“...எப்போதெல்லாம் காந்தி பிரிட்டிஷாருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்தினாரோ, அப்போதெல்லாம் இந்து முஸ்லிம் மோதல் நடைபெறவில்லை. காந்தி தலைமையில் ஒன்றுபட்டு நின்றார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியில் எப்போதெல்லாம் பார்ப்பனர்கள் ஆதிக்கம் ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் தான் இந்து முஸ்லிம் மோதல் ஏற்பட்டது'' என்று பெரியார் குறிப்பிடுகிறார். இன்னொரு கோணத்தில் சொல்ல வேண்டுமானால், இன்றைய ‘இந்துத்துவா' தான் அன்றைய பார்ப்பனியமாக இருந்திருக்கிறது. கோல்வால்கர் உள்பட பல தலைவர்கள், இந்தியாவுக்கு ஒரு புது வரையறையை உருவாக்குகிறார்கள்.

T.Raja
இந்தியாவின் கலாச்சார தேசியம் என்று பேசத் தொடங்கி, இந்தியா என்பது இந்துக்களின் நாடு என்றார்கள். இந்து ராஷ்டிரம் அமைய வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், இந்து என்பதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம் அர்த்தம் பெரியார் கூறியது போல, பார்ப்பனியம் என்பதுதான். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, ‘இந்துத்துவா' என்பது வர்ணாசிரம தர்மத்தைக் கட்டிக் காப்பாற்றுகின்ற ஓர் அமைப்பாகும்.

பெரியாரை முறையாகக் கற்பவர்கள் ஆர்.எஸ். எஸ்.அய் ஒழுங்காகப் புரிந்து கொள்ள முடியும். இன்றைக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் சவாலாக இருப்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான்; இந்துத்துவா கொள்கைதான். இந்த அடிப்படையிலேதான் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் பெரியார் இயக்கத்துக்கும் நெருக்கம் அதிகமாகிறது. இன்றைக்குப் பார்ப்பனியம் என்ற கருத்தாக்கம் முறியடிக்கப்பட்டாக வேண்டும். அதில் யாருக்கும் இரண்டு கருத்துகளுக்கு இடமிருக்கவே முடியாது.

பெரியார் நம்மை விட்டுப் பிரிந்து 32 ஆண்டுகளாகி விட்டன. இப்போது என்ன நடைபெறுகிறது? சாதிகள் ஒழிந்திருக்கின்றனவா? சாதிக் கொடுமைகள் ஒழிந்திருக்கின்றனவா? தீண்டாமை, அரசியல் சட்டத்தில் குற்றம் என்று சொன்னாலும் நடைமுறையில் கண்ணுக்குத் தெரிந்த கண்ணுக்குத் தெரியாத பல்வேறு வடிவங்களில் பின்பற்றப்படுகிறது. மதத்தின் பெயரால் மூடநம்பிக்கைகள் மீண்டும் ஒரு மூர்க்கத்தனத்தோடு வளர்க்கப்படுகின்றன. பெருந்தெய்வங்களை நிராகரிக்கிறோம் என்ற பெயரால், பெரும் எண்ணிக்கையில் சிறு தெய்வங்கள், தமிழ் நாட்டில் உருவாகியிருக்கின்றன. மூலை முடுக்கெல்லாம் கோயில்கள், நடைபாதைகளில் எல்லாம் வழிபாட்டுத் தலங்கள்! எல்லா மதங்களும் இதைச் செய்கின்றன. அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கை, தென்னிந்தியாவில்தான் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்த மத மூடநம்பிக்கைகள் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றன. அதற்கு ஒரு காரணம், உலகமயமாதல் கொள்கை. இந்த உலகமயமாதல் கொள்கை வந்தபிறகு, ஏழைகளும், ஏழை நாடுகளும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்; வஞ்சிக்கப்படுகிறார்கள். வஞ்சிக்கப்படுகிற இந்த ஏழை மக்கள், வாழ்வுரிமைக்காகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அதற்காக அவர்கள் ஒன்றுபடுகிறார்கள். அப்படி அவர்கள் போராடுவதற்கு ஒன்றுபடாமல் தடுக்க வேண்டுமானால், மத அடிப்படைவாதத்தை அவர்களிடம் ஊக்குவிக்க வேண்டும். மதத்தின் பெயரால், மக்களைப் பிளவுபடுத்தும் தந்திரங்களை ஆதரிக்க வேண்டுமென்று உலகமயமாதல் சொல்லுகிறது. சாதி உணர்வுகள் இப்போது ஏன் வலிமையாக இருக்கிறது? கடவுள் மறுப்பு, மத மறுப்புகள் பெரியாரால் தொடர்ந்து பேசப்பட்ட பிறகும், அந்த நம்பிக்கைகள் ஏன் வலிமையடைந்துள்ளன? இது பற்றி ஆழமான பசீலனை தேவைப்படுகிறது.

கருத்துக் களத்தில் பார்ப்பனியத்தை முறியடித்தாக வேண்டும். ஆனால், நடைமுறையில் பார்ப்பனரல்லாத ‘மேல் சாதி'க்காரர்களுக்கும், பார்ப்பனரல்லாத ‘கீழ் சாதி'க்காரர்களுக்கும் இடையே எப்படி இணக்கத்தை உருவாக்குவது? இது, பெரியார் இயக்கத்துக்கும், பொதுவுடைமை இயக்கத்துக்கும் முன்னுள்ள ஒரு முக்கியமான சவால். நாம் இதை எதிர்கொண்டாக வேண்டும். இன்னொரு கோணத்தில் சொல்ல வேண்டுமானால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடையே நாம் எதிர்பார்க்கக்கூடிய ஒற்றுமையை ஏன் இன்னும் உருவாக்க முடியவில்லை?

தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்று சேரும்போது, இந்துத்துவ சக்திகள் முறியடிக்கப்படுகின்றன. உத்திரப் பிரதேச அரசியலை நீங்கள் பார்க்க வேண்டும். வட மாநிலங்களில் நடக்கும் அரசியலை நீங்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். எப்பொழுதெல்லாம், பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் ஒன்றுபட்டார்களோ, அப்போதெல்லாம் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் பிளவுபட்டு நிற்கும் போது பா.ஜ.க. இந்துத்துவ சக்திகள் வெற்றி பெற்று புதுபலம் பெறுகிறார்கள். இதைத்தான் வட மாநிலங்களில் பார்க்கிறோம். தமிழ் நாட்டில், இந்தப் பிரச்சினையில், ஒரு புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது.

இந்த நேரத்தில் மற்றொரு கருத்தையும் நான் சுட்டிக்காட்டியாக வேண்டும். இந்தியாவில் தந்தை பெரியாரை நாம் குறிப்பிட்டுப் பேசுவதைப் போல், டாக்டர் அம்பேத்கரையும் குறிப்பிட்டுப் பேச வேண்டும். இந்திய வரலாற்றில் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு ஒரு முக்கிய பங்கும், இடமும் இருக்கிறது. சமூக மாற்றத்துக்கானப் போராட்டம் என்று சொன்னால், அம்பேத்கரை ஒதுக்கி வைத்துவிட்டு, யாரும் சமூக மாற்றத்தைப் பேசிவிட முடியாது. ‘இந்தியாவை ஒரு நவீன இந்தியாவாக நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால், இங்கே இருக்கும் சாதியமைப்புதான்' காரணம்’ என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார். ‘உளவியல் அர்த்தத்தில் பார்த்தால் சாதிகள் இருக்கும்வரை, இந்தியா ஒரு நவீன இந்தியாவாக உருவாக முடியாது. ஏனென்றால், சாதிகள் எல்லாம் தேச விரோதமானவை' என்று சொன்னவர் டாக்டர் அம்பேத்கர். “நீங்கள் பொருளாதார சீர்திருத்தம் செய்ய முயன்றாலும், அரசியல் சீர்திருத்தம் செய்ய முயன்றாலும், ஒரு ‘பேயை' சந்தித்தாக வேண்டும். அதுதான் ‘சாதிப்பேய்' என்று குறிப்பிடுகிறார் அம்பேத்கர்.

மண்டல் குழு அறிக்கை கொடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, வி.பி. சிங் அவர்களால்தான் ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதற்கு வி.பி. சிங் கொடுத்த விலை சாதாரணமானது அல்ல. ஆட்சியையே அவர் பறி கொடுக்க வேண்டியிருந்தது. சென்ற வாரம் வி.பி. சிங்கும் நானும் அலகாபாத்தில் ஒரு பேரணியில் கலந்து கொள்வதற்காக, ஒரே ரயிலில் பயணம் செய்தோம். அப்போது நான் அவரிடம், ‘மண்டல் கமிஷன் பற்றி இப்போது உங்கள் கருத்து என்ன?' என்று கேட்டேன். வி.பி. சிங் இயல்பாகவே ஒரு கவிஞர்; அவர் சொன்னார், ‘மண்டல் கமிஷன் பரிந்துரையை நான் நடைமுறைப்படுத்தினேன். அதை ஒரு ‘குற்றம்' என்று சொன்னார்கள். இன்றைக்கு எல்லோரும் அந்தக் ‘குற்றத்தை' செய்கிறார்கள். ஆனால், தண்டிக்கப்படுபவன் நான் மட்டும்தான்'. இப்படி ஒரு கவிஞருக்கே உரிய மொழியில் வி.பி.சிங் கூறினார். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

உலகமயமாதலை எதிர்த்தும் நாம் போராட வேண்டும். நான் மீண்டும் பெரியாரைப் பற்றிக் கூற விரும்புகிறேன். பெரியாரைப் போல், சிங்காரவேலரைப் போல் பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்தவர்கள் வேறு யாருமில்லை. பெண்கள், ஏன் இவ்வளவு நகைகளை மாட்டிக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டார். ‘கணவன் மனைவியைக் கன்னத்தில் அறையும்போது, காதிலே மாட்டியுள்ள கம்மல் போய்விடக்கூடாதே என்று மனைவி குனிந்துதான் போக வேண்டும். அதற்காகவே காதிலே கம்மலைப் போட்டார்கள்' என்று பெரியார் காரணம் கூறுகிறார். பெண்களை அடித்துத் துவைப்பதற்காகவே, அவர்களுக்கு நகைகளை மாட்டி விட்டிருக்கிறார்கள் என்ற அர்த்தத்தில்தான் பெரியார் சொல்கிறார். நான் இன்றைக்கும் சொல்கிறேன், உலகமயமாதலில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது? உலக வர்த்தக நிறுவனத்தின் சார்பில், வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு இப்போது ஹாங்காங்கில் நடந்து முடிந்திருக்கிறது. அந்த உலக வர்த்தக நிறுவனம் ‘நாகரீக மாடல்' என்றால், அதற்கு தாராளமாகச் சலுகைகளை வழங்க வேண்டும் என்கிறது. அதன் காரணமாக, ‘அழகுக் கலை தொழில் நுட்பம்' தொடர்பான தொழில்கள் ஏராளமாக வளர்ந்து வருகின்றன.

ஆக, உலகமயமாதல் பெண்களை வெறும் போகப் பொருளாகவே பார்க்கிறது. உலகமயமாதல் மட்டுமல்ல; ‘இந்துத்துவா'வும் பெண்களை அப்படித்தான் பார்க்கிறது. பெண்களைப் பிள்ளை பெற்றுத் தரும் எந்திரமாகத்தான் ‘இந்துத்துவா' கருதுகிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் இப்போது என்ன கூறி வருகிறார்? ‘இந்துக்கள் எல்லாம் அதிகமாகப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்' என்கிறார். நாம், ஒரு ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்று கேட்க வேண்டியிருக்கிறது. பிள்ளை பெறுவது என்பது ஒரு பெண்ணின் மனநலம், உடல்நலம் சார்ந்த ஒரு பிரச்சனை. பெண்ணை ஒரு மனித ஜீவனாகக்கூட பார்க்காமல், பிள்ளை பெற்றுத் தரும் எந்திரமாகவே பார்ப்பது ஒரு பாசிஸ்ட் கண்ணோட்டம். அந்த பாசிஸ்ட் கண்ணோட்டத்தில்தான் ‘இந்துத்துவா' பெண்களைப் பார்க்கிறது. அதே கண்ணோட்டத்தைத்தான் உலகமயமாதலும் கொண்டிருக்கிறது. இங்கேதான் நாம் பெரியாரைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

உலகமயமாதல் என்ற பெயரால் நம் சமூகத்தில் திணிக்கப்படுகிற கலாச்சாரத் தாக்குதல்கள், நம் சமூகத்தில் மதிப்புகள் மீது நடத்தப்படுகிற தாக்குதல்கள் ஆகியவைகளை நாம் எதிர்கொள்ள வேண்டும். பெரியார் சொல்வது போல், நாம் கருத்துக் களத்தில் மூர்க்கத்தனத்தோடு செயல்பட வேண்டும். இங்கேதான் பெரியாருக்கும், காரல் மார்க்சுக்கும் மிகுந்த ஒற்றுமையை நான் காண்கிறேன். அவர்களிடம் ஒரு தீவிரத்தன்மை இருந்திருக்கிறது. தீவிரத்தன்மையோடு அவர்கள் போராடியிருக்கிறார்கள். காரணம் இரண்டு பேருக்குமே அடிப்படையாக இருந்தது மனித நேயம்தான். எனவேதான், பெரியார் இன்றைக்கும் வரலாற்றில் வாழ்கிறார். பெரியாருக்கு மரணமில்லை.

இதே ‘குடி அரசு' தொகுப்பில் வெளிவந்துள்ள ஒரு சிறிய குறிப்பை நான் பார்த்தேன். அயோத்திதாசப் பண்டிதர் தொடங்கிய ‘தமிழன்' பத்திரிகை பற்றிய குறிப்பு வந்திருக்கிறது. அந்தக் காலத்திலேயே ஆங்கிலம், சமஸ்கிருதம், பாலி மொழியில் ஞானம் பெற்றவர். பவுத்தத்தை முழுமையாக அறிந்தவர். நான் இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் நாம் பேசுகிற பகுத்தறிவு - பொதுவுடைமை - சுயமரியாதை இயக்கங்களுக்கெல்லாம், அயோத்திதாசப் பண்டிதர் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார்.

இப்படி நமது தமிழ்நாட்டுக்கு ஒரு புகழ் மிக்க நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. இந்தப் புகழ் மிக்கப் பாரம்பரியத்தை அடுத்த கட்டத்துக்கு நாம் எப்படி எடுத்துச் செல்லப் போகிறோம்? இதற்கு விடை தேட வேண்டுமானால், மார்க்ஸ் பெரியார் அம்பேத்கர் இம்மூவருக்கும் இடையேயான தத்துவார்த்த அரசியல் உறவுகள் பற்றி நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இவர்களைப் பின்பற்றுகிறவர்கள் ஒன்றுபட்ட இயக்கமாகச் செயல்பட வேண்டும். அந்த ஒற்றுமைதான் அந்த ஒன்றுபட்ட இயக்கம்தான், தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான ஆதாரமாக அமையப் போகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து. ராஜா, 24.12.2005 அன்று சேலத்தில், பெரியார் திராவிடர் கழக மாநாட்டில் ‘குடி அரசு' தொகுப்பை வெளியிட்டுப் பேசிய உரையின் ஒரு பகுதி. இம்ழு உரையை ‘கலை' சிறு நூலாக வெளியிட்டுள்ளது.

 

-து.ராஜா