறைக்குள் அநீதியை எதிர்ப்பவர்களுக்குதான் குழப்பம். ஆனால் அநீதியை நிகழ்த்துவோருக்கு, எந்தப் பாகுபாடுமில்லை. ஆதிக்கம் கொண்ட ஓர் மதவாதி பிற மதத்தினரை அழிப்பதையும், ஒடுக்கப்பட்டோரை வன்கொடுமைகள் செய்து துன்புறுத்துவதையும், பெண்களை அடிமைப்படுத்துவதையும் ஒருசேர செயல்படுத்துகிறார். ஆனால் அநீதியை எதிர்ப்போர் தங்களது எதிர்ப்பை பங்கிட்டுக் கொள்கின்றார்; வரையறைப்படுத்தி வைத்திருக்கின்றனர். விளைவு, மத ஆதிக்கத்தை எதிர்ப்போர் சாதியை சாடுவதில்லை. சாதியை அழிக்க விழைவோர் மதத்தை எதிர்ப்பதில்லை. இவ்விரு பிரிவினருக்கும் பெண்ணடிமைத்தனம் ஒரு பொருட்டே அல்ல. அதனாலேயே இங்கு ஆதிக்கவாதிகள் வலிமைமிக்கப் பிரிவினராக வளர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

என்ன மனிதர்கள் நாம்? சாதி எனும் இழிவை கட்டிக் காக்க, இன்னும் எத்தனை கொடுமைகளை சக மனிதருக்கு எதிராக இழைக்கப் போகிறோம்? இல்லையெனில், மனித உரிமைகளை சிதைக்கும் இது போன்ற கொலைகளை, இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்க்கப் போகிறோம்? இதுதானா கவுரவம்? ஓர் உயிரை அழித்து, வாழ்வின் நிம்மதிகளைத் தொலைத்து, கவுரவமென்று எதை அடைகிறோம்? வீட்டை விட்டு ஓடி வரும் காதலர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தால், அங்கும் சாதி உணர்வாளர்களே அதிகாரிகளாக இருக்கின்றனர் அல்லது லஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு காதலர்களைப் பிரிப்பதில் காவல் துறையே முன்னின்று செயல்படுகிறது. காதலர்களுக்கு பாதுகாப்பளிக்கவென இங்கு அமைப்புகள் இல்லை. கவுரவக் கொலை, கவுரவக் கொலை என கத்திக் கொண்டிருக்கிறோமே தவிர, சாதி வேலியைக் கடந்து ஊருக்குள் சென்று சட்டத்தாலும்கூட அவற்றைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

சாதி விஷயத்தில் தலையிட்டு கலவரம் உண்டானால், ஆட்சிக்கு களங்கம் உண்டாகுமோவென இது போன்ற விஷயத்தில் எப்போதும் அமைதி காக்கிறது ஆளும் அரசு. முன்பெல்லாம் ஊரைவிட்டு செய்தி கசியாமல் காதோடு காது வைத்தாற் போல நிகழ்த்தப்பட்ட கவுரவக் கொலைகள், தற்பொழுது காட்சி ஊடகங்களின் வெளிச்சத்தில் சர்வதேச கவனத்திற்கு வருகின்றன. கவுரவக் கொலைகள் இதுவரையிலும் கொலை என சட்டத்தால் வரையறுக்கப்படவில்லை. இது வரையிலும் இந்த வகையான கொலைகள், அந்தந்த சாதிக்காரர்களுக்கு வழங்கப்பட்ட உரிமையாகவே இருந்து வருகின்றன. மத்திய அரசு சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக எட்டு பேர் கொண்ட அமைச்சர் குழுவை நியமித்திருக்கிறது. கவுரவக் கொலைகளை தடுத்து நிறுத்துவதற்காக, இருக்கும் சட்டத்திலேயே கவுரவக் கொலைகளையும் கொலைகளாக சேர்க்கவும் கொலை செய்யும் குடும்பத்தார் மட்டுமின்றி, அதற்கு ஆணையிடும் சாதி பஞ்சாயத்தில் இடம் பெறுவோரையும் குற்றவாளிப் பட்டியலில் இணைக்க இக்குழு பரிந்துரைத்துள்ளது.

கவுரவக் கொலைகளுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க தனிச் சட்டம் இயற்றப்பட்டாலும், அது இந்த சாதி வக்கிரக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளியாக அமைந்துவிடாது. காரணம், சாதிய அத்துமீறல்களுக்கும், தீண்டாமைக் கொடுமைகளுக்கும் கடுமையான தண்டனைச் சட்டங்கள் இருந்தும் - அவை எந்த விதத்திலும், இந்த சமூகத்தில் மாற்றங்களை உண்டாக்கிவிடவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசியல் கட்சிகள் சாதிப் பெரும்பான்மை பார்த்து, அந்த சாதிக்கேற்ற வேட்டபாளர்களையே நிறுத்துகின்றன. கல்வி நிறுவனங்களை நடத்துவோர் தங்கள் சாதி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. தனியார் நிறுவனங்கள் சாதி பார்த்தே வேலைக்கு ஆளெடுக்கின்றன. பதவிகளும் உயர்வுகளும் சாதியாலேயே சாத்தியமாகின்றன. சாதி அடையாளத்தை நூறு சதவிகிதம் முழுமையாக எல்லோரும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சாதியை தன் உணர்வுகளுக்குள் சுமந்து கொண்டிருக்கையில், எப்படி ஒழியும் இது போன்ற கொடுமைகள்?

சாதியும் காதலும் இருவேறு எல்லைகள். சாதி என்பது சர்வாதிகாரம். காதல் என்பது ஜனநாயகம். இந்த இரண்டுமே இந்த சமூகத்தில் அழிக்க முடியாததாக நிலைத்திருக்கின்றன. மனிதர்களுக்குள் இயற்கையாக அமைந்துவிட்ட ஜனநாயக உணர்வான காதலை, போலியாக வளர்த்தெடுக்கப்படும் சர்வாதிகாரச் சாதி குணம் வென்றுவிடத் துடிக்கிறது. இப்போராட்டத்தில் செத்து மடிகின்றன உயிர்கள்.

காதலுக்காக, கள்ளக் காதலுக்காக என நாம் படிக்கும் செய்திகள் பெரும்பாலும் சாதியால் நிகழ்ந்தவையாக இருக்கின்றன. ஆனால், உண்மையானக் காரணம் மறைக்கப்பட்டு அல்லது பின்னுக்குத் தள்ளப்பட்டு, அது வெறும் உணர்ச்சிவசப்பட்டக் கொலைகளாக சித்தரிக்கப்படுகின்றன. பணத்துக்காகவும், முன் விரோதத்திற்காகவும் நடக்கும் கொலைகளைவிட, உறவுச் சிக்கலால் உண்டாகும் கொலைகளே இங்கு அதிகம். இதற்கான காரணத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டும். மிக நிச்சயமாக, சாதிக்கு அதில் பெரும்பங்கு இருப்பது தெரியவரும். காதலர்களுக்கு இந்த சமூகத்தில் ஆதரவு, இல்லை, பாதுகாப்பு இல்லை. சாதியை வெல்ல முடியாத நிலையில் அவர்கள் கொலை செய்யத் துணிகிறார்கள் அல்லது அவை குடும்பத்தாரால் கவுரவக் கொலைகளாக நிகழ்த்தப்படுகின்றன.

எப்படிப் பார்த்தாலும் சாதியால் இந்த சமூகத்திற்கு அழிவும் இழப்புமே மிஞ்சுகிறது. ஒவ்வொரு இழையிலும் சாதி படிந்திருக்கிற நிலையில், காதலை வளர்த்தெடுக்கவும், காதலர்களுக்கு பாதுகாப்பளிக்கவும், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்கவும் நாம் ஏதாவது செய்தாக வேண்டும். காவல் நிலையங்கள், உள்ளூர் ஆலமரத்தின் கட்டட வடிவமாகவும், காவலர்கள் சாதி பஞ்சாயத்து செய்வோரின் சீருடை வடிவமாகவும் இயங்குகின்றனர். மாற்று சாதியில் காதலிப்பவருக்கு வேலியாக காவல் நிலையங்களே செயல்படுகின்றன. எனவே சிறப்பு அதிகாரங்கள் கொண்ட சமத்துவ மய்யங்களை உருவாக்கி, காதலர்களின் உயிருக்கு பாதுகாப்பளிக்கலாம். சமத்துவ மய்யங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, சாதி ஒழிப்புப் பற்றிய கலந்தாய்வும் தொடர்ச்சியான பயிற்சியும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். கல்வியறிவை விடவும் பகுத்தறிவின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட்டு, இந்த மய்யங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

இதெல்லாம் கனவுதான். நாடாளுமன்றத்தின் இந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் கவுரவக் கொலைகள் விவாதங்களைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறுமனே தண்டனைச் சட்டத்தை மட்டும் இயற்றாமல், சீர்திருத்த நோக்கோடும் சட்டங்களை இயற்ற வேண்டும். மனித நேயத்திற்கும், உரிமைகளுக்கும், வளத்திற்கும் கடும் சவாலாக இருக்கும் சாதியை முடக்கவென முழு வீச்சாக யாரும் செயல்படவில்லை. சாதியை ஒட்டுமொத்தமாக அழிக்காமல், கவுரவக் கொலை என கவுரவமாக அழைக்கப்படும் - சாதி வக்கிரக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.

Pin It