டாக்டர் என். ஜெயராமன் அவர்களின் பேட்டி இந்த இதழிலும்

Jayaraman and his family
தாழ்த்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை இடஒதுக்கீடு முன்னேற்றும் என்ற டாக்டர் அம்பேத்கர், பெரியார் கொள்கைக்கு மாறாக தற்போது கிளர்ச்சி செய்கின்றார்களே. இதுபற்றி தங்களின் கருத்து என்ன?

ஆரிய, திராவிடர் போரின் மற்றொரு பரிணாமம்தான் இன்றைய இடஒதுக்கீட்டுப் போராட்டம். இதனை, ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை' என்ற நூலில் பிரேம் நாத் பசாஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார். வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து பார்ப்பனியம் இந்தியத் துணைக்கண்டத்திற்கு செய்து வரும் கேடுகள் இன்றுவரை தொடர்கின்றன. பகவத் கீதையில், கிருஷ்ணனும், அர்ச்சுனனும் ஒவ்வொரு தலைமுறையிலும் ஏதேனும் ஒரு தீவிரவாத இந்துவின் வடிவத்தில் பிறந்து கொண்டே இருக்கிறார்கள். பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறுகிறான் ‘சம்பவாமி யுகே, யுகே' ‘அநீதியை அழிப்பதற்கு அவதாரம் எடுத்துக் கொண்டே இருப்பேன்' என்பது இதன் பொருள்.

ஆனால், அதற்குப் பதிலாக பார்ப்பனியத்திற்கு இக்கட்டு வரும்போதெல்லாம் ‘பரமாத்மா' இந்துத்துவ தீவிரவாதியாக அவதரித்துக் கொண்டேயிருக்கிறான். அதன் மற்றொரு வடிவம்தான் இந்த இடஒதுக்கீட்டுப் போராட்டம். அதாவது, ஆரியம் தன் மேலாண்மையை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கானப் போராட்டமே இது. இதில் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால், மனுநீதியை நிலைநாட்டுவதற்கு, அடுத்ததாக ஈயம் வாங்கிக் காய்ச்ச ஆரம்பித்து விடுவார்கள்.

சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் வல்லமை கொண்டது பார்ப்பனியம். பெரியாரின் கைத்தடி ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்தப் போராட்டம் உணர்த்துகிறது.

கிராமங்களில் உள்ள தலித் மக்களின் அன்றாட வாழ்வில் இந்துத்துவம் பிணைக்கப்பட்டுள்ளதா?

தலித் மக்கள் இரண்டு பிரிவினராக உள்ளனர். கிராமம் மற்றும் நகரம். கிராமத்தில் இந்துத்துவத்தின் அடிப்படைக் கூறான சாதியும், தீண்டாமையும் இவர்களை இன்னும் வாட்டிக் கொண்டிருக்கிறது. இதைவிட்டு வெளியேற முடியாதபடி இவர்களின் பொருளாதாரம் நசிந்து கிடக்கிறது. மனுவில் கூறப்பட்டுள்ள அனைத்து வன்கொடுமைகளையும் இவர்கள்தான் இன்னமும் அனுபவிக்கின்றார்கள். இதை வைத்துத்தான் காந்திகூட, ‘இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்களில்தான் உள்ளது' என்றார் என நினைக்கிறேன். இந்து மதம் கிராமங்களில் இவ்வாறுதான் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆதிக்க சாதியினர் இவர்கள் வீட்டுத் திண்ணைப் பக்கம்கூட வரமாட்டார்கள். வாசலுக்கு வெளியே நின்று ஏவல் செய்வதோடு சரி.

நகர்ப்புறங்களில் இந்துத்துவம் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது?

கிராமத்து வன்கொடுமைகள் 90 சதவிகிதம் நகரத்தில் இல்லை. நகர்ப்புறங்களில் தலித்துகளை தலித் அடையாளங்களுடன் காண்பது அரிது. இந்துத்துவத்தின் சீரழிந்த கலாச்சாரம், நகர்ப்புறத்து தலித்துகளை முழுமையாக ஆட்கொண்டு வருகிறது. தலித்துகள் காவிமயமாகி வருகின்றனர் என்பது உண்மை. தங்களின் சொந்த அடையாளங்கள் என்னவென்றே தெரிந்து கொள்ள முடியாத ஆர்வ மற்ற நிலைக்கு இந்துத்துவம் அவர்களை விழுங்கி வருகிறது.

சங்கராச்சாரிக்கு நீங்கள் எழுதிய திறந்த மடல் பற்றி கூறுங்கள்.

மதமாற்றத் தடைச் சட்டம் வந்தபோது, அவருக்கு ஒரு மடல் எழுதினேன். புதுக்கோட்டையில் உள்ள பார்ப்பனர்கள் மத்தியில் அது மிகப் பெரிய சலசலப்பினை ஏற்படுத்தியது. ‘‘மனுவகுத்த நால்வர்ணத்தில் வராதவர்களாகிய தலித்துகள், தாங்கள் எங்கேயிருப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரம், சங்கராச்சாரிகளின் கூட்டத்திற்குக் கிடையாது. நான் எங்கே இருக்க வேண்டுமென்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த மண்ணும் பண்பாடும் எங்களுக்குச் சொந்தமானது என்ற விரிவான கடிதம் எழுதியிருந்தேன். பதில் சொல்ல முடியாததால் எந்தத் தகவலும் அங்கிருந்து வரவில்லை. என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அளவிற்கு கூட்டங்கள் நடத்தப்பட்ட செய்தி எனக்கு வந்தபோது, அக்கடிதம் தொடர்பாக பொது விவாதம்கூட நடத்தத் தயார் என்று பார்ப்பன சங்கப் பொறுப்பாளர்களிடம் தெரிவித்தேன்.

குல தெய்வ வழிபாடு தலித்துகளை ஒன்றிணைக்கின்றதா? அல்லது தலித்துகளை இந்துத்துவத்தை நோக்கி இழுத்துச் செல்கின்றதா?

குல தெய்வ வழிபாடு கண்டிப்பாக இந்துத்துவத்தை நோக்கிய பயணமாகத்தான் இருக்கிறது. குல தெய்வ வழிபாடு மிகச் சிறிய குழு வழிபாடுதான். ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு கிராமத்துக் கோவில் உள்ளது. வழிபாட்டு முறைகளும் வெவ்வேறானதாக உள்ளது. குல தெய்வ வழிபாட்டில், ‘நாம் நம் குல தெய்வத்தைத் தவிர வேறெந்த இந்துக் கடவுளையும் வழிபடக் கூடாது' என்ற ஒருமித்த கருத்துகள் இவர்களிடம் இல்லை. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இது தலித்துகளை ஒன்றிணைப்பதாக எப்படி அமையும்? மேலும், இது ஆண்டுக்கு ஒரு முறை அல்லது விளைச்சல் அமோகமாக உள்ள காலங்களில்தான் உள்ளது. மற்ற நேரங்களில் இவர்கள் இந்துமத தெய்வங்களைத்தான் வழிபடுகின்றார்கள். கிராமங்களைவிட்டு வேலை தேடி நகர்ப்புறம் சென்றவர்கள், தங்கள் கிராமத்திற்கு வரும்பொழுது இந்து வழிபாட்டு சீரழிவு முறைகளை (பிரதோசம், கிருத்திகை, சஷ்டி, சங்கரசதுர்த்தி, அமாவாசை, ஆவணி அவிட்டம்) கிராமத்தில் உள்ள மற்றவர்களிடம் திணித்துவிட்டுச் செல்கின்றனர். எனவே, குல தெய்வ வழிபாடு தலித்தியத்தை பிரதிபலிப்பதாக இல்லை.

கிராமத்து மக்கள் தலித்துகளாக இருக்கின்றார்களா?

கிராமத்தில் உள்ள தலித்துகள்தான் முழுமையான தலித்திய அடையாளங்களுடன் இருக்கின்றார்கள். இந்தியனாக, இந்துவாக, மருத்துவராக, பொறியாளராக, மேதைகளாக அறியப்படுகின்றவர்கள்கூட, தன் சொந்த கிராமத்திற்குள் வரும்போது தலித்தாக மட்டுமேதான் அறியப்படுகிறான். அவனுடைய அனைத்துப் புற அடையாளங்களையும் கிராமத்தில் உள்ள ஆதிக்க சாதியினர் களைந்து விட்டுத்தான் அவனை அடையாளம் காண்கிறார்கள். கிராமத்து மக்கள்தான் எதார்த்தமான தலித்துகளாக இன்னமும் இருந்து வருகிறார்கள்.

உங்களின் சமூகப் பணிகளில் பவுத்தம் தழுவுதல் ஒரு நோக்கமாக உள்ளதா?

ஆமாம். டாக்டர் அம்பேத்கரை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட அனைவரின் நிலைப்பாடும் பவுத்தம் நோக்கியே இருக்குமென கருதுகிறேன். எனது பணிகள் அனைத்தும் தற்போது பவுத்தம் நோக்கித்தான் செல்கின்றன. இந்து மதம் இருக்கின்றவரை, தலித் விடுதலை கிடைக்காது. தலித்துகள் இந்துக்களாக இருக்கின்றவரை, விடுதலை என்பதே சாத்தியமில்லை. விடுதலையை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். உலக வரலாற்றில் அடிமைகளின் விடுதலையை எஜமானர்கள் முடிவு செய்ததாக அச்சுப் பிழைகூட எங்கும் நடந்ததில்லை.

அண்மையில் பாபாசாகேப் அவர்களின் நினைவிடத்திற்குச் சென்று வந்த அனுபவம் எப்படி இருந்தது? டாக்டர் அம்பேத்கர் வாழ்ந்த இல்லத்திற்குச் சென்றீர்களா?

பாபாசாகேப் அவர்களின் நினைவிடம் பவுத்த துறவிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள புத்த பிக்குகள், சாயிபாபா போன்று வருபவர்களுக்கெல்லாம் ஆசி வழங்குகின்றனர். மொத்தத்தில் அது ஒரு வழிபாட்டுத் தலமாகவே காட்சியளிக்கின்றது. புத்தரையும், டாக்டர் அம்பேத்கர் அவர்களையும் கடவுளாக்கி வழிபட்டு வருகின்றனர். எந்த வழிபாட்டை அவர் எதிர்த்தாரோ அந்த வழிபாடு அங்கு நடந்து வருவது வேதனையாயிருக்கின்றது. டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த பவுத்தம் இது அல்ல என்ற எண்ணத்தோடு திரும்பினேன். டாக்டர் அம்பேத்கர் வாழ்ந்த இடம் வரலாற்றுச் சிறப்பிடமாக இல்லை. 30 கோடி மக்கள் போற்றும் ஓர் உத்தமத் தலைவர் வாழ்ந்த இடத்தை, இன்று வாடகைக்கு விட்டு பணம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். தாதர் ரயில் நிலையத்திற்குப் பின்புறம் மிக மய்யமான பகுதியில் அவர் வாழ்ந்த இல்லம் இருக்கின்றது. மகாராட்டிர அரசு அந்த இடத்தை வாங்கி, அதை வரலாற்று நினைவுச் சின்னமாக்கினால், அது தலித் மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய பணியாக இருக்கும். இதை ஏன் இவ்வளவு காலம் செய்யவில்லை என்ற கனத்த மனதுடன் திரும்பினேன்.

தலித் மக்களுக்காகப் பணியாற்றும் நீங்கள் அறிவியல் கலை இலக்கிய மன்றம் என்ற அமைப்பைத் தொடர்ந்து நடத்துவதன் நோக்கம் என்ன?

இவ்வமைப்பின் மூலம் பொதுவான சமூகப் பிரச்சினைகளை மய்யப்படுத்துகிறோம். அதில் தலித் பிரச்சினைகளைப் பற்றியும் பேசுகின்றோம். டாக்டர் சவீதா அம்பேத்கருக்கு இரங்கல் கூட்டம், கீழ வெண்மணி நினைவு நாள் கூட்டம், பெரியார் பிறந்த நாள் கூட்டம் மற்றும் தலித்தியப் பிரச்சினைகளையும் இதில் ஒரு பகுதியாகத்தான் நடத்தி வருகிறோம். தலித் அல்லாதவர்களிடம் எந்தளவுக்கு தலித்தின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த முடியுமோ, அந்தளவுக்கு முன்னிலைப்படுத்தி வருகிறோம். தலித் விடுதலைக்கு அனைத்தையும் ஆயுதமாக்குவோம் என்கிற வழிமுறை தான் இது.

உங்களின் சமூகப் பணியில், உங்கள் குடும்பத்தினரின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?

நிறைவானதாக இருக்கிறது. என் துணைவியார் என் பணிகளுக்கு பக்க பலமாகவும், உறுதுணையாகவும் இருப்பதுதான் என் முதல் வெற்றி. தன்னை தலித் என்றே அறிமுகம் செய்து பெருமைப்பட்டுக் கொள்ளுமளவிற்கு உள்ளார்கள். அவர்களுடைய தகப்பனார் பெரியாரோடும், அண்ணாவுடனும் நேரடியாக கழகப் பணியாற்றியவர். அண்ணாவிடம் இருந்த நெருக்கத்தினால் தன் பெயரையே அண்ணாதாசன் என மாற்றிக் கொண்டவர். திராவிட இயக்க வரலாற்றில் சமூகப் புரட்சியையும், சாதி மறுப்புத் திருமணத்தையும் முழுமையாக ஏற்றுக்கொண்ட குடும்பம். புரட்சிகரமான குடும்பப் பின்னணி உள்ளவர். என் வாழ்க்கைத் துணைவியாக அவர் அமைந்ததால், நான் என் குடும்ப வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் ஜீவசக்தியை உத்வேகத்தைப் பெறுகின்றேன்.

சந்திப்பு : அ.த. யாழினி . முற்றும்
Pin It