மதத்தை நிறுவிய பல நிறுவனர்களுள் நான்கு பேர்களின் மதங்கள் மட்டுமே உலகில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அன்று முதல் இன்று வரை, அது பெரும்பான்மை மக்களைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. அந்த நால்வர் : புத்தர், ஏசு, முகமது மற்றும் கிருஷ்ணன். இந்த நான்கு ஆளுமைகளிடையிலான ஒப்பீடும், அவரவர் மதங்களைப் பரப்புவதில் அவர்கள் காட்டிய அக்கறையும், புத்தருக்கும் மற்றவர்களுக்குமான வேறுபாடு குறித்தும் அலசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது.

Ambedkar
முதலில் புத்தரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது, அவர் தன்னையே மறுதலித்தது ஆகும். பைபிள் முழுவதும் ஏசு தன்னைக் கடவுளின் மகன் என்றே வலியுறுத்துகிறார். ஒருவர் ஏசுவை கடவுளுடைய மகன் என்பதை அங்கீகரிக்கவில்லை எனில், அவர் கடவுளின் ராச்சியத்தில் நுழையவே முடியாது என்றும் ஏசு வலியுறுத்துகிறார். முகமது ஒருபடி மேலே சென்றார். ஏசுவைப் போலவே அவரும் தன்னைக் கடவுளின் தூதுவர் என்றார். மேலும், அவர் தானே கடைசித் தூதுவர் என்றும் வலியுறுத்தினார். அந்த வகையில் தாங்கள் ரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்புவோர், தன்னை மட்டுமே தூதுவராக ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது; தன்னையே கடைசித் தூதுவராகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தார். ஏசுவையும் முகமதுவையும் கடந்து, கிருஷ்ணன் ஒருபடி மேலே சென்றார். அவர் தன்னைக் கடவுளின் மகன் என்றோ; கடவுளின் தூதுவர் என்றோ; கடவுளின் கடைசித் தூதுவர் என்றோ சொல்லிக் கொள்வதோடு நிறைவடையவில்லை. அவர் தன்னைக் கடவுள் என்று சொல்லிக் கொள்வதில்கூட நிறைவடையவில்லை; அவர் தன்னைப் ‘பரமேஸ்வரன்' என்று பிரகடனப்படுத்திக் கொண்டார்; அதாவது, அவருடைய பக்தர்கள் விவப்பதுபோல அவர் "தேவாதிதேவன்' கடவுளர்க்கெல்லாம் கடவுள்!

புத்தர் ஒருபோதும் தன்னை இறுமாப்புடன் பிரகடனப்படுத்திக் கொள்ளவில்லை. அவர் ஒரு மனிதனின் மகனாகப் பிறந்தார். தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே எண்ணினார். தன்னுடைய கொள்கைகளை ஒரு சாதாரண மனிதனாகவே பிரச்சாரம் செய்தார். அவர் தன்னை இயற்கையை மீறியவராக ஒருபோதும் சித்தரித்துக் கொண்டதில்லை. தனக்கு இயற்கையை மீறிய ஆற்றல் இருப்பதாகவும் அவர் சொன்னதில்லை. தன்னிடம் இயற்கையை மீறிய ஆற்றல் இருப்பதாக நிரூபிக்க, அவர் அதிசயங்கள் எதையும் நிகழ்த்தியதுமில்லை. புத்தர், ‘மார்க்கப்பாதை'க்கும் ‘மோட்சப்பாதை'க்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாக்கினார். ஏசு, முகமது மற்றும் கிருஷ்ணன், தங்களை ‘மோட்சத்திற்கான வழிகாட்டி'களாக சித்தரித்துக் கொண்டனர். புத்தர் தன்னை ‘மார்க்கத்திற்கான வழிகாட்டி'யாக சித்தரித்துக் கொள்வதிலேயே நிறைவடைந்தார்.

இந்த நான்கு மதத் தலைமைகளிடையே இன்னொரு வேறுபாடும் உள்ளது. ஏசுவும் முகமதுவும் தாங்கள் கடவுளின் வார்த்தையையே போதிப்பதாகவும், அவர்கள் போதிக்கும் கடவுளின் வார்த்தைகள் குறைபாடுகள் அற்றது என்றும், கேள்விக்கு அப்பாற்பட்டது என்றும் கூறிக் கொண்டனர். கிருஷ்ணன் தன்னை கடவுளர்களின் கடவுள் என்ற பிரகடனப்படுத்திக் கொண்டதால், கடவுள் சொன்னதும், கடவுளால் சொல்லப்பட்டதும் உண்மையானதும், இறுதியானதுமாகும். அதில் குறைபாடு என்ற கேள்விக்கே இடமில்லை. ஆனால், தன்னுடைய அறிவுரைகள் குறைபாடுகள் அற்றது என்று ஒருபோதும் புத்தர் கூறிக் கொண்டதில்லை.

புத்தர் ஆனந்தனிடம் தன்னுடைய மதம் அறிவையும் அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டது என்றார். எனவே, அவரைப் பின்பற்றுகின்றவர்கள், தன்னால் சொல்லப்பட்டது என்பதற்காகவே தன்னுடைய அறிவுரைகள் சரியானது என்றும் பின்பற்றத் தக்கது என்றும் நினைத்துக் கொள்ளக்கூடாது என்றார். பகுத்தறிவையும் அனுபவத்தையும் கொண்டு, அவர்கள் தமது கருத்துகளை காலத்துக்கேற்ப பொருந்தவில்லை என்றால், மாற்றிக் கொள்ளலாம் அல்லது கைவிடலாம். அவருடைய மதம் இறந்த மரத்துண்டாக இருப்பதை அவர் விரும்பவில்லை. அது, என்றும் செழுமையாக எல்லா காலத்திற்கும் பயன்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.

எனவேதான் தன்னைப் பின்பற்றுகிறவர்கள், தேவைக்கேற்ப அதில் சேர்த்தும் நீக்கியும் மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்றார். எந்த ஒரு மதப்பிரச்சாரகரும் இவ்வளவு துணிவாகக் கூறியதில்லை. அவர்கள் மாற்றங்களைக் கொண்டு வருவது கண்டு அஞ்சினர். மாற்றத்தை அனுமதிக்கும் சுதந்திரம், தாங்கள் உருவாக்கிய கட்டமைப்பையே அழித்துவிடும் என்று அவர்கள் எண்ணினர். புத்தருக்கு அந்த பயமில்லை. அவர் தனது கட்டமைப்பு உறுதியானது என்று எண்ணினார். மிக மோசமான மத எதிர்ப்பாளரால்கூட, தான் உருவாக்கிய மதத்தின் அடிப்படையைத் தகர்க்க முடியாது என்பது அவருக்குத் தெரியும்.

II

இதுவே புத்தருடைய தனிச்சிறப்பு. அவருடைய மதம் எப்படிப்பட்டது? அவருடைய எதிராளிகள் உருவாக்கிய மதங்களுடன் அதை ஒப்பிட முடியுமா? நாம் முதலில் பவுத்தத்தையும் இந்துயிசத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்போம். இது குறித்து விவாதிக்க குறைந்த அளவு இடமே இருப்பதால், இரண்டு முக்கியக் கூறுகளை மட்டுமே ஒப்பிடலாம். இந்துயிசம், ஒழுக்க நெறிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மதம் அல்ல; எத்தகைய ஒழுக்க நெறிகள் இந்துயிசத்தில் இருந்தாலும், அது அதனுடைய ஒருங்கிணைந்த பகுதி அல்ல. அது மதத்தோடு இணைந்ததல்ல. அது சமூகத் தேவைகளுக்காக தனியொரு அங்கமாக இருக்கிறதே தவிர, இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடு அல்ல. ஆனால், ஒழுக்க நெறியே புத்தருடைய மதம். அது மதத்தோடு இணைந்தது. ஒழுக்க நெறிகள் இன்றி, புத்தரின் மதம் இல்லை. பவுத்தத்தில் கடவுள் இல்லை என்பது உண்மையே. கடவுளின் இடத்தில் ஒழுக்க நெறிகள் உள்ளன. மற்ற மதங்களுக்கு கடவுள் என்றால், பவுத்தத்திற்கு ஒழுக்க நெறி.

புத்தர் ‘தம்மம்' என்ற சொல்லுக்கு, மிகப் புரட்சிகரமான பொருளை அளித்தார் என்பதை வெகுசிலரே ஏற்றுக் கொள்கின்றனர். ‘தர்மம்' என்ற சொல்லின் வைதீகப் பொருள், ஒருபோதும் ஒழுக்கத்தை விளக்குவதாக இல்லை. பார்ப்பனர்கள் ‘தர்மம்' என்ற சொல்லுக்கு அளிக்கும் விளக்கம், ‘கர்மா - தலைவிதி' என்பதைத் தவிர வேறில்லை. பார்ப்பனர்களுக்கு தர்மம் என்பது, ‘யக்னா', ‘யாகா' என்று சொல்லப்படும் சில பழக்கங்களைக் கடைப்பிடிப்பதுதான். பார்ப்பனிய அல்லது வைதிக மதத்தின் சாரம் இதுதான். ஒழுக்க நெறிகளுக்கும் இதற்கும் துளியும் தொடர்பில்லை. புத்தர் பயன்படுத்திய ‘தம்மம்' என்ற சொல்லுக்கும், சடங்குகளுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. யாகங்களும், ‘யக்னா'க்களும் மதத்தின் சாரம் என்பதை புத்தர் முற்றாக மறுத்தார். ‘கர்மா' என்று சொல்லப்படும் இடத்தில் அவர் ஒழுக்க நெறியை வைத்தார். அதுவே தம்மத்தின் சாரம் என்றார். ‘தம்மம்' என்ற சொல்லை பார்ப்பனர்கள் பயன்படுத்துவதற்கும், புத்தர் பயன்படுத்துவதற்கும் அடிப்படையிலேயே வேறுபாடுகள் உள்ளன. உண்மையில், உலகத்திலேயே புத்தர்தான் முதல் முதலில் ஒழுக்க நெறியை மதத்தின் அடிப்படை சாரமாக ஆக்கியவர்.

‘பகவத் கீதை'யில் கிருஷ்ணன், யாகம் மற்றும் சடங்குகளிலிருந்து விடுபட்டவராகத் தெரியவில்லை. பெரும்பான்மை மக்கள் கிருஷ்ணன் போதித்த ‘நிஷ்கம் கர்மா' அல்லது ‘அனசக்தி யோகா'விலிருந்து விடுபட்டதாகத் தெரியவில்லை. இதன் பொருள், எந்தப் பிரதி பலனையும் எதிர்பாராமல் நன்மை செய்வது. ‘நிஷ்கம் கர்மா' என்பது அதற்கான விளக்கத்திற்கு முற்றிலும் எதிரானது. அது, பார்ப்பனர்களால் உண்மையான பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. இதைக் கடைப்பிடிப்பதில் ‘ஜெமினி'யும் ‘பகவத் கீதை'யும் ஓரிடத்தில்தான் வேறுபடுகின்றன. பார்ப்பனர்களின் சடங்குகள் இரு வகைப்பட்டது : 1. நித்திய கர்மா 2. நைமிதிக கர்மா.

‘நித்திய கர்மா' என்பது தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்பட வேண்டியவை. அதனால்தான் அது அந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. அது ஒரு மதக் கடமை என்பதால், அது எவ்விதக் கைமாறையும் எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில்தான் ‘நிஷ்கம் கர்மா'வும் கடைப்பிடிக்கப்பட்டன. ‘நைமிதிக கர்மா' தேவை ஏற்படும்போதும், விருப்பம் ஏற்படும்போதும் செய்யப்படுவதாகும். விரும்பும்போது செய்வது ‘காம்ய கர்மா' என்று கூறப்படுகிறது. ஏனெனில், அது சில பலன்களை எதிர்பார்த்து செய்யப்படுகிறது. இத்தகைய ‘காம்ய கர்மா'வைதான் பகவத் கீதையில் கிருஷ்ணன் கண்டிக்கிறார். அவர் ‘நிஷ்கமா கர்மா'வை கண்டிக்கவில்லை; அதை உயர்த்திப் பிடிக்கிறார். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி, கிருஷ்ணனைப் பொறுத்த வரை, மதம் என்பது ஒழுக்கத்தால் நிறைந்தது அல்ல. அவை ‘யக்னா'க்களையும் யாகங்களையும்தான் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்துயிசத்திற்கும் பவுத்தத்திற்கும் இடையிலான ஒரு வேறுபாடு இது. இரண்டாவது வேறுபாடு: சமமின்மையே இந்துயிசத்தின் அதிகாரப்பூர்வமான கொள்கையாகும். சமமற்றக் கொள்கையின் உறுதியான கலவையே சதுர்வர்ணக் கோட்பாடு. இதற்கு மாறாக, புத்தர் சமத்துவத்தை வலியுறுத்தினார். சதுர்வர்ணக் கோட்பாட்டின் மிகப்பெரிய எதிரி அவர். அவர் அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்ததோடு மட்டும் அல்ல; அதற்கு எதிராகப் போட்டு, அதை வேரோடு பிடுங்கி எறிவதற்கான அனைத்தையும் செய்தார். இந்துயிசத்தில், ஒரு சூத்திரனோ, ஒரு பெண்ணோ மதத்தைப் போதிக்க முடியாது. அவர்கள் கடவுளை அடைய துறவியாகவும் முடியாது. ஆனால், இதற்கு மாறாக புத்தர் சூத்திரர்களை, பிக்கு சங்கத்தில் இணைத்துக் கொண்டார். அவர் பெண்களை பிக்குனிகளாகவும் அனுமதித்தார். அவர் அவ்வாறு செய்ததற்கான காரணம் என்ன? புத்தருடைய இந்த முக்கிய செயல்பாடுகளை வெகுசிலரே உணர்ந்திருக்கின்றனர். சமமின்மைக் கோட்பாட்டை வேரோடு அழித்தொழிக்க, புத்தர் கடுமையான செய்முறைகளை மேற்கொண்டார் என்பதே அதற்கான விடை.

புத்தர் கடும் தாக்குதல்களை மேற்கொண்டதால், இந்துயிசத்தின் கோட்பாடுகளில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது ‘இம்சை'யைக் கைவிட வேண்டியிருந்தது. வேதங்கள் மாற்ற முடியாதவை என்ற கோட்பாட்டை அவர்கள் மாற்றிக் கொள்ளத் தயாராக இருந்தார்கள். ஆனால், சதுர்வர்ணக் கோட்பாட்டைக் கைவிட அவர்கள் தயாராக இல்லை. சதுர்வர்ணக் கோட்பாட்டை எதிர்ப்பதில் புத்தர் சற்றும் பின்வாங்கவில்லை. இதனால்தான் பார்ப்பனியம் பவுத்தத்தின் மீது மிகுந்த வெறுப்பு கொண்டு, ஜெயினிசத்தைவிட பவுத்தத்திற்கு எதிராக இயங்கியது. சதுர்வர்ணத்திற்கு எதிராக புத்தரின் விவாத ஆற்றலை இந்துயிசம் அங்கீகரிக்க வேண்டியிருந்தது. ஆனால், புத்தர் எழுப்பிய விவாதத்திற்கு தர்க்க ரீதியாக பதில் சொல்வதைத் தவிர்த்துவிட்டு, சதுர்வர்ணத்திற்குப் புது கொள்கை விளக்கங்களைக் கற்பித்து, அதை நியாயப்படுத்தவே இந்துயிசம் முயன்றது. இத்தகைய புதிய கொள்கை விளக்கத்தை பகவத் கீதையில் காண முடியும். பகவத் கீதை எதை போதிக்கிறது என்பதை யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், பகவத் கீதை சதுர்வர்ணக் கோட்பாட்டை (வர்ணாசிரம தர்மம்) உயர்த்திப் பிடிக்கிறது என்பதை சந்தேகத்திற்கிடமின்றி சொல்ல முடியும். உண்மையில், அது எழுதப்பட்டதற்கான முக்கிய காரணம் இதுதான்.

சதுர்வர்ணத்தை பகவத் கீதை எப்படி நியாயப்படுத்துகிறது? கடவுள் என்ற முறையில், தானே சதுர்வர்ணத்தை உருவாக்கியதாக கிருஷ்ணன் சொல்கிறார். மேலும், இந்த அமைப்பை குணா - கர்மா என்ற அடிப்படையில் கட்டமைத்ததாகவும் கூறுகிறார். அதாவது, ஒவ்வொரு தனிமனிதனின் குணத்தின் (அல்லது பண்புகள்) அடிப்படையில் ஒருவருடைய தகுதியையும் பணியையும் வரையறுத்திருப்பதாகக் கூறுகிறார். இதன் மூலம் இரண்டு செய்திகள் தெளிவாகின்றன. முதலில் இது ஒரு புது கொள்கை. பழைய கொள்கை இதிலிருந்து வேறுபட்டது. பழைய கொள்கைப்படி, சதுர்வர்ணம் வேதங்களின் கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டது. வேதங்கள் எப்படி குறைகள் அற்றதோ, அதேபோல் அதன் மீது கட்டப்பட்டிருக்கும் சதுர்வர்ண அமைப்பு முறையும் குறைகள் அற்றது. வேதங்கள் குறைகள் அற்றவை என்ற கருத்தியலின் மீது புத்தர் தொடுத்த தாக்குதலால், சதுர்வர்ணத்தின் செயல்பாடும் புனிதத் தன்மையும் கேள்விக்குள்ளானது.

சதுர்வர்ணத்தைக் கைவிடத் தயாராக இல்லாத இந்துயிசம், சதுர்வர்ணத்தைத் தனது ஆணிவேராகக் கொண்டதும், அதனால் அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கு பகவத் கீதையை நாடியதும் இயல்பானதே. ஆனால், பகவத் கீதையில் கிருஷ்ணனின் புதிய நியாயப்படுத்துதல் எந்த வகையில் சரியானது? பெரும்பான்மை இந்துக்களுக்கு கிருஷ்ணனின் பதில் நிறைவாக இல்லை எனினும், அதை அவர்களால் மறுக்க முடியாது என்பதால், நிறைவாக இருப்பது போல் பாசாங்கு செய்கின்றனர். இந்துக்கள் அல்லாதவர்களுக்கும் அது கவர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. சதுர்வர்ணம் வேதத்தின் கட்டளைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தால், அது எப்போதோ மறைந்து போயிருக்கும் என்று உறுதியாகச் சொல்வேன்...

கிருஷ்ணன் இந்தக் கருத்தியலை (குணக் கொள்கை) முன்வைத்தபோது இட்லரோ, முசோலினியோ பிறக்கவில்லை. கிருஷ்ணன் இருந்திருந்தால் ஒரு பெயிண்டரும், ஒரு கொத்தனாரும் எப்படி உலகை ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு சர்வாதிகாரிகளாக ஆகியிருப்பார்கள் என்பதை விளக்குவதற்கு அவர் சிரமப்பட்டிருப்பார். இதில் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து என்னவெனில், ஒரு தனி மனிதனின் ‘பிரகிருதி' மாறிக் கொண்டே இருக்கிறது. ஏனெனில், அவனுடைய குணங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. ஒருவருடைய குணங்கள் எப்பொழுதும் மாறிக் கொண்டே இருக்குமெனில், மனிதனை நிரந்தர வர்ணங்களாகப் பிரித்து நிலைப்படுத்தியிருக்க முடியாது. அதனடிப்படையில் அவன் எந்தத் தொழிலை நிரந்தரமாக செய்ய வேண்டும் என்பதை அவன் மீது சுமத்தியிருக்க முடியாது. எனவே, பகவத் கீதையின் ஒட்டுமொத்த கருத்தியலுமே பொய்யாகி விடுகிறது. ஆனால், நான் முன்பே குறிப்பிட்டபடி, இந்துக்கள் அதன் புறத்தோற்றத்தைக் கண்டு ஏமாந்து அதன் அடிமைகளாகிவிட்டனர். இதன் விளைவு, இந்துயிசம் சமூக சமத்துவமின்மையை கோட்பாடாகக் கொண்டிருக்கும் வர்ண அமைப்பு முறையை, இடையறாது தூக்கிப் பிடிக்கிறது. இந்துயிசத்தின் இவ்விரு தீமைகளுக்கு பவுத்தம் ஆட்படவில்லை.

பவுத்தத்தின் கொள்கைகள் மட்டுமே இந்துக்களை துன்பத்திலிருந்து விடுவிக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். ஏனெனில், அவர்கள் இந்தியாவில் மீண்டும் பவுத்த மறுமலர்ச்சி ஏற்படாது என்று எண்ணுகிறார்கள். இதை நான் ஏற்கவில்லை. இன்று இந்துக்கள் மதத்தின் மீதான தங்களின் நம்பிக்கைப்படி, இரு பிரிவுகளாக உள்ளனர். இந்து மதம் உட்பட அனைத்து மதங்களும் உண்மையானவை என்று சிலர் சொல்கின்றனர். பிற மதத் தலைவர்களும் இம்முழக்கத்தையே முன்னிறுத்துகின்றனர். அனைத்து மதங்களும் உண்மையானவை என்று சொல்வதைப் போன்ற ஒரு தவறான கருத்து வேறு எதுவுமில்லை. இந்துக்களில் சில பிரிவினர் தங்கள் மதத்தில் ஏதோ தவறு இருப்பதாக உணர்கின்றனர். ஆனால், அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை. இந்த அணுகுமுறை புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஒருவருடைய சமூக உள்ளடக்கத்தின் ஒரு பகுதியாக மதம் விளங்குகிறது.

ஒருவருடைய வாழ்க்கையும், மதிப்பும், பெருமையும் மதத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒருவர் தன்னுடைய மதத்தைக் கைவிடுவது அவ்வளவு எளிதானதல்ல. இது, நாட்டுப்பற்று என்று வந்துவிட்டால், சரியோ தவறோ ‘எனது நாடு' என்று சொல்வதைப் போன்றது.

இந்துக்கள் தங்கள் மதத்தைக் கைவிடுவதற்கு பதில் பிற வழிகளில் தப்பிக்கப் பார்க்கின்றனர். சிலர், எல்லா மதங்களுமே தவறானவை. எனவே, நாம் ஏன் மதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று தங்களுக்குத் தாங்களே ஆறுதல் சொல்லிக் கொள்கின்றனர். உண்மையை ஏற்றுக் கொள்ள நாட்டுப்பற்று தடுப்பது போலவே, அவர்கள் வெளிப்படையாக பவுத்தத்தை தழுவாததற்கும் இத்தகைய உணர்வே காரணம். இத்தகைய அணுகுமுறையால் ஒரே ஒரு விளைவுதான் ஏற்படும். இந்துயிசம் வீழ்ந்துவிடும். அது மக்களின் வாழ்க்கையில் ஆளுமை செலுத்த முடியாமல் போய்விடும். அது செயலற்றதாகி, இந்து சமூகம் பிளவுபடுவதில் முடியும். இந்துக்கள் ஒரு நேர்மறையான அணுகுமுறையை ஏற்க கட்டாயப்படுத்தப்படுவர். அவர்கள் அவ்வாறு செய்ய முற்பட்டால், அவர்கள் பவுத்தத்திற்குதான் திரும்பியாக வேண்டும்.

இது மட்டுமே நம்பிக்கை ஒளியாக இல்லை. இன்னும் பிற பிரிவு மக்களிடமிருந்தும் ஆதரவு கிடைக்கும். எல்லா மதங்களும் ஒரு கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். மதம், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன வகையான மன நிம்மதியையும், ஒழுக்க நெறிகளையும் தருகிறது. அப்படி தரவில்லையெனில், அந்த மதம் தண்டனைக்குள்ளாக்கப்படும். இந்துயிசம், லட்சக்கணக்கான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மன நிம்மதியையும் ஒழுக்க நெறிகளையும் தருகிறதா? இல்லை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மன நிம்மதியையும் ஒழுக்க நெறிகளையும் உறுதிப்படுத்தாத இந்துயிசத்தின் கீழ் அவர்கள் வாழ வேண்டும் என்று இந்துக்கள் எதிர்பார்க்கின்றார்களா? இத்தகைய எதிர்பார்ப்பு முற்றிலும் தோல்வியையே அளிக்கும்.

இந்துயிசம் எரிமலையின் மீது அமர்ந்திருக்கிறது. இன்று அது நீருபூத்த நெருப்பாகத் தோற்றமளிக்கிறது. அதில் உண்மையில்லை. லட்சக்கணக்கான பெரும்பான்மை மக்கள் தாங்கள் இழிநிலையில் இருப்பதற்கு, இந்து மதத்தின் சமூகத் தத்துவங்கள்தான் காரணம் என்று உணர்ந்துவிட்டால், அது மீண்டும் வெடிக்கத் தொடங்கிவிடும். ரோம சாம்ராஜ்யத்தில் ‘பேகனிசம்' எப்படி கிறித்துவத்தால் தூக்கியெறியப்பட்டது என்பதை நினைவு கூர்வது இங்கு பொருத்தமாக இருக்கும். வெகுமக்கள் ‘பேகனிசம்' தங்களுக்கு மன நிம்மதியையும் ஒழுக்க நெறிகளையும் அளிக்கவில்லை என்பதை உணர்ந்ததும் அதைத் தூக்கியெறிந்து விட்டு கிறித்துவத்தைப் பின்பற்றினர். ரோமில் நடந்தது, இந்தியாவிலும் கண்டிப்பாக நடக்கும். இந்துக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டால், அவர்கள் கண்டிப்பாக பவுத்தத்திற்குத் திரும்புவார்கள்.

தமிழில் : புலேந்திரன்

- வளரும்
Pin It