வாழ்வின் சுமைகளை அவற்றின் புரியாத பாரங்களோடு சுமப்பதும், அதிலிருந்து வெளியேறுவதற்கான சாத்தியங்களை நிகழ்த்திக் காட்டுவதும் அல்லது அதை ஒரு கனவாக மாற்றிக் கொண்டு உழைப்பதுமே தலித் வாழ்வியலாக இருக்கிறது. எந்த மூலையிலும் தன்னுடைய இருப்பை உழைப்பின் மூலமாகவே வெளிக்காட்டும் சாகசங்கள் நிறைந்தது அது.

உண்மைதான். அய்நூறு குடும்பங்கள் வாழும் கிராமத்தின் உயிர்நாடியாக இருந்த நூற்றைம்பது ஏக்கர் நிலத்தைப் புதுச்சேரியிலிருந்து வந்த பெரும் பணக்காரனிடம் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, வாழ்வதற்கு சாராயம் காய்ச்சும் தொழிலை செய்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போயிருக்கும், வெள்ளம் கொண்ட அகரம் மக்களுக்கு. அடிக்கடி ஆற்றில் தண்ணீர் வந்து வீடுகளில் தீண்டாமை பார்க்காமல் புகுந்து கொள்ளும் தலித் கிராமம் அது. அதனால்தான் அந்த கிராமத்திற்கு அப்பெயர். காஞ்சிபுரத்தின் கடைசி எல்லையில், மரக்காணத்திற்கு பத்து கிலோ மீட்டர் தொலைவில் செய்யூருக்கு அருகில் இருக்கும் ஒரு தலித் கிராமம். தலித்துகள் மட்டுமே வாழும் அக்கிராமத்திலிருந்து வந்தவர்தான் முத்துவேல்.

தொலைக்காட்சியைப் பார்த்து, அதில் வரும் பெண்ணைப் போல உதட்டுச் சாயம் கேட்டு அம்மாவிடம் அடி வாங்கிய தன் தங்கையை, அன்போடு அழைத்துப் போய் வரப்பு மேல் உட்கார வைத்து, சப்பாத்திப் பழத்தைக் கிள்ளி முள்ளெடுத்துக் கொடுத்து வாய் சிவக்க வைத்த அன்பு உள்ளமே ஓர் ஆக்கக் களமாக மாறி, தன் கிராமத்து மக்களின் வாழ்க்கையைத் தன் வாழ்விலிருந்து பார்த்து, அவற்றைப் பதிவுகளாக்கும் கலை வடிவத்தினைக் கைக்கொண்டிருக்கிறார் முத்துவேல். இன்னும் ஆண்டான் அடிமைக் கொடுமை நடந்து கொண்டிருக்கும் கடுக்கலூர் என்னும் கிராமத்தில் இளம் வயதில் வளர்ந்திருக்கிறார். ஆண்டு முழுவதும் உழைத்துவிட்டு நெல்லைக் கூலியாக வாங்கும் நிலை இன்னும் அக்கிராமத்தில் இருப்பதாகக் கூறுகிறார்.

இன்றைய தலைமுறையினர் மெத்தப் படித்து வேறிடங்களில் வாழ்ந்தாலும் அங்கு அதுதான் நிலை. சாதிக் கொடுமைகளை நேரில் கண்டும் கேள்வியுற்றும் அவருடைய இளமைப் பருவத்தின் தொட்டில் நிறைந்திருக்கிறது. முத்துவேல் எழுதுவதற்கான உந்துதல் அவருடைய வாழ்க்கைதான். வாழ்க்கை அவருக்குத் தந்திருக்கும் இனிப்புகளும் கசப்புகளுமே அவரை எழுத வைத்திருக்கின்றன. சிறு வயதிலேயே சிக்கல்களால் சிதைவுற்றது அவருடைய குடும்பப் பின்னணி. அதன் மூலம் தாயிடம் கிடைத்த மிகுந்த ஆதரவால்தான் எழுத்து அவருக்கு உடன் வந்திருக்கிறது. அது அவருடைய கவிதைகளிலும் காணக் கிடைக்கிறது. ஊர் நடுவில் இருக்கும் கோயில் குளத்தில் தலித்துகள் தண்ணீர் எடுக்கக் கூடாது என்னும் கட்டுப்பாட்டை விதிக்கும் ஆதிக்க சாதியினரை என்ன செய்வது? இதோ அந்தக் கவிதை :

“ஊர் நடுவுல கீர

கோயிலு கொளத்துல

நாங்கெல்லாம் போயி

தண்ணிமொள்ளக் கூடாதுன்னு

ஒரு நாளு

மோளம் அடிச்சி சொல்லிட்டாங்க...

அப்படியும் எடுத்தா

அய்நூறு ரூவா அபராதம்

 

அவங்க மட்டும்தான் அந்த

தண்ணிய குடிக்கணுமாம்

நாங்களும்

அவுங்க சொன்னத மீறல

 

கொளத்துக்கு ராத்திரியில

அம்மா என்னெ

ஆருக்கும் தெரியாம

அடிக்கடி அனுப்பும்

மாட்டுக்குடலு

மலம் அலச...”

இதைவிட வேறென்ன எதிர்வினையை ஆற்றிவிட முடியும்? எதைக் கூடாது என்கிறார்களோ, அதையே அவர்களுக்கெதிரான ஆயுதமாக மாற்ற வேண்டும் என்பது ஒடுக்குதலுக்கு எதிரான உளவியல் அன்றோ!

கிராமத்து வாழ்வை அப்படியே திறந்து காட்டுகின்ற எழுத்து முத்துவேலுடையது. அதில் இருக்கும் உழைப்பு, துயர், அவலம், தன் சுயவாழ்வின் இருள் அனைத்தையும் அப்படியே ஓர் ஒளிப்படப் பெட்டியில் பதிவு செய்வதைப் போல, பொட்டில் அறைந்து கொடுக்கும் வீச்சாக அவருடைய எழுத்துகள் விரிகின்றன.

மக்களின் மொழியிலேயே எழுதும் அவருடைய திறன் படிக்கும் வாசகனுக்கு அந்த மக்களுடனேயே வாழும் உணர்வினைத் தருகிறது. நிலத்தினை இழந்து ஊரே சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தருணத்தினை கவிதையாக்கும் அவருடைய ‘மண்ணும் மானமும்' என்னும் கவிதையில், நிலத்தை விற்ற பண முதலீட்டில் சாராயம் காய்ச்சத் தொடங்கினர் அனைவரும்.

ஆற்றங்கரையில் சாராயம் காய்ச்சுபவர்கள் ஊற்றும் சூடான ஊறல் கலந்து குட்டையில் இருக்கும் மீன்கள் செத்து விட்டன. குடிப்பதற்கென இருந்த ஒரே கிணற்றுத் தண்ணீரும் உவர்ப்பெடுக்கத் தொடங்கிவிட்டது என்னும் அக்கவிதையில் இயற்கை இப்படி கெட்டுவிட்டது; ஆனால் குழந்தைகள் எல்லாரும் கான்வென்டில் படிக்கிறார்கள் என்னும் குறிப்பை வைப்பார். இயற்கையை சீரழித்துவிட்டு நவீன வாழ்க்கையை மேற்கொள்வதில் உள்ள இடர்ப்பாடுகள் மக்களை உலகயமயமாதல் சூழல் எங்ஙனம் உள்வாங்கிக் கொள்கிறது என்பது கண்கூடு.

முத்துவேலின் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு கதை. கதையை கவிதையில் சொல்லும் திறன் என்றே அதைச் சொல்லலாம். அது அவருடைய வாசிப்பின் மூலமே கைவரப் பெற்றதாகச் சொல்கிறார். கல்லூரியில் படிக்கும்போதுதான் வாசிக்க நிறைய கிடைத்தது. அப்போது அவர் வாசித்த பழமலய் எழுதிய ‘சனங்களின் கதை' அவருடைய எழுத்தின் போக்கை மாற்றியுள்ளது. அதற்குப் பிறகே மக்களின் மொழியில் எழுதும் தன்மையில் அவர் உறுதியோடு எழுதியிருக்கிறார். தமிழ் இலக்கியம் படித்த முத்துவேல் தன் ஆக்கங்களை செவ்வியல் மொழியில் எழுதாமல், தன் மக்களின் மொழியிலேயே எழுதுகிறார். தமிழ் இலக்கியப் பரப்பில் கவிதையை புனிதமானது என்று கூறும் இலக்கியவாதிகளுக்கு எதிராக – இது என் மக்களின் மொழி; இதில் ரத்தக் கவிச்சியும் வாழ்வின் ஆற்றாமைகளும் இப்படித்தான் இருக்கும் என வெட்டிக் கூறும் துணிச்சல் பெற்றவை முத்துவேலின் கவிதைகள்.

மொழி திருகி எழுதுதல் ஆகச்சிறந்த உத்தியாகக் கருதப்படும் சூழலில் புரியாமல் எழுதப்படும் கவிதைகள், நீண்ட நாள் வாசிப்பனுபவம் மட்டுமே உள்ளவர்களால் புரிந்து கொள்ளப்படுகின்றன என்றும் தன் கவிதைகளுக்கு அப்படி ஒரு விபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதில் தான் மிகவும் தெளிவாக இருப்பதாகவும், மிகச் சாதாரண மக்களுக்கும் தன் கவிதைகள் போய் சேர்ந்துவிட வேண்டும் என்றும், தன் மொழியை மக்களுக்கான எளிய மொழியாக மாற்றிக் கொண்டதாக அவர் கூறுகிறார். இதன் மூலம் தலித் ஆக்கவாளிகள் எங்கிருந்தாலும் எத்தகைய சூழலில் இருந்தாலும், தன்னுடைய அரசியலை பொதுச் சிந்தனைக்கு எதிராகவே கட்டமைக்கின்றனர் என்பதும் புலனாகிறது.

தன்னை ஒரு தலித் ஆக்கத் திறனுடையவராக உணர்வதாக உறுதியாகச் சொல்லும் முத்துவேல், ஊடகச் சூழலில் தலித் ஆக்கவாளிகள் இப்படி வெளிப்படையாகத் தங்களை தலித் என்று சொல்லிக் கொண்டு வெற்றி பெற முடிவதில்லை என்றே கருதுகிறார்.

‘உடைமுள்' என்னும் அவருடைய கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகள், நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவை. அந்நிகழ்வுகள் தலித் வாழ்க்கையினை பிரதிபலிக்கின்றன. பிள்ளை இல்லாத குறையைப் போக்கிக் கொள்ள தங்கையை வளர்க்க அக்கா படும் பாடுகளையும், பிற்காலத்தில் படிப்பில் கவனம் செலுத்தாமல் காதலனுடன் ஓடிப்போய் குழந்தை பெற்றுக் கொண்டு, குழந்தை இல்லாத அக்காவுக்கு அதைப்பற்றி என்ன தெரியும் என்று பேசுவதை அன்றாட வாழ்வின் பதிவுகளாகக் காணலாம்.

பண்ணையார்க்கு எதிராக பஞ்சாயத்துகள் கூட்டப்படாத கிராமங்களில், அதற்கான காரணத்தை ‘புளியங்கொம்பு' என்னும் கவிதையில் சம்பவிக்கிறார். இது ஒருவகையில் சாதிய ஆதிக்கத்திற்கு எதிரான தலித்துகளின் மனநிலையாகக்கூட கிராமங்களில் காண நேரிடுகிறது. பிற சாதி பெண்களுடனான தொடர்பும் அதை சாதாரணமாகத் தூக்கியெறியும் மனநிலையும் அத்தகையதுதான்.

‘தலித் இலக்கியம் இன்றைய காலகட்டத்திற்கு தேவையா?' என்ற வினவியதற்கு இன்னும் சாதி இருக்கத்தானே செய்கிறது. சாதிய வேற்றுமைகள் இருக்கும் பட்சத்தில் அதற்கெதிரான போர்நிலைத் தன்மை இருக்கத்தான் வேண்டும். அது மட்டுமல்ல, அதுவொரு பண்பாட்டு இலக்கியமாக, பண்பாட்டு மாற்றத்தை நிகழ்த்தக் கூடியதாக இருக்கிறது என்று மிகத் தெளிவாகப் பதிலுரைக்கிறார் முத்துவேல். தன் எழுத்தின் நோக்கம் முடிந்த வரை போராடுவது என்னும் முத்துவேலின் ஆக்கங்கள்தான் மண்ணின் தலித் வாழ்வை மிக நேரடியாகக் கூறுவதாக இருக்கிறது.

அவரே கூறுவதைப் போல, சாலையோர சுமைதாங்கிக் கல் மீது தூக்கி வந்த பாரத்தை சாத்திவிட்டு, சும்மாட்டை உதறி தோளில் போட்டு தூங்குமூஞ்சி மரநிழலில் சாய்ந்ததை ஒத்திருக்கிறது முத்துவேலின் கவிதைகள்.

– யாழன் ஆதி

Pin It