சென்ற இதழின் தொடர்ச்சி...

நமது உரிமைகளுக்காக மக்களைச் சங்கமாக்குவது, அவர்களைத் திரட்டித் தெருவுக்குக் கொண்டு வருவது என்ற சனநாயகத்தின் முக்கியமான பணியை கம்யூனிஸ்டுகள் இந்த நாட்டில் வெற்றிகரமாகச் செய்துள்ளார்கள். சனநாயகத்தின் இந்த மகத்தான ஆற்றலை நாம் இழக்க முடியாது. மாறாக, சனநாயகத்தின் இந்த ஆற்றலின் மீதுதான் நாம் சோசலிசத்தின் தன்னுணர்வைக் கட்டியெழுப்ப வேண்டும். தோழர் தா.பாண்டியன் இந்நூலின் முதலிலிருந்து முடிவு வரை சனநாயகத்தின் குரலாக ஒலித்துள்ளார்.

- ந. முத்துமோகன் (அணிந்துரையில்)

மானிட சமூக வளர்ச்சியில் தொடங்கி, உலக வரலாறு, இந்திய விடுதலை இயக்க வரலாறு, உலகப் பொதுவுடைமை இயக்க வரலாறு, இந்திய விடுதலை இயக்கம், இந்தியப் பொதுவுடைமை இயக்க வரலாறு, உலகமயமாக்கத்தின் எதிர் விளைவுகள் என நூலின் செய்திகள் விரிவடைந்து கொண்டே செல்கின்றன. இவர் விவாதிக்கும் பல செய்திகள் தொடர்பான அய்யப்பாடுகள் பலரின் உள்ளங்களில் இருப்பவைதான். ஆனால், அவை தீர்க்கப்படாமல் அய்யங்களாகவே நீடிக்கின்றன. தோழர் தா.பா. அய்யங்களுக்குத் தீர்வு காணும் முயற்சியால் ஈடுபடுகிறார்.

மனித சமூகத்தின் வளர்ச்சிப் போக்கு குறித்தும்,  இவ்வளர்ச்சியில் உருவான அடிமைச்சமுதாயம் நிலவுடைமைச் சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம் உருவாக்கிய தொழிலாளி வர்க்கம் என்பன குறித்து மார்க்சியம் விரிவாக எடுத்துரைக்கிறது. மார்க்சியத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றான வரலாற்றுப் பொருள்முதல்வாதம் இச்செய்தி களை உள்ளடக்கியதுதான். வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தின் வழிநின்று, தோழர் தா.பாண்டியன் மேற்கூறிய சமூக வளர்ச்சிக் கட்டங்களை எளிமையாக அறிமுகப்படுத்திச் செல்கிறார். ஆனால் அறிமுகப் படுத்துதலின் போதே, பல வினாக்களை எழுப்பி அவற்றிற்கு விடை அளிக்கும் பாணியைப் பின்பற்று கிறார். அத்துடன் சமத்துவம் குறித்த சிந்தனையானது பழமையான ஒன்று என்பதையும், பல்வேறு சமயவாதி களின் கருத்துக்களின் துணையுடன் நிறுவுகிறார். இப்படி நிறுவும்போது ‘கார்ல் மார்க்சுக்கு முந்தியும் பல்லாயிரம் ஆண்டுகளாக சான்றோர்களும் மதத்தலைவர்களும் சமத்துவத்தை வேண்டியும் வராமல் இருப்பதற்கு என்ன காரணம்? சமத்துவம் என்பது சாத்தியம் தானா? என்ற வினாக்களை எழுப்பி முதலாளித்துவம் தோன்றிய வரலாற்றை எளிமையாக, ஆனால் ஆழமாக எடுத்துரைக் கிறார். இதன் ஊடாக இந்திய முதலாளித்துவம் குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் முன் வைக்கப் பட்ட அறிக்கையின் போதாமையையும் விமர்சிக்கிறார்.

‘இந்தியாவில் உள்ள பலகோடி ஏழை உழைப் பாளர்கள், தொழிலாளர்களைத் தங்களிலும் வசதி படைத்த மேம்பட்ட புதிய வர்க்கமாக மட்டுமே பார்க்கிறார்கள்’ என்ற கருத்தை முன்வைக்கிறார். இதன் தொடர்ச்சியாக முதலாளித்துவ சமூகத்தில் இடையிடையே தோன்றும் ‘பொருளாதார நெருக்கடி’ குறித்தும், அதை முதலாளித் துவம் எதிர்கொள்ளும் முறை குறித்தும், ‘முதலாளித் துவத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு, எதிர்ப்பு உணர்வு ஏற்படாது மங்கி வருவதற்கான காரணங்கள் குறித்தும் சில கருத்துக்களை முன்வைக்கிறார். இதனூடாக இந்திய, உலகப் பொதுவுடைமை இயக்கங்களின் போதாமை குறித்த சில விமர்சனங்களையும் முன் வைக்கிறார். இது சிலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு அதிர்ச்சியை அளிக்கலாம். இவ்விரண்டில் இருந்தும் விடுபட்டு, சிந்திக்க வேண்டிய செய்திகள் இவை.

இந்தியாவில் இடதுசாரி இயக்கம்

இந்தியாவில் நிகழ்ந்த ஆங்கிலக் காலனிய ஆட்சிக் கெதிரான போராட்டத்தினூடாக இடதுசாரி சிந்தனை, குறிப்பாக கம்யூனிஸ்ட் சிந்தனை உருப்பெற்று, இயக்கமாக மாறியதையும், அதன் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஆராய்கிறார். தோழர்கள் சி. சுப்பிர மணியன், சக்ளத்வாலா, பி.சி.ஜோஷி ஆகியோரின்  கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க்கையில், எதிரிகளால் மட்டுமல்ல, சொந்த இயக்கத்தாலும் இடையூறுகளுக் காட்பட்ட அவலத்தை எடுத்துரைக்கிறார். இது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல என்பதை மூத்த இயக்கத் தோழர்கள் நன்கு அறிவர். 1942 ஆகஸ்ட் போராட்டம் தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த தவறான முடிவு குறித்தும் விமர்சன அடிப்படையிலான கருத்துக்களை முன் வைக்கிறார். இதுபோன்றே ‘மக்கள் யுத்தம்’ என்ற பெயரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1948இல் எடுத்த முடிவை, அக்காலத்தில் இந்திய அரசியல் சூழலின் பின்புலத்தில் ஆராய்ந்து அதன் எதிர்மறையான விளைவுகளையும் வெளிப்படுத்துகிறார்.

1952, 1957 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்தும், 1962-இல் நிகழ்ந்த சீனப்படையெடுப்பு தொடர்பான அணுகுமுறையால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவையும் எடுத்துரைக்கிறார்.

காந்தியைக் குறித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கடந்த கால அணுகுமுறை குறித்து விவாதிக்கும் தோழர் தா.பாண்டியன், கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை நினைவுபடுத்திவிட்டுப் பின்வரும் மதிப்பீட்டை முன்வைக்கிறார்:

தொடக்க காலம் முதலே இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி இந்திய மண்ணில் காலூன்றி நின்று, இந்திய சமுதாய அமைப்பையும் சரியாக மதிப் பிட்டு சுயமாக, சுதந்திரமாக முடிவெடுத்து அதற்கு ஏற்ப, அந்தக் கட்டத்தில் அந்தக் கடமை களை நிறைவேற்ற, நேச சக்தி எது? முறியடிக்க வேண்டிய முக்கிய முதல் எதிரி சக்தி எது? என்று இந்தியக் கம்யூனிஸ்டுகள்  முடிவு எடுப்பவர்களாக இருந்திருக்க வேண்டும். மாறாக சர்வதேசியம் என்ற கோட்பாட்டை யாந்திரிகமாக ((Mechanic) நடைமுறைப்படுத்தி வழிகாட்டுதலுக்கு ஆட்பட்டு விட்டதே ‘முதற் கோணல் முற்றிலும் கோணல்’ எனத் தவறாக அடி எடுக்க வைத்துவிட்டது.

இதற்கு அடுத்த கட்டமாக, சோவியத் புரட்சியில் வெற்றி, பின்னர் பல துறைகளில் அந்நாடு செய்துவந்த மாற்றங்கள், வளர்ச்சி காரணமாக, புரட்சிகர உணர்வின் காரணமாகவே சோவியத் ரஷ்யாவை, அந்நாட்டுக் கட்சியை தார்மீக வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு விட்டனர்.

ரஷ்யக் கம்யூனிஸ்டுக் கட்சி அமைக்கப்பட்ட வடிவம், முறைகள், விதிகள் வழிப்படிதான் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அமைப்பும் வடிவமைப்பும் பெற்றது. விதிமுறைகளும், பக்தியோடு பின்பற்றப்பட்டன. லெனினியக் கோட்பாடு, ஜனநாயக மத்தியத்துவம், அந்திய வர்க்கப்போக்கு என்பன போன்ற வரன்முறைகள், புரட்சிகரக் கட்சிக்குத் தேவையான கட்டுப் பாட்டைக் கட்டிக் காக்கத் தேவை எனக் கூறப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இந்தியச் சமூக அமைப்பையும் கருத்தில் கொண்டு அரசியல் இயக்கங்கள், கொள்கைகள், நடைமுறைகள், அதை முறைப் படுத்தும் வழிமுறைகள் என சுயமாகச் சிந்தித்து உருவாக்குவதற்குப் பதிலாக மதவாதிகள், சில சடங்குகளை, சொற்பதங்களை, மரபுகளை, ஏன் உடை அணிவது, நல்ல நாள், கெட்டநாள் பார்த்து உணவு தயாரிப்பது போல, விஞ்ஞான ரீதியில் விஞ்ஞானக் கண்கொண்டு நெறிமுறை வகுக்க வேண்டியவர்கள், பிறநாட்டுச் சிந்தனை முடிவுகளுக்கு ஆட்பட்டனர். (பக்கம். 89-90)

இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு. ஆனால், கோபம் கொள்ளாமல் விடை கூறவேண்டிய  குற்றச் சாட்டு. அல்லது, குறைந்தபட்சம் அந்தரங்க சுத்தியோடு விவாதிக்க வேண்டிய குற்றச்சாட்டு.

இதன் அடுத்த கட்டமாக சிங்காரவேலர், பெரியார், அம்பேத்கார் ஆகியோருடனும் அவர்கள் சிந்தனைகளுடனும், உருவாக்கிய இயக்கங்களுடனும் உறவுகொள்ளாதது ஏன் என்ற வினாவை எழுப்புகிறார் (இன்று இந்நிலை இல்லை).

இதன் தொடர்ச்சியாக எந்தெந்த முற்போக்கு இயக்கங்களுடன் தொடர்பு கொள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் தவறிவிட்டது என்பதையும் விரிவாக எடுத்துரைக்கிறார். அதே நேரத்தில் காலனிய எதிர்ப்பில் இக்கட்சியின் ஆக்கப்பூர்வமான பங்களிப் பையும் எடுத்துரைக்கத் தவறவில்லை.

அதே நேரத்தில் மக்களிடமிருந்து இடதுசாரிகள் அந்நியப்பட்டுப் போனார்கள் என்ற குற்றச்சாட்டையும் இவ்வாறு முன்வைக்கிறார்:

இந்தியாவில் இடதுசாரிகளை தேசிய இயக்கமோ, சமூக சீர்திருத்தவாதிகளோ வெறுத்து ஒதுக்க வில்லை. பொதுவுடைமைக் கருத்தையும், புரட்சி பற்றியும் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து கொண்டே பேச அனுமதிக்கப்பட்டனர். பல பொறுப்புக் களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தீவிரவாதப் போக்கு என்ற பெயரால், கட்சியை அவர்களே மக்களிட மிருந்து தனிமைப்படுத்திவிட்டார்கள். (பக்கம். 55)

சோவியத் வீழ்ச்சி

சோவியத் வீழ்ச்சிக்கான காரணங்கள் பலதரத்தவை. பல தரப்பினராலும் திரும்ப திரும்பக் கூறப்படும் செய்தி, அங்கு ஜனநாயகம் இல்லை என்பதாகும். இதைத் தோழர் தா.பாண்டியன் மறுக்கவில்லை. இக்குறைபாடு மட்டுமின்றி உலகச் சந்தையில் வாணிபம் செய்ய முற்படாமையும் அதன் வீழ்ச்சிக்கான காரணி களில் ஒன்று என்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் முன்வைக்கும் கருத்துக்கள் வருமாறு:

சோவியத் ஒன்றியத்துக்கு ஏற்றுமதி மூலம் வரவு என்ற ஒன்று இல்லாமல் இருந்தது.

தற்போதுள்ள சீனத்தலைமை, கலப்புப் பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கி, பல பொருள்களை உலகச்சந்தையில், குறிப்பாக அமெரிக்காவில் விற்று, லாபம் ஈட்டி அதன் மூலம் ஆறு டிரில்லியன் அல்லது ஆறு லட்சம் கோடி டாலர் கடனை “அமெரிக்காவுக்கு”த் தரும் நாடாக மாறி நிற்கிறது. பொருளாதார வலிமையால் இன்று சீன மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்தே வருகிறது.

சீன நாடு கலப்புப் பொருளாதார முறையை ஏற்றுக்கொண்ட பின், முதலீடுகளுக்கும் அனுமதி வழங்கியது. சொந்தத் தொழிற்சாலைகளையும் கட்டியது.

முக்கியமாக உள்கட்டமைப்பு (Infrastructure) என்ற சாலைகள், மின் உற்பத்தி, கல்வித்துறை விரிவாக்கம், மருத்துவ வசதிகளைப் பெருக்கியது. (பக்கம். 122-124)

நுகர்வியத்தின் தாக்கம் சோவியத் ஒன்றியத்தில் மேலோங்கியதும் அதன் வீழ்ச்சிக்கு ஒரு காரணியாக அமைந்தது என்கிறார்.

உலகப் பொதுவுடைமை அரசுகளின் முன்னோடி யான சோவியத் வீழ்ச்சியைக் குறிப்பிட்டுவிட்டு கம்யூனிஸ்டுகள், இந்தியாவில் முதன்முதலாகத் தேர்தல் வெற்றி வாயிலாக 1957இல் ஆட்சியமைத்த கேரளம் குறித்தும் இதன் தொடர்ச்சியாக ஆட்சியமைத்த மேற்கு வங்கம், திரிபுரா குறித்தும் ஆராய்கிறார். இம்மூன்று மாநிலங்களுள் கேரளத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது,

"தொடக்க காலம் முதலே கம்யூனிஸ்ட் கட்சி சர்வாம்ச கோரிக்கைகளுக்காக (All inclusive Comprehensive demands)ப் போராடும் கட்சியாக, அதற்கும் மேலாக, சமூக சீர்திருத்த இயக்கங்களை நட்பு ரீதியாக நடத்தும் கட்சியாக மக்கள் மதிப்பிட்டனர். எனவேதான், கேரள சிந்தனை யாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பொது வுடைமை சாரத்தை ஏற்றே கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இவ்வாறுதான் போராட்ட இயக்கத்தில் பூத்த மலராக கேரள மாநிலத் தேர்தல் வெற்றி கிட்டியது’. (பக்கம். 237)

என்று அங்கு இடதுசாரிகளின் பங்களிப்பை மதிப்பீடு செய்கிறார். இதை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் தேர்தல் கூட்டணிகள், ஆறு மாதங்கட்கு மேலாக நீடித்ததே இல்லை. அது பிணியாகவே முடிகிறது. ஆனால், கேரளத்தில் தொடர்ச்சி நீடித்தது. கேரளத்தில் அமைந்த கூட்டணி, 1957 முதல் இன்று வரை சில சிறு மாற்றங்களோடும், சில சமயம் மோதல்களால் சிராய்ப்புகளோடும் பொதுவான கூட்டணி தொடர்ந்து நீடிக்கிறது.

தனித்தன்மையை எக்காலத்திலும் இழக்காது கூட்டணியில் பங்குபெறவும் வேண்டும். கொள்கையில் முரண்பாடு வரும்போதும், உறவை நிரந்தரமாக தீயிட்டுப் பொசுக்கிவிடாமல் நாகரிக உறவோடு விலகிடவும் வேண்டும். (பக்கம். 238)

‘ஒன்றுபடுதல், போராடுதல் என்பது கத்தியின் மீது நடப்பது போன்ற சிக்கலான பயணம்தான். இதில் கேரளத் தோழர்கள் நல்ல வழிகாட்டிகள் எனக் கூறலாம்’ என்று அறிவுறுத்துகிறார். இதன் தொடர்ச்சியாக மேற்குவங்க அனுபவங்களைக் கூறி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

நூலாசிரியரின் நோக்கம்

இந்நூலில் எழுப்பியுள்ள வினாக்களும் முன் வைத்துள்ள விமர்சனங்களும் வரலாற்றின் தொடக்க காலம் தொடங்கி இன்றைய காலம் வரையிலான பரந்து பட்ட  காலத்தையும் நிகழ்வுகளையும் உள்ளடக்கியவை.

இதன் வாயிலாக அவர் முன்வைக்கும் கருத்துக்கள் கம்யூனிஸ்டுகளை சுயவிமர்சனம் செய்யத் தூண்டுகின்றன. கடந்தகாலத் தவறுகளை உணரும்படி செய்கின்றன. சமூக நீதிக்கான போராட்டத்தை மேற் கொள்ளத் தூண்டுகின்றன.

இத்துடன் நின்றுவிடாமல் நம் காலச் சமூகச் சிக்கல்களையும், கொடூரங்களையும் நம் பார்வைக்குக் கொண்டு வருகின்றன.

அத்துடன் இவற்றை எதிர்த்துப் போராடுவதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. வலியுறுத்து வதுடன் நின்றுவிடாமல் வழியையும் காட்டுகின்றன. நூலின் இறுதியில் முத்தாய்ப்பாக அவர் கூறும் செய்தி இதுதான்:

இத்தகைய சுரண்டல் முறையின் மீது இயங்கும் சமுதாய அமைப்பை மாற்றியமைக்க கம்யூனிஸ்டு பேரியக்கம் கட்டாயம் தேவை. எனவே, அந்த அமைப்பை வலுப்படுத்த வேண்டியது மனித குலத்தின் பொதுக்கடமை ஆகி நிற்கிறது. எனவே அவ்வியக்கம் வென்று மனிதகுலத்தை விடுவிக்கும், காப்பாற்றும்.

பொதுவுடைமையரின் வருங்காலம்?

ஆசிரியர்: தா.பாண்டியன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,

அம்பத்தூர், சென்னை - 600 098

தொடர்புக்கு : 044 - 26251968

விலை: ` 250/-

Pin It