காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை என்ற வரலாற்று உண்மையை பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் வெளியிட்டதற்காக இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். கும்பல், அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. டெல்லி பெருநகர நீதிமன்ற நீதிபதி அருந்ததி ராய் மீது வழக்கு தொடர வேண்டும் என்று டெல்லி மாநகர காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். வழக்கும் பதிவாகிவிட்டது. இதைத் தொடர்ந்து இதற்காக தன் மீது வழக்கு தொடர வேண்டுமென்றால், மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேரு மீதும் வழக்கு தொடர வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அருந்ததிராய்! 

ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பது இந்தியாவின் திட்டமல்ல, ஜம்மு காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்திய பிறகு, அவர்கள் விருப்பப்படி முடிவு எடுக்கப்படும் என்று நேரு கூறியவற்றை எல்லாம் பட்டியலிட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமருக்கு மூன்று முறை அனுப்பிய தந்தியிலும், அகில இந்திய வானொலி வழியாக நாட்டு மக்களுக்கு இரண்டு முறை ஆற்றிய உரைகளிலும், இரண்டு முறை இந்திய அரசியல் நிர்ணய சபையில் சமர்ப்பித்த அறிக்கையிலும், ஒரு முறை லண்டனில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும், ஒரு முறை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் சமர்ப்பித்த அறிக்கையிலும், ஒருமுறை அய்.நா. பிரதிநிதிக்கு எழுதிய கடிதத்திலும், ஒரு முறை இந்திய நாடாளுமன்றத்தில் ஜனசங்க உறுப்பினர் டாக்டர் முன்ஷி கேள்விக்கு அளித்த பதிலிலும் மீண்டும் 2 முறை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகளிலும் நேரு, காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் நோக்கமில்லை என்பதையும், காஷ்மீரில் அய்.நா. மேற்பார்வையில் மக்கள் வாக்கெடுப்பு நடத்தியே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாக வலியுறுத்தியிருக்கிறார். 

அய்.நா. வின் பாதுகாப்புக் கவுன்சிலில் காஷ்மீர் பிரச்சினை விவாதத்துக்கு வந்தபோது, இந்தியாவின் பிரதிநிதி கிருஷ்ண மேனனும், இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். அருந்ததிராய் தேச விரோதி என்றால் நேருவும் தேச விரோதி தானே! பதில் சொல்வார்களா? 

புட்டபர்த்தியில் ஸ்டாலின் 

துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், புட்டபர்த்தியில் நடந்த சாய்பாபாவின் 85வது பிறந்த நாள் விழாவில் நவம்பர் 22 ஆம் தேதி தனது துணைவியாருடன் தனி விமானத்தில் பறந்து சென்று ஆசி பெற்றுள்ளார். ஸ்டாலிடன் துணைவியார் புட்டபர்த்தியின் தீவிர பக்தர் என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. ஊழல் புகாருக்கு உள்ளாகிய  கருநாடக முதல்வர் எடியூரப்பாவும், தொழிலதிபர்  ரத்தன் டாட்டாவும், பாபாவை தரிசிக்க வந்தவர்களில் அடங்குவர். 

சென்னைக்கு கிருஷ்ணா நீர் வருவதற்கான கால்வாய் அமைப்பதற்கு, சாய்பாபா அறக்கட்டளை நிதி வழங்கியது. 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக முதல்வர் வீட்டுக்கு புட்டபர்த்தி சாய்பாபா வந்தபோது, அவரது குடும்பத்தினர், சாய்பாபாவிடம் ஆசி பெற்றனர். அதே நாளில் நேரு விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில், சாய்பாபாவுடன் ஒரே மேடையில் பேசிய தமிழக முதல்வர் கலைஞர் கருhணநிதி, சாய்பாபா ஏழைகளின் இன்னல் நீங்க உழைப்பவர் என்றும், கடவுளுக்கு நிகரானவர் என்றும் புகழாரம் சூட்டியது நினைவுகூரத்தக்கது. 

தனியார் துறை இடஒதுக்கீடு 

டாக்டர் உதித்ராஜ் தலைமையில் இயங்கும் அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான கூட்டமைப்பு தனியார் துறையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த 29 ஆம் தேதி டெல்லி ராம் லீலா மைதானத்திலிருந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜந்தர்மந்தர் வரை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியையும் நடத்தியுள்ளது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முதன்முறையாக பதவிக்கு வந்தபோது குறைந்தபட்ச பொது செயல் திட்டங்களில் ஒன்றாக இதை அறிவித்தது. இதை நிறைவேற்றுவதற்கு அமைச்சர்கள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் இதற்காக பிரதமர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. 

தொழில் மேம்பாடு மற்றும் கொள்கை வகுப்புத் துறையில், அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. தனியார் நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பங்கேற்கச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதே, இந்தக் குழுவின் நோக்கமாகும். இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு, இந்திய தொழில் மற்றும் வணிக சபை, இந்திய வர்த்தக சபைகளின் ஆணையம் ஆகிய தொழில் அமைப்புகள் வழியாக தொழில் நிறுவனங்களுடன் இதற்காக பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், வர்த்தகத் துறை அமைச்சர், தலித் மக்களுக்கு 5 சதவீத இடங்களையாவது ஒதுக்குமாறு தொழில் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதினார். ஆனால், தொழில் நிறுவனங்கள் மறுத்து விட்டன.  தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா ஒன்று 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அது சட்டமாக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. 

அரசுப் பணிகளில் வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன. 2000-த்தில் மத்திய மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக இருந்தது. இப்போது 27 லட்சமாகக் குறைந்துவிட்டது. ஒரு உதாரணத்தைக் கூறினால் தெளிவாகப் புரியும். 1997 இல் வருமான வரித் துறையில் பணியாற்றிய மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 62000. அப்போது வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஒரு கோடி பேர் மட்டுமே. இப்போது வருமானவரி செலுத்துவோர் 3.25 கோடிப் பேர். ஆனால், வருமான வரித்துறை ஊழியர்கள் எண்ணிக்கை 47000 ஆக குறைந்துவிட்டது. நியாயமாக, வேலைக்கான ஊழியர் விகிதாச்சாரப்படி, 2 லட்சம் பேர் இருக்க வேண்டும். குறைந்ததற்குக் காரணம், வருமான வரித் துறையின் வேலைகள் - ஒப்பந்தப் பணிகளாக தொழிலதிபர்களுக்கு தரப்பட்டுவிட்டதுதான்! இதிலும் தொழிலதிபர்களே பயனடைகிறார்கள். 

நாடாளுமன்றத்தில் தலித் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 131. மாநில சட்டமன்றங்களில் தலித் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 927. தற்போது மத்திய அரசு பணிகளில் 6.54 லட்சம் இடங்கள் நிரப்பப்படாமலே உள்ளன. 2008 ஆம் ஆண்டில் தொழில் துறை அமைப்புகளோடு கலந்து பேசி, தலித் மக்களுக்காக ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டது. இதன்படி, 100 தலித் தொழில்முனைவோரை உரிய பயிற்சி தந்து தயாரிப்பது என்றும், 10 பல்கலைக்கழகங்களிலிருந்து 10000 தலித் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சித் தருவது என்றும், 500 தலித் மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்வது என்றும் அய்.அய்.டி. மற்றும் அய்.அய்.எம். உயர்கல்வி நிறுவனங்களில் 50 தலித் மாணவர்களுக்கு, உதவித் தொகை வழங்குவது என்றும் அதில் 5 மாணவர் களுக்கு வெளிநாடு சென்று படிக்க உதவித் தொகை வழங்குவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் முடிவுகள் எதுவும்செயலாக்கம் பெறவில்லை.

Pin It