கலவரங்களையும் கலகங்களையும் விதைத்த தென் தமிழகம், இரண்டு குறியீடுகளைப் போராட்டக் களத்தில் எதிர்நோக்கி இருக்கிறது. கலவரங்கள் மீது தார்மீகப் பற்று கொண்டவர்கள் - உ. முத்துராமலிங்கத்தின் (தேவர்) நூறாவது குரு பூசை விழாவையும்; விடுதலைக்கான கலகங்கள் மீது நம்பிக்கை கொண்ட தலித்துகள் - மாவீரன் இமானுவேல் சேகரனின் அய்ம்பதாவது ஆண்டு வீரவணக்க நாளையும் தங்களின் குறியீட்டு அடையாளமாகக் கொண்டாடுவதற்கான களம் தயாராகி வருகிறது. ஒருவர் பிறந்து விட்டாரே என்பதற்கான கலவரமும், இன்னொருவர் வீரமரணத்தை எதிர்கொண்டார் என்பதற்கான கலகமும் - நடப்பு ஆண்டு கொண்டாட்டத்தில் எத்தகைய கருத்தியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் நமக்குத் தேடல் எதுவும் இல்லை. எனினும், குருதி தோய்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட விரும்புகிற புதிய தலைமுறை வட்டாரத்தில், கலகம் கொண்ட தேடல் அரும்பி நிற்கிறது.

அப்படியொரு தேடுதலில் தோண்டி எடுக்கப்பட்ட அதிர்ச்சிக்குரிய, மறுவாசிப்புக்குரிய ஓர் ஆவணம் தான் ‘முதுகுளத்தூர் கலவரம்'.

1958 சனவரியில் வெளியான இச்சிறு நூலை, அய்ம்பதாண்டுகளுக்குப் பிறகு ஓர் உண்மை கண்டறியும் அறிக்கையாக ‘யாழ்மை' வெளிக்கொணர்ந்திருக்கிறது. ‘குற்றப்பரம்பரை' என சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட மறவர், கள்ளர் சாதியினர் வரலாற்றில், தான் செய்த குற்றத்துக்காக வருந்தியே தீர வேண்டும் என்பதை நூலின் ஆசிரியர் தினகரன், அச்சமூகத்தின் தனியொருவராக நின்று வாக்குமூலம் அளிக்கிறார். ஆதிக்க சமூகங்கள் எவ்வாறு தங்கள் ஆதிக்கங்களை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கட்டவிழ்த்து வருகின்றன என்பதை அச்சமூகத்தைச் சார்ந்தவரே வாக்குமூலம் அளித்திருப்பது, சாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஒரு புதிய முயற்சி.

தினகரன், கமுதியை அடுத்த முஷ்டக் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். பர்மாவில் மூவேந்தர் இதழ் நடத்தி, அன்னியத் துணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு அய்ந்து ஆண்டுகள் சிறை தண்டனை அடைந்தவர். தன் பெயரிலேயே ‘தினகரன்' என்கிற நாளேட்டைத் தொடங்கி, அதில் அன்றைய சமூக - அரசியலை கேலியும், நறுக்குமாக விமர்சித்தவர். பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். அவர் தொடங்கிய ‘தினகரன்'தான் இன்று தி.மு.க.வின் ஒலிபெருக்கியாக 450 கோடியை எட்டி நிற்கின்றது. இது, தினகரனின் எழுத்துக்கு நேர்ந்த துயரமாகப் படினும், அன்றைய கலவரத்தையொட்டி அந்த நாளேட்டில் தான் எழுதிய கட்டுரைகளை - ‘முகுகுளத்தூர் கலவரம்' என நய்யாண்டித்தனமான கேலிச் சித்திரத்துடன் நூலாக வெளியிட்டார். அதனாலேயே தன் சாதி சகாக்களால் படுகொலையும் செய்யப்பட்டார்.

‘முதுகுளத்தூர் கலவரம்', ‘சரித்திரம் பேசுகிறது', ‘ஏழரை நாட்டு சனி', ‘வோட்டு அல்லது வேட்டு', ‘சமாதானமோ? சர்வ நாசமோ?', ‘இடமில்லை ரைட்' ஆகிய கட்டுரைகளில் சுயசாதி விசுவாசம் இல்லாமல் - மறவர்களையும், கள்ளர்களையும் மனிதர்களாக்க முயன்றுள்ளார். இச்சமூகம் ஒருபோதும் பகுத்தறிவு பெற்றுவிடக் கூடாது; தீக்குச்சி, அரிவாள், வேல் கம்பியிலேயே தங்கள் விடுதலையைத் தேட வற்புறுத்திய உ. முத்துராமலிங்கத்தின் சாதிய சேட்டைகளை அவிழ்த்துப் போட்டு, அதிலிருந்து தன் மக்களை விடுபடத் தூண்டுகிறார். இதுவரை கொல்லப்பட்டு வந்த முதுகுளத்தூர் கலவரத்தைப் பற்றிய வரலாறும், நிகழ்வுகளும், கதைப்பாடலும் வெவ்வேறு அலைவரிசையில் மக்களிடம் பதிவாகி இருப்பதை இந்நூல் நேர் செய்கிறது.

1957 செப்டம்பர் 11 இரவு ஒன்பதரை மணிக்கு பரமக்குடி பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் மாவீரன் இமானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்ட பிறகு முதுகுளத்தூரில் கலவரம் தொடங்குகிறது. இப்படியொரு கலவரத்தை சுற்றும் சூழ நடத்த வேண்டும் என உ. முத்துராமலிங்கம் முன்கூட்டியே தீர்மானித்துவிட்டார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. இந்நூலில் இணைக்கப்பட்டுள்ள சட்டசபை ஆணை 18 இல் - 1957, சூலை 10 அன்று திருப்புவனம் புதூரில் பேசும்போது, ‘காங்கிரசாரின் அராஜகம் எல்லை மீறிவிட்டது; காஷ்மீருக்குப் பதிலாக முதுகுளத்தூரில் இருந்துதான் மூன்றாம் உலகப் போரைத் தொடங்க வேண்டும்’ என்று உ. முத்துராமலிங்கம் பேசிய பேச்சை எம். பக்தவச்சலம் குறிப்பிடுகிறார்.
இப்படியான விதண்டாவாதப் பேச்சைப் பார்க்கும்போது, இதில் அரசியல் மட்டுமே இருப்பதாகத் தெரியும். ஆனால், இப்பேச்சுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே உ. முத்துராமலிங்கம் செய்த பிரதானமான குற்றங்களை ஆசிரியர் தினகரன் வரிசைப்படுத்துகிறார் :

 தன் சொந்தக்காரியான மேலராமநதி கருப்பாயி அம்மாளை ஏமாற்றி சொத்தை அபகரித்தார்.

 கந்து வட்டி கட்டைப் பஞ்சாயத்தில் தன்கு பங்கு கிடைக்காததால் செங்குளம் அய்யரப்ப (நாயக்க)ரிடம் மோதினார்; அவரைத் தண்டிக்கவும் செய்தார்.

 1928 இல் இருந்து அரசுக்கு வரி செலுத்தாததால், தான் அபகரித்த நிலத்தை ஏலம் விட்டதற்காக கமுதி உதவி தாசில்தார் சிதம்பர (முதலியார்) காலை வெட்டினார்.

 இஸ்லாத்துக்கு மதம் மாறிய தேவர்களைப் பயன்படுத்தி, அபிராமம் இஸ்லாமியர்களிடத்தில் பிரிவினையை ஏற்படுத்தி, கண்மாயை வெட்டி, தண்ணீரை வெளியேற்றி, பயிர்களை நாசமாக்கினார்.

 1937 இல் நடந்த தேர்தலில் ராமநாதபுரம் ராஜாவுக்கு தேர்தல் வேலை செய்ததற்காக கமுதி உதவி தாசில்தார் நாகராஜய்யரை தாக்கினார்.

 முஸ்லிம் வீடுகளை தேவர்கள் தாக்கிய வழக்கில் தீர்ப்பு நகல் தனக்கு தரப்படாததால், முதுகுளத்தூர் சப் மாஜிஸ்திரேட் பிரம்மநாயகம் (பிள்ளை)யை படுகொலை செய்தார்.

 இதுபோக, தன் சொந்த மக்களை உள்ளடக்கிய 32 1/2 கிராமத்தைச் சேர்ந்த முதலாளிகளின் பணத்தையும், விளைச்சலையும் ஏய்த்து அவர்களின் ரத்தத்தை உறிஞ்சினார்.

உ. முத்துராமலிங்கத்தால் 1925 இல் தொடங்கி முப்பது ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட இதுபோன்ற படுகொலைகள் குறித்தோ, வன்கொடுமைகள் குறித்தோ பாதிக்கப்பட்ட முதலியார், பிள்ளைமார், நாயக்கர், நாடார் ஏன் முஸ்லிம்கள் உட்பட அவரை எதிர்த்து ஒருவரும் கேள்வி கேட்டதில்லை. இறுதியாக, 1955 இல் தான் எதிர்கொண்ட மாவீரன் இமானுவேல் சேகரன்தான், உ. முத்துராமலிங்கத்துக்கு சிம்ம சொப்பனமாகிறார். மறவர் - கள்ளர்களின் சண்டியர்த்தனத்தை எதிர்த்து இமானுவேல் சேகரனின் தலைமையில் தலித்துகள் அணிதிரண்ட பிறகுகூட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தலித்துகளின் எழுச்சிக்கு துணை நிற்கவில்லை. இருப்பினும் இமானுவேல் சேகரனுடன் மோதுவது என்பது, தென்னக ராணுவத்துடன் மோதுவதாகவே சாதி இந்துக்களுக்குப்பட்டது.

கடந்த நூறாண்டு கால வரலாற்றில் தென் தமிழகத்தில் தீண்டப்படாத ஓர் இனம் தன்னுடைய விடுதலைக்காகத் தொடங்கிய கலகப் போரின் விளைவு தான் இந்த முதுகுளத்தூர் கலவரம். ‘பத்ரகாளிக்கு பலி கொடுப்பதற்காக காடமங்குளத்தில் ஒன்பது அரிஜனங்களை தேவர்கள் தூக்கிப் போனார்கள்’ என்கிற நிகழ்வும், அதன் மீதான வழக்கு விசாரணையும் அப்போதைய சட்டமன்றத்தில் முக்கியப் பிரச்சனையாக சலசலப்பை உருவாக்கியது. இந்தப் பிரச்சனையை இமானுவேல் சேகரன் ராமநாதபுரம் ஆட்சித் தலைவர் வரைக்கும் கொண்டு சென்றார். பிறகு பண்ணந்தலையில் தேவேந்திரர்கள் போட்ட கூட்டத்தின் விளைவால் உ. முத்துராமலிங்கத்தை பஞ்சாயத்து வரை இழுத்து வந்து, பொது மக்கள் முன்னிலையில் மாபெரும் குற்றவாளியாக நிற்க வைத்து கையெழுத்திட வைத்த நிகழ்வுதான் - இமானுவேல் சேகரனின் படுகொலைக்கு காரணமாக அமைந்தது. திட்டமிட்டபடி மறுநாள் அவர் கொலை செய்யப்படுகிறார்.

காங்கிரஸ், பார்வார்டு பிளாக், கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தேர்தல் மோதல்தான் அவர் படுகொலைக்கு காரணம் என இதுவரையிலும் சொல்லப்பட்டு வந்தது. ஏனெனில், இமானுவேல் சேகரன் படுகொலைக்குப் பிறகு முத்துராமலிங்கத்தை எந்த அரசியல் கட்சியும் துணிச்சலாக எதிர்க்கவில்லை. ஆனால், தலித்துகள் பக்கம் காங்கிரஸ் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. பெரியார் தலித்துகள் சார்பில் நின்றார். இந்நூலாசிரியர் தினகரனும் ‘பெரியார் ஒருவரை மட்டுமே ஆதரவு சக்தி'யாகக் குறிப்பிடுகிறார்.

யாழ்மை பதிப்பகத்தின் சார்பில் இளம்பரிதி, ஜெகநாதன் இருவரும் இந்நூலுக்கு ஆழமான, தனித்துவமான முன்னுரை எழுதியுள்ளனர். முதுகுளத்தூர் கலவரத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் “ராமநாதபுரம் துப்பாக்கிச் சூட்டில் மட்டும் செத்தவர்கள் 40 பேர் என்றும், அதில் 14 பேர்களில் 13 பேர் மறவர்கள் என்றும் ஒருவர் தாழ்த்தப்பட்டவர் என்றும் கலகங்களில் இருந்த 26 பேர்களில் 8 பேர் மறவர்கள் என்றும் 18 பேர் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. சுமார் 100 பேர் காயமடைந்திருப்பர். இக்கலகத்தில் கொளுத்தப்பட்ட வீடுகள் மொத்தம் 2,879 என்றும் இதில் 2,731 வீடுகள் தாழ்த்தப்பட்டவர்களது என்றும் 106 தேவர்களுடையது என்றும் 41 மற்ற வகுப்பினருக்கு சொந்தமானவை என்றும் கூறப்படுகிறது. இதுவரை மொத்தம் 475 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என ‘விடுதலை' நாளேடு 8.10.1957 அன்று ராமநாதபுரம் கலவரம் இழப்புகளின் விவரம் என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியை’ பதிப்பாளர் இளம்பரிதி சுட்டிக்காட்டியுள்ளார். சாதி ஒழிப்புக்காகத் தொடங்கப்பட்ட இப்போர், நீருபூத்த நெருப்பின் கீழ் கங்கு தணியாமல், அவ்வப்போது முத்துராமலிங்கத்தின் குருபூசை நாளன்று தலித்துகளை இன்றளவும் சுட்டுப் பார்க்கிறது

“கலகத்திற்கு வித்திட்ட வகுப்பிலும், நிலத்திலும் உதித்தவன் நான் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயந்தான்” எனக் குமுறும் தினகரன், அய்ம்பதாண்டுகளுக்கு முன் சமூக விடுதலைக்காகத் தன்னை இணைத்துக் கொண்டவர். சாதி ஒழிப்பு, இந்து மத எதிர்ப்பு, அறவழிப் போராட்டம் என்கிற சமத்துவ சிந்தனைகளை தன் சமூகத்து மக்களுக்கு உணர்த்தியவர். தலித் அல்லாதவர்கள் எவரேனும் தலித் விடுதலைக்கு தன்னை கையளித்து களப்பணியாற்ற வேண்டும் என முயன்றால், அவர்கள் சுயசாதிக்கு துளியும் ஆட்படாமல் தினகரனின் வழிமரபில் தங்களை இணைத்துக் கொள்வதே - தலித்துகளுடன் சொந்தம் கொண்டாடும் உரிமைப் போராக இருக்க முடியும் என்பதை ‘முதுகுளத்தூர் கலவரம்' இன்றும் உணர்த்துகிறது.
Pin It