2020 ஜூலை 2 -- சங்கர் கொலைக்கு நீதி வேண்டும்! என்ற முழக்கத்தோடு சனநாயக மீட்புக் கூட்டியக்கம் சார்பில் பொள்ளாச்சியில் இரு இடங்களில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் தோழர்கள் பங்கேற்றனர்! தோழர் பாரதி தலைமையேற்றார்.
2020 ஜூலை 10 -- ஆம் நாள் மக்கள் முன்னணி ஊடகம் சார்பில் ’அதிகாரங்கள் குறைக்கப்பட்டுக் காவல்துறை சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்’ என்ற தலைப்பில் இரண்டாம் கூட்டம் நடைபெற்றது. தமிழ்த் தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் தோழர் பாலன் தலைமையில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் தியாகு கருத்துரை வழங்கினார்.
2020 ஜூலை 12 -- சாத்தான்குளம் இரட்டைக் கொலைக்கு நீதி வேண்டி, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் சென்னையில் தோழர் மகிழன், பொள்ளாச்சியில் தோழர் பாரதி, மதுரையில் தோழர் கதிர்வேல், தஞ்சையில் தோழர் அருண் மாசிலாமணி, அருப்புக்கோட்டையில் தோழர் சுந்தர், புதுவையில் தோழர் செல்வமுருகன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரளான மக்கள் சமூக இடைவெளியோடு பதாகைகள் ஏந்திக் கலந்து கொண்டனர்.
2020 ஜூலை 26 -- அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் இட ஒதுக்கீட்டு உரிமைக்காக இணையவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பங்கேற்றதோடு, பொதுச்செயலாளர் தோழர் தியாகு முகநூல் நேரலையில் சிறப்புரை வழங்கினார்.
2020 ஆகஸ்டு 3 -- காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் (JAACT-TN) சார்பில் தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் தியாகு தலைமையில் நடைபெற்ற இந்த இணையவழிக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக அனைத்துக் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.
2020 ஆகஸ்டு 4 – கோவை குறிஞ்சி சிந்தனைக் களத்தின் 68ஆவது இணையக் கருத்தரங்கத்தில்.’சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு - 2020 எது நம்மைக் காக்கும் கவசம்?’ என்ற தலைப்பில் தோழர் தியாகு கருத்துரை வழங்கினார்.
2020 ஆகஸ்டு 5 -- தமிழ்த் தேச மக்கள் முன்னணி சார்பில் ’ஆகஸ்டு 5 -- மசூதி இடிக்கப்பட்டு இராமர் கோவில்! காசுமீர் சிறைப்பட்டு ஓராண்டு!’ என்ற தலைப்பில் கறுப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. தோழர் மீ.த. பாண்டியன், தோழர் தியாகு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
2020 ஆகஸ்டு 6 -- காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் (JAACT-TN), விருதுநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற இணையவழிக் கருத்தரங்கத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் பால்ராஜ் தலைமையில் தோழர்கள் அருண் மாசிலாமணி, மீ.த.பாண்டியன், தியாகு ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
2020 ஆகஸ்டு 13 -- கல்வி பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் ’தேசியக் கல்விக் கொள்கை 2020 - ஒரு விமர்சனப் பார்வை’ என்ற தலைப்பில் இணைய வழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தொடக்கவுரை ஆற்றினார். தொடர்ந்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, மனித உரிமைச் செயல்பாட்டாளர் தோழர் பிரிட்டோ ஆகியோர் கருத்துரை வழங்கினார்.
2020 ஆகஸ்டு 15 -- தெளிதல் களத்தின் 133ஆவது இணையக் கூட்டத்தில் ’தேசியக் கல்விக் கொள்கை – 2020’ என்ற தலைப்பில் தோழர் தியாகு கருத்துரை வழங்கினார். தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
2020 ஆகஸ்டு 15 -- உலகத் தமிழ் அமைப்பு சார்பில் புதிய கல்விக் கொள்கையும் தேசிய இனங்களின் உரிமையும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஏராளமான அமெரிக்க வாழ் தமிழர்கள் கலந்து கொண்ட இந்த இணையவழி நிகழ்வில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு இருவரும் கருத்துரை வழங்கினர்.
2020 ஆகஸ்டு 30 – ஐநா அறிவித்த அனைத்துலகக் காணாமலாக்கப்பட்டோர் நாளை முன்னிட்டு ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் அன்று மாலை இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
- ஈழத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் எங்கே?
- சிங்களப் படையினரிடம் சரணைந்தோர் பட்டியல் எங்கே?
- நீதி வழங்க மறுக்கும் இலங்கைக்கு இங்கே தூதரகமா?
- கொலைகார இராசபக்சேக்களோடு கும்மாளமா?
என்கிற முழக்கங்களோடு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் மகிழன் கண்டன உரையாற்றினார்.
- மகிழன்