தமிழன் ‘இன உணர்வு’ கொள்வதில் பிழை?

சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவு பெருகியிருக்கிறதா? ஆம் என்று எளிதில் விடை சொல்ல இயலாது. மரவாநத்தம் -விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இங்குள்ள சின்னசாமி (கவுண்டர்) மகள் சுதாவுக்கும் -அவரோடு படித்த நாயக்கர் சாதியைச் சேர்ந்த தமிழ்ச் செல்வனுக்கும் காதல் அரும்பி, பெண் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். இமாச்சலப் பிரதேசத்தில் இருவரும் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, சாதியை ஒழித்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தபோது, சுதாவை வளைகாப்புக்காக அழைத்துச் செல்கிறோம் என்று நயவஞ்சகமாக சொந்த ஊருக்கு அவருடைய பெற்றோர் கூட்டிக் கொண்டு வந்தனர். வளைகாப்பு நடைபெறுவதாக சொல்லப்பட்ட அக்டோபர் 29 அன்று, சுதாவின் தந்தையும் தம்பியும் அவரை அவர்கள் வீட்டின் ஓர் அறைக்கு அழைத்துச் சென்று -ஆளுக்கொரு கடப்பாரையால் சுதாவை கொன்று போட்டனர்.

Sudha
“பொண்ணைக் கொன்னாலும் வயத்துல இருந்த சிசுவை உயிரோட எடுத்துடுவாங்கன்னு நினைச்சானுகளோ என்னவோ... வயித்துலேயும் கடப்பாரையால அடிச்சு சிசுவையும் (ஜாதி மறுப்பின் அடையாளம்) சிதைச்சிருக்கானுங்க, மிருகப் பயலுக!” என்கிறார் சின்னசேலம் காவல் ஆய்வாளர் அண்ணாமலை. காவலில் இருக்கும் சின்னசாமி (கவுண்டர்) தான் செய்த படுகொலையை நியாயப்படுத்துகிறார் : “அந்தப் பொட்டக் கழுதை வீட்டை விட்டு ஓடிப் போனப்ப, ஊருல நான் பட்ட அவமானம் எனக்குதான் தெரியும். எங்க சாதிசனத்துல என்ன வார்த்தை பேசுனாங்க தெரியுமா? ஒரு வருஷம் ஆயிட்டா எல்லாம் மறந்து போயிடுமா? எனக்கு என்னோட சாதியும் மானமும்தான் பெருசு. வேற சாதிக்கார பயக்கூட ஓடிட்டான்னு பெத்த பொண்ணையே கொன்னு போட்டுட்டான் சின்னசாமி கவுண்டன்னு இன்னைக்கு எங்க ஊரே பெருமையா பேசுதில்ல” (‘ஜுனியர் விகடன்', 7.11.07)

புதுக்கோட்டை மாவட்டம் அகரப்பட்டி கிராமம். ராணி என்ற கள்ளர் சாதிப் பெண்ணும், முருகேசன் என்ற முத்தரையர் சாதி இளைஞரும் காதலித்தனர். ஊரைவிட்டு வெளியேறிய இவர்களை தேடிப்பிடித்து 3.12.07 அன்று, ராணியை எரித்தே கொன்று விட்டனர். முருகேசனையும் எரிப்பதற்கு முயற்சி செய்த வேளையில், "நக்கீரன்' பத்திரிகையாளர்களின் தலையீட்டால் அது தடைப்பட்டிருக்கிறது. ராணி கொல்லப்பட்டதை நியாயப்படுத்திய கள்ளர்கள், “ராணி கதை முடிஞ்சுபோன கதை. இன்னும் 2 மணி நேரத்துல முருகேசன் கதையும் முடிஞ்சு போகும். நீங்களே சொல்லுங்க தம்பி, சாதி ஜனம்னு ஏன் பெரியவங்க பிரிச்சு வச்சாங்க. அவனவன் அவனவன் சாதிக்குள்ள கொள்வினை, கொடுப்பினை செஞ்சுக்கினா, இப்படிப்பட்ட சாவுகள் ஏற்படுமா?” என்கின்றனர் ("நக்கீரன்', 12.12.07).

தமிழனுக்கு எவ்வளவுதான் தமிழுணர்வையும் தன்மானத்தையும் ஊட்டினாலும், அவனை ஜாதிமானம்தான் ஆட்கொள்கிறது. ஜாதி உணர்வைப் போக்காமல், அவன் தமிழ் உணர்வு கொள்ள வேண்டும் என்று என்னதான் போராடினாலும் பயன் இருக்காது. தமிழனுடைய ‘ஜாதி மானம்' பெருக்கெடுப்பதற்கு, அவன் சுவாசிக்கும் மதம்தான் (இந்து மதம்) காரணம். அவனை அந்த ஜாதி மதத்திலிருந்து வெளியேற்றாமல், அதற்கானப் பிரச்சாரத்தை செய்யாமல் -தூய தமிழில் எழுதச் சொன்னாலும்; கோயிலில் சமஸ்கிருதத்திற்கு மாற்றாக தமிழில் அர்ச்சனை செய்யச் சொன்னாலும்; தமிழனையே அர்ச்சகனாக நியமித்தாலும்; தமிழ்ப் பெயர்களை சூட்டினாலும்; அவன் பார்க்கும் திரைப்படங்களுக்கு தமிழ்ப்பெயரைச் சூட்டினாலும்; ஈழத் தமிழுணர்வை ஊட்டினாலும், இத்தகைய பரப்புரைகள்... எந்தப் பயனையும் நல்காது என்பதற்கு சான்றுதான் சுதா மற்றும் ராணி படுகொலைகள்.

தமிழ் உணர்வாளர்களின் பரப்புரை, தமிழ்த்தேச அரசு, அரசியல்/எல்லை/மொழி சார்ந்ததாக மட்டுமே -அதற்கு முன்னுரிமை அளிப்பதாகவே இருக்கிறது. தமிழகத்தில் நாள்தோறும் நடைபெறும் சாதிப் படுகொலைகளையும், சாதி உற்பத்திக் கேந்திரங்களையும் கண்டிக்காமல் அலட்சியமாக இருப்பதால் ஏற்படும் கொடூர விளைவுதான் இவை. தமிழன் இந்து கடவுளரை வணங்கி, இந்து கோயில்களுக்குச் சென்று, இந்து பண்டிகைகளை கொண்டாடும்வரை -சாதியற்ற தமிழ்ப் பண்பாடு மேலோங்காது; சாதியை உள்ளடக்கிய தமிழ்ப் பண்பாடே மேலோங்கும்.

அண்மைக்காலமாக, பாட்டாளி மக்கள் கட்சியினரின் தமிழ் உணர்வை பலரும் வியந்து பாராட்டுகின்றனர். ஆனால், அவ்வுணர்வுடன் இயல்பாக ஒன்றிப்போகும் அக்கட்சியினரின் சாதி உணர்வை யாரும் கண்டிப்பதில்லை. "மக்கள் தொலைக்காட்சி' "தமிழ் ஓசை' மூலம் -எவ்வளவோ தூய தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன; தமிழ்க் கலைகள் எல்லாம் போற்றப்படுகின்றன என்கிறார்கள். இருப்பினும், பாட்டாளி மக்கள் கட்சியினரிடம் உள்ள ஜாதி உணர்வை, தமிழுணர்வு மழுங்கடித்திருக்கிறதா? பா.ம.க.வின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரான "காடுவெட்டி' குரு, “வன்னியர்களுக்கான கல்விக் கோயிலை களங்கப்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் நாவை (தூய தமிழ்ச் சொல்!) வெட்ட வேண்டும் என்று பேசியிருக்கிறார் (‘தினமலர்', 18.12.07). தமிழ் உணர்வு தமிழனின் ஜாதி உணர்வைக் கொல்லவில்லை என்பதற்கு, இதுபோன்று எண்ணற்ற சான்றுகளைக் கூற முடியும். “தமிழா ‘இன' உணர்வு கொள்” என்ற முழக்கத்தைக்கூட மறு ஆய்வு செய்தால் நல்லது.

“நாங்களும் மனுஷங்கதான்யா”

விருதுநகர் மாவட்டம் இருஞ்சிறை கிராமத்தில், கடந்த 4 மாதங்களாக தலித் மக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அதற்கான காரணத்தை, இங்குள்ள தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அஞ்சல் துறை பணியாளர் குருசாமி விளக்குகிறார் : “இந்த ஊருல சலவை பண்ணுறவங்க எங்காளுங்களோட அழுக்குத் துணிய துவைக்கவோ, தேய்க்கவோ கூடாதுன்னு ஊர்க்கட்டுப்பாடு இருக்கு. நான் போஸ்ட்டாபீசுல வேலை பார்க்குறேன். கவர்மெண்ட் வேலையாச்சே. கொஞ்சம் நீட்டாப் போகணும்னு ஆசப்பட்டேன். சலவை பண்ணுறவருகிட்ட எந்துணிய தேய்ச்சுக் கொடுங்கய்யா. நீங்க கேட்குற பணத்தக் கொடுக்குறேன்னு சொன்னேன். அதுதான் தப்பாப் போச்சு. சலவைக்காரரு ஊருல சொல்லி, என்னைப் பஞ்சாயத்துல நிக்க வச்சுட்டாரு. "தேய்ச்சுத் துணி உடுத்துற அளவுக்கு நீயெல்லாம் பெரிய ஆளாயிட்டியான்னு' ஊரு கூட்டத்துல திட்டுனாங்க. "நாங்களும் மனுஷங்கதான்யா...'னு அப்ப வாய் தவறிச் சொல்லிட்டேன். அவ்வளவுதான். அந்த இடத்துலேயே என்னை மாறி மாறி அடிச்சாங்க. ஊருக்குள்ளயும் வந்து எங்காளுகள சின்னப் புள்ளைங்க, பெரிய ஆளுங்கன்னு பார்க்காம அடிச்சும் போட்டாங்க.” (‘நக்கீரன்', 15.12.07)


Sudha

நரிக்குடி காவல் நிலையமும் பாதிப்பிற்குள்ளானவர்கள் மீதே வழக்குத் தொடுத்துள்ளது. சாதி இந்துக்கள் மீது புகார் கொடுத்ததால், ஆத்திரம் அடைந்த சாதி இந்துக்கள், தலித் மக்கள் உள்ளூர் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும், நடைபாதையைப் பயன்படுத்துவதற்கும், ஆடு மாடுகளை மேய்ப்பதற்கும், குழந்தைகளுக்குப் பால் வாங்குவதற்கும், தடைவிதித்து வருகின்றனர். மேலும், தலித் பெண்கள் காலைக் கடன்களை கழிப்பதற்குக்கூட அனுமதிக்காமல் வழிமறிக்கின்றனர் (‘தீக்கதிர்', 14.12.07). தலித் மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டுத்தர 27.9.07 அன்று திருச்சுழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. “நாங்களும் மனுஷங்கதான்யா”ன்னு சொல்லியதைக்கூட, இந்த ஜாதி சமூகம் பொறுத்துக் கொள்ளாதாம்! இவ்வளவு பகுத்தறிவுப் பிரச்சாரம் எல்லாம் செய்தும் மனுஷன்னு சொல்லக் கூட உரிமை இல்லை எனில், செருப்படி பிரச்சாரத்தையாவது நடத்த துணிய வேண்டும். 

உச்ச நீதிமன்றம் என்ன கிழித்துவிடும்?

இந்தியாவில் உள்ள 14,500 ரயில்களில் நவீன கழிப்பறை வசதிகள் இல்லை. ரயில் நிற்குமிடங்களிலேயே பலரும் கழிவறைகளைப் பயன்படுத்துவதால், கழிவுகள் தண்டவாளத்தில்தான் விழுகின்றன. இதன் மூலம் இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.74 லட்சம் லிட்டர் மனிதக் கழிவுகள் வெளியாகின்றன. எனவே, 6,856 ரயில் நிலையங்களில் கையால் மலமள்ளும் வேலை கட்டாயமாகின்றது. 1993 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கையால் மலமள்ளும் பணி தடை செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதிப்பதில் ரயில்வே துறை முதலிடம் வகிக்கிறது. அதனால் என்ன?

Pin It