"தீண்டத்தகாத மக்கள் இந்து சமூக அமைப்பினால் ஒடுக்கவும் சிதைக்கவும் பட்ட மனித மாண்பை மீட்டெடுப்பதற்கானப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார் அம்பேத்கர். ஆனால், அதற்கான இடையறாத போராட்டத்தில் இன்று வரை அம்மக்கள் நாள்தோறும் இழிவையும் வன்கொடுமைகளையுமே சந்திக்கின்றனர். இருப்பினும், சாதி ஏற்றத்தாழ்வுகளாலான இச்சமூகத்தை நேர் செய்யவே அவர்கள் தங்களை நாள்தோறும் சொல்லொணா வேதனைக்கு ஆட்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், இந்த சமூகமும், அரசும் அவர்களை கேவலப்படுத்தும் வகையிலேயே நடந்து கொண்டு அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தையும் மறுத்தே வருகிறது.

திருச்சி மாவட்டம் திண்ணியம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு தலித்துகளை 2002 ஆம் ஆண்டு மலம் தின்ன வைத்த வழக்கில், 10.9.07 அன்று குற்றவாளிகளை விடுதலை செய்து திருச்சி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில்தான் 26.9.07 அன்று மதுரை சமயநல்லூரில் ஊருக்கு சாலை போடச் சொன்னதற்காக, சுரேஷ்குமார் என்ற வழக்குரைஞரை உருட்டுக்கட்டையால் அடித்து, கட்டாயப்படுத்தி வாயில் மலத்தைத் திணிக்கும் வன்கொடுமை ("குமுதம் ரிப்போர்ட்டர்', 11.10.07) மீண்டும் நடந்திருக்கிறது.

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ்வரும் சென்னை "கன்டோன்மன்ட் போர்டு' வெளியிட்டுள்ள விளம்பரத்தில் (No. STM/ADM/EMPLOYMENT/2007-08), துப்புரவுப் பணியாளர் பதவிக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்ப, தலித் மற்றும் பழங்குடியினருக்கு "முன்னுரிமை அளிக்கப்படும்' (‘தினத்தந்தி', 2.9.07) என்று தெரிவித்துள்ளது. அதே துறையின் பிற பதவிகளுக்கு அப்படி எந்த முன்னுரிமையும் வழங்கப்படவில்லை. சட்ட ரீதியாக போதிய அளவு பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டுள்ள பணியிடங்களில் தலித்துகளுக்கு நியாயமான பிரதிநிதித்துவத்தை அளிக்க மறுக்கும் அரசு, துப்புரவுப் பணி இடங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்க முன்வந்திருப்பது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டிய குற்றமாகும்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இந்து சமூகத்தின்/அரசின் செயல்பாடுகளை கடந்த 11 ஆண்டுகளாக எதிர்த்து, மக்களிடையே விழிப்புணர்வூட்டி வரும் "தலித் முரசு', அதன் ஒரு பகுதியாக தலித்/பழங்குடியினருக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசால் மறுக்கப்படும் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத்தர நீதிமன்றத்தை நாடியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 67 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் உள்ள 1051 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்பவுள்ளதாக அண்மையில் அரசு தெரிவித்தது. ஆனால், தலித் மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் 10 ஆண்டுகளாக நிரப்பப்படாத 522 பின்னடைவுப் பணி (விரிவுரையாளர்) இடங்களை நிரப்பிய பிறகே, எஞ்சியுள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்று ஆணையிடக் கோரி – "தலித் முரசு' சார்பில் (W.P.No. 31603/2007) சென்னை உயர் நீதிமன்றத்தில் 21.9.07 அன்று பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு 27.9.07 அன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, நீதிபதிகள் ஏ.பி. ஷா மற்றும் ஜோதிமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. "தலித் முரசு' சார்பில் வழக்குரைஞர் அரிபரந்தாமன் வாதாடினார். இப்பொது நல வழக்கில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்கள் :

1. தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் உள்ள தலித் மற்றும் பழங்குடியினருக்குரிய பின்னடைவுப் பணியிடங்களை (Backlog Vacancies) நிரப்பக் கோரி முன்பு தொடரப்பட்ட ஒரு வழக்கில் (W.P.No.16087/99) அரசு பின்வருமாறு பதிலளித்தது : "1.4.89 முதல் ஒவ்வாரு பதவியிலும் இருக்கும் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவது சிரமம். எனினும் இதை கவனத்தில் கொண்டு, தலித் மற்றும் பழங்குடி மக்களுக்குப் போதுமான அளவு பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், ஒவ்வொரு பதவியிலும் உள்ள நிரப்பப்படாத பணியிடங்கள் 5 ஆண்டுகளில் முறையாக நிரப்பப்படும்.'' இவ்வழக்கை அப்போதிருந்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணண் (தற்பொழுது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி) மற்றும் கே. கோவிந்தராசன் விசாரித்து, அரசின் விளக்கத்தை ஏற்று, "அரசு அய்ந்து ஆண்டுகளில் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என்று தீர்ப்பளித்தனர் (14.1.2000).

2. ஆனால்,அரசு தனது வாக்குறுதியை மீறியிருக்கிறது. 14.12.98 அன்று அரசின் உயர் கல்வித் துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களில் 595 பின்னடைவுப் பணியிடங்கள் இருப்பதாக ஒப்புக் கொண்டு ஓர் ஆணை (G.O. Ms.No. 635) வெளியிட்டது. இதில் 100 இடங்களை சிறப்பு நியமனம் மூலம் நிரப்புவதாகக் கூறியது. இருப்பினும், 73 பதவிகளே நிரப்பப்பட்டன (1999-2000). அந்த வகையில் இன்றைய நாள் வரை 522 பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

3. தமிழக அரசு நீதிமன்றத்தில் 14.1.2000 அன்று அளித்த வாக்குறுதியின்படி, 5 ஆண்டு காலத்திற்குள் அதாவது 2005க்குள் 522 பின்னடைவுப் பணி இடங்களையும் நிரப்பியிருக்க வேண்டும். இதை அரசு செய்யத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்திருக்கிறது.

4. இதற்கிடையில், 18.9.2006 அன்று (4/2006-07) 1000 விரிவுரையாளர்கள் நேரடியாக நிரப்பப்படுவார்கள் என்று அரசு விளம்பரத்தில் தெரிவித்துள்ளது. இது, தலித் மற்றும் பழங்குடியினரின் நலன்களை கடுமையாக பாதிக்கும். எனவே, உயர் நீதிமன்றத்தில் அரசு அளித்த வாக்குறுதியின்படி தலித் மற்றும் பழங்குடியினருக்குரிய பின்னடைவுப் பணி இடங்களை நிரப்பிய பிறகே, நேரடி நியமனத்தை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச், ""தலித் மற்றும் பழங்குடியினர் பின்னடைவுப் பணியிடங்களை, சுழற்சி முறையில் வழங்கப்படும் பணியிடங்களோடு இணைக்கக் கூடாது'' என்றும், ""அதற்கு வேறொரு விளம்பரம் வெளியிடப்பட வேண்டும்'' (W.P. (MD) 1997/2006) என்றும் கூறியுள்ளது.

5. விரிவுரையாளர் பணியிடங்களுக்கான நியமனங்கள், 1999 ஆம் ஆண்டு நடைபெற்றதற்குப் பிறகு 8 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இவ்விரிவுரையாளர் பணியிடங்களை அரசு எப்பொழுது நிரப்பப் போகிறது என்பதும் சரிவரத் தெரியவில்லை. 18.9.2006 அன்று வெளியிடப்பட்டுள்ள அரசு விளம்பரம், 1000 விரிவுரையாளர் பணியிடங்கள்தான் நிரப்பப்படும் என்று தெரிவித்தாலும், 2041 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக, உயர் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார் (‘தி இந்து', 24.8.07). இது, தலித் மற்றும் பழங்குடியினருக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி.

6. எனவே, அரசு 1000 பதவிகளை நிரப்பினாலும் அல்லது 2041 பதவிகளை நிரப்பினாலும், அதை நிரப்புவதற்கு முன்பு, தலித் மற்றும் பழங்குடியினருக்கான 522 பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பியாக வேண்டும். தற்பொழுது அது நிரப்பப்படவில்லை எனில், அது எப்போதுமே நிரப்பப்படாது. எனவே, தமிழக அரசு 2041 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான நியமனத்தை மேற்கொள்ள, உயர் நீதிமன்றம் தடைவிதிக்க வேண்டும்.

‘தலித் முரசு' தொடுத்த வழக்குக்கு ஆதரவாக பேராசிரியர் அய். இளங்கோவன் மீண்டும் ஒரு பொதுநல வழக்கை (W.P.No. 33637/2007) 26.10.2007 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அவ்வழக்கு விசாரணையில், "முதல் கட்டமாக 1,000 பணியிடங்களை மட்டுமே அரசு நிரப்ப உள்ளதாகவும், இதில் 300 இடங்களை தலித் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள 222 இடங்களை மூன்று ஆண்டுகளில் நிரப்புவதாகவும் அரசு வழக்குரைஞர் தெரிவித்தார். தலித்துகளுக்கான 522 இடங்களை முழுமையாக நிரப்ப முடியாது என்பதில் தமிழக அரசு இறுதி வரை பிடிவாதமாகவே இருந்தது. இறுதிக் கட்டமாக, 19.11.2007 அன்று நடைபெற்ற விசாரணையில், 522 விரிவுரையாளர் பணியிடங்களை – கண்டிப்பாக மூன்று மாத காலத்திற்குள் நிரப்ப வேண்டும் என்று தலைமை நீதிபதி ஏ.பி. ஷா மற்றும் நீதிபதி வி. ராமசுப்ரமணியன் ஆகியோர் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கினர். ‘தலித் முரசி'ன் சமூக நீதிக்கானப் போராட்டத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி இது.

தி.மு.க. அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி, தலித் மற்றும் பழங்குடியினருக்கான 17,314 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது குறித்த வெள்ளை அறிக்கையை 1999 ஆம் ஆண்டு ‘தலித் முரசு' வெளியிட்டது. அதன் ஒரு பகுதியாக 522 விரிவுரையாளர் பணியிடங்களுக்காக நீதிமன்றத்தில் போராடி வெற்றியும் பெற்றிருக்கிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளை எல்லாம் பெரும்பாலும் நிறைவேற்றியுள்ளதாகக் கூறும் தமிழக அரசு, ஆட்சி நிர்வாகத்தில் தலித்துகளுக்குரிய பிரதிநிதித்துவம் அளிப்பதில் மட்டும் அலட்சியமாக நடந்து கொண்டால், அதற்குரிய எதிர்விளைவுகளை அது சந்தித்தே ஆக வேண்டும்.
Pin It