மருத்துவம், மருத்துவ உயர் பட்டப் படிப்புகளில் அகில இந்தியா கோட்டாவுக்கு ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ளும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை நிரப்ப முடியாது என்று சண்டித்தனம் செய்து வந்தது ஒன்றிய அரசு. கடந்த ஆண்டு இந்த இட ஒதுக்கீடு நிரப்பப்படவேயில்லை. இதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தியது மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. அச்சட்டப் போராட்டத்தில் இப்போது வெற்றி கிடைத்து இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் சுமார் 4000 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவம், மருத்துவ மேல் படிப்புகளில் படிக்கும் வாய்ப்புக் கதவுகள் இதனால் திறந்துவிடப் பட்டிருக்கின்றன.

1951ஆம் ஆண்டு முதன்முதலாக இந்திய அரசியல் சட்டத்தின் முதல் திருத்தத்துக்கான போராட்டத்தின் மூலம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு நாடு முழுவதும் கிடைப்பதற்கும், பட்டியலின மக்களுக்கான கல்வி இட ஒதுக்கீடு நாடு முழுவதும் கிடைப்பதற்கான வாய்ப்பை பெரியார் உருவாக்கினார். அதே வகையில் மு.க ஸ்டாலின் அவர்கள் நடத்திய சட்டப் போராட்டம் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி அனைத்து மாநில பிற்படுத்தப்பட்டோருக்கும் மருத்துவம், மருத்துவ உயர் பட்டப்படிப்புகளில் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்திருக்கிறது. இது சமூக நீதிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. வெற்றிக்குப் பிறகு மாணவர் சேர்க்கை உரிமையை ஒன்றிய அரசு மாநிலங்களிடமிருந்து பறித்துக் கொண்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

Chennai High Courtஇரண்டாவது, சாலையில் ஆக்கிரமித்து நிற்கின்ற கோவில்கள் குறித்து நீதிமன்றம் வெளியிட்ட கருத்து ஆகும். இவைகள் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டிருக்கிறது, அகற்ற வேண்டும் என்று சொன்னால் அங்கே சங்கிகளும் பாஜகவினரும் உள்ளூரிலே குழுக்களை அமைத்துக் கொண்டும், நடைபாதை கோவில்களை வைத்து வியாபாரம் நடத்துகிறவர்களும் இந்த சட்டவிரோத கோவில்களுக்கு ஆதரவாக கலகம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இது குறித்த வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.

சென்னை ஓட்டேரி அருகே நடைபாதை கோவில்களை அகற்ற வேண்டும் என்ற வழக்கில் நீதிபதிகள் தெரிவித்திருக்கிற கருத்து மிகவும் முக்கியமானது. நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்ச்செல்வி அமர்வு ஒரு முக்கிய கருத்தை பதிவு செய்திருக்கிறது.

“சாலைகளை ஆக்கிரமித்து கோவில்களைக் கட்ட வேண்டும் என்று எந்த மதக் கடவுளும் மனிதரிடம் கேட்பதில்லை. ஆனால் மதத்தின் பெயரை எந்தெந்த வகையிலெல்லாம் தவறாக பயன்படுத்த முடியுமோ, அந்த வகையிலெல்லாம் தவறாக பயன்படுத்துவது மனிதன் மட்டுமே” என்று அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த கருத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு, போக்குவரத்திற்கு இடையூறான நடைபாதைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்களை அகற்றும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருந்த நிலையிலும்கூட இந்த நடைபாதை கோவில்கள், ஆக்கிரமிப்புக் கோவில்கள் அகற்றப்படாமல் இருக்கின்றன என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது ஆகமத்திற்கு விரோதம் என்றும், தமிழில் அர்ச்சனை செய்வதே ஆகமத்திற்கு விரோதம் என்றும் ஸ்ரீதர் என்பவர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஆகம விதிகளை முறையாகப் படித்தவர்கள் எவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஏற்கெனவே சிவாச்சாரியார்கள் வழக்கில் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி வாதிட்டுள்ளார். வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்ததோடு ஆகம விதிகளை முறையாகப் படித்துவிட்டு மனுதாரர்கள் அடுத்த விசாரணைக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

ஆகமங்களை படித்தவர் அனைவருமே அர்ச்சகர் ஆக முடியும் என்பது சரியா? அல்லது ஆகமங்களை படித்து அர்ச்சகராவதற்கே ஒரு குறிப்பிட ஜாதியினர்தான் இருக்க வேண்டும் என்பது சரியா? என்ற கேள்விக்கு விடை காண வேண்டிய நேரம் வந்துவிட்டது. காலங்கள் எவ்வளவுதான் மாறினாலும்கூட பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருக்க முடியும், சமஸ்கிருதம் மட்டுமே அர்ச்சனை மொழியாக இருக்க முடியும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்ற நிலையில் தான் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It