சமநீதி எழுத்தாளர் ஏபி. வள்ளிநாயகம் அவர்களுக்கு, தமிழகத்தின் பல இடங்களிலும் நினைவேந்தல் கூட்டங்கள் நடைபெற்றன. இந்நிகழ்வு பற்றிய செய்திகள் "தலித் முரசி'ல் தொடர்ந்து இடம்பெறும். இந்த இதழில் "தலித் முரசு' சார்பில் 16.6.2007 அன்று சென்னையில் நடைபெற்ற வீரவணக்கக் கூட்டத்தில் பங்கேற்றோர் ஆற்றிய உரை இடம் பெறுகிறது.

சி. மகேந்திரன்: "நாம் நம்முடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்காக, ஒரு மிகப் பெரிய படைப்பாளியாக, ஒரு தத்துவத்தை வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு, தன்னுடைய இறுதிமூச்சு வரை வாழ்ந்த வள்ளிநாயகத்தினுடைய அந்தப் பாதையை, அவருடைய லட்சியத்தை-நம்முடைய தமிழ் மண்ணில் மீண்டும் வளர்ப்பது என்கின்ற அந்த உணர்வுதான் நம் அனைவரையும் இங்கே ஒருங்கிணைத்திருக்கிறது. தோழர் வள்ளிநாயகம் மற்றவர்கள் குறிப்பிட்டதைப் போல, ஒரு பெரிய எழுத்தாளராக அல்லது படைப்பாளியாக அல்லது சிந்தனையிலே முழுவதும் தேர்ச்சி பெற்றவராக வாழ்ந்த காலத்திலே சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கில்லை. சிறுவனாக, மாணவனாக இருக்கின்ற காலத்தில் அரசியலில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்கின்ற காலத்தில்தான் முதன் முதலாக நான் வள்ளிநாயகத்தை சந்தித்தேன். நான் தஞ்சையிலே பிறந்தவன். தஞ்சையிலே கல்லூரி மாணவனாக இருந்தபோது திராவிட இயக்கத்தினுடைய இயக்கப் பணிகளில், மிகுந்த சுறுசுறுப்போடும் சிரித்த முகத்தோடும் ஓடியாடி திரிந்து கொண்டிருக்கிற இளைஞனாகத்தான் வள்ளிநாயகத்தை நான் முதன் முறையாக சந்தித்தேன்.

Makendran
அப்படி சந்தித்தபோது எனக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. காரணம், அவருடைய செயல்பாட்டினுடைய வேகம். எதைச் செய்தாலும் உடனே முடிக்க வேண்டும் என்ற ஒரு பேரார்வம் அவரிடம் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு உணர்வோடுதான் நான் அவரைப் பார்த்தேன். அதற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து அவர் நூலைப் பார்த்தேன். கட்டுரைகளைப் படித்தேன். இடையில் அவருக்கும் தோழர் ஓவியாவுக்கும் திருமணம் நடைபெற்ற தகவல்கள் எல்லாம் கூட வந்து சேர்ந்தன. ஆனால், இடையில் நாங்கள் சந்திக்கவே இல்லை. ‘நாங்கள் இந்துக்கள் அல்லர்' என்ற இயக்கத்தை நடத்துவதற்காக நம்முடைய அருமைத் தோழர் நடராசன் அவர்கள் எங்களைச் சந்தித்தபோதுதான், மீண்டும் அந்தப் பழைய சந்திப்பு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த அந்த வள்ளிநாயகத்தை மற்றொரு பெரிய ஞானியைப் பார்ப்பதைப் போல, வாழ்க்கையின் தத்துவத்தைப் பெரிய குறிக்கோளாகக் கொண்ட ஒரு மனிதரைப் பார்ப்பதைப் போல, மிகவும் உணர்வோடு சந்திக்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

மாமனிதர்கள் அல்லது சிறந்தவர்கள் எப்படி தோன்றுகிறார்கள் என்று சொன்னால், அவர்கள் தோன்றுவதற்கு ஒரு சூழ்நிலை காரணமாக இருக்கிறது. நம்முடைய மண் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட மண். ஆனால், பாரம்பரியத்தைக் கொண்ட மண் பல்வேறு தத்துவங்களால் அது தவறான வழியிலே வழிநடத்தப்பட்டு, சமஸ்கிருத மயமாக்கலிலிருந்து தொடங்கி சாதியத்தினுடைய ஒவ்வொரு கூறுகளையும் உள்வாங்கி, அதனால் ஏற்படக்கூடிய குழப்பங்கள் இவை எல்லாவற்றையும் எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கக்கூடிய இந்துத்துவம்; அந்த இந்துத்துவம் வெறும் பாரதிய ஜனதா கட்சி என்பது மட்டுமல்ல. பலரும் இந்துத்துவத்திற்கு இரையாகிப் போன நபர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலத்திலே, இவை எல்லாவற்றையும் எப்படி மாற்றுவது என்கின்ற கொள்கையோடு எழுந்த ஒரு சிறந்த மனிதராகத்தான் வள்ளிநாயகத்தை நான் பார்க்கிறேன்.

வள்ளிநாயகம் எழுதிய புத்தகங்கள், அவர் வாழ்ந்த வாழ்க்கை, மற்ற நண்பர்களோடு அவர் நடத்திய உரையாடல் அல்லது புதியவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும் என்கின்ற அடங்காத ஆவல் இவை எல்லாவற்றுக்கும் என்ன காரணம்? இந்த சூழலுக்கான ஒரு மாற்றுத் தத்துவத்தை உருவாக்க வேண்டும், செயல்படுத்த வேண்டும் என்ற அவரது தணியாத வேட்கைதான். உள்ளபடியே, இரண்டு மூன்று நாட்களுக்கு முன்புகூட நினைத்தேன். அவர் உயிரோடு இருந்த போது பல விஷயங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டிருந்திருக்கலாமே என்கின்ற எண்ணம் எனக்கு அடிக்கடி வந்து போகிறது. காரணம், நம்முடைய மக்களின் வரலாறு மறைக்கப்பட்ட வரலாறாகவே இருக்கிறது.

என்னுடைய மறைந்த தலைவர் பேராசிரியர் வானமாமலை அவர்கள் மிக அழகாகக் குறிப்பிடுவார்கள். பார்க்கிற இளைஞர்களிடம் எல்லாம் சொல்வார்கள். மண்ணிலிருந்தும் மக்களிலிருந்தும் போராடிய மனிதர்களுடைய வரலாற்றை, ஒவ்வொரு ஊரிலும் அப்படிப்பட்ட மாமனிதர்கள் இருந்திருப்பார்கள். அவர்களை கொலை செய்தவர்களே அவர்களை தெய்வமாக்கி இருப்பார்கள். அதுதான் சிறுதெய்வ வழிபாடு என்ற பெயரிலே வந்திருக்கிறது. அவற்றையெல்லாம் நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுவார்கள். ஏனென்று கேட்கின்றபோது, ஒரு மண்ணின் மாற்றங்கள் அதற்கான மோதல், அதற்கான கலகம் மாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவர்கள் எல்லா இனங்களிலும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அவருடைய அனுபவத்திலிருந்து ஒற்றை ஆதிக்கத்தைத் தகர்க்க வேண்டும் என்று சொன்னால்தான் அதற்கான கருதுகோளைப் பெற முடியும்.

வள்ளிநாயகம் உள்ளபடியே ‘தலித் முரசி'லே எழுதிய எல்லா கட்டுரைகளையும் என்னால் படிக்க முடியவில்லை. ஆனால், விரைவில் அவற்றையெல்லாம் படித்து முடித்துவிட வேண்டும் என்கின்ற அந்த உணர்வு, அவருடைய இறப்புக்குப் பிறகு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. கொஞ்சம் ஓடுகிற ஓட்டத்திலே கிடைக்கின்றவற்றை எல்லாம் படித்துப் பார்க்கிறபொழுது, அப்படிப்பட்ட ஒரு கருத்து சேர்மானத்தை ஒடுக்கப்பட்டவர்களுடைய முன்னோடிகள் எப்படி செயல்பட்டிருக்கிறார்கள் என்ற அனுபவத்தைக் கொடுத்து, அந்த அனுபவத்தின் மூலம் ஒரு புதிய மனிதனைத் தோற்றுவிக்கக்கூடிய ஒரு முயற்சியாகத்தான் அவருடைய எழுத்துகள் இருந்தன தலித் முரசிலே!

இந்த மேடையிலே நான் ஒரு செய்தியைப் பதிவு செய்ய விரும்புகின்றேன். காரணம், ‘தலித் முரசு'தான் முன் தளங்களில் இருக்கக்கூடிய இந்த அடிப்படைகளைக் கொண்டு வர வேண்டும் என்கின்ற இடையறாத முயற்சியை செய்து வருகிறது. வள்ளிநாயகம் போன்றவர்கள் தங்களுடைய கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கு ‘தலித்முரசு' போன்ற ஓர் இதழ் இல்லை என்று சொன்னால், அவற்றில் பல வெளியே வந்திருக்குமா என்பதுகூட கேள்வியாக இருக்கிறது. வந்திருக்கும். சிறு நூல்களாக வந்திருக்கலாம். ஆனால், இந்தளவுக்கு விவாதப்படுத்தும் அளவிற்கு வந்திருக்குமா என்று சொல்ல முடியாது. எனவேதான் கடைசி காலத்திலே தலித் முரசோடும், அவருடைய ஒத்த கருத்துகளை உடையவர்களோடும் இணைந்து நிற்கக்கூடிய அந்தத் தன்மை அவரிடம் இருந்தது.

மக்கள் விடுதலையை சாத்தியப் படுத்த வேண்டும் என்றால், இப்படிப்பட்ட அடித்தள கூட்டணி என்பது உள்ளபடியே ஒடுக்கப்பட்டவர்களாக, மறுக்கப்பட்டவர்களாக, இந்திய சமூகத்தினுடைய சாதியத் தன்மையால் புறக்கணிக்கப்பட்டு, விளிம்பு நிலைக்கு துரத்தியடிக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடிய மக்களை ஒருங்கிணைப்பதற்குரிய ஒரு பொது வேலைத் திட்டம் தேவைப்படுகிறது. அந்தத் திட்டத்திற்காக வள்ளிநாயகம் முயன்றார். அதற்காகப் போராடினார். அதற்கான எந்தவொரு கருத்தாக இருந்தாலும் சரி, மார்க்ஸ் கூட ரொம்பவும் தெளிவாகச் சொல்லுவார். எந்தவொரு கருத்துக்குப் பின்னும் ஒரு தத்துவம் இருக்கிறது. தத்துவமில்லை என்று சொன்னால், அந்தக் கருத்தை வலுவோடு உங்களால் செயல்படுத்த முடியாது. மக்களைத் திரட்ட முடியாது.

மார்க்சியம் இருக்கிறது, பெரியாரியம் இருக்கிறது அல்லது தலித்தியம் இருக்கிறது அல்லது ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கான தத்துவங்களெல்லாம் நம் நாட்டில் இருக்கின்றன என்று சொன்னால், அவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஆதிக்கத்தை எப்படி எதிர்ப்பது என்பதற்கான கருதுகோள் இன்று தேவைப்படுகிறது. அதிலிருக்கக்கூடிய வேறுபாடுகளை மறந்து, இப்படித்தான் வேறுபாடுகள் இருக்க வேண்டும் என்று நமக்குள்ளே உருவாக்கிக் கொண்டிருக்கக்கூடிய அந்த கற்பிதத்தைப் போக்குவதற்கு, போக்க வேண்டும் என்று சொன்னால், அதற்குப் புதிய கருதுகோள் தேவை. பழைய கருதுகோள் போதாது. பழைய கருகோள், எல்லாவற்றையும் பிளவுபடுத்துகின்றது. இணையவிடாமல் தடுக்கிறது. ஒற்றுமையை சீர்குலைக்கிறது.

இந்தச் சமூகத்தைப் பல்வேறு கூறுகளாக உடைத்தால்தான் வாழமுடியும் என்று நினைக்கும் இந்துத்துவத்தை முறியடிக்க வேண்டும் என்று சொன்னால், ஒற்றுமை என்பது மிக அடிப்படை. அவர் எழுதிய தத்துவங்கள், நூல்கள் இவை எல்லாவற்றையும் பார்க்கின்றபோது, இன்னும் ஆழமாகக் கற்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கிறபோது அந்த முயற்சி அவரிடம் இருந்திருக்கிறது. அவருடைய இழப்பு நம் அனைவருக்கும் பேரிழப்பு.

எந்த மாமனிதர்கள் இறக்கிறபோதும் சமூகம் துவண்டு விடுகிறது. ஆனால், அந்தக் கலக்கங்கள் நிரந்தரமானதல்ல. அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து புதியவை பிறக்கின்றன. அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துக் கொண்டு போவøதப்பற்றி நாம் யோசிக்கிறோம். நம்முடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறோம். நம்மிடம் புதிய ஒற்றுமை உருவாவதற்கு அதை ஒரு கருவியாக வைக்கிறோம். வள்ளிநாயகத்தைப் பொறுத்தவரையில் அப்படித்தான் எனக்கு தோன்றுகிறது.

சமூக செயல்பாட்டாளர்களை எல்லாம் ஒன்றுபடுத்துபவராக, ஆதிக்கத்தை எதிர்க்கக்கூடிய சக்திகளை ஒருங்கிணைக்கக்கூடிய மாமனிதராக அவருடைய வாழ்க்கை அப்படிப்பட்ட ஒரு தத்துவத்தை தந்திருக்கிறது. அதை நிறைவேற்றுவது அவசியம் என்ற கருத்தை மட்டும் நான் பதிவு செய்து கொண்டு, அதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். தோழர் ஓவியா அவர்களுக்கு பெரிய இழப்பு. இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் பேசியதுபோதுகூட, தன்னுடைய ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.

நட்பு என்கின்ற ரீதியிலே நமக்கு பாதிப்பு ஏற்பட்டாலும்கூட, ஓவியாவுக்கு ஒரு பெரிய இழப்புதான். இருந்தாலும் புரட்சிகர பாரம்பரியத்தைச் சார்ந்தவர் என்ற அடிப்படையிலே அந்தத் துயரத்திலிருந்து அவர் விடுபடுவார், காலம் அவருக்கு ஏற்பட்டிருக்கின்ற காயங்களுக்கு மருந்திட்டு ஆற்றும் என்று நம்புகிறேன். அதற்குச் சிறந்த பணி அவருடைய பாதையிலே நாமெல்லாம் அடியெடுத்து வைத்து, அந்த வகையில் தோழர் வள்ளிநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் செய்து என்னுடைய உரையை முடிக்கிறேன்.''
Pin It